கல்குடா நேசன் இணையத்தினூடாக வாராவாரம் கலைஞர்கள் படைப்பாளிகளை சந்தித்து அவர்களுடனான கலந்துரையாடலை நேர்காணலாக தந்துகொண்டிருக்கின்றோம். பலரது ஆதரவையும் எதிர்பார்ப்பையும் சுமந்த இப்பகுதியானது வாசகர்கள் அனைவரினது ஆசியோடு வெற்றிநடை போடுகின்றது. இலைமறை காய்களாக இருக்கும் படைப்பாளிகளை அறிமுகப்படுத்துவதிலும் வளர்ந்த கலைஞர்களின் கருத்துக்களை திறமைகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதினாலும் மகிழ்ச்சியடைகின்றோம்.
இதன் தொடரில் 08.04.2016 வெள்ளி இன்று 32வது படைப்பாளியாக எம்மோடு இணைகின்றார், இலங்கை கிண்ணியாவைச் சேர்ந்த கவிஞரும் சிறுவர் இலக்கியவாதியுமான முகம்மது தமீம் சஜாத் அவர்கள். மரபுக்கவிதைகளை படைக்கும் இவர் ஏலவே நான்கு கவிதை நூல்களை வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ரிமா ஆலையில் மின்சார திணைக்களத்தில் மின் இணைப்பு மேற்பார்வையாளராக பணியாற்றும் இவரை கல்குடா நேசன் இணையத்தினூடாக சந்தித்தோம்.
1). தங்களைப் பற்றி எமது வாசகரோடு பகிர்ந்து கொள்ள முடியுமா?
எனது பெயர் முகம்மது தமீம் சஜாத். தற்போது ஹிஜ்ரா வீதி கிண்ணியாவில் வசிக்கின்றேன். மாத்திரமன்றி ப்றீமா ஆலையில் இலத்திரனியல் பிரிவில் கடமையாற்றுகிறேன். இலக்கியத்தின் மீதான நாட்டத்தில் அவற்றில் அதிக கவனம் செலுத்துபவனில் நானும் ஒருவன்.
2). இலக்கியத்தில் நாட்டம் ஏற்பட்ட அனுபவம்?
ஆரம்பகாலம் தொட்டே எனக்கு வாசிப்பின் மீது அதீத அக்கறை எனக்கு இருந்து வந்தது. வாசிப்பின் பிரதிபலனாகவே தற்போதைய எனது எழுத்துகள் வெளிப்படுவதை உணர்கிறேன். இதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது. ஆரம்பம் தொட்டே எனது பெற்றோரும் என்னை இத்துறையில் ஆர்வமூட்டி வந்தமை இப்போதும் எனக்குள் ஞாபகச் சின்னங்களாக மிளிர்கிறது. 1997 ஆம் ஆண்டு 'யுத்தம்'என்ற கவிதை வெளிவரத் தொடங்கியதையடுத்து எனது எழுத்துப் பயணம் படிப்படியாக முளைவிடத் தொடங்கியது. இதற்கு உறுதுணையாக நின்ற எனது தாய் மாமனான கவிஞர் எம்.வை.எம் அலி ஆசிரியர் அவர்களையும் இங்கு ஞாபகமூட்டிக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு எனது இலக்கியப் பயணம் ஓடியது. ஆதன் பிறகு கவிஞர் ஏ.எம்.எம்.அலி அவர்களின் அறிமுகம் கிடைத்தது அவரும் நானும் இலக்கியத்தால் இணைந்து கொண்டோம். எனக்கு மரபுக் கவிதை எழுத ஆவல் ஏற்பட்டது. அன்னாரும் தேமா புளிமா அனைத்தையும் கற்றுத் தந்தார்
எனது எழுத்துக்கள் வாசகர்களைச் சென்றடைகின்ற போதிலும் அவை அவர்களை திருப்திப்படுத்த வேணடும் என்பதே எனது இலக்காகும். எழுத்து என்பது அமானிதமாகும். அது சரியாக, மார்க்க வரையறைக்கு உட்பட்ட வகையில் இருக்க வேண்டும் என்பதே உண்மையாகும்.
