வாராவாரம் வெள்ளிக்கிழமை நாளில் கல்குடா நேசன் இணைய தளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது.
வெற்றிகரமாகப் பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இப்பகுதியினூடாக நாம் எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கின்றது.
இதன் தொடரில் இன்று எம்மோடு 31வது படைப்பாளியாக இணைந்து கொள்ளகிறார் இந்தியா திருச்சியைச் சேர்ந்த மரபுக்கவிதாயினி சாரா பாஸ் எனும் புனைப்பெயருடைய திருமதி.சரஸ்வதி பாஸ்கரன் அவர்கள். பத்தாண்டுகளாக பேராசிரியையாகக் கடமையாற்றி வந்த இவர், தற்போது தனியார் வகுப்புக்களை நடாத்தி வருகின்றார். பல பட்டங்களைப்பெற்று இணையத்தளங்களினூடாக மரபுக்கவிதையில் தனக்கென ஓர் சிறப்பிடம் வகித்து வரும் இவரை கல்குடா நேசனின் நேர்காணலுக்காகச் சந்தித்தோம்.
பல்வேறுபட்ட ஆழமான கருத்துக்களோடு வாசகர்களை வரும் வெள்ளியன்று சந்திக்க வரும் இவர், “பிறப்பால் நாமனைவரும் மானுட சாதியினரே” என்று பாரதி கண்ட புதுமைப்பெண்ணாய் முழங்குகின்றார். அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சாதியக்கொடூரங்கள் பற்றி வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கல்வி, இலக்கியம், சமூகம், பெண்கள் தொடர்பான விடயங்களென பல்வேறுபட்ட சுவாரஸ்யமான கருத்துக்களோடு, இணையும் இவரின் எல்லா முயற்சிகளும் வெற்றியடைய கல்குடாநேசன் சார்பாக வாழ்த்திய வண்ணம் நேர்காணலோடு இணைந்து கொள்வோம்.
நேர்காணல்-ராஜ்சுகா
01. தங்களைப்பற்றி எமது வாசகர்களுக்காக?
கவிதாயினி சாரா பாஸ்: பெயர் திருமதி.சரஸ்வதி பாஸ்கரன், திருச்சி சொந்த ஊர். படிப்பு M.SC. M.Ed.M.Phil.PG.D. G.C தொழில் பேராசிரியை (வேதியியல்துறை). பெற்ற பட்டங்கள் மரபுக்கவிதாயினி, கவிதைத்தாரகை’ கவிக்குயில் மற்றும் கவியருவி. பள்ளியில் 7ம் வகுப்பு படிப்பதிலிருந்து கவிதை எழுதுவது வழக்கம். பள்ளியிலும் கல்லூரியிலும் பல பரிசுகளையும், பட்டங்களையும் பெற்றுள்ளேன். பல நூல்களுக்கு அணிந்துரை எழுதியுள்ளேன். சுமார் 10 ஆண்டுகள் பேராசிரியை, 8 ஆண்டுகள் பள்ளி முதல்வர். தற்போது தனிப்பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறேன்.
02.இலக்கியத்தில் உங்களது அறிமுகம் ?
கவிதாயினி சாரா பாஸ்: நான். என் ஐந்தாம் வகுப்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் திருக்குறள் முழுவதையும் ஒப்பித்து “குறளின் அரசி” என்ற பட்டம் வென்றேன். பின்னர் ஏழாம் வகுப்பிலிருந்து கவிதைகள் எழுதத்தொடங்கி விட்டேன். இதுவே இலக்கியத்தில் என் அறிமுகம்.
03. எவ்வாறு இலக்கியத்தில் உங்களுக்கான அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்கிறீர்கள் ?
கவிதாயினி சாரா பாஸ்: என் படைப்புகள் பெரும்பாலும் உணர்வுப்பூர்வமானதாகவும், இன்றைய கால கட்டத்திற்குப் பொருந்துவதாகவும், அனைவரும் படிக்கும் போதே ரசிக்கத் தூண்டும் எளிமையான தமிழ்ச்சொற்களை எடுத்தாழ்வதும் என் தனித்தன்மை. இதனால், இலக்கியத்தில் எனக்கான அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்கிறேன்.
04. மரபுக்கவிதைகளைத் தேர்ந்தெடுத்தமைக்கான காரணமென்ன?
