Thursday, April 14, 2016

கல்குடா நேசன் இணையத்தின் 32வது படைப்பாளியாக கவிஞர்ன் கிண்ணியா முகம்மது தமீம் சஜாத் அவர்கள் (08.04.2016)








கல்குடா நேசன் இணையத்தினூடாக வாராவாரம் கலைஞர்கள் படைப்பாளிகளை சந்தித்து அவர்களுடனான கலந்துரையாடலை நேர்காணலாக தந்துகொண்டிருக்கின்றோம். பலரது ஆதரவையும் எதிர்பார்ப்பையும் சுமந்த இப்பகுதியானது வாசகர்கள் அனைவரினது ஆசியோடு வெற்றிநடை போடுகின்றது. இலைமறை காய்களாக இருக்கும் படைப்பாளிகளை அறிமுகப்படுத்துவதிலும் வளர்ந்த கலைஞர்களின் கருத்துக்களை திறமைகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதினாலும் மகிழ்ச்சியடைகின்றோம்.

இதன் தொடரில்  08.04.2016 வெள்ளி இன்று 32வது படைப்பாளியாக எம்மோடு இணைகின்றார்,  இலங்கை கிண்ணியாவைச் சேர்ந்த கவிஞரும் சிறுவர் இலக்கியவாதியுமான முகம்மது தமீம் சஜாத் அவர்கள்.  மரபுக்கவிதைகளை படைக்கும் இவர் ஏலவே நான்கு கவிதை நூல்களை வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.  ரிமா ஆலையில் மின்சார திணைக்களத்தில் மின் இணைப்பு மேற்பார்வையாளராக பணியாற்றும் இவரை கல்குடா நேசன் இணையத்தினூடாக சந்தித்தோம். 



1). தங்களைப் பற்றி எமது வாசகரோடு பகிர்ந்து கொள்ள முடியுமா? 
எனது பெயர் முகம்மது தமீம் சஜாத். தற்போது ஹிஜ்ரா வீதி கிண்ணியாவில் வசிக்கின்றேன். மாத்திரமன்றி ப்றீமா ஆலையில் இலத்திரனியல் பிரிவில் கடமையாற்றுகிறேன். இலக்கியத்தின் மீதான நாட்டத்தில் அவற்றில் அதிக கவனம் செலுத்துபவனில் நானும் ஒருவன். 


2). இலக்கியத்தில் நாட்டம் ஏற்பட்ட அனுபவம்?

ஆரம்பகாலம் தொட்டே எனக்கு வாசிப்பின் மீது அதீத அக்கறை எனக்கு இருந்து வந்தது. வாசிப்பின் பிரதிபலனாகவே தற்போதைய எனது எழுத்துகள் வெளிப்படுவதை உணர்கிறேன். இதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது. ஆரம்பம் தொட்டே எனது பெற்றோரும் என்னை இத்துறையில் ஆர்வமூட்டி வந்தமை இப்போதும் எனக்குள் ஞாபகச் சின்னங்களாக மிளிர்கிறது. 1997 ஆம் ஆண்டு 'யுத்தம்'என்ற கவிதை வெளிவரத் தொடங்கியதையடுத்து எனது எழுத்துப் பயணம் படிப்படியாக முளைவிடத் தொடங்கியது. இதற்கு உறுதுணையாக நின்ற எனது தாய் மாமனான கவிஞர் எம்.வை.எம் அலி ஆசிரியர்  அவர்களையும் இங்கு ஞாபகமூட்டிக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு எனது இலக்கியப் பயணம் ஓடியது. ஆதன் பிறகு கவிஞர் ஏ.எம்.எம்.அலி அவர்களின் அறிமுகம் கிடைத்தது அவரும் நானும் இலக்கியத்தால் இணைந்து கொண்டோம். எனக்கு மரபுக் கவிதை எழுத ஆவல் ஏற்பட்டது. அன்னாரும் தேமா புளிமா அனைத்தையும் கற்றுத் தந்தார்  
எனது எழுத்துக்கள் வாசகர்களைச் சென்றடைகின்ற போதிலும் அவை அவர்களை திருப்திப்படுத்த வேணடும் என்பதே எனது இலக்காகும். எழுத்து என்பது அமானிதமாகும். அது சரியாக, மார்க்க வரையறைக்கு உட்பட்ட வகையில் இருக்க வேண்டும் என்பதே உண்மையாகும்.




