http://kalkudahnation.com/
வாராவாரம் வெள்ளிக்கிழமையில் கல்குடாநேசன் இணையத்தளம் "கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்" என்ற பகுதியினூடாக எழுத்தாளர்கள் கலைஞர்கள் படைப்பாளர்களை சந்தித்துவருகின்றது. வெற்றிகரமாக பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்துவரும் இப்பகுதியினூடாக கலைஞர்களின் படைப்புக்கள் திறமைகள் இலட்சியங்கள் ஆகியவை பற்றி நேர்காணலூடாக பகிர்ந்துகொள்வது மகிழ்ச்சியளிக்கின்றது.
இதன் தொடரில் 38வது படைப்பாளியாக இவ்வாரம் எம்மோடு இணைகின்றார் கவிஞர் ஓட்டமாவடி ரியாஸ் அவர்கள். கல்குடாநேசன் இலக்கிய பகுதியின் சர்வதேச செயற்பாட்டாளரும், இலக்கிய நேர்காணல் பகுதியை முதன்முதலில் ஆரம்பித்தவருமான கவிஞர் அண்மையில் 'முகவரி இழந்த முச்சந்தி' என்ற நூலினை வெளியிட்டு இலக்கியத்தில் தனக்கான முத்திரையினை பதித்துக்கொண்டார்.
சமூகப்பிரச்சனைகளையும் சாதாரணமாய் நாம்பார்க்கும் பலவிடயங்களையும் கவிதையாகப்புனைந்து வாசகர்கள் வியக்கும்வகைக்கும் இவர் "கவிதை, உணர்வோடு இருக்கவேண்டும் அது படிப்பவரை ஈர்க்கவேண்டும் அரைத்தமாவையே அரைக்காது புதிதாக எழுதவேண்டும்" என ஆணித்தராமாக கூறுகின்றார். இவரின் பெரும்பாலான கவிதைகளும் உணர்ச்சிக்கவிதைகளே.
தனது இலக்கிய வாழ்வு குறித்தும் அனுபவங்கள் குறித்தும் காத்திரமாய் பேசியுள்ள கவிஞர் ஓட்டமாவடி ரியாஸ் அவர்களின் சுவாரஸ்யமான நேர்காணலின் முழுமையினை வாசித்திடலாம்.
1) தங்களைப் பற்றி ?
நான் இலங்கையின் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு நகரில் இருந்து 33 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் மாவடிச்சேனை என்ற கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவன்
உயர் தரம் வரை ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் கல்வி கற்று பின் தொழில் நிமிர்த்தமாக கத்தார் நாட்டில் வசித்து வருகிறேன். தற்போது வெளிவாரி பட்ட படிப்பை படித்து வருகிறேன்.
2) உங்கள் முதல் நூல் வெளியீடு முயற்சி பற்றி கூறுங்களேன்?
ஆமாம் இது என் முதல் குழந்தை சுகப்பிரசவம் மிகவும் சிறப்பாக 28.02.2016 ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இந்நிகழ்வில் இந்திய மற்றும் இலங்கைப் படைப்பாளிகள் கலந்து கொண்டனர். கல்குடா தொகுதி இலக்கிய வரலாற்றில் இந்த நூல் வெளியிட்டு விழா சிறப்பாக என்றும் பேசப்படும் என்று நினைக்கிறேன். பெரும் எண்ணிக்கையான தென்னிந்திய கலைஞர்கள் மத்தியிலும் எங்கள் ஊர் மூத்த இலக்கிய வாதிகள் மத்தியிலும் என் நூல் வெளியிடு மகிழ்வு தருகிறது
இது நான் சுட சுட போட்ட பரோட்டா அல்ல என் பாடசாலை பருவத்தில் இருந்தே என் மனதில் கட்டிய இலக்கிய கோட்டை.
3 ) "முகவரி இழந்த முச்சந்தி" என்று தலைப்பிட காரணம் என்ன?
