கல்குடா நேசன் இணையத்தினூடாக வாராவாரம் கலைஞர்கள் படைப்பாளிகளைச் சந்தித்து அவர்களுடனானகலந்துரையாடலை நேர்காணலாகத் தந்துகொண்டிருக்கின்றோம். பலரது ஆதரவையும் எதிர்பார்ப்பையும் சுமந்த இப்பகுதியானது வாசகர்கள் அனைவரினது ஆசியோடு வெற்றிநடை போடுகின்றது. இலைமறை காய்களாக இருக்கும் படைப்பாளிகளை அறிமுகப்படுத்துவதிலும், வளர்ந்த கலைஞர்களின் கருத்துக்களை, திறமைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதினாலும் மகிழ்ச்சியடைகின்றோம்.
இதன் தொடரில் இன்று 15.04.2016ம் திகதி வெள்ளிக்கிழமை 33வது படைப்பாளியாக எம்மோடு இணைகின்றார் கவிஞர் அமுதன் அவர்கள். “சமூக மாற்றத்தை விரும்பும் எழுத்தாளர்கள், வெறும் கருத்துச்சொல்பவர்களாக மட்டும் இருந்திடாமல், சமூகச் செயற்பாட்டாளர்களாகவும் மாற வேண்டும்” என யதார்த்தபூர்வமாகப் பேசும் இவர், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் கவிஞர் அமுதன் அவர்கள். மூன்று கவிதை நூல்களை இதுவரை வெளியிட்டுள்ள அவர், ஒரு குறும்படத்தையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மூன்றாவது நூலிற்கும் குறும்படத்திற்கும் “அன்னயாவினும்” என்ற ஒரே பெயரையே சூட்டியுள்ளார்.
இவர் தனது கொள்கையினை நடைமுறையிலும் செயற்படுத்தும் ஒரு முயற்சியாளனாக மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழ்கின்றார். பல இலக்கிய அமைப்புக்களோடும் சமூகத்தொண்டர் நிறுவனங்களுடனும் தொடர்புடைய இவரை கல்குடா நேசன் இணையத்தினூடாக சந்தித்தோம்.
01. தங்களைப்பற்றி?
பெயர் மன்னார் அமுதன். சிற்றிலக்கிய இதழ்களிலும், இணையதளங்களிலும், சமூக வலைத்தொடர்பு ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் கவிதை, சிறுகதை , கட்டுரைகளை எழுதிவருகின்றேன்.
02. இலக்கியத்திற்குள் பிரவேசித்த சந்தர்ப்பம்?
சிறுவயதிலிருந்தே வாசிப்பில் அதீத ஆர்வம் இருந்து வந்தது. மாணவப் பருவத்திலேயே சிறுவர் இதழ்களில் எழுதியுள்ளேன். அப்படியே படிப்படியான தேடலும், வாசிப்பும் இலக்கியத்திற்குள் என்னை கொண்டு சேர்த்தது.
03. நீங்கள் முன்னெடுக்கும் இலக்கிய செயற்பாடுகள்?
தற்பொழுது மன்னார் தமிழ்ச்சங்கத்தின் பொதுச்செயலாளராக, தன்னார்வ தொண்டனாக பணியாற்றுகிறேன். கொழும்பு திருமறைக்கலாமன்றம், மன்னார் தழல் இலக்கிய வட்டம் மற்றும் சமூக நலன் சார்ந்த அமைப்புகளோடு சேர்ந்து செயற்பட்டு வருகின்றேன்.
04. இலக்கியம் தவிர்ந்த தங்களது ஏனைய திறமைகள், தொழிற்துறைப்பற்றி?
இலக்கியத்தில் தொழிற்துறையை முன்னிலைப்படுத்த விரும்பவில்லை. என்னை மன்னார் அமுதன் என்ற பெயரில் மட்டுமே அறிமுகம் செய்துகொள்ள விரும்புகிறேன். ஏனைய திறமைகள் என்றால் நன்றாக சமைப்பேன். புதிய உணவு வகைகளை சமையல் குறிப்புகள் வாசித்து சமைக்க முயற்சிப்பேன். குறும்படம் எடுத்திருக்கிறேன்.
05. சங்கம் அமைத்து வளர்த்த தமிழ், தற்காலத்தில் எத்தகைய வளர்ச்சிப்பாதையில் நிற்கின்றது உங்களது பார்வையில்?