3). நீங்கள் எவ்வகையான இலக்கியங்களைப் படைக்கிறீர்கள்?
நான் மரபுக்கவிதை, நவீன கவிதை, சிறுகதை எனப் பல்துறைகளில் எழுதி வருகின்ற போதிலும் சிறுவர் இலக்கியப் படைப்புகளை கட்டமைப்பதிலேயே எனக்கு அதிக உடன் பாடிருக்கின்றது. ஏனெனில் இலக்கிய உலகைப் பொறுத்தவறையில், குறிப்பாக இலங்கையைப் பொறுத்தமட்டில் சிறுவர் இலக்கியப் படைப்புகள் விரல் விட்டு எண்ணக் கூடிய வகையிலேய உள்ளது. சிறுவர் இலக்கியங்களை மேம்படுத்துவதில் அத்தனை எழுத்தாளர்களும் கடுமையாக உழைக்க வேண்டும். அதனாலேயே நான் எல்லா இலக்கிய முறைகளுக்கும் முக்கியத்துவம் வழங்குகின்ற போதிலும் சிறுவர் இலக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றேன்.
4). இதுவரை நீங்கள் எழுதியுள்ள நூல்களும் அவற்றுக்கான பாராட்டுகள்,விருதுகள் பற்றி?
இதுவரை 04 நூல்களை வெளியிட்டுள்ளேன். காகித சிறகுகள், மணல் ஊற்று, இறகுகளால் ஒரு மாளிகை என்ற கவிதை தொகுதிகளை நான் வெளியீடு செய்துள்ளேன். இவை மரபு இலக்கிய வகையை சார்ந்தவையாகும். மட்டுமன்றி 'செல்லமே' என்ற சிறுவர் பாடலையும் வெளியிட்டுள்ளதோடு விரைவில் எனது எனது அடுத்த படைப்பாக 'நிலாவில் ஊஞ்சல் ஆடுவோம்' என்ற சிறுவர் பாடல் தொகுதியையும் வெளியிட எண்ணியுள்ளேன். அதற்குரிய 90 வீதமான வேலைப்பாடுகள் பூர்த்தியாகிவிட்டது.
எனது மரபுக் கவிதை நூல்களுக்கு பல விருதுகளும் பாராட்டுகளும் கிடைத்தது. இதையெண்ணி நான் மிகவும் மகிழ்ச்சியுற்றேன். அதை எனது எழுத்துப் பயணத்தின் ஊக்குவிப்பாகவே நான் பார்க்கின்றேன். 2012இல் வெளியான எனது 'செல்லமே' சிறுவர் பாடல் தொகுதிக்கு மூன்று முக்கியமான விருதுகள் கிடைத்தன. யாழ் இலக்கிய பேரவை விருது, கிழக்கு மாகாண இலக்கிய விருது, மற்றும் சாஹித்திய இலக்கிய மண்டல சிறுவர் இலக்கிய விருதையும் தட்டி சென்றது. இத்தருணத்தில் நான் இறைவனை நன்றியோடு நினைவு கூறக் கடமைப்பட்டுள்ளேன். செல்லமே எனும் இந்நூல் பரிசில்களையும் விருதுகளையும் பெற்றதை தொடர்ந்து கண்டி மலையக கலை, கலாசார சங்கதினால் எனக்கு 'இரத்தின தீபம்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டேன். மட்டுமன்றி கிண்ணியா கலை இலக்கிய மன்றத்தினால் 'பொன்னடை போர்த்தி கௌரவம் பெற்றதோடு 'கவிச்சுடர்' விருதும் எனக்கு வழங்கப்பட்டது.
இவற்றைத் தவிர கவிதை, சிறுவர் பாடல் என பல்துறைப் போட்டிகளில் கலந்து கொண்டு சாஹித்திய இலக்கிய விருது, திறந்த பேச்சுப் போட்டிக்கான விருது, அரச இலக்கிய விருது எனப் பல விருதுகளும், பாராட்டுகளும் கிடைத்தன.
5). நீங்கள் ஏன் குழந்தை இலக்கியத்தை தெரிவு செய்தீர்கள்?