எங்கள் ஊர் ஓட்டமாவடி முச்சந்தியில் ஒரு பழமையான நூற்றாண்டு வரலாற்றினைக் கொண்ட ஒரு வாகை மரம் நின்றது. ஊரில் இந்த மரத்தை தெரியாதவர்கள் யாருமேயில்லை இந்த முச்சந்தியை கடந்து வெளியூர் செல்பவர்கள் கூட சிறிது நின்று இந்த மரத்தின் கம்பீரத்தையும் அழகையும் ரசித்து செல்வது வழக்கம்
நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது கறி சாமான் வாங்க சந்தைக்கு வாப்பா சைக்கிளில் ஏற்றி என்னை கூட்டி போகும்போதெல்லாம் நான் இந்தத மரத்தை பார்த்து ரசித்து செல்வதும் வழக்கம். வாப்பா இந்த மரத்தை காட்டி அப்போது சொன்ன கதைகளெல்லாம் இப்போதும் என் ஞாபகங்களில் இருக்கிறது. இவ்வாறாக எங்கள் மனங்களில் ஊர் மக்களின் இன்ப துன்பங்களில் இரண்டர கலந்து கிடந்த இந்த மரம் அண்மையில் வீதி அபிவிருத்திக்கா வெட்டப்பட்டது எனக்கு மாத்திரமல்ல ஊர்க்கே பெரும் கவலையாக இருந்தது. அந்த மரத்தில் குடியிருந்த பல்லாயிரக் கணக்கான பறவைகள் தங்க இடமின்றி ஊர் ஊராய் திரியும் போது கண்ணீர் வடித்தவர்களில் நானும் ஒருவன் இது என் மனதை பாதித்தது உண்மைதான் இந்த மரம் வெட்டிய பிறகு கூட அந்த மரம் நிழலாக நின்ற முச்சந்தி கூட வெறுமையாகிப் போனது முகவரி இழந்து சோர்ந்து நின்றது இதுவே என் நூலுக்கும் தலைப்பானது.
4) இந்த தலைப்பு எவ்வாறான அதிர்வை ஏற்படுத்தியது?
இது கவிதை கவிதையை கவிதையாகப் பார்க்க வேண்டும்
இதில் அரசியலுமில்லை உள் குத்தும்மில்லை வெளிக்குத்துமில்லைா
நான் தூர நோக்கு தெரியாதவன் அல்ல விமர்சனம் செய்பவர்கள் முதலில் கவிதையை சரியாகப் படித்து புரிந்து கொள்ள வேண்டும். மரமாக நின்று கவிதை சொன்னேன்
தரமாக நின்று அதன் துயர் சொன்னேன் அவ்வளவுதான்
யார் மனதையும் துன்புறுத்தவோ துயரப்படுத்தவோ ஒரு போதும் நான் நினைத்தது இல்லை.
5) ஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும் சொல்லுங்களேன்?
கவிதை உணர்வோடு இருக்க வேண்டும் அது படிப்பவனை ஈர்க்க வேண்டும் கவிதை சுவைக்க வேண்டும் படிப்பவனை அந்த சுக அனுபவத்துக்குள் இணைக்க வேண்டும்
அரைத்த மாவை அரைக்காது புதிதாக சிந்தித்து புதிதாக எழுத வேண்டும் என்று நினைப்பவன் நான் சமூகச் சூழலில் நடக்கும் ஒவ்வொரு சின்ன சின்ன விடயத்தையும் உன்னிப்பாக அவதானித்து அதை மனதில் பொக்கிஷமாக்கிக் கொள்ளும் இயல்பு கொண்டவனாக இருக்க விரும்புகிறேன் அதையே வெளிப்படையாகவும் எழுதவும் விரும்புகிறேன்
6) நல்ல கவிதைகள் என எவற்றை வரையறை செய்கின்றீர்கள்?
கவிதைக்கு வயது அதிகம் ஆனால் அது பற்றி பேசும் எனக்கோ வயது மிகக் குறைவு கடவுளை எவ்வாறு வரையறுக்க முடியாதோ அவ்வாறே கவிதைகளையும் வரையறுக்க முடியாது என கவிஞர் முருகையன் கூறுவதையே உங்கள் கேள்விக்கும் சொல்லி வைக்கிறேன்.
7) உங்களுக்கு கிடைத்த பாராட்டுக்கள் விருதுகள் பற்றி?