3). நீங்கள் எவ்வகையான இலக்கியங்களைப் படைக்கிறீர்கள்?


நான் மரபுக்கவிதை, நவீன கவிதை, சிறுகதை எனப் பல்துறைகளில் எழுதி வருகின்ற போதிலும் சிறுவர் இலக்கியப் படைப்புகளை கட்டமைப்பதிலேயே எனக்கு அதிக உடன் பாடிருக்கின்றது. ஏனெனில் இலக்கிய உலகைப் பொறுத்தவறையில், குறிப்பாக இலங்கையைப் பொறுத்தமட்டில் சிறுவர் இலக்கியப் படைப்புகள் விரல் விட்டு எண்ணக் கூடிய வகையிலேய உள்ளது. சிறுவர் இலக்கியங்களை மேம்படுத்துவதில் அத்தனை எழுத்தாளர்களும் கடுமையாக உழைக்க வேண்டும். அதனாலேயே நான் எல்லா இலக்கிய முறைகளுக்கும் முக்கியத்துவம் வழங்குகின்ற போதிலும் சிறுவர் இலக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றேன்.


4). இதுவரை நீங்கள் எழுதியுள்ள நூல்களும் அவற்றுக்கான பாராட்டுகள்,விருதுகள் பற்றி?


இதுவரை 04 நூல்களை வெளியிட்டுள்ளேன். காகித சிறகுகள், மணல் ஊற்று, இறகுகளால் ஒரு மாளிகை என்ற கவிதை தொகுதிகளை நான் வெளியீடு செய்துள்ளேன். இவை மரபு இலக்கிய வகையை சார்ந்தவையாகும். மட்டுமன்றி 'செல்லமே' என்ற சிறுவர் பாடலையும்  வெளியிட்டுள்ளதோடு விரைவில் எனது எனது அடுத்த படைப்பாக 'நிலாவில் ஊஞ்சல் ஆடுவோம்' என்ற சிறுவர் பாடல் தொகுதியையும் வெளியிட எண்ணியுள்ளேன். அதற்குரிய 90 வீதமான வேலைப்பாடுகள் பூர்த்தியாகிவிட்டது. 

எனது மரபுக் கவிதை நூல்களுக்கு பல விருதுகளும் பாராட்டுகளும் கிடைத்தது. இதையெண்ணி நான் மிகவும் மகிழ்ச்சியுற்றேன். அதை எனது எழுத்துப் பயணத்தின் ஊக்குவிப்பாகவே நான் பார்க்கின்றேன். 2012இல் வெளியான எனது 'செல்லமே' சிறுவர் பாடல் தொகுதிக்கு மூன்று முக்கியமான விருதுகள் கிடைத்தன. யாழ் இலக்கிய பேரவை விருது, கிழக்கு மாகாண இலக்கிய விருது, மற்றும் சாஹித்திய இலக்கிய மண்டல சிறுவர் இலக்கிய விருதையும் தட்டி சென்றது. இத்தருணத்தில் நான் இறைவனை நன்றியோடு நினைவு கூறக் கடமைப்பட்டுள்ளேன்.  செல்லமே எனும் இந்நூல் பரிசில்களையும் விருதுகளையும் பெற்றதை தொடர்ந்து கண்டி மலையக கலை, கலாசார சங்கதினால் எனக்கு 'இரத்தின தீபம்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டேன். மட்டுமன்றி கிண்ணியா கலை இலக்கிய மன்றத்தினால் 'பொன்னடை போர்த்தி கௌரவம் பெற்றதோடு 'கவிச்சுடர்' விருதும் எனக்கு வழங்கப்பட்டது.