கவிதாயினி சாரா பாஸ்: பள்ளிப் பருவத்திலிருந்தே இலக்கியங்கள் மீதும் தமிழ் இலக்கணத்தின் மீதும் அதீத ஈடுபாடுண்டு. பள்ளியில் படிக்கும் போதே மரபு கவிதைகள் எழுதுவதுண்டு. அப்பொழுது எதுகை மோனை மட்டுமே பயின்று வர எழுதுவேன். தெளிவாக தமிழ் இலக்கணம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தணியாத ஆர்வம் அப்போதே இருந்தது. என் பாடல்களை முகநூலில் பார்த்த கவிதைச்சங்கமத்தின் மூத்த நிர்வாகியும், தற்போது கவியருவி குழுமத்தின் நிர்வாகியும் ஆகிய மதிப்பிற்குரிய கவியன்பன் கலாம் ஐயா அவர்கள் வெண்பா எழுதவும் அதற்கான முறையான இலக்கணத்தைக் கற்பித்தார்கள். மற்ற பரபுப்பாக்கள் புனையவும் ஆணிவேராக இருந்தவர் ஆசான் கவியன்பன் கலாம் அவர்கள் தான். பின்னர் பைந்தமிழ்ச்சோலை குழுமத்தில் மரபுமாமணி பாவலர் மா.வரதராசன் ஐயா அவர்கள் பாட்டியற்றுக பயிற்சியின் மூலம் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு இலக்கண வகையையும் அதற்கான இலக்கணத்தையும் அதன் நுணுக்கத்தையும் கற்பித்தார்கள். இதுவே நான் மரபின் மீது நாட்டம் கொண்டு மரபு கவிதைகளைத் தேர்ந்தெடுத்தமைக்கான காரணமாய் அமைந்தது.
05. எல்லோராலும் மரபினைப் பின்பற்ற முடியாமைக்கான காரணம் என்னவென்று நினைக்கின்றீர்கள் ?
கவிதாயினி சாரா பாஸ்: மரபின் கடலில் நீந்தி மரபுப்பாவாகிய முத்தினை மூழ்கி எடுக்க முடியாமைக்குக் காரணம். மரபுப்பாடல்கள் அதற்குரிய இலக்கண வகையோடும், விதிகளோடும், வாய்ப்பாடுகள் பெற்று அசை, சீர்கள், அடிகள், தளைகள் என்று ஒரு சேர யாப்பினால் கட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லோராலும் எளிதில் மரபினைப் பின்பற்ற முடியவில்லை. மேலும், ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடங்குவதே மரபுப்பாடல்கள்.
06. வலைதளங்களில் தங்களின் புகைப்படங்கள் இட்டு அடையாளப்படுத்திக் கொள்ள படைப்பாளர்கள் முனைப்பாக இருக்கும் கால கட்டத்தில், விதி விலக்காக நீங்கள் இருப்பதற்கான காரணம் என்ன?
கவிதாயினி சாரா பாஸ்: ஒருவரின் முகமோ, முகவரியோ அவருக்குச் சிறப்புச்சேர்த்து விடாது என்று கருதுபவள் நான். என் எழுத்தையும் படைப்பையும் மட்டுமே மதிக்க வேண்டும் வலைத்தளங்கள் என்றும் எண்ணுபவள் நான். ஒரு படைப்பாளிக்குப்பெருமை அவன் படிப்புகளே. அதுவே அவனின் அடையாளம் என்று உறுதியாக நினைப்பவள். இதனால் விளம்பரங்களை விரும்பாது விதி விலக்காக எந்தச் சமூக வலைதளங்களிலும் என் புகைப்படத்தைப் பதிவதில்லை. சான்றாக, அண்மையில் மார்ச் 5 ம் தேதி தொடங்கி 6 ம் தேதி வரை ” நிலா முற்றம் ” குழுமத்தில் நடைபெற்ற கவியரங்கில் தலைமை ஏற்றும் நடுவராகவும் செயலாற்றும் பொழுதும் என் புகைப்படத்தை வெளியிடவில்லை. ஆனால், வரவேற்பும் மதிப்பும் மிகுதியாகவே இருந்தது என்பதே இதற்குரிய மிகப்பெரிய சான்று.
07.ஏனைய நாட்டு படைப்பாளிகளுடன் தங்களுக்கு இருக்கும் நட்புறவு பற்றி ?
கவிதாயினி சாரா பாஸ்: இன்றைய கால கட்டத்தில் பல வலைதளங்களையும், குழுமங்களையும் நிர்வாகம் செய்வோர் வெளிநாடுகளில் வசிப்பவர்களாகவேயுள்ளனர். துபாய், இலங்கை போன்ற நாட்டுப் படைப்பாளிகளுடன் மிகவும் சுமூகமான நட்புறவேயுள்ளது. அனைவரும் என் படைப்புகளை விரும்பிப்படிப்பார்கள்.