விருதுகளை விட பாராட்டுக்கள் எனக்கு நிறையவே கிடைத்து இருக்கிறது நான் அதையே பெரிதும் விரும்புகிறேன்
2015 மார்ச் மாதம் நடந்த சர்வதேச கவிதைப் போட்டியில் எனக்கு முதலாம் இடமும் கவியருவி பட்டம்
2015 ஏப்ரல் அன்று இந்தியாவில் இருந்து வெளிவரும் வல்லமை இதழ் எனக்கு வல்லமையாளர் விருது வழங்கி கெளரவித்தமை
தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் ஆதரவில் கொழும்பு தமிழ் சங்கத்தில் மர்ஹூம் எஸ் எச் எம் ஜெமீல் நினைவாக கலைத்தீபம் பட்டம் வழங்கி பொண்ணாடை போற்றி கெளரவித்தமை
2015 திருகோணமலையில் மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கமும் படைப்பாளி உலகமும் இணைந்து நடாத்திய இலக்கிய சந்திப்பும் விருது வழங்கும் விழாவில் எனது இலக்கிய துறையைப் பாராட்டி கலை மணி விருது வழங்கி கெளரவித்தமை
அக்கரைப்பற்று ஹாஜா தமிழ் மன்றம் நடாத்திய உலகலாவிய கவிதைப் போட்டியில் முதலாம் இடம் பெற்று சான்றிதழு
ம் பணப் பரிசும் கிடைத்து.
8) ஒரு படைப்பாளியின் ஆரம்பத்தை சரியாக அடித்தளமிடுவது ஏதோ ஒரு ஊடகமாகத்தான் இருக்கும் அந்த வகையில் உங்கள் வளர்ச்சியில் ஊடகங்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்கிறது ?
ஊடகங்கள் தான் என் கவிதைகளை சமூகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது அந்த வகையில் நான் வெளிநாடுகளில் இருக்கும் காலப்பகுதியில் மத்திய கிழக்கு வெளியிடான தமிழ் டைம்ஸ் பத்திரிகை எனது கவிதை சிறுகதை கட்டுரைகளை வார வாரம் பிரசுரம் செய்து சிறப்பான ஒரு களம் அமைத்து தந்தது என்றே சொல்ல வேண்டும்
அதைபோல் இந்தியாவில் இருந்து வெளிவரும் வல்லமை மின்னிதழ் தடாகம் மின்னிதழ் மற்றும் கல்குடா நேசன் புத்தளத்தில் இருந்து வெளி வரும் புதிய வெளிச்சம் பத்திரிகை
இலங்கையின் பிரதான பத்திரிகைகள் தினகரன் வீரகேசரி மித்திரன் சுடர் ஒளி போன்ற பத்திரிகை இணையதளங்களையும் மற்றும் வசந்தம் தொலைக்காட்சி பிரான்ஸ் ttn தொலைக்காட்சி போன்ற எல்லா ஊடகங்களையும் நன்றியுடன் இவ்விடத்தில் நினைவு கூறுகிறேன்.
9) இந்த இடத்தில் யாருக்கும் நன்றி சொல்வதாக இருந்தால் முதலில் யாருக்கு சொல்வீரர்கள்?
முதலில் இறைவனுக்கே சொல்வேன் அடுத்ததாக என் பெற்றோர்களுக்கு நன்றியினை கூறிக் கொண்டு கலையுலகில் எனக்கு ஊக்கம் உற்சாகம் தந்து என்னை ஏற்றுவித்த ஏணியாக நான் பார்ப்பது என் அன்புச் சகோதரி கலைமகள் ஹிதாயா அவர்களையே இந்த இடத்தில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்
என்னை சுதந்திர பறவையாக பறக்க விட்ட என் அன்பு மனைவி ஸாஜிதாவுக்கும் மற்றும் என்னை நேசிக்கின்ற வாசிக்கின்ற அனைத்து முகநூல் உறவுகளுக்கும்
மற்றும் எனது நண்பர்களு&க்கும் நண்பிகளுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
10) நீங்கள் முன்னெடுக்கும் இலக்கிய செயற்பாடுகள் ?
