கொஞ்சும் கிளிகள் கூண்டுக்குள்ளே
கொத்திக் களிக்கும் கனிகளையே
அஞ்சிடுங் குணங்கள் இருந்தாலும்
ஆனந்த மதற்கு குறைவில்லையே
சிறகுகள் இருந்தும் ஊனமாக
சிலைபோல் பலநேரம் மெளனமாக
உறவொன்று அருகே இருப்பதாலே
உலகமே மறந்திடும் மகிழ்ச்சியாலே...
அடைப்பதும் தடுப்பதும் நம்குணந்தான்
அடிமைதனை ஆள்வதில் ஆனந்தம்தான்
விடையில்லா சிறைதனில் சிறுபறவைகள்
விழித்தாலும் துன்பத்திலே ஆனந்தமாய்...
சுற்றித்திரிந்த சுகங்களை நினைக்கையில்
சுமையென சுமக்கும் இக்கணங்கள்
பற்றியிருக்கும் இரும்புக்கம்பிகள் அவைக்கு
பாரங்களை இறக்கிடும் கனங்களாய்...
மரக்குற்றியின் பொந்துக்குள்ளே
மகிழ்ந்திருந்த போழ்துகள் இந்த
தகரச்சிறைகள் தடுத்துவிட்ட சோகந்தனை
தாளாமல் கண்ணீர்துளிகள் தானாயுதிர்கின்றது...
No comments:
Post a Comment