இவற்றைத் தவிர கவிதை, சிறுவர் பாடல் என பல்துறைப் போட்டிகளில் கலந்து கொண்டு சாஹித்திய இலக்கிய விருது, திறந்த பேச்சுப் போட்டிக்கான விருது, அரச இலக்கிய விருது எனப் பல விருதுகளும், பாராட்டுகளும் கிடைத்தன.

5). நீங்கள் ஏன் குழந்தை இலக்கியத்தை தெரிவு செய்தீர்கள்?


நான் இதற்கும் மேலே சொன்ன பதிலைத்தான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். சிறுவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த வேண்டும். ஆதலால் சிறுவர்களை மையப்படுத்தியே எமது படைப்புகள் அமைய வேண்டும்


6). இவ் இலக்கியம் எழுதுவதற்கு விசேட திறமை, அனுகுமுறை, அனுபவம் வேண்டுமா?; இல்லாவிட்டால் எல்லா கவிஞர்களாலும் இதனை இலகுவாக எழுத முடியுமா? அது பற்றி சற்று விளக்கமாக கூற முடியுமா?


எழுத்து என்பது  ஒருவரது வாசிப்பு மேம்பாட்டினால் உருவாவதாகும். வாசிப்பு என்பது எதைச் சார்ந்ததாக இருக்கிறதோ அதைச் சார்ந்ததாகவே எமது எழுத்தும் அமையும். வாசிக்கின்ற முடியும் என்பதோடு காத்திரமான விடயங்களை எழுத முடியுமாக இருக்கும்.

மற்றப்படி அனுபவம் என்பது  எழுதுவதினாலோ அல்லது வாசிக்கும் போதிலேயே உயர் நிலைக்குச் செல்லும். வாசிப்பை மேம்படுத்துவதன் மூலமே ஆரோக்கியமான வாசிப்பு சமூகத்தை உருவாக்க முடியும். நல்லவற்றை வாசிப்பவர்கள் நல்ல விடயங்களையும், தீய வழிகேடானவற்றை வாசிப்பவர்களது எழுத்துகள் முரன்பாடுகளை தோற்றுவிப்பதையும் நாம் இன்று கண்ணுடாகக் காண்கின்றோம்.


7). எழுத்து தவிர்ந்த தங்களாது வேறு திறமைகள்?

நான் எழுத்தை நேசிப்பது போல எனது தொழிலையும் அதிகமாக நேசிக்கின்றேன். நான் பிரிமா ஆலையில் மின்சார திணைக்களத்தில் மின் இணைப்பு மேற்பார்வையாளராக பணி புரிகிறேன். திறமையை வெளிக் கொணர இது ஒரு சந்தர்ப்பமாக இருக்கிறது. இலக்கியமும் தொழிலும் எனது இரு கண்களைப் போன்றது.

8). உங்கள் வாழ்க்கையில் அல்லது இலக்கிய பரப்பில் சந்தித்த சாவல்கள், அதிலிருந்து வெற்றி பெற்ற அனுபவங்கள் இருப்பின் எம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?


நிச்சயமாக எனது எழுத்துப் பயணத்தில் நான் பல பாதைகளைக் கடந்துதான் வந்துள்ளேன். எவ்வளவோ தடைகளும், எதிர்ப்புகளும் இருந்தன. நான் அவற்றை ஏற்றி விடும் ஏணிகளாகவே பார்த்தேன். தற்காலத்தில் கூட போட்டிகளும் பொறமைகளும் நிறைந்த உலகிலேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஊக்குவிப்புகளோ, ஒத்துழைப்புக்களோ வழங்குகின்ற விதம் மிக மிக குறைவே இன்று காணப்படுகின்றது. இந்நிலை மாற வேண்டும். இன்று எல்லாவற்றையும் தாண்டி எனது எழுத்துக்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதென்றால் அது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாகும்.


