கன்னித்தமிழாகவே...
என்னைத்தோற்றுத்தான்
உன்னை வெல்லமுடிந்தது
நான் நானாக இருப்பதை விட
நான் நீயாக இருப்பதை விரும்பும்
நியாயவாதி நீ...
எழுத்துக்கள் எப்படியோ-உன்
எண்ணங்கள் மட்டும்
எனக்கு முரணானவை
இதயத்துக்கு வலிக்கும்-ஆனாலுன்
இதழ்கள் அப்பாவியாயிருக்கும்
மனம் புண்படும்-ஆனாலுன்
முகம் பால் வடிக்கும்...
பெண் விடுதலை சுதந்திரம் பற்றி
உன் எழுத்துக்கள் உக்கிரமாய்
குரல் கொடுத்திருந்தது -உன்னுடன்
சேர்ந்து உண்ணாத
பல நேரங்கள் எனக்கு
பட்டினியாய் கழிந்திருந்தது...
மனம் விட்டு பேசியது நம்
மணநாளில் மட்டுமாகக்கூட
இருந்திருக்கலாம்
மனம் திறக்கும் போதெலாம்-நீ
புத்தகம் திறந்துவைத்திருப்பாய்
இரவுகள் பகலாகவும்
பகல்கள் இரவாகவும்
வேற்றுக் கிரகவாசிபோல
வீட்டுக்குள் நீ...
நான் உன் அடிமையென்பதை
தெளிதமிழில் "இவள் மெளனி"யென்று
மற்றவர்களுக்காய் பட்டம் கொடுத்திருக்கிறாய்...
கடைத்தெரு முதல்
கல்யாண வீடுவரை என் பயணங்கள்
பாதை வெறுக்கும்
பாதங்களாகத்தானிருந்தது-என்
புடவை விண்ணப்பங்கள் கூட சில நேரங்களில்
புத்தகமாகத்தான் வீட்டுக்கு வந்திருக்கின்றன...
உன்னையே சுற்றும்
உள்ளமறியாது -நீ
உலகையே சுற்றிவந்தாய்
அரங்கம் காணா ஊமைகவிகளாய்
அந்தரங்கமாயெனை புதைத்துக்கொண்டிருக்கிறேன்...
தனிமை சாம்ராஜ்யத்தில் நான்
தலைமை வகித்தாலும்-நீ
மேற்பார்வைக்கேனும் வருவதில்லை
நான் உண்பதில் உறங்குவதில் உடுத்துவதில்
உன் விமர்சனம் ஆம் இல்லை மட்டுமே...
தமிழை சுவாசிக்கிறாய்
தலைவணங்குகிறேன்
தாரத்தின் சுவாசத்தையேன்
தண்டிக்கிறாய்
பரிசுகளும் பதக்கங்களும் நீ வென்றதாய்
படுக்கையறை முதல் பளிச்சிடுகிறது
பட்டம் கொடுத்தவர் எவரோ...
எனக்கான உன் விட்டுக்கொடுப்புகள் இல்லை
நான் பெற்றுக்கொண்ட உரிமை நீ
மீதம் வைக்கும் தேநீரொன்றுதான்...
உலகுக்கெலாம் தமிழூற்றிக்கொடுத்தாய்
நானின்றும் கன்னித்தமிழாகவே...
No comments:
Post a Comment