கல்குடா நேசன் இணையத்தினூடாக வாராவாரம் கலைஞர்கள் படைப்பாளிகளை சந்தித்து அவர்களுடனான கலந்துரையாடலை நேர்காணலாக தந்துகொண்டிருக்கின்றோம். பலரது ஆதரவையும் எதிர்பார்ப்பையும் சுமந்த இப்பகுதியானது வாசகர்கள் அனைவரினது ஆசியோடு வெற்றிநடை போடுகின்றது. இலைமறை காய்களாக இருக்கும் படைப்பாளிகளை அறிமுகப்படுத்துவதிலும் வளர்ந்த கலைஞர்களின் கருத்துக்களை திறமைகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதினாலும் மகிழ்ச்சியடைகின்றோம்.
இதன் தொடரில் வரும் வெள்ளி அன்று 29.04.2016 35வது படைப்பாளியாக எம்மோடு இணையவிருக்கின்றார் கண்டி மாவட்டத்தின் பன்விலயை பிறப்பிடமாக கொண்ட இளைய, வளர்ந்துவரும் கவிஞர் V.M. ரமேஷ் அவர்கள்.
வாசிப்பின் மணத்தை நுகர்ந்திடாது வெறுமனே வாய்க்கு வந்ததை எழுதும், விமர்சனங்களை விரோதியாய் பார்க்கும் வளரும் இளையவர்கள் மத்தியில் //வாசிப்பே என்னை எழுதத்தூண்டியது தரம்7 ல் ஈசாப் கதைகளை வாசிக்கதொடங்கியதன் பின்னர் ஏராளமான நூல்களை வாசித்து முடித்தேன் அத்துடன் இயற்கை மீதான காதலும் என் எழுத்துத்துறையை விரிவுபடுத்தியது// என மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழும் இவர் தன் எழுத்துக்களால் புரட்சிமிக்க சிந்தனைகளை விதைக்க பாடுபடும் ஒருவராக வெளிப்படுகின்றார். மலையக சமூகத்தை மேம்படுத்த வேண்டும், மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கோடு செயற்படும் இவர் அரசியல், இலக்கியம், சமூகம் சம்பந்தமாக பல்வேறுபட்ட கருத்துக்களை வெளிப்படையாக நேர்மையாக தன் மன உணர்வுகளை ஐயமின்றி தெரிவித்துள்ளார். இக்கவிஞரின் காத்திரமான பல கருத்துக்களை வாசிக்க நேர்காணலோடு இணைந்துகொள்வோம்.
01 கேள்வி: தங்களைப் பற்றி?
பதில்: மலையக மண்ணின் மைந்தன். கண்டி மாவட்டத்தின் பன்வில பிரதேச பிரிவுக்குட்ட கோமறை கீழ்ப்பிரிவு தோட்டத்தை வசிப்பிடமாக கொண்டவன்.
ஆரம்பக் கல்வியை கோமறை தமிழ் வித்தியாலயத்திலும் சாதாரண தரத்தினை கந்தஹெட்டிய தமிழ் வித்தியாலயத்திலும், உயர் தர கல்வியை அபிராமி தமிழ் மகா வித்தியாலயத்திலும் கற்றேன். இளங்கலைமானி பட்டத்தினை பேராதனை பல்கலைக்கழகத்தில் கற்றேன். அத்துடன் தற்போது நான் ஆரம்ப கல்வியை கற்ற பாடசாலையில் ஆசிரியராக கடமை புரிகின்றேன்.
இலக்கியத்தின் காதலன், தமிழின் காதலன் எனக்கூறலாம். அத்துடன் கவிதைகள், கட்டுரைகள் என்பவற்றை எழுதி வருவதுடன் பத்திரிகை, சஞ்சிகைகள் வழியே அவற்றை வெளியிட்டு வருகின்றேன். வட்டார, பிரதேச செய்திகளை அவ்வப்போது ஊடகங்களுக்கு அனுப்பி வருகின்றேன். எழுத்துக்களால் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வளர்ந்து வரும் ஓர் இளம் எழுத்தாளனாக இருக்கின்றேன்.
