Tuesday, July 30, 2013

இளமை





கண்ணீரில் கரைந்தே -என்
பாதி விம்பம் 
அழிந்துவிட்டது
இளமை அழுகின்றது!!







நானின்னு(று)ம்!!




தூரவிலகிடும் நிலவுன்னை
துரத்திப்பிடித்திடும் குழந்தையாய்
நானின்னு(று)ம்!!


                

Monday, July 29, 2013

இந்தக்காதலில்

ஒரு நொடியில் 
பற்றிக்கொள்ளும் கோபமும்
மறு நொடியிலே அது
சாம்பலாகிடும் வித்தையும்
இந்தக்காதலில் 
விந்தைதான்!!


இதயத்தில்

கண்கள் 
ஆயிரம்பேரை பார்க்கட்டும்
ஆனாலும் இதயத்தில்
ஆறாமல் இருப்பது -உன்
நினைவுகள் மட்டும்தான்!!


              

காதலில்!!!




நினைப்பது 
அத்தனை சுலபமுமில்லை 
நினைத்துவிட்டால்
மறப்பதும் அத்தனை
சுலபமில்லை 
காதலில்!!!

Friday, July 26, 2013

நினைவுகள்







நிஜங்களைவிட‌
நினைவுகள் வலிமையானவைகள்தான்
நீங்குவதற்கு இத்தனை
நிபந்தனைகள் விதி(வதை)க்கின்றது???

உள்ளமோ




உதடுகள் மட்டுமுன்னை
அடிக்கடி வெறுக்கும்
உள்ளமோ எப்போதுமுனை
உயிருக்குள் சுமக்கும்




Wednesday, July 24, 2013

அவனுக்கு மட்டும்






என்னையறிந்த‌
அவனுக்கு மட்டுந்தான் தெரியும்
என் புன்னகையின் அர்த்தமும்
கண்ணீரின் கருத்தும்

புதி(ரா)தாகவே



காயப்படுத்துவது உனக்கும்
கண்ணீர்விடுவது எனக்கும்
புதிதேயல்ல 
என்றாலும்
உதிரம் கண்டுமுன்
உள்ளம் உணராததுதான்
எப்போதுமெனக்கு
புதி(ரா)தாகவே இருக்கின்றது???








Tuesday, July 23, 2013

உடைந்துபோன உள்ளமோ

கடைசி ஒப்பந்தம் இன்னும்
காதுக்குள் ஒலிக்கின்றது
உடைந்துபோன உள்ளமோ
ஒத்தடமின்றி தவிக்கிறது -அது

இன்னும் நீளமாய்
ஒலித்துக்கொண்டேயிருக்கின்றது

நம் காதலை என்வீட்டார்
ஒத்துக்கொள்ளமாட்டார்கள்
நான் என்னதான் செய்வது

உடைந்துபோன உள்ளமோ
ஒத்தடமின்றி தவிக்கிறது





Friday, July 19, 2013

துன்பத்திலே ஆனந்தமாய்...






கொஞ்சும் கிளிகள் கூண்டுக்குள்ளே
கொத்திக் களிக்கும் கனிகளையே
அஞ்சிடுங் குணங்கள் இருந்தாலும்
ஆனந்த மதற்கு குறைவில்லையே

சிறகுகள் இருந்தும் ஊனமாக
சிலைபோல் பலநேரம் மெளனமாக‌
உறவொன்று அருகே இருப்பதாலே
உலகமே மறந்திடும் மகிழ்ச்சியாலே...

அடைப்பதும் தடுப்பதும் நம்குணந்தான்
அடிமைதனை ஆள்வதில் ஆனந்தம்தான்
விடையில்லா சிறைதனில் சிறுபறவைகள்
விழித்தாலும் துன்பத்திலே ஆனந்தமாய்...

சுற்றித்திரிந்த சுகங்களை நினைக்கையில்
சுமையென சுமக்கும் இக்கணங்கள்
பற்றியிருக்கும் இரும்புக்கம்பிகள் அவைக்கு
பாரங்களை இறக்கிடும் கனங்களாய்...

மரக்குற்றியின் பொந்துக்குள்ளே
மகிழ்ந்திருந்த போழ்துகள் இந்த‌
தகரச்சிறைகள் தடுத்துவிட்ட சோகந்தனை
தாளாமல் கண்ணீர்துளிகள் தானாயுதிர்கின்றது...


உன்னைப் போலல்ல உன் நினைவுகள்





அழுகையின் துளிகள்
அவசரமாய் விழுந்து தெறிக்கின்றது...