நான் இதற்கும் மேலே சொன்ன பதிலைத்தான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். சிறுவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த வேண்டும். ஆதலால் சிறுவர்களை மையப்படுத்தியே எமது படைப்புகள் அமைய வேண்டும்
6). இவ் இலக்கியம் எழுதுவதற்கு விசேட திறமை, அனுகுமுறை, அனுபவம் வேண்டுமா?; இல்லாவிட்டால் எல்லா கவிஞர்களாலும் இதனை இலகுவாக எழுத முடியுமா? அது பற்றி சற்று விளக்கமாக கூற முடியுமா?
எழுத்து என்பது ஒருவரது வாசிப்பு மேம்பாட்டினால் உருவாவதாகும். வாசிப்பு என்பது எதைச் சார்ந்ததாக இருக்கிறதோ அதைச் சார்ந்ததாகவே எமது எழுத்தும் அமையும். வாசிக்கின்ற முடியும் என்பதோடு காத்திரமான விடயங்களை எழுத முடியுமாக இருக்கும்.
மற்றப்படி அனுபவம் என்பது எழுதுவதினாலோ அல்லது வாசிக்கும் போதிலேயே உயர் நிலைக்குச் செல்லும். வாசிப்பை மேம்படுத்துவதன் மூலமே ஆரோக்கியமான வாசிப்பு சமூகத்தை உருவாக்க முடியும். நல்லவற்றை வாசிப்பவர்கள் நல்ல விடயங்களையும், தீய வழிகேடானவற்றை வாசிப்பவர்களது எழுத்துகள் முரன்பாடுகளை தோற்றுவிப்பதையும் நாம் இன்று கண்ணுடாகக் காண்கின்றோம்.
7). எழுத்து தவிர்ந்த தங்களாது வேறு திறமைகள்?
நான் எழுத்தை நேசிப்பது போல எனது தொழிலையும் அதிகமாக நேசிக்கின்றேன். நான் பிரிமா ஆலையில் மின்சார திணைக்களத்தில் மின் இணைப்பு மேற்பார்வையாளராக பணி புரிகிறேன். திறமையை வெளிக் கொணர இது ஒரு சந்தர்ப்பமாக இருக்கிறது. இலக்கியமும் தொழிலும் எனது இரு கண்களைப் போன்றது.
8). உங்கள் வாழ்க்கையில் அல்லது இலக்கிய பரப்பில் சந்தித்த சாவல்கள், அதிலிருந்து வெற்றி பெற்ற அனுபவங்கள் இருப்பின் எம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
நிச்சயமாக எனது எழுத்துப் பயணத்தில் நான் பல பாதைகளைக் கடந்துதான் வந்துள்ளேன். எவ்வளவோ தடைகளும், எதிர்ப்புகளும் இருந்தன. நான் அவற்றை ஏற்றி விடும் ஏணிகளாகவே பார்த்தேன். தற்காலத்தில் கூட போட்டிகளும் பொறமைகளும் நிறைந்த உலகிலேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஊக்குவிப்புகளோ, ஒத்துழைப்புக்களோ வழங்குகின்ற விதம் மிக மிக குறைவே இன்று காணப்படுகின்றது. இந்நிலை மாற வேண்டும். இன்று எல்லாவற்றையும் தாண்டி எனது எழுத்துக்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதென்றால் அது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாகும்.
9). சிறுவர் இலக்கிய படைப்பில் இன்றைய எழுத்தாளர்களின் ஆர்வம் குறித்து?
நான் ஏற்கனவே சொன்னது போல் சிறுவர் இலக்கிய சிருஷ்டிப்புகள் மிக மிக குறைவே. விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரே சிறுவர் இலக்கிய படைப்புகளை படைக்கின்றனர். எழுத்தாளர்கள் வளர்ந்தவர்களை இலக்கு வைத்தே தமது எழுத்துகளை படைக்கின்றனர். இந்நிலை மாறி வளர வேண்டிய நாளைய சமுகத்தை வழி நடாத்தும் வகையில் எமது படைப்புகள் அமைய வேண்டும்.
எனது ஊரைப் பொருத்தமட்டிலும் எத்தனையோ எழுத்தாளர்கள் உள்ளனர். இது குறித்து எல்லோருமே கரிசனை கொள்ள வேண்டிய நிலைபாட்டிலேயே உள்ளோம்.