02 கேள்வி: கவிதை மீது எப்படி ஆர்வம் ஏற்பட்டது?
பதில்: வாசிப்புத்துறையே என் கவிதை ஆர்வத்திற்கு இட்டுச் சென்றது எனலாம். இவ்வாசிப்பு ஆர்வத்தை எனக்குள் விதைத்தவர் என் குரு திரு தியாகநாதன் அவர்கள். தரம் 7இல் ஈசாப் கதைகளை முதல் முதலில் வாசிக்க தொடங்கினேன். இன்று எண்ணிலடங்காக நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகளை வாசித்துள்ளேன். இவ்வாசிப்பில் இருந்தே என் கவியூற்று ஊற்ற காரணமாய் இருந்தது என்றால் மிகையாகாது. இவ்வாசிப்போடு இயற்கையின் மீதான காதலும் கவிதையை எழுத அதிக ஆர்வத்தை தூண்டியது.
03 கேள்வி: உங்கள் திறமையை வெளிப்படுத்திய முதல் அனுபவம்?
பதில்: என் திறமைக்கு களம் அமைத்த முதல் சந்தர்ப்பமாக நோர்வேக்கும் இலங்கைக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்ற காலத்தில் பத்திரிகையில் சமாதானம் எனும் தலைப்பில் கவிதை எழுதும் போட்டியொன்றில் கவிதை எழுதி பரிசு பெற்றேன். இதுவே என் கவிதைக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் எனலாம்.
04 கேள்வி: உங்களது படைப்புக்களுக்கு கிடைத்த களங்கள் பற்றி?
பதில்: மலையகத்தை பொறுத்தவரை தட்டிகொடுப்பவர்களை விட தட்டிவிடுபவர்களே அதிகம். இது மனவேதனையை தரும் விடயமாகும். ஆரம்ப காலத்தில் என் கவிதைகளுக்கு களம் அமைத்து கொடுத்தவை. பாடசாலை மண்டபங்களே. பின்னர் கண்டித்தமிழ் சங்கம், முத்தமிழ் சங்கம் என்பனவற்றில் என் கவிதைகள் துளிர் விடத் தொடங்கின. இன்று சமூக வலைத்தளங்களில் என் கவிதைகள் தொழில்நுட்ப ரத்தம் பாய்ச்சப்பட்டு வெளிவருகின்றன. இதனால் பிரதேச எல்லை தாண்டி சர்வதேச வளம் வரும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது எனலாம். அத்துடன் என் கவிதைகளுக்கான கருத்துக்களை படைப்பாளிகள் சொல்லும்; போது என் படைப்புக்களை மேலும் கூர்மையாக்கும் சந்தர்ப்பம் உருவாகிவிடுகின்றது. இது என் படைப்புக்கு கிடைத்த வரபிரசாதமாகவே கருதுகிறேன்.
05 கேள்வி: வளரும் படைப்பாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினையாக நீங்கள் காண்பது?
பதில்: பிரச்சினைகள் என்னவென்று தெளிவாக கூறமுடியாது. வளரும் படைப்பாளிகளின் சூழ்நிலைக்கேற்ப அவர்களின் பிரச்சினை வேறுபடுகின்றது.
குறிப்பாக மலையக பகுதிகளில் வாழும் படைப்பாளிகளுக்கு அவர்களின் படைப்புக்களை வெளியிட பொருளாதார சிக்கல் முக்கிய தடையாக உள்ளது.
அத்துடன் இலக்கிய வட்டத்தில் போட்டிகள் அதிகரித்து வருகின்றது. இளம் தரப்பினரிடையே புதுவகையான, புதுநடைகளை தழுவிய, புது கருபொருள் பொதிந்துள்ள கவிதைகள் வெளிவர தொடங்கியுள்ளன.