வருடங்களை விழுங்கிக்கொண்ட -அந்த‌
வைரமான நாட்களின் ஓசைகள்
வந்து வந்துபோவதில்
வசந்தமெல்லாம் எங்கோ போய்
ஒளிந்துகொள்கின்றது...

அந்த அருகாமைகள்
அன்பேயுருவான அந்நியோன்யங்கள்
காமமில்லாத முத்தம்
காதல்மட்டுமேயான ஸ்பரிசம்
பிரியும் தருணங்களில்
வெடித்து உதிர்க்குமந்த பிரியங்கள்
எதுவும்,
என்னைவிட்டு நீங்குவதாக இல்லை...

உன் நினைவுகள்
உன்னைப்போல இல்லை
அவையொவ்வொன்றும்
உண்மையானவைகள்
ஆழமானவைகள்
ஆசையாசையாய் முளைத்தவைகள்

அதனால்தான் உன்னைப்போலல்லாமல்
என்னைவிட்டு நீங்க‌
இத்தனை சிரமப்படுகின்றன.....

Tuesday, July 16, 2013

காலம் வலிமையானது...



எல்லைகளை தொடுமிடத்து
புள்ளிகளை இடுபவன் நீ
தொல்லைகளை ஒதுக்குகையில்
தொற்றிக்கொண்டு தொடர்பவனும் நீ...

அத்திவாரம் என்பதனை இத்தனை
அலட்சியமாகவே இடுவாய்
புத்திக்கு விலையீடாய்
புனிதங்களையா தொலைப்பாய்

உறவுகளை உருவாக்குவதல்ல நேசம்
உயிருக்குள் பத்திரப்படுத்துவதே அதுவாம்
வரவுகளுக்காய் விலைபேசிட அற்பம்
வருவாயுமதுவல்ல உயர்பாசம்...

கைத்தடி தொடும்நேரம்
கால்தடுக்கி விழும்வேளை தூய‌
நேசம்மட்டும் தேடியலையும் மனம்
இன்றே வித்திட்டுக்கொள்
காலம் வலிமையானது...

புன்னகைப்பதெல்லாம் பூக்களல்ல‌
மணப்பதெல்லாம் புனிதமுமல்ல‌
வாசமில்லா மலர்களுக்குள்ளும்
தேந்துளிகள் ஒளிந்தேயி ருக்கின்றன...




Monday, July 15, 2013

ஈரமாகவே...







நீ தந்த கடைசி முத்தம்
இன்னுமென் உள்ளத்தில்
ஈரமாகவே...

நமக்கான எல்லைகளை
வரையறுத்த எதுவெல்லாமோ
மரித்துப்போயிருக்க‌
நம்வானத்தை சிதைத்துப்போட்ட‌
சிறகுகளெல்லாம்
தீக்கிறையாகிப்போயிருக்க‌
இன்றும்
சுவாசிக்க துடித்துக்கொண்டிருக்கும் நம்
நேசம் சொல்லிடட்டும்
காதலின் தேவை
காமத்திலில்லை என்பதனை

Friday, July 12, 2013

குட்டிக் கவிதைகள்,



தீராத காயங்கள்
தினந்தோறும் ஒலிக்கின்றது
ஆறாத ரணமிதுவும்
ஆறுதலின்றி வலிக்கின்றது




வெறுமையான 
ஆயிரம் வார்த்தைகளைவிட‌------= உன்
பொறுமையான  செவிமடுத்தலே
வேதனைக்கான ஆறுதலாகின்றது



ஒப்புக்காய் ஊட்டிவிடும் _உன்
ஆயாவின் புரியாணியைவிட‌
உள்ளன்போது பருக்கிடும்
என்தாயின் பழஞ்சோறு
அமுதம்தான்!!
 






Tuesday, July 9, 2013

இன்றுதான்????




தனிமைகளை
தாராளமாய் விட்டுச்சென்ற அந்நேசம்
தணிக்கைகளின்றியே
தண்டிக்கின்றது வினாடிகளொவ்வொன்றயும்...





முதன்முதல் அவனை கண்டது

முழுமதியான அன்றுதான்

முழுமையாக அவனைய‌றிந்தது -துரோகத்தில்

மூழ்கிய இன்றுதான்????
 





Monday, June 24, 2013

மழலைகளுக்குள் தொலைந்த மனம்!!


******************************************************************************************************************************************************************

     






 எப்போதும் குழந்தைகள் என்றால் எனக்கு பிரியம்தான் அதுவும் அவர்களது மழலையினை ரசிப்பது இன்னும் கொள்ளைப்பிரியம். இந்த குட்டிஸ்களின் சிரிப்பு அழுகை குறும்பு குழப்படிகள், தத்தித்தத்தி நடக்கும் புதிய நடை, விழுந்து எழும் அழகாக முகஞ்சுழிப்புக்கள் என்று இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்.