9). சிறுவர் இலக்கிய படைப்பில் இன்றைய எழுத்தாளர்களின் ஆர்வம் குறித்து?


நான் ஏற்கனவே சொன்னது போல் சிறுவர் இலக்கிய சிருஷ்டிப்புகள் மிக மிக குறைவே. விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரே சிறுவர் இலக்கிய படைப்புகளை படைக்கின்றனர். எழுத்தாளர்கள் வளர்ந்தவர்களை இலக்கு வைத்தே தமது எழுத்துகளை படைக்கின்றனர். இந்நிலை மாறி வளர வேண்டிய நாளைய சமுகத்தை வழி நடாத்தும் வகையில் எமது படைப்புகள் அமைய வேண்டும்.

எனது ஊரைப் பொருத்தமட்டிலும் எத்தனையோ எழுத்தாளர்கள் உள்ளனர். இது குறித்து எல்லோருமே கரிசனை கொள்ள வேண்டிய நிலைபாட்டிலேயே உள்ளோம்.


10). உங்கள் பார்வையில் எழுத்தாளர்கள் எனும் போது என்ன தோன்றுகின்றது?


எழுத்தாளர்கள் என்பவர்கள் தமது எழுத்துக்களின் முலம் சமுகத்திற்கு தேவையான நல்ல விடயங்களை வெளிக்காண்பவர்கள். எல்லா வகையிலும், அதாவது பல்துறை சார்ந்தவற்றினுடாக அவர்கள் வெளிப்பட வேண்டும். எழுத்தாளர்கள் எனப்படுவோரும் கண்டு பிடிப்பாளர்களே. சமுகத்திற்கு தேவையான நல்ல விடயங்களை நிஜ‌த்தில் கட்டுருவாக்கம் செய்வார்கள்.


11). உங்களது சிறுவர் இலக்கிய படைப்புக்களை எவ்வகையில் சிறுவர்களிடம் கொண்டு சேர்க்கின்றிர்கள்?


சிறுவர் இலக்கியமானது சிறுவர்களோடு ஒன்றித்துப் போன ஒரு விடயமாகும். எனது சிறுவர் இலக்கியப் படைப்புகள் சிறுவர்களை நேரடியாக எவ்வித தடையுமின்றி சென்றடைய வேண்டுமென்பதே எனது விருப்பம் ஆகும். எனது சிறுவர் இலக்கிய சிருஷ்டிப்புக்கள் அத்தனையும் நூல்களாக வெளிவர முன் பத்திரிகை, சிறுவர் இலக்கிய சஞ்சிகைகளிலுமே முதலில் வெளிவருகின்றன. இதன் மூலம் இவை சிறுவர்களை சென்றடையும் என்பது எனது நம்பிக்கையாகும்.

மட்டுமன்றி பிரதனமாக நான் வெளியிட்டுள்ள நூல்களில் உள்ள பாடல்கள் சில பாலர் வகுப்பு பிள்ளைகளுக்கு கற்பிக்கபடுவதாகவும் அறிந்தேன். எவ்வித முகவருமின்றி எனது சிறுவர் இலக்கிய படைப்புகள் சிறுவர்களை சென்றடைகின்றது என்கின்ற போது எனக்குத் திருப்திதான்.


12). இந்திய எழுத்தாளர்களைப் போல இலங்கை எழுத்தாளர்களால் அவர்களது எழுத்தின் முலம் பொருளாதார உயர்வை பெற்று கொள்ள முடியவில்லையே இது ஏன் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?