10). உங்கள் பார்வையில் எழுத்தாளர்கள் எனும் போது என்ன தோன்றுகின்றது?
எழுத்தாளர்கள் என்பவர்கள் தமது எழுத்துக்களின் முலம் சமுகத்திற்கு தேவையான நல்ல விடயங்களை வெளிக்காண்பவர்கள். எல்லா வகையிலும், அதாவது பல்துறை சார்ந்தவற்றினுடாக அவர்கள் வெளிப்பட வேண்டும். எழுத்தாளர்கள் எனப்படுவோரும் கண்டு பிடிப்பாளர்களே. சமுகத்திற்கு தேவையான நல்ல விடயங்களை நிஜத்தில் கட்டுருவாக்கம் செய்வார்கள்.
11). உங்களது சிறுவர் இலக்கிய படைப்புக்களை எவ்வகையில் சிறுவர்களிடம் கொண்டு சேர்க்கின்றிர்கள்?
சிறுவர் இலக்கியமானது சிறுவர்களோடு ஒன்றித்துப் போன ஒரு விடயமாகும். எனது சிறுவர் இலக்கியப் படைப்புகள் சிறுவர்களை நேரடியாக எவ்வித தடையுமின்றி சென்றடைய வேண்டுமென்பதே எனது விருப்பம் ஆகும். எனது சிறுவர் இலக்கிய சிருஷ்டிப்புக்கள் அத்தனையும் நூல்களாக வெளிவர முன் பத்திரிகை, சிறுவர் இலக்கிய சஞ்சிகைகளிலுமே முதலில் வெளிவருகின்றன. இதன் மூலம் இவை சிறுவர்களை சென்றடையும் என்பது எனது நம்பிக்கையாகும்.
மட்டுமன்றி பிரதனமாக நான் வெளியிட்டுள்ள நூல்களில் உள்ள பாடல்கள் சில பாலர் வகுப்பு பிள்ளைகளுக்கு கற்பிக்கபடுவதாகவும் அறிந்தேன். எவ்வித முகவருமின்றி எனது சிறுவர் இலக்கிய படைப்புகள் சிறுவர்களை சென்றடைகின்றது என்கின்ற போது எனக்குத் திருப்திதான்.
12). இந்திய எழுத்தாளர்களைப் போல இலங்கை எழுத்தாளர்களால் அவர்களது எழுத்தின் முலம் பொருளாதார உயர்வை பெற்று கொள்ள முடியவில்லையே இது ஏன் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?
இந்தியாவை பொருத்தமட்டில் அங்கு கவிஞர்கள் அதிகமாக இருக்கின்றார்கள் அவர்களது எழுத்துக்களை மதிக்க கூடிய அவர்களை உயர் நிலைக்கு கொண்டு செல்ல இந்தியாவில் எத்தனையோ பதிப்பங்கள் உள்ளன. இதனூடாக நூல்களை பதிப்பு செய்ய முடியும். ஆனால் இலங்கையில் அவ்வாறான வாய்ப்புகள் குறைவு.
கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் ஊக்குவிக்க இந்தியாவில் சினிமா துறையும் கைகொடுக்கின்றது. இப்போது தான் படிப்படியாக இலங்கை எழுத்தாளர்களும் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். எழுத்தாளர்களுக்கு பொருளாதரம் என்பது தடையே அல்ல. திறமைகளுக்கு சரியான களம் கொடுக்கப்பட்டால் யாருமே உயர்வானவர்கள்தான்.
13). வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள நினைப்பது?
வாசிப்பே மனிதனைப் பூரணமாக்கும் தொடர்ந்து எல்லாவற்றையும் வாசியுங்கள் விமர்சனங்களை நேருக்கு நேர் தெரிவியுங்கள். அதுவே ஒருவரை ஏற்றி விடும் ஏணிகளாகும். மாத்திரமன்றி எமது படைப்புகளையும் படைப்பாளர்களையும் ஊக்குவியுங்கள். இலக்கியத்தையும் வாழ்வில் ஒரு அங்கமாக கைக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment