பேராதனை பலகலைக்கழக விஞ்ஞானபீட மாணவனும் கவிஞருமான மன்னார் நா.செந்தூரன் அவர்களின் 'யாதுமாகி' கவிதை நூல் வெளியீடு 07.06.2016 அன்று செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணியளவில் பேராதனை பலகலைக்கழக கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் மிக எளிமையாக அழகான அமைதியான முறையில் ஆரம்பமானது.
பல்கலைக்கழக மாணவர்கள் பேராசிரியர்கள் நண்பர்கள் கலை ஆர்வலர்கள் சூழ வெளியீட்டு விழா மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமானது.
வெளிச்சம் அமைப்பின் அனுசரணையுடன் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தினூடாக ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவை பேராசிரியரும் தமிழ்த்துறை தலைவருமாகிய வ.மகேஸ்வரன் அவர்கள் தலைமையேற்று நடாத்தினார்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வுக்கான வரவேற்புரையை விஞ்ஞானபீட மாணவன்சு.பிரகலாதன் அவர்கள் வழங்கி அனைவரையும் விழாவிற்கு அன்புடன் வரவேற்றார்.அதனைத்தொடர்ந்து தமிழ்மீது தீராத பற்றுக்கொண்ட வண.அருட்திரு தமிழ்நேசன் அடிகளார் ஆசியுரையினை அளித்தார்.
அவர் தனதுரையில் கவிதை பற்றிய விளக்கத்தினை பல கவிதைகளினூடாக விளக்கியதோடு ஆரம்பகால கவிதைகளின் போக்கும் தற்கால கவிதைப்போக்கும் குறித்து சிலாகித்தார். யாப்புக்குள் செதுக்கப்பட்ட கவிதைகள் கட்டுடைந்து புதுக்கவிதை நவீன கவிதை என பல வடிவங்களை பெற்றுவிட்டது.
எப்படித்தான் புதுவடிவம் பெற்றாலும் யாப்பிலக்கணத்துடன் புனையப்படும்கவிதைகளின் மகத்துவத்தை கூறியதோடு இன்றைய புதுக்கவிதைகளின் சில நகைச்சுவைக் கவிதைகளையும் சொல்லி மண்டபத்தை புன்னகைக்குள் அலங்கரித்தார்.
அவரைத்தொடர்ந்து தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் வ.மகேஸ்வரன் அவர்கள்தலைமையுரையினை வழங்கினார். ஓர் ஆசானுக்குரிய தாய்மையுணர்வில் அவர் மகிழ்ந்து பேசியதும் அவருடைய மாணவன் ஒரு கவிஞனாக தன்முன் நிற்பதையிட்டு அவர் பூரித்தது எல்லாமே நெகிழ்ச்சியான விடயங்கள். எப்போதும் நல்லாசான்களுக்குரிய தனிப்பண்பும் அதுவே. தோழமைக்குணம் நிறைந்த அவர்,நா.செந்தூரன் அவர்களின் வளர்ச்சி பற்றியும் அவருடைய ஆர்வம் செயற்பாடுகள்குறித்தும் கூறிமகிழ்ந்தார்.
அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களிடையே இதுபோன்ற இலக்கிய செயற்பாடுகள் வளரவேண்டும் எனவும் அதற்கு பல்கலைக்கழக தமிழ்ச்சங்கம் எப்போதும் தனது ஆதரவை வழங்கும் என்றும் கூறி, மாணவர்களிடையே இதுபோன்ற ஆர்வம் மிகக்குறைவாகவே இருக்கின்றது என்பதனையும் வெளிப்படுத்தினார்.
அதனைத்தொடர்ந்து தமிழ் எப் எம் வானொலியின் சிரேஸ்ட அறிவிப்பாளர் முகுந்தன்அவர்கள் அறிமுக உரையினை ஆற்றினார். முதலாவதாக, தான் பேராசிரியர் வ.மகேஸ்வரன் அவர்களின் மாணவன் எனவும் தனது தமிழறிவுக்கு வித்திட்டவர்இவரே என்றும்கூறி பூரிப்படைந்தார். பின்பு கவிஞர் அவர்களின் கவிதையார்வம் குறித்தும் அவருடைய கவிதைகளுக்கு வானொலி நேயர்களிடையே இருக்கும் வரவேற்பு பற்றியும் விபரித்ததோடு 'யாதுமாகி' நூல் மகுடத்தினை கவிஞரின் வேண்டுகோளுக்கிணங்க வழங்கிய சந்தர்ப்பத்தினையும் கூறினார். அத்துடன் ஆர்வமுள்ளஇளைய தலைமுறைக்கு தன்னாலான வாய்ப்புக்களை வழங்குவதாகவும்சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி தருவதாகவும் வாக்களித்தார்.
இவ் உரையினைத்தொடர்ந்து நூல் வெளியீட்டு நிகழ்வு ஆரம்பமானது பல்கலைக்கழக தமிழ்த்துறைப்பொறுப்பாளர் வ.மகேஸ்வரன் அவர்களால் வண.அருட்திரு தமிழ்நேசன்அடிகளார் முதற்பிரதியினை பெற்றுக்கொண்டார். பின்னர் விரிவுரையாளர்கள் மற்றும்அனைவருக்கும் சிறப்பு பிரதி வழங்கப்பட்டது.
தெளிந்த நீரோடைபோல சலசலப்பில்லாது நகர்ந்த வெளியீட்டு விழாவில் நிகழ்வுகள்அடுத்தடுத்து அழகாய் கோர்க்கப்பட்டிருந்தது நூல் வழங்கலைத்தொடர்ந்து பேராதனைபல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தலைவர் கீர்த்தனன் வெளியீட்டுரையினை நிகழ்த்தினார்.