பேசும் மொழி மட்டுமே உயிர்வாழும். எழுதப்படும் மொழியே செவ்வியல் பண்பை அடையும். அந்த வகையில் தமிழ் தனது ஆழத்தாலும் அகலத்தாலும் செம்மொழியாகி நிற்கின்றது. மக்கள் தொகையின் பெருக்கத்தோடு, தமிழ் மொழியை பயன்படுத்துபவர்களின் விகிதத்தையும், பயன்படுத்தப்படும் முறையையும் ஒப்பிடுவதால் மொழி சிதைவடைவது போன்றதான தோற்றம் ஒன்று உண்டாகிறது. ஆனால் இன்று தமிழில் வெளிவரும் நூல்களும், மொழிபெயர்ப்புகளும் , சிந்தனைகளும் தமிழின் நிலைத்தன்மையை பறை சாற்றுகிறது.
06. குறிப்பிட்டு சொல்லக்கூடியவர்களை தவிர, இந்திய கவிஞர்களைப்போல இலங்கை கவிஞர்களால் பொருளாதார, புகழ் ரீதியில் முன்னோக்கிய நகரமுடியாமைக்கு காரணம் என்ன?
எந்த ஒரு நாட்டிலும் புகழடைந்த பல கவிஞர்கள் அரசைச் சார்ந்த கவிஞர்களாகவோ அல்லது அரசை நேரடியாக எதிர்த்து மக்களுக்காக எழுதும் அர்ப்பணிப்புள்ளவர்களாகவோ இருந்திருக்கிறார்கள். தமிழகத்தில் புகழடையும் கவிஞர்கள் திராவிட கழகத்தை/ இயக்கத்தைச் சார்ந்து அரசியல் செய்பவர்கள். தமது எழுத்தை கல்லூரி மாணவர்களுக்கு பாடத்திட்டமாக்க முன்மொழியும் பேராசிரியர்கள். அவர்களுடைய எழுத்தைக் கட்சிகள் பயன்படுத்திக் கொண்டு பொருளாதாரத்தைக் கொடுக்கின்றன. இலக்கியவாதிகள் அரசியல்வாதிகளாகவும் இருப்பதால், அரசியல் மேடைகளில் இலக்கியம் முன்னிறுத்தப்படுகிறது அல்லது முன்னிறுத்தப்படுவது போல ஒரு மாயையை கட்டமைக்கிறது. மேலும் சினிமா எனும் மிகப்பெரிய ஊடகமும் அங்கு தான் உள்ளது.
இலங்கையிலும் தங்களது பிரதேசம் சார்ந்த கவிஞர்களை முன்னிறுத்துவதில் பேராசிரியர்களும், பல்கலைக்கழகங்களும் தமது பணியைத் தாராளமாக செய்து வருகின்றனர். இவற்றையெல்லாம் தாண்டியும் சிலர் தமது கவிதைகளை மட்டுமே துடுப்புகளாக்கி எதிர்நீச்சல் போட்டிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்துக்கொண்ட துறையில் தங்களை செப்பனிட்டுக் கொண்டதும், தொடர் பயிற்சிகளை மேற்கொள்வதும், உழைப்பும் தான் காரணம்.
07. இலங்கை படைப்புகளுக்கான வாசகர் வட்டம் எத்தகைய நிலையில் காணப்படுகின்றது? சமூகத்தின் அனைத்து மட்டங்களுக்கும் இலங்கை படைப்புக்கள் எடுத்துச்செல்லப்படுகின்றதா?
