இசையில் மயங்காத இதயமுண்டாவென்றால் இல்லையென்று கூறுமளவுக்கு நாம் இசையோடு பின்னிப்பிணைந்து வாழ்தல் பணி செய்கின்றோம். அதிலும் மெல்லிசை கீதங்களில் ஊடுருவி இதயம் மகிழாதார் எவருமிலர்.
எம்மை கவர்ந்த பாடல்களின் வரிகளை நாம் சுவைத்து அசைபோட்டு அநுபவிக்கும் சுகத்தினை பொதுவாக நம்மில் அனைவருமே பெற்றிருப்பதோடு காதல் வரிகள் எல்லா தரப்பினரையும் ஒருகணம் தட்டிப்பார்த்தே செல்லும்.
கவிதை சிறுகதை விமர்சனம் சிறுவர் இலக்கியமென பல தளங்களில் வெற்றிவாகை சூடிய கவிதாயினி H.F ரிஸ்னா அவர்கள் சிறந்த பாடலாசிரியராக வெளிப்பட்டுள்ளமை வியக்கச்செய்கின்றது.
'மெல்லிசை தூறல்கள்" என்ற பாடல் நூல் மூலமாக மேற்கூறிய இதய சுகங்களை எம் சொந்தமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இவ்விளம் படைப்பாளியை முதலில் பாராட்டியே ஆகவேண்டும். ஏலவே எட்டு நூல்களை பிரசவித்த இவர், தனது 9வது நூலை வித்தியாசமான ஓர் திறமையின் மூலத்தை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார்.
பொதுவாக எந்த ஒரு பாடலாசிரியரும் இசையை உள்வாங்கிய பின்னரே வரிகளமைக்கும் வழக்கத்திற்கு உட்பட்டுள்ளனர். ஆனால் ரிஸ்னா அவர்கள் தன் இதயத்தில் சுழலும் இசை ஞானத்தைக்கொண்டும் கவிப்புலமையினைக் கொண்டும் பாடலாக்கியுள்ளமை வரவேற்கத்தக்கது.
சமூகம் காதலென சகல பக்கங்களையும் தொட்டுக்காட்டும் வரிகளில் சுவையமுது வழிந்தோடுகின்றது. 36 பாடல்களில் "பாதைகள் புதிது" எனும் பாடல் இசையமைப்பாளரும் பாடகருமான ஜனாப் டோனி ஹசன் அவர்களால் 2011ல் இசையமைத்து ஹஜ் பெருநாளன்று பாடப்பட்டுள்ளது . "மக்காவில் பிறந்த மாணிக்கமே" எனும் பாடல் பாடகரும் இசையமைப்பாளருமான கலைக்கமால் அவர்களால் 2014ல் இசையமைத்து பாடப்பட்டது. இதுபோல இவரது அனைத்து பாடல்களும் இசைவடிவம் பெற்று ரசிகர்களை நனைக்க வேண்டுமென்பது எனது பிரார்த்தனை.
'அன்பை அள்ளிப் பொழியும்' என்ற முதல் பாடல் வரிகளில் அல்லாவை வாழ்த்தும் வரிகளாகவும் அதன்பின்னால் அனைத்தையும் அலசும் பாடல்களாகவும் அமைந்திருக்கின்றன.
"அனைத்தும் பயில மனமிருந்தால்
அகிலம் உனக்கு ஏணிதரும்
அறிவால் வெல்லும் பலமிருந்தால்
அரிவாள் நாணிவிடும்'
இளம் சமூகத்தை நோக்கி அறைகூவல் விடுக்கும் இவரின் பல கவிதைகள் பிரயோசனம் நிறைந்த கருத்துக்களாக, சமூக அக்கறை சமூக நேசன் கொண்ட இவரின் உள்ளக்கிடக்கைகள் சமூகத்துக்கு அதிகம் கடமைப்பட்டதாக வெளிப்படுகின்றது. தன் எழுத்துக்களால் அக்கடமையினை செவ்வனே செய்துமுடித்திருக்கின்றார்.
இந்திய பாடல்களின் மாயைக்குள் மூழ்கிப்போயிருக்கும் இலங்கையின் ரசனைக்கண்கள் சும்மாவேனும் எம் படைப்புக்களை திரும்பிப் பார்க்காதிருப்பது வேதனைதான். இதனை நூலாசிரியரும் தனதுரையில் கூறியுள்ளார். இந்திய பாடல்களுக்கு எவ்வகையிலும் தரத்திலும் சரி கனதியிலும் சரி குறைவுபடாமல் ரசனைப்பார்வைக்கு விருந்தாக அமைந்துள்ள இந்நூலின் பாடல்கள் அனைத்தும் இசையமைத்து பாடப்படுமாயின் இசைப்பிரியர்களுக்கு சிறந்த வரமாக அமையுமென்பதில் எவ்வித ஐயமுமில்லை. இலங்கையின் இசையமைப்பாளர்களே இது உங்கள் கடமைகளிலும் ஒன்றே என்பதனையும் இவ்விடத்தில் கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்
இவரின் அனைத்து இலக்கிய பணிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இன்னும் பல வெற்றிப்படிகளை எட்டவேண்டும் என்ற பிரார்த்தனைகளோடு நிறைவுசெய்கின்றேன்.
நூலின் வகை: பாடல் தொகுப்பு
நூலின் பெயர்: மெல்லிசைத்தூறல்கள்
நூலாசிரியர்: எச்.எப்.ரிஸ்னா
விலை: 300/
தொடர்புகளுக்கு : riznahalal@gmail.com
No comments:
Post a Comment