என் கவிதைகள் சமூகவியல் சார்ந்தவையாக இருக்கும்
அடிமட்ட மக்களின் பிரச்சனைகளை சொல்பவைகளாக இருக்கும்
சமூகத்தில் காணப்பட கூடிய ஓட்டை ஒடிசல்கள் மூட நம்பிக்கைகள் சுரண்டல்கள் அநீதிகள் போன்றவற்றை இலக்கியங்கள் பேச வேண்டும் என்று நினைப்பவன் நான்
என் இலக்கிய செயற்பாடு கண்டு தடாகம் கலை இலக்கிய சர்வதேச அமைப்பு அவர்களது மின்னிதழ் சஞ்சிகைக்கு ஆசிரியராக நியமித்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் ஒரு உத் வேகத்தையும் தருகிறது
தமிழ் வளர்க்கும் ஒரு தாயுடன் நானும் இணைந்து இருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அது போல் கல்குடா நேசன் இணையத்தின் இலக்கிய பகுதியின் சர்வதேச தொடர்பாளராக இருக்கிறேன் இதன் மூலமாக பல இளம் கவிஞர்களை அறிமுகம் செய்து வருகிறேன். கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல் பகுதியை முதன் முதலாக தொடங்கியவன் அதையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன். மிக விரைவில் கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல் நூல் வடிவில் வர முயற்சி செய்து கொண்டும் வருகிறோம்.
11. உங்கள் மலேசிய பயணம் பற்றி சொல்லுங்களேன்?
மலேசியப் பயணம் மிக சிறப்பாக அமைந்தது முதலில் இறைவனுக்கே புகனைத்தும் தடாகம் கலை இலக்கிய வட்டம் சிறப்பாக ஒழுங்கு செய்து இருந்தது
அதன் அமைப்பாளர் சகோதரி கலைமகள் ஹிதாயா அவர்களுக்கும் மலேசியாவிலிருந்து கவிஞர் ரூபன் மற்றும் இனிய நந்தவனம் பதிப்பகம் மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் மக்கள் ஓசை ஆசிரியர் ராஜேந்திரன் சகோதரி மல்லிகா கண்ணன் மற்றும் பலர் எங்களை அன்புடன் வரவேற்று உபசரித்தார்கள் மற்றும் அங்கே நடக்கவிருந்த இலக்கிய நிகழ்வுகளையும் சரி படுத்தியும் தந்தார்கள்
குறைகளை விட நிறைவுகள்தான் இப்ப பயணத்தில் நிறைந்து இருந்தது
12. இந்த மலேசியப் பயணம் உங்களுக்கு எதைத் தந்தது?
இந்தி இலங்கை மலேசிய பெரும் எழுதிதாளர்கள் மத்தியில் ஒரு உறவுப் பாலத்தை இந்தப் பயணம் அமைத்துத் தந்தது
அவர்களுக்கு மத்தியில் சிறு அடையாளத்தையும் எனக்கு ஏற்படுத்தி தந்தது
13. அங்கே நடந்த உங்கள் முகவரி இழந்த முச்சந்தி கவிதை நூல் அறிமுக விழா பற்றி கூறுங்கள்?
ஆமாம் மலேசியாவில் இரண்டு இடங்களில் எனது நூல் வெளியிட்டு விழா நடந்தது
தலைநகர் கோலாலம்பூரில் இனிய நந்தவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட எழுத்தாளர் மாநாட்டிலும் மற்றும் மலேசிய தமிழ் சங்க நிகழ்விலும் எனது நூல் அறிமுக விழா சிறப்பாக நடை பெற்றது
அத்தோடு விருதுகள் பட்டங்கள் தந்து கெளரப்படுத்தினார்கள்
14. உங்கள் பார்வையில் மலேசிய எழுத்தாளர் ...?
ஐயோ அந்த பார்வையெல்லாம் எனக்குத் தெரியாது
ஆனால் இவர்கள் தமிழ் வளர்க்கும் நல்ல ஆசான்கள் நம்ம நாட்டு எழுத்தாளர்கள் இவர்களிடம் இருந்து படித்துக் கொள்ள நிறையவே இருக்கிறது.
No comments:
Post a Comment