இலங்கை படைப்புகளை முறையாக பிரசுரிக்கவும், சந்தைப்படுத்தவும் பதிப்பகங்களோ, உரிய பொறிமுறைகளோ இல்லையென்பது பல இடங்களில் கதைக்கப்பட்ட ஒன்றாகும். மேலும் 6 கோடிக்கு மேற்பட்ட தமிழர்களைக் கொண்ட தமிழ்நாட்டில் ஒரு நூலில் ஒரு பதிப்பில் அதிக பட்சம் 1000 பிரதிகள் தான் அச்சடிக்கப்படுகின்றன. இதை ஒரு ஒப்பீட்டு ரீதியாக பார்த்தால் இலங்கையில் உள்ள வாசகர்களுகாக ஒரு நூறு பிரதிகள் அடித்தால் போதுமானதாக இருக்கும். ஆனால் அடிப்படைச் செலவுகளைக் கருத்தில் கொண்டு 300 பிரதிகளும், இலவச பிரதிகள் வழங்குவதற்காக 500 பிரதிகளும், எவராவது பணம் தர முன்வந்தால் 1000 பிரதிகளும் இலங்கையில் அச்சடிக்கப்படுகின்றன. மேலும் வாசிப்பின் பிரதிபலிப்பாக இங்கு விமர்சனங்களோ, இரசனைக் குறிப்புகளோ கூட குறைவாகவே வெளிவருகின்றன. ஆனால் நானறிந்த வகையில் கடந்த பத்தாண்டுகளில் பல இடங்களிலும் வாசிப்பை பரவலாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சமூகத்தின் அனைத்து மட்டங்களுக்கும் ஒரு படைப்பை எடுத்துச் செல்வதென்பது எழுத்தாளனாலோ, பதிப்பகங்களாலோ இயலாத காரியம் தான். தேவையின் அடிப்படையில் எந்த சமூகத்தின் பங்காளரும் எளிதாகப் பெற்றுக்கொள்ளுவதற்கு வகைசெய்ய வேண்டும். பிரதேச நூலகங்களுக்காக நூல்களைக் கொள்வனவு செய்யும் அரச நடைமுறை இலங்கையில் இருந்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. மன்னாரில் உள்ள பொதுநூலகத்தில் மத்திய வங்கி ஆண்டறிக்கையையோ அல்லது குறிப்பேடு போன்ற அரச வெளியீடுகளைக் கூட வாசிக்க இயலாத நிலை உள்ளது.
08. நீங்கள் வெளியிட்ட நூல்களும் அதுபற்றிய அநுபவங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
முதலாவது நூல் - விட்டு விடுதலை காண் (2009) - எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வெளியீடு
இரண்டாவது நூல் - அக்குறோணி - 2011 - மன்னார் எழுத்தாளர் பேரவை வெளியீடு
மூன்றாவது நூல் - அன்ன யாவினும் - 2015 - மன்னார் தமிழ்ச்சங்க வெளியீடு
இது தவிர தொகுப்பாசிரியராகவும், ஒப்புநோக்குனர் என சில நூல்களில் பணியாற்றியிருக்கிறேன்.
09. உங்களது படைப்புக்களை சமூகத்திடம் எவ்வகையில் கொண்டு சேர்க்கின்றீர்கள், அதற்கு வாசகர்களின் வரவேற்பு, ஆர்வம் எவ்வாறு காணப்படுகின்றது?
கவிரயங்கம் போன்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்தி வருகின்றேன். மக்களை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு அங்கு தான் கிடைக்கிறது. ஆர்வமாக கவி கேட்க வருபவர்களுக்கு நூல்களை இலவசமாக வழங்குகின்றேன். ஆர்வமுடைய்வர்கள் வாசித்து கருத்து கூறுகிறார்கள்.
10. அண்மையில் யாழ்ப்பாணத்தில் "பறையிசைப் நடனப் பயிற்சி பாசறை" எனும் நிகழ்வு இடம்பெற்றதே அதுபற்றி கூறமுடியுமா?
யாழ் எண்டர்டென்மெண்ட் ஏற்பாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த புத்தர் கலைக்குழு மணிமாறன் இந்தப்பயிற்சியை நடத்தினார். மூன்று நாட்கள் பயிற்சி நடைபெற்றது. மனிதர்களின் ஆதியிசை பறையாகும். காலவோட்டத்தில் அது சாதியிசையாக, சாவின் இசையாக மாற்றப்பட்டுள்ளது. இலங்கையிலும் பறையிசையும் பறைக்கூத்தும் நடைமுறையில் இருந்துள்ளது. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு பின்பு அவ்விசை மறக்கடிக்கப்பட்டுள்ளது.
பறையை இசைப்பது, இசைக்கேற்ப நடனமாடுவது, புதிய நண்பர்களின் அறிமுகம், இலக்கிய கருத்தாடல்கள் என மூன்று நாட்களும் எங்களை புதுப்பித்துக்கொள்ளல், புதிய கருத்துகளை அறிந்துகொள்வது என புத்துணர்ச்சியாக இருந்தது. பறையிசையைக் கேட்டதும் நடனமாட வேண்டும் போல் இருக்கும். பறை இசை இயல்பாகவே மக்களைக் கவர்ந்திழுக்கும் சக்தி கொண்டது. இதை மக்கள் விழிப்புணர்வு நிகழ்வுகளுக்கு பயன்படுத்த வேண்டும் எனும் எண்ணத்தோடே இந்நிகழ்வில் கலந்து கொண்டேன். நிகழ்வு முடிந்த பின்னும் பறையிசை கதுகளுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. பறையிசை தொடர்பாக இரு கவிதைகள் எழுதினேன்... அவற்றையும் உங்கள் பார்வைக்காக தருகின்றேன்.