08.நீங்கள் வாசித்து, ரசித்த இலங்கைப்படைப்புக்கள் பற்றி?
கவிதாயினி சாரா பாஸ்: இலங்கை படிப்பாளிகளின் படைப்புகள் பலவற்றை நான் விரும்பி ப் படிப்பதுண்டு. கவிஞர் அனாரின் கவிதைகள், கவிஞர் தமிழ் ஓவியாவின் படைப்புகள், திரு . கோபிநாத்தின் தெருவெல்லாம் தேவதைகள், யுவகிருஷ்ணாவின் சைபர் க்ரைம், கவிஞர் இரா. இரவியின் கவிதை படைப்புகள், தமிழ் மகனின் வெட்டுப்புலி என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஒவ்வொரு நூலும் அதற்குரிய தனிச்சிறப்புடன் மிளிர்கின்றது என்பது மிகையாகாது.
09.சாதியம் சம்பந்தமான கொடுமைகள் தீவிரமடைந்து வருகின்றது. இது பற்றி ?
கவிதாயினி சாரா பாஸ்: “சாதிகள் இல்லையடி பாப்பா ” என்ற பாரதியின் குரலோசை தான் என்றன் காதுகளில் ஒலிக்கின்றது. “சாதிகள் இரண்டொழிய வேறில்லை.” என்பது ஆன்றோர் வாக்கு. பிறப்பிச்சான்றிதழ் முதலாக இறப்புச்சான்றிதை வரையிலும் சாதிகள் பற்றியக்கேள்விகள் எந்த இடத்திலும் இடம் பெறுதல் கூடாது. பிறப்பால் நாமனைவரும் மானுட சாதியினரே.
10. நீங்கள் செயற்படும் இலக்கிய செயற்பாடுகள் ?
கவிதாயினி சாராபாஸ்: முகநூலில், தமிழை முன்னிலைப்படுத்தும் அனைத்துக்குழுமங்களிலும் என் இலக்கியப்படைப்புகள் தவறாமல் இடம்பெற்று வருகின்றது. மகளிர் தினத்திற்காக மருத்துவ நூலில் “மகப்பேறு மருத்துவம் ஒரு பார்வை” என்ற தலைப்பில் 160 வரிகளில் நான் எழுதிய பாடல் வெளிவந்து அனைவரது பாராட்டையும் பெற்றது. இறை வணக்கப்பாடல் ஒன்றும் அதே நூலில் வெளிவந்துள்ளது. காவேரி டைம்ஸ் பத்திரையில் ஒவ்வொரு வாரமும் என் கவிதை வெளிவந்துள்ளது. துபாய் தமிழ்த் தேர் பத்திரிக்கையில் ஒவ்வொரு மாதமும் என் கவிதை இடம்பெற்று வருகிறது. துபாய்த் தமிழ்ச்சங்கம் நடத்திய உலகளாவியக் கவிதைப்போட்டியில் நடுவராகப் பங்கேற்றேன்.
11. மகளிர் தினம் அண்மையில் கொண்டாடப் பட்டது. இதில் பெண்களுக்கான சுதந்திரம், உரிமை பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
கவிதாயினி சாரா பாஸ்: பெண்ணடிமை உள்ள மட்டும் பெற்ற சுதந்திரத்தால் பலனேதுமில்லை. பெண்கள் எல்லாத்துறைகளிலும் ஆண்களுக்கு நிகராகச் சாதிக்கப் பிறந்தவர்கள். இன்றைய சட்டத்தில் பேச்சுரிமையும், சொத்துரிமையும் பெண்களுக்குண்டு. பெண்களுக்கான சட்ட திட்டங்களை பற்றிய விழிப்புணர்வு படித்த பெண்கள் முதல் பாமரப் பெண்கள் வரையிலும் அறிந்து வைத்துக் கொள்ளுதல் வேண்டும். ஆண்டின் ஒரேயொரு நாள் மட்டும் மகளிர் தினமாகக் கொண்டாடி எந்தப் பயனுமில்லை. ஆண்டின் ஒவ்வொரு நாட்களும் மகளிர் தினமாக மாற வேண்டும்.
12.பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினையாக நீங்கள் காண்பது ?