இதன்பின்னர் பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் எம்.எம்.ஜெயசீலன் அவர்கள்விமர்சன உரையினை காத்திரமாக வழங்கினார் இத்தொகுப்பில் கவிஞருடையபெரும்பாலான கவிதைகள் கவியரங்கக்கவிதைகளே உள்ளடக்கப்பட்டுள்ளது. எனவே கவிஞர் சந்தத்திற்கே முன்னுரிமை வழங்கியுள்ளார் எனவும் சந்தத்தை மட்டும்கவனிக்கும்போது வரிகளில் சில வேளை கருத்துக்கள் பிரள்வதாகவும் விமர்சித்தார்.யாப்பிலக்கண அறிவின் தேவையை, சிறப்பை கூறிய அவர் செந்தூரன் அவர்கள்இவ்விடயத்தில் கவனம் செலுத்துவாராயின் இன்னும் அவரது கவிதை வலுப்பெறும்எனக்கூறி வாழ்த்துதல்களோடு விடைபெற்றார்.
விமர்சன உரையின் பின்னர், இவ்விழாவின் நாயகனும் 'யாதுமாகி' கவிதைத்தொகுப்பின்பிதாவுமான கவிஞர் செந்தூரன் அவர்கள் தனது நன்றியுரையுடன் மேடையேறினார்.இந்நூல் வெளிவர பலவழிகளிலும் உதவிய அத்தனைபேருக்கும் , விழாவில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் தனித்தனியாக பெயர்குறிப்பிட்டு நன்றிப்பூக்களை தூவிய அவர், தனது கவிதை பற்றிய விமர்சனங்களுக்கும் கருத்துக்களுக்கும் இவ்வாறு மனந்திறந்தார்.
கவிஞரின் கருத்தின் சுருக்கம் இவ்வாறு அமைந்தது அதாவது, நான் கா.பொ.த சாதாரன தரம் வரை மாத்திரமே தமிழ்மொழியினை கற்றேன் அக்காலம் வரையிலான தமிழறிவினைக்கொண்டே என் கவிதை மீதான தாகத்துக்கு உரமிட்டுக்கொண்டேன்.எனது தமிழ் ஆசிரியர் ஒருவரின் வழிநடத்தலால் கவிதைகளில் சந்தத்துக்கு முன்னுரிமை கொடுத்தேன் அதுவே இன்றென்னை நூலொன்றினை பிரசவிக்கவழிசெய்தது.
அத்துடன் கவிதைக்கு யாப்பிலக்கணம் அவசியம்தான் மறுக்கவில்லை ஆனால் எனது கவிதைகளுக்கு கொடுத்திருக்கும் சந்த முக்கியத்துவத்தினை மாற்றி அதனை தவிர்த்து கவிபுனைய விரும்பவில்லை என தன் மனநிலையில் கொண்ட உறுதியினை வெளிப்படுத்தினார்.
உண்மையில் இவரது பேச்சினை செவிமடுத்துக்கொண்டிருந்த ஆசான்கள் முதல் பெரியவர்கள் அனைவரும், கவிஞரின் கருத்தில் முரண்படவோ எதிர்கருத்து சொல்லவோ அல்லது தமது கருத்தை ஏற்கவில்லையா என சந்தேகம் கொண்டு பார்க்கவோ இல்லை. மாறாக எல்லார் முகத்திலும், ஒரு குழந்தை கதைக்கும்போது அம்மழலையினை தாயானவள் எவ்வாறு ரசிப்பாளோ அந்த உணர்வில் கவிஞரை பெறுமிதத்துடன் பார்த்து வாழ்த்திக்கொண்டிருந்ததையும், மெய்யாகவே எதிர்காலத்தில் செந்தூரன் அவர்கள் சிறப்பான ஓரிடத்தை பிடிப்பார் என்ற நம்பிக்கையுடனும் ஆசீர்வதித்ததை காணக்கூடியதாக இருந்தது.
இந்த உணர்வின் எதிரொலியினை நன்றியுரைக்குப்பின்னரான வாழ்த்துரையில் காணமுடிந்தது. சிரேஸ்ட விரிவுரையாளர் சிறீ பிரசாந்தன் அவர்கள் கவிஞர் செந்தூரன் அவர்களை மனப்பூர்வமாக வாழ்த்தியதோடு தமிழனுக்கே உரிய தமிழுக்கே உரிமையுடைய மரபின் முக்கியம்பற்றிக் கூறி விடைபெற்றார்.
உண்மையில் பெருமிதம் கொள்ள்வேண்டிய விடயம் கவிஞர் செந்தூரன் அவர்கள் தனது ஆசான்கள் முன்னிலையில் நண்பர்கள் முன்னிலையில் மிக இளவயதில் பல்கலைக்கழக மாணவனாக தன் கன்னி வெளியீட்டை வெளியிட்டது சிறப்பான விடயம்.
மனத்திடமும் தெளிவும் பரந்த தேடலும் கொண்ட இம்மாணவக்கவிஞன் எதிர்காலத்தில் நல்ல உயர்வுகளை அடைவார் என்பதில் ஐயமில்லை. இவரின் முயற்சியும் வெற்றியின் மீதான வெறியும் நல்ல தமிழாழத்தினை பெற்றுக்கொள்ள வழிகோலும் என்பது திண்ணம்.
கவிஞரின் அனைத்து முயற்சிகளுக்கும் வாழ்த்துக்களை தூவிய வண்ணம் மனநிறைவான ஓர் நூல்வெளியீட்டில் கலந்துகொண்ட திருப்தியுடன் பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தினைவிட்டு வெளியேறினேன்.
நன்றி
த.ராஜ்சுகா
No comments:
Post a Comment