பறை..பறை...பறை
================
பறை... பறை...பறை
பறை அறைந்து பறை
கேட்பவர் காதில் பறை
கேட்காதோர் செவிட்டில் அறை
பறை அறைந்து அறை...
ஓங்கியடிப்பதில் கிழியட்டும்
பறையல்ல
வேடிக்கை மனிதரின்
முகத்திரை
வாழ்க்கையின் இசை பறை -இதைத்
திக்கெட்டும் சென்று பறை
மானுடம் சிதைக்கும் மதத்தை
பறை கொண்டு சிலுவையில் அறை
சாதி இசையென்றால் அறை
ஆதி இசையாகும் பறை
ஆதிக்க சாதியை
அழிக்க அறை...பறை
வேற்றுமையை வேரறுக்க பறை
நீதியை நிலைநாட்ட பறை
ஓங்கியடிப்பதில் கிழியட்டும்
பறையல்ல
வேடிக்கை மனிதரின்
முகத்திரை
11. இவ்வகை நிகழ்வுகளில் பங்கேற்க இளையவர்களிடம் எவ்வாறான ஆர்வம் காணப்படுகின்றது? அல்லது அவர்களை ஊக்கப்படுத்தி இவ்வகையான பாசறைகள் பட்டறைகள் கூட்டங்களில் ஈடுபாட்டை அதிகரிக்க ஏதேனும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றனவா?
இயல்பான ஆர்வம் உள்ளவர்கள் 30-40 பேர் வரை இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட 30 பேர் வரை கலை இலக்கிய துறையில் ஏலவே ஈடுபட்டு வருகின்றவர்கள். ஏற்கனவே அறிமுகமானவர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்கள். ஆர்வமிருந்தும் பணவசதி இல்லாத ஒருசிலருக்கு யாழ் எண்டர்டெயின்மெண்ட் வசதி வாய்ப்புகளை வழகியதாக அறியமுடிகிறது. அது பாராட்டப்பட வேண்டியது. சமூகத்தில் கருத்து சொல்லும் நிலையில் இருப்பவர்கள் இறங்கி வந்து இப்பயிற்சிகளில் ஈடுபடவேண்டும் அல்லது ஈடுபடுபவர்களுக்கு பொருளாதார ரீதியிலான உதவிகளை செய்ய முன்வர வேண்டும். ஏனெனில் இத்துறையில் பொருளாதாரமும் ஒரு பேரிடராக உள்ளது.
12. ஒரு படைப்பாளி வளர தடையாக இருப்பது எதுவென நினைக்கின்றீர்கள்?
புறச்சூழல்கள் பல இருப்பினும் அகச்சூழலை படைப்பாளி தான் வளப்படுத்த வேண்டும். புறச்சூழலை உடைக்கமுடியாமல் படைப்பாளி தோற்க அவனது மனநிலை தான் காரணம். படைப்பாளி என்பவன் ஒரு சமூகத்தின் புறக்கணிப்பாலோ அல்லது சமூகத்தை புறக்கணித்தோ உருவானவன் தான். அத்தகைய சமூகத்திடம் இருந்தோ, அரசியல்வாதியிடமிருந்தோ, அரச உயர் அதிகாரிகளிடமிருந்தோ மேடையில் ஒரு அங்கீகார சான்றிதழை வாங்கிவிட வேண்டும் என எண்ணும் படைப்பாளியின் மனநிலை தான் அவனை வெற்றிபெற விடாமல் தடுக்கும். சமூகத்தீங்கைச் சாடுவதும், முரண்பாடுகளை பிரதிபலிப்பதும் தான் படைப்பாளியின் வேலை. ஆனால் தமது நிலையை விளக்க நினைக்காத, எச்சூழலிலும் எதிர்க்கருத்தே இல்லாத பல படைப்பாளிகளை நான் பார்த்திருக்கிறேன். ஒரு விவாதத்தைச் சார்ந்தோ, எதிர்த்தோ முன்னோக்கி நகர்த்த இயலாத வாசிப்பும், நடுநிலைப்பண்பும் (?) கொண்டவர்களால் எக்காலத்திலும் வளர இயலாது.
13. சமூகத்தை நல்வழிப்படுத்தும் கடமை அனைவருக்கும் உண்டு அதிலும் ஒரு கலைஞனுக்கு இருக்கவேண்டிய பொறுப்பு என எண்ணுவது?