கவிதாயினி சாரா பாஸ்: இன்று பிறந்த குழந்தைகள் முதற்கொண்டு பாலியியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். பெண்கள் பருவமடையும் முன்னரும் பருவமடைந்த பின்னரும் எதிர்நோக்கும் மாபெரும் பிரச்சினை. இந்நிலை உறுதியாக மாறுதல் வேண்டும். சமுதாயத்தில் பெண்கள் அடிமைகளாக நடத்தப்படாமல் அன்போடு நடத்தப்படுதல் வேண்டும்.
13. தங்களுக்குக் கிடைத்த பட்டங்கள், பாராட்டுக்கள் பற்றி?
கவிதாயினி சாரா பாஸ்: கல்லூரிக்காலத்தில் “கவிக்குயில்” பட்டம் பேராசிரியையாகப் பணி புரிந்த காலத்தில் “இசையருவி” பட்டம் கவிதைச்சங்கமம் முகநூல் குழுமத்தில் மதிப்பிற்குரிய கவியன்பன் கலாம் ஐயா வழங்கிய “மரபுக்கவிதாயினி ” பட்டமும், “வெண்பா வேங்கை” பட்டமும். நேசகானம் வலைத்தள வானொலி நடத்தியக் கவிதைப்போட்டியில் நடுவராக இருந்து, பாவலர் மரபுமாமணி மா.வரதராசன் ஐயா அவர்கள் வழங்கிய “கவிதைத்தாரகை ” பட்டம். பைந்தமிழ்ச்சோலை குழுமத்தில் பங்கேற்ற கவியரங்கம். இவையனைத்திற்கும் முத்தாய்ப்பாக “நிலாமுற்றம்” குழுமத்தில் மதிற்பிற்குரிய திரு.முத்துப்பேட்டை மாறன் ஐயா அவர்கள் வழங்கிய மகளிர் தின சிறப்புக்கவியரங்கத்திற்காக தலைமை தாங்கியது. புதுமை முகநூல் குழுமத்தில் ஒவ்வொரு முறை நடத்தும் கவிதைப்போட்டியிலும் மரபுக்கவிதைகளுக்கான சிறப்புப்பரிசைப் பெறுதல். இப்படி பலவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
14. தாங்கள் வெளியிட இருக்கும் நூல் பற்றி?
கவிதாயினி சாரா பாஸ்: “மரபின் வழியே நான்” என்ற நூலினை வெளியிடவுள்ளேன்.
15.இந்திய தேசத்தைப்பொறுத்த வரையில், இளம் கலைஞர்களும், படைப்பாளிகளுக்கான களம், வாய்ப்புகள் எப்படியாகக் காணப்படுகின்றது?
கவிதாயினி சாரா பாஸ்: போட்டியும், பொறாமையும் நிறைந்த உலகமாக இருந்தாலும், இந்திய தேசத்தைப் பொறுத்த வரையில், இளம் கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கான களம் வெகு சிறப்பாகவேயுள்ளது. தம்மைத்தேடி வரும் வாய்ப்புக்களை கலைஞர்களும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
16.மக்களின் வாசிப்பார்வம் நூல்களின் மீதான ஈடுபாடு எந்த வகையில் காணப்படுகிறது?
கவிதாயினி சாரா பாஸ்: தற்போது மக்களின் வாசிப்பார்வம் நூல்களின் மீதான ஈடுபாடு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. நூல்களை இணையத்தின் வாயிலாக வாசிப்போர் எண்ணிக்கை இன்று பன்மடங்காகப் பெருகி விட்டது. நூல்களை உட்கார்ந்து அதற்கென சிரத்தையெடுத்து வாசிப்போர் எண்ணிக்கை மிகவும் குறைவே.
17. கல்குடா நேசன் இணைய வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள நினைப்பது?
கவிதாயினி சாரா பாஸ்: கல்குடா நேசன் இணையம் ஆற்றும் அரும்பணிகள் ஏராளம். கவிஞர்களையும், படைப்பாளிகளையும் தேர்ந்தெடுத்து, அவர்களை உலகிற்கு வெளிக்காட்டி, முன்னிலைப்படுத்தி உலகம் முழுவதும் அறியச்செய்யும் அற்புதப்பல்கலைக்கழகம் என்றே நான் கூறுவேன். இவ்விணையத்தின் தொண்டுகள் வளரவும், தமிழ் மீது கல்குடா நேசன் இணைய வாசகர்கள் கொண்ட பற்றும் வியக்கத்தக்கது. என் போன்ற படைப்பாளியை உலகிற்கு எடுத்துக்காட்டிய சகோதரி ராஜ்சுகா அவர்களுக்கும், கல்குடா நேசன் இணையத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
No comments:
Post a Comment