                                                   




குழந்தை மனம் எவ்வளவு அழகானது என்பதனை அநுபவித்து பார்க்கும்போது கிடைக்கும் ஆனந்தம் இருக்கே அதை வார்த்தைகளில் வர்ணித்துவிட முடிவதில்லை. ஒருவித கள்ளங்கபடம் சஞ்சலம் இல்லாத அந்த வெள்ளை உள்ளங்களை பார்த்துமகிழும்போது கிடைக்கும் திருப்தி எனக்கு எப்போதும் பரமதிருப்தி.






                                              






                                                



அதிலும் இப்போதெல்லாம் நான் வேதனையின் உச்சத்துக்கு போய்வருவது வழமையாகிவிட்டது அப்போது எங்காவது குழந்தைகளை கண்டால் என்னையறியால் என்னையே நான் மறந்துவிடுவேன் அந்தளவிற்கு குழந்தைகளின்  அசைவுகள் என்னை அசையாமல் நிலைக்கச்செய்துவிடும்




















                                                                  



என்னை மறந்து உண்மையாக சிரிப்பதுகூட இந்த குழந்தைகளை கண்டு ரசிப்பதில் மட்டுமே என்று நான்கூறுவதை எத்தனைபேர் நம்புவீர்களோ தெரியாது ஆனால் என் மனம் இப்போதெல்லாம் இதற்குமட்டுமே அடிமையாகிக்கிடக்கின்றது போலியான இந்த உறவுகள் மத்தியில்....




         









   





நான் வேலைக்கு பேரூந்தில் செல்வது எனது வழக்கம் 
போகும்போது அந்த சனநெரிசலிலும் போக்குவரத்து நெரிசலிலும் பேரூந்து மிக மெதுவாக போய்க்கொண்டிருந்தது வெளியில் ஒரு 2வயது மதிக்கத்தக்க அந்தக்குழந்தை தன் தந்தையுடன் நடந்துபோகும் அந்த மழலை நடையும் பிஞ்சுக்கைகளை ஆட்டி ஆட்டி நடக்கும் விதமும் என் பார்வைக்கும் மனதுக்கும் புதுய உற்சாகத்தை பிரவாகித்துக்கொண்டிருந்தது. அன்றைய நாள் முழுதும் அந்தக்குழந்தையில் நினைவுகளை நிழலாடிக்கொண்டிருந்ததோடு அன்றைய நாளுக்கான என்னுடைய கதைக்களமாகவும் மாறிவிட்டது.
















குழந்தைகளுக்கு அலங்காரமிட்டு அழகுபார்க்க எனக்கும் கொள்ளை ஆசைதானுங்க ஆனால் யார் அவங்க குழந்தைய என்னிடம் தருவாங்க?? அதனால அவங்க செய்வதை சும்மா நின்று பார்த்துகொண்டு இருப்பன்.நெற்றியில் பொட்டு வைக்க அம்மா படும்பாடும் அதை வைக்கவிடாமல் அவர்கள் படும் பிரயத்தனமும் இருக்கே அப்பப்பா என்ன ஒரு பிடிவாதம் அழாகான பிள்ளைவாதம்.









அழும் குழந்தையை அள்ளிக்கொஞ்சிட ஆசை......














               துயிலும் குட்டிக்களை தலைக்கோதி மகிழ்ந்திட ஆசை









அசைவுகள் ஒவ்வொன்றும் அகிலத்தின் ஆச்சரியங்கள்.....








இவர்களின் குறும்புகளை உங்கள் உள்ளங்களில் சேமித்துக்கொள்ளுங்கள் உயிரை உருக்கும் சோகம்கூட சுகமாக மாறிவிடும்...



       








                  ****************************************************************















எனக்கும்கூட குழந்தையாகிவிட ஆசைதான் ஆனால் முடியாது இருந்தாலும் மனதை குழந்தைத்தனமாக வைத்துக்கொள்ளமுடியும் அதைத்தான் முயற்சித்துக்கொண்டிருக்கின்றேன் நீங்களும் முயன்றுபாருங்கள்.








       முக்கியமாக குழந்தைகள் உன்னை ஞாபகப்படுத்துவதாலும் உன்னுடைய குழந்தைத்தனங்களை அவர்கள் வெளிப்படுத்துவதாலும்      இன்னும் குழந்தைகளை அதிகமாக விரும்புகின்றேன்.