இந்தியாவை பொருத்தமட்டில் அங்கு கவிஞர்கள் அதிகமாக இருக்கின்றார்கள் அவர்களது எழுத்துக்களை மதிக்க கூடிய அவர்களை உயர் நிலைக்கு கொண்டு செல்ல இந்தியாவில் எத்தனையோ பதிப்பங்கள் உள்ளன. இதனூடாக நூல்களை பதிப்பு செய்ய முடியும். ஆனால் இலங்கையில் அவ்வாறான வாய்ப்புகள் குறைவு.

கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் ஊக்குவிக்க இந்தியாவில் சினிமா துறையும் கைகொடுக்கின்றது. இப்போது தான் படிப்படியாக இலங்கை எழுத்தாளர்களும் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். எழுத்தாளர்களுக்கு பொருளாதரம் என்பது தடையே அல்ல. திறமைகளுக்கு சரியான களம் கொடுக்கப்பட்டால் யாருமே உயர்வானவர்கள்தான்.


13). வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள நினைப்பது? 




வாசிப்பே மனிதனைப் பூரணமாக்கும் தொடர்ந்து எல்லாவற்றையும் வாசியுங்கள் விமர்சனங்களை நேருக்கு நேர் தெரிவியுங்கள். அதுவே ஒருவரை ஏற்றி விடும் ஏணிகளாகும். மாத்திரமன்றி எமது படைப்புகளையும் படைப்பாளர்களையும் ஊக்குவியுங்கள். இலக்கியத்தையும் வாழ்வில் ஒரு அங்கமாக கைக் கொள்ளுங்கள்.

என் எல்லா பேரூந்து பயணங்களிலும்..10 April 2013

என் எல்லா பேரூந்து பயணங்களிலும்
வேடிக்கைக்கு முதலிடம் -இன்றோ
எண்ணங்கள்
எண்ணையில் விழுந்த நீராய்
எதிலும் ஒட்டாமல்
வெறிச்சோடிக்கிடக்கின்றது...
வெளியில் நடந்திடு மெதுவும்
விழியினீர்ப்பை வதைக்கவில்லை
அழகான பெண்கள்
அலங்காரமான ஆடைகள்
நாகரிக கோலங்கள்
நளினமான காதலர்கள்
பக்கத்தில் வந்தமர்ந்த‌
பளிச்சென்ற அந்தப் பையன்
வியாபித்த வாகனநெரிசல்
விதவிதமான கடைத்தெருக்கள்
வளர்ச்சிகண்ட கட்டிடங்கள்
வனப்பு மாறாத புதுமைகளென்று
எதிலும் சிந்தை கலையவில்லை...
ஆயிரம் கேள்விகளுக்கு மத்தியில்
இதயத்தை அழுத்தமாய் தைத்த‌
அந்த‌ வார்த்தை -புத்தி
பேதலித்து நிற்குமந்த மனிதர்
என்னை இயங்கவிடாது தடுத்துக்கொண்டிருந்தது
இவர் முன்பு பெரிய ஆசிரியராம்
மனைவி விட்டுவிட்டு போயிட்டாளாம்!!!

ஊரிலிருந்து வரும்போதெல்லாம்...

ஊரிலிருந்து வரும்போதெல்லாம்
உள்ளத்தில் ஓர்வலி
ஏதோ ஒன்றை
விட்டுவிட்டு வருவதாய்......

ரயில் பயணம்தான்...

வாழ்க்கை
ரயில் பயணம்தான்...
நிரந்தரமாக எந்த
தரிப்பிடமுமில்லை
பயணிகளும் இல்லை
வருவோர் போவோர்- வெறும்
புன்னகை உறவுகள் மட்டுமே.....
பயண முடிவுவரை -நம்
பயணப்பை மட்டுமே கூடவருகின்றது......

என்றறிய முடிவதில்லை...

சில நிகழ்வுகள்
யதார்த்தமா விதியா
என்றறிய முடிவதில்லை...
சில மாற்றங்கள்
நிஜமா நிகழ்வா
என விளங்கமுடிவதில்லை...