எழுதுபவர்கள் எல்லாம் எழுத்தாளர்களா என்ற வினாவும் எழுந்துள்ளது. சமகாலத்தில் கவிதைகளை தரம் பிரிப்பத்தில் சிக்கல்கள் காணப்படுகின்றது. அத்துடன் சிறப்பாக எழுதுபவர்களுக்கான களம் சில இடங்களில் காணப்படாமை கவலைக்குரிய விடயமாகும்.
06 கேள்வி: நீங்கள் பங்குபற்றிய போட்டிகள் நிகழ்ச்சிகள் கவியரங்குகள் பற்றியும் பெற்றுக்கொண்ட பாராட்டுக்கள் பற்றியும் எங்களோடு பகிர்ந்து கொள்ள முடியுமா?
பதில்: நான் பாடாசாலை மட்டங்களிலும் பிரதேச மட்டங்களிலும் கவியரங்குகளில் பங்கு பற்றிகொண்டிருக்கின்றேன். வெடிப்பொலி கவிஞன் என்று தான் என்னை பொதுவாக அழைப்பார்கள். என்னுடைய கவிதைகளில் கவியரங்க கவிதைகளே அதிகமான பாராட்டுக்களையும் பெருமைகளையும் தேடிக் கொடுத்தன.
அத்துடன் மலையகம், வடக்கு கிழக்கு உட்பட இந்தியா மற்றும் புலம் பெயர் நாடுகளில் என் கவிதைகள் பேசப்பட முக்கிய காரணம் கவியரங்க மேடைகளில் நான் முழங்கிய கவிதைகளே.
07 கேள்வி: உங்களுக்கு கிடைத்த விமர்சனங்களில் நீங்கள் நெகிழ்ந்த சந்தர்ப்பம்?
பதில்: எனக்கு கிடைத்த விமர்சனங்களை எடுத்து நோக்கினால் பாராட்டுகளே அதிகம். மலையக கவிஞனுக்கான அங்கீகாரத்தினை என் கவிதைகளை நேசிப்பவர்கள் கொடுத்துள்ளதாக உணர்கின்றேன். என் கவிதைகளை நேசிப்பவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். என் கவிதைகளில் காணப்படும் குறைபாடுகளை நீங்கள் சுட்டிக்காட்டும் பட்சத்திலே இனி வரும் காலங்களில் என் படைப்புக்கள் உரம் பெற வழிசமைக்கும். எனவே என் படைப்புக்களில் உங்களில் விமர்சனம் எனக்கு கட்டாயம் தேவை என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
08 கேள்வி: ஏனைய இலக்கிய வடிவங்களை விட இளைஞர்களுக்கு கவிதைமீது அதிக நாட்டம் காணப்படுகின்றது. இது ஏனென நினைக்கிறீர்கள்?
பதில் இது உண்மையானதொரு விடயம் தான். பேராதனை பல்கலைக்கழக்கத்தின் தமிழ்த்துறை போராசிரியரும் தலைவருமான மகேஸ்வரன் கூட இது பற்றி கூறியுள்ளார். இன்றைய இளைய தலைமுறைகள் கவிதைகளில் அதிகம் ஆர்வம் காட்டுவதற்கு காரணம் இது ஒரு இலகுவான நடையாக உள்ளதால் அதிகமாக இளைய தலைமுறை கவிதைகளை எழுதத்தொடங்குகின்றனார்.
ஒரு நாவலிலோ சிறுகதையிலோ சொல்ல முடியாத விடயத்தை நான்கு வரி கவிதை நறுக்கென்று சொல்லிவிடும். இதுவே கவிதையின் சிறப்பு. இதனால் தான் கவிதையை அதிகம் நேசிக்கிறார்கள் என கருதுகின்றேன்.
09 கேள்வி: மரபின் மீது வாசகர்களோ படைப்பாளிகளோ அதிக ஈடுபாடு காட்டாமைக்கு காரணம் எதுவென எண்ணுகிறீர்கள்?