எழுத்து என்பது ஒரு குறிப்பிட்ட வாசகர்களுடன் நின்றுவிடுகின்றது. எனவே சமூக மாற்றத்தை விரும்பும் எழுத்தாளர்கள் சமூகச் செயற்பாட்டாளர்களாகவும் மாற வேண்டும். கலைஞர்கள் , எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து மக்களிடையே நேரடியாகச் சென்று வெவ்வேறு முறைகளில் மாற்றத்தை முயற்சிக்க வேண்டும். சமூக அநீதிகளுக்கு எதிராக நாடகங்கள் பாரிய பங்காற்றி இருக்கின்றன. இன்று பார்வையாளர்களையும் ஒரு பாத்திரமாக்கும் விவாத நாடகமுறைகள் அரங்கேற்றப்படுகின்றன. எனவே கருத்துச்சொல்பவர்களாக இருப்பதோடு செயற்பாட்டாளர்களாகவும் இருப்பதே இன்றைய தேவையாக இருக்கிறது.
14. தங்களது கலைத்துறை சாதனைகளுக்கு கிடைத்த பரிசுகள், விருதுகள் பற்றி?
இதுவரை எந்த சாதனையும் படைக்கவில்லை. எனினும் ஏராளமான நண்பர்களைப் பெற்றிருக்கிறேன். எல்லா மாவட்டங்களிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். இலக்கிய கூட்டங்களுக்கு என்னை மறக்காமல் கூப்பிடுகிறார்கள். உபசரிக்கிறார்கள். அழைக்கும்போது சில நிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியவில்லையே என எனக்குத் தான் கவலையுள்ளது. கிழக்கிலங்கை தடாகம் கலை இலக்கிய வட்டம் வழங்கிய அகஸ்தியர் விருது, கலைத்தீபம், தேசிய கவிஞர்கள் சம்மேளனம் வழங்கிய காவ்ய ஸ்ரீ, பிரதேச மாவட்ட மட்ட இலக்கிய போட்டிகளில் பரிசுகள், சான்றிதழ்கள் பெற்றமை, மன்னார் நகர சபை மற்றும் மட்டக்களப்பு கதிரவன் கலைக்கழகம், பேசாலை முத்தமிழ் மன்ற சிறப்பு நினைவுச் சின்னங்கள் என்பன மறக்க முடியாதவை..
15. "கவிதை" எதனை கொண்டிருக்கவேண்டும்?
கவிதையை வரையறுப்பதற்கான தகுதியை நான் கொண்டிருக்கிறேன் என நினைக்கவில்லை. எனினும் கவிதைக்கான திடமான வரையறை என்பது எதுவும் இல்லை என்று சொல்ல முடியும். வரையறைகள் எல்லாவற்றையும் கடந்தும் கவிதைகள் எழுதப்படுகின்றன. ஆனால் அவற்றை எழுதவும் வரையறையைக் கடக்கவும் இதுவரை இருந்த வரையறைகளை நாம் உணர்ந்திருக்க வேண்டியுள்ளது. அதனை வாசிப்பு, சிந்தனை, எழுத்து பயிற்சிகளின் ஊடாக கடக்கமுடியும்.
16. இளையவர்களுக்கு மரபின்பால் ஈடுபாடு இல்லாமைக்கு காரணம் என்ன?
இது இயல்பானது. மரபு என்பது காலத்தால் பிந்தியது. ஒரு குறிப்பிட்ட காலம் கடைப்பிடிக்கப்பட்டு வந்த எல்லாமே மரபு தான். நவீனம் என்பது பின்நவீனத்திற்கு மரபானது தானே. அந்த வகையில் இன்னும் 20 வருடங்களில் நானொரு மரபுவாதியாக இருக்கலாம். எதிர்கால தொழில்நுட்பத்திற்கும் வாழ்க்கைமுறைக்கும், எழுத்திற்கும் கூட என்னால் இசைவாக்கம் அடைய இயலாமல் போகலாம். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த, குடும்ப நலனோம்பவென, தனிப்பட்ட வளர்ச்சியை நிறுத்திக் கொள்ள வேண்டிய தேவை ஒவ்வொருவருக்குமுள்ளது. இன்றைய மரபுவாதிகள் பலருக்கும் இருந்தது. எதிர்காலத்தில் இருக்கும். எழுதும் போது எழுத்தாளனுக்கும், வாசிக்கும் போது வாசகனுக்கும் நிகழ்காலத்தை தரிசனமாக்கும் எழுத்து எப்போதும் நவீனமாக இருக்கிறது.
No comments:
Post a Comment