பதில்: மரபுக்கவிதையின் பொருள் விளங்கிக் கொள்வது கடினமாகும். பண்டிதர்களுக்கு மட்டும் புரியும் மொழிநடையில் இன்றைய இளைஞர்கள் நாட்டம் இல்லை. இருப்பினும் முற்றாக மரபு கவிதைகளை இன்றைய இளையவர்கள் தவிர்க்கவில்லை
10. சமவுரிமை பேசும் இக்காலத்திலும் பெண்களை இரண்டாம் நிலையாக தமக்கு கீழாக நினைக்கும் ஆண்கள் பற்றி?
அவ்வாறானதொரு நிலை நடைமுறையில் இருக்கின்றதா என்பது என் கேள்வி. காரணம் ஆரம்ப காலங்களோடு ஒப்பிடும் போது இன்று பெண்களுக்கு சமவாய்ப்புக்கள் அதிகமாக வழங்கப்படுவதாக உணர்கின்றேன். பெண்களின் பாதுகாப்பு கருதி சில விடயங்களை பெற்றோர், பாதுகாவலர் மேற்கொள்கின்றனர். இது இரண்டாம் நிலை என்பதை விட அவர்களின் பாதுகாப்புக்காகவே என்று எடுத்துக்கொள்ளலாம். பெண்களை இரண்டாம் நிலையாக பார்க்கும் வழக்கம் எமது பண்பாட்டில் குறிப்பாக மலையக மக்களின் பண்பாட்டில் இல்லை என்று கூறலாம்.
11. பெண்களின் வளர்ச்சிப்போக்கு பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
என்னைப் பொறுத்தவரையில் பெண்களின் வளர்ச்சிப்போக்கு சிறப்பாக இருக்கின்றது. விளையாட்டு, கல்வி, பொருளாதாரம் என்பவற்றில் பெண்களின் பங்களிப்பு வளர்ச்சியடைந்து கொண்டு வருகின்றது என்றுதான் கூற வேண்டும். குறிப்பாக இலங்கையின் பொருளாதாரத்தில் மலையக பெண்களின் வகிபங்கு அதிகளவில் காணப்படுகின்றது.
அரசியலை பொறுத்தவரையில் பெண்களின் பங்களிப்பு குறைந்த வகையில் காணப்படுகின்றது. குறிப்பாக இலங்கையின் பாராளுமன்றத்தில் ஐந்து சதவீதமளவு பெண் பிரதிநிதித்துவம் காணப்படுவது கவலைக்குரிய விடயமாகும். அத்துடன் உள்ளுராட்சி, மாகாண சபைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்து காணப்படுகின்றது. சமகாலத்தில் 25 சதவீதமாக பெண்களின் பிரதிநிதித்தவத்தை அரசியலில் அதிகரிப்பதற்கான யோசனை அமுலுக்கு வந்துள்ளது. இதன் நடைமுறைத்தன்மையை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இருப்பினும் கல்வித்துறையில் பெண்களின் வளர்ச்சி சிறப்படைந்து வருவதாக நான் அறிகின்றேன்.
12. மேலோட்டப்பார்வையில் சம உரிமை வழங்கப்பட்டிருந்தாலும் முழுமையான அங்கீகாரம், பாதுகாப்பு, உரிமை வழங்கப்படவில்லை என்ற கருத்துக்களே மேலோங்கியுள்ள நிலையில் ' அரசியலில் பெண்களின் பங்களிப்பு மிகக்குறைவே' என்ற தங்களின் கருத்தும் ஒரு காரணமாக கொள்ளலாமா?
பெண்களில் அரசியல் பிரதிநிதித்துவம் மிகவும் பின்தங்கிய நிலையிலே காணப்படுகின்றது. பாராளுமன்றமாகாக இருக்கட்டும், மாகாண சபைகளாக இருக்கட்டும் உள்ளுராட்சி மன்றமாக இருக்கட்டும். பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறைவாகவே காணப்படுகின்றது. அரசியலில் நுழையும் பெண்களின் நிலையினை எடுத்துநோக்கினாலும் கூட அவர்கள் உயர் வர்க்க அரசியல் பின்புலத்தினை கொண்ட பெண்களே அதிகமாக காணப்படுகின்றனர். மத்திய, கீழ் மட்ட பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறைவாகவே காணப்படுகின்றது. எனவே அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே காணப்படுகின்றது என்பது வெளிப்படையான உண்மையாகும். இவ்வாறு பெண்களின் பங்களிப்பு குறைவாக காணப்பட குடும்ப சூழல், மகற்பேறு, பால்நிலை சமத்துவமின்மை போன்ற பல காரணங்கள் உள்ளன.
பிரான்ஸ் போன்ற நாடுகளில் பெண்கள் அரசியலில் நுழைந்தால் அவர்களுக்கு பரிசு வழங்கி உற்சாகப்படுத்துகின்ற ஒரு நடைமுறை காணப்படுகின்றது. அவ்வாறான நடைமுறையினை எமது நாட்டிலும் ஏற்படுத்த வேண்டும். அத்துடன் பெண்களின் வாழ்வியல் கட்டமைப்பு, சமூக கட்டமைப்பு என்பவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தும் போதே அரசியலில் அவர்களின் பங்களிப்பை அதிகரிக்க முடியும்.
13. நீங்கள் ஓர் ஆசிரியர் என்ற வகையில் தமிழ் மொழியினை கற்பதில் இன்றைய மாணவர்கள் பெற்றார்களிடையே எவ்வாறான ஆர்வம் காணப்படுகின்றது?
நான் மலையகத்தினை அடிப்படையாக வைத்து இக்கேள்விக்கு பதில் கூற நினைக்கின்றேன். தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகளை பொறுத்தவரையில் அவர்கள் தமிழ் மொழியில் கற்க வைப்பதில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆங்கில மொழியூடாக கல்வி கற்க வைக்கக்கூடிய பணபலம் அவர்களிடம் காணப்படாததால் தமிழ் மொழி மூலம் தன்னுடைய பிள்ளைகளை படிக்க வைக்கின்றார்கள். வசதி படைத்த அல்லது உயர்தொழில் புரியக்கூடிய விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே ஆங்கிலமொழியினூடாக தங்களில் பிள்ளைகளை படிக்கவைக்க எண்ணுகின்றனர்.
14. மலையக படைப்பாளிகளுக்கிடையில் காணப்படும் தொடர்புகள் ஆரோக்கியமாக இருக்கின்றதா?
மலையக படைப்பாளிகளுடனான தொடர்பினை நோக்கும் போது மூத்த படைப்பாளிகளிடையே முறுகல் நிலை காணப்படுவதாக நான் உணர்கின்றேன். அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் அதிகமாக காணப்படுகின்றது. அத்துடன் தனக்கு மிஞ்சிவர்கள் யாரும் இல்லை என்ற தலைக்கணம் இருப்பதாக அறிகிறேன். இளைய படைப்பாளிகளை உருவாக்குவதில் அவர்களின் பங்களிப்பு மிகக்குறைவாகவே காணப்படுகின்றது. சிரேஷ்ட படைப்பாளிகள் இளையவர்களை தட்டிக்கொடுக்க விரும்பவில்லை என்றே நான் உணர்கின்றேன்.
இன்று வடக்கு, கிழக்கு உட்பட இந்தியா, புலம்பெயர் நாடுகளில் படைப்பாளிகள் இளையவர்களை தட்டிக்கொடுப்பதை போன்று மலையக படைப்பாளிகள் தட்டிக்கொடுக்க விரும்பவில்லை. இது கவலைதரும் விடயமாகும்.
இருப்பினும் எனக்கும் மலையக படைப்பாளிகளுக்குமுடனான உறவு சிறப்பாக காணப்படுகின்றது. அத்துடன் சர்வதேச படைப்பாளிகளுடனான தொடர்புகளும் அதிகரித்துவருகின்றது. நான் ஒரு கவிஞன் எனும் வகையில் என்னை தட்டிக்கொடுக்கும் படைப்பாளிகள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
15. மலையகத்தை பொறுத்தவரை எந்தெந்த விடயங்களில் மாற்றங்கள் ஏற்படவேண்டும் என நினைக்கின்றீர்களா?
மலையக மாற்றம் என்பது இன்று எதிர்மறையான மாற்றமாக இருப்பதாக நான் உணர்கின்றேன். குறிப்பாக இன்று தொலைக்காட்சி பாவணையில் டிஸ்க் டீவியின் பாவணை அதிகரித்து வருகின்றது. இது அழிவின் விளிம்புக்கு மலையகத்தை இட்டுச் செல்கின்றது. அத்துடன் மதுபாவணையின் தீவிரம், பாடசாலை மாணவர்களின் இடைவிலகல் என்பன இன்று மலையகத்தில் துரித கதியில் அதிகரித்து வருகின்றது. இது கண்டிக்கத்தக்க விடயமாகும். மாற்றம் என்பது புரட்சிகர மாற்றமாக இருக்க வேண்டும். கல்வி, வீட்டு வசதிகள், ஆரோக்கியமான சுகாதாரம் என்பவற்றில் நேர்நிலையான மாற்றங்கள் இடம்பெற வேண்டும். இதுவே சிறந்த மாற்றமாகும். புரட்சிகர சிவில் சமூக அமைப்புக்கள் மலையக மாற்றத்திற்கு வித்திட வழிசமைக்கும். எனவே கோவில் கமிடிகள், இளைஞர் அமைப்புக்கள் என்பதிற்கும் மேலாக கல்வி, சமூக துறைகளில் மாற்றம் கொண்டு வரும் சிவில் சமூக அமைப்புக்கள் உருவாக வேண்டியது மிக அவசியமாகும்.
16. உங்கள் வயதையொத்த மாற்றங்களை ஏற்படுத்த நினைக்கும் இளையவர்களோடு எந்தெந்த விடயங்களில் கைகோர்க்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?
என்னை பொறுத்தவரையில் எழுத்துக்களே சிறந்த ஆயுதம். இலக்கிய படைப்புக்களை அதிகளவு உருவாக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் இலக்கியத்தில் ஆர்வம் காட்ட வேண்டும்.
சமூக பற்றுணர்வு ஏற்பட வேண்டும். தான் உண்டு. தன் வேலையுண்டு என்று வாழ்ந்தால் மாற்றம் கொண்ட மலையகம் என்பதை ஏடுகளில் மாத்திரமே காணமுடியும். குறிப்பாக கல்வி கற்ற சமூகம் எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். சிறந்த சமூக சேவைகளை புரிய வேண்டும். நான் என்னால் முடிந்தவரையான சமூக சேவைகளை ஆற்றிக்கொண்டு வருவதோடு சமூக சிந்தனை கொண்டவர்களை ஊக்குவித்து கொண்டும் இருக்கின்றேன்.
17. நீங்கள் முன்னெடுக்கும் இலக்கியம் தவிர்ந்த ஏனைய செயற்பாடுகனை நாம் தெரிந்துக்கொள்ளலாமா?
கல்வி சார்ந்த சேவைகளை அதிகம் மேற்கொள்கின்றேன். சமூக முன்னேற்றம் சார் செயற்பாடுகளை அதிகம் மேற்கொள்கின்றேன். பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டங்களை நடாத்தி வருகின்றேன். வட்டார செய்திகளை ஊடகங்களுக்கு அவ்வப்போது வழங்கி வருகின்றேன்.
18. மலையக கல்விச்சமூகத்தை உருவாக்க ஆசிரியச்சமூகத்தின் சேவை எவ்வாறு காணப்படுகின்றது?
மலையக கல்விச் சேவையின் மிக முக்கிய பங்குதாரர்களாக ஆசிரியர்கள் காணப்படுகின்றனர். இவ்வாறான ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். ஆசிரியர்கள் கற்பித்தலோடு சேர்த்து தனது சுயக்கல்வியை மேம்படுத்திக் கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும். அப்போதே அவர்களால் மாணவர்களுக்கு முழுமையான கல்வியை வழங்க முடியும். அத்துடன் மலையகத்தில் பட்டதாரி ஆசிரியர்களை விட உயர்தரம் கற்ற பின் ஆசிரியர் சேவையில் நுழைந்தவர்கள் அதிகம். இவர்கள் தன்னை வளர்த்துக்கொள்ள அதிகம் முயற்சி எடுக்க வேண்டும். கல்வி என்பது எதிர்கால மலையத்தின் சொத்து. அதனை முழுமையாக வழங்க ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்பதே.
19.மலையகத்தை பொறுத்தவரையில் அரசியல் உரிமை முழுமையாக பயன்படுத்தப்படுகின்றதா?
அரசியல் உரிமை என்பதை இரண்டாக நோக்க முடியும். மக்களுக்கான அரசியல் உரிமை, ஆட்சியாளர்களுக்கான அரசியல் உரிமை.
இதில் ஆட்சியாளர்களுக்கான அரசியல் உரிமை தான் சிறப்பாக இருக்கின்றது என நான் கருதுகின்றேன். சுயலாப அரசியல் தலைவர்களே மலையத்தில் அதிகமாக உள்ளனர். அத்தடன் கட்சி தாவல், அமைச்சுப்பொறுப்புக்களை ஏற்றல் என்பவற்றில் அதிக அக்கறை கொண்டுள்ள தலைவர்கள் மக்களின் வாழ்வியலில் எவ்வகையில் அபிவிருத்தி ஏற்படுத்த வேண்டும் என்பதில் மிகக்குறைவான பங்களிப்பினை மேற்கொள்வது வருத்தத்திற்குரியது. மக்களின் அரசியல் உரிமைகள் தேர்தல் காலங்களோடு முடங்கி விடுகின்றது. அத்துடன் சமூக சேவை கொண்ட கல்வி கற்ற தலைவர்கள் அரசியலுக்கு வரமுற்பட்டாலும் தொழிற்சங்க வாதத்திற்கு பழக்கப்பட்ட மக்கள் அவர்களின் வரவேற்பை விரும்பாதளவு செயற்படுகின்றனர். இன்று வடக்கு, கிழக்கு பகுதிகளை எடுத்தக்கொண்டால் கல்விகற்றவர்களே அதிகளவு அரசியலில் ஈடுபடுகின்றனர். அவ்வாறான நிலையினை மலையகத்தில் ஏற்படுத்த தொழிற்சங்கம் தடையாக காணப்படுவதுடன் மக்களுக்கும் போதிய விழிப்புணர்வு இல்லாதிருப்பதாகவே நான் உணர்கின்றேன்
20. எமது வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புவது?
வாசிப்பு பழக்கத்தை அதிகமாக்கி கொள்ள வேண்டும். வாசிப்பு மனிதனை பூரணமாக்கும். தமிழ் மொழி மாத்திரமின்றி பல்வேறு வகையான மொழிகளில் வெளியான படைப்புக்களை வாசிக்க வேண்டும். இதிலும் ஈழத்து இலக்கியங்கள், இந்திய இலக்கியங்கள், புலம் பெயர் படைப்புக்கள், ஆங்கில, கிரேக்க இலக்கியங்கள் என பல்வேறு பட்ட இலக்கியங்களை தேடி வாசிக்க வேண்டும். அவ்வாறான வாசிப்பே புதிய படைப்புக்களை படைக்க வழிசமைத்து தருகின்றது......
No comments:
Post a Comment