சில நினைவுகளை

விலங்கிடப்பட்ட சில நினைவுகளை
விலக்கிவைக்க நினைத்தாலும்
வில்லங்கமாய் ஒட்டிக்கொண்டு
விதிவழியே பயணிக்குது....

09.04.2016 அன்று கனகேஸ்வரன் அவர்களின் துளிர்" கவிதை நூல் வெளியீட்டில்

09.04.2016 அன்று மலையக மண்ணின் வளர்ந்துவரும் இளம் கவிஞரான KG என அழைக்கப்படும் கனகேஸ்வரன் அவர்களின் கன்னி வெளியீட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

" துளிர்" கவிதை நூல் செல்லமுத்து வெளிட்டகத்தால் வெளியீடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்புப் பிரதியினை பெற்றுக்கொண்டதுடன் சிறப்புப்பிரதியினை வழங்கவும் எனக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

பல கலைஞர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்த நிகழ்வில், மலையகத்தின் வளர்ந்துவரும் ஓர் முயற்சியாளர் என்ற ரீதியில் எனக்கும் அவ்வாறான கௌரவம் தந்து மதித்தமை மகிழ்வான தருணமாக இருந்தது.

எனது மண்ணில் இவ்வாறான ஓர் சந்தர்ப்பத்தை வழங்கிய செல்லமுத்து வெளியீட்டகத்தின் தலைவர் கவிஞர் யோ.புரட்சி அவர்களுக்கும் " துளிர்"கவிஞர் கனகேஸ்வரன் அவர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.







08.04.2016 அன்று நவமணி பத்திரிகையில் வெளியான கவிதை (வேங்கையென எழுவோம்)

                                      

Monday, April 4, 2016

03.04.2016 "முகவரி இழந்த முச்சந்தி" கவிதை நூல் மீதான விமர்சனக்குறிப்பு. ( ஞாயிறு வீரகேசரியில்)


ஞாயிறு வீரகேசரியில் பிரசுரமான எனது ரசனைக்குறிப்பு. கவிஞர் ஓட்டமாவடி ரியாஸ் அவர்களின் "முகவரி இழந்த முச்சந்தி" கவிதை நூல் மீதான விமர்சனக்குறிப்பு.







"புதுவரவு" மார்ச் மாத இதழில்... (2016 March)

"புதுவரவு" மார்ச் மாத இதழில்...

புரிந்துகொண்ட மணங்களும்... பிரிந்து செல்லும் மனங்களும்... கட்டுரை 






Saturday, April 2, 2016

கல்குடா நேசனின் நேர்காணல் கவிதாயினி சிவரமணி (18.03.2016)




01.    தங்களைப்பற்றி?

வணக்கம் . என் இயற்பெயரே சிவரமணி தான். நான் படித்தது  உயர்தரம் கலைப்பிரிவு.  கல்வி பயின்றேன். அம்மா அப்பா இருவரும் இறந்துவிட்டனர் திருமணமாகிவிட்டது. . இல்லத்தரசியாகவே வாழ்கின்றேன்

02.    நீங்கள் இலக்கியத்தினுள் காலடிவைத்த அனுபவத்தினை எம்மோடு பகிர்ந்துகொள்ள முடியுமா?

படிக்கும் காலத்திலேயே  இலக்கிய செய்ற்பாடுகளில் இறங்கிவிட்டேன்.கவிதைகள் கட்டுரைகள் நாடகங்கள் என பங்குபற்றுவேன் அத்தோடுசில பொறுப்புகளில் இருந்தும் பணியாற்றி உள்ளேன் கிட்டதட்ட இருபது ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது என் எழுத்தார்றல்.  காலமாற்றம் நாட்டுச்சூழல் நீண்ட இடைவெளி விட்டுவிட்டேன் மீண்டும் அன்மைக்காலமாக தொடர்ந்தேன் .இன்று ஒரு நிலையை அடைந்துள்ளேன்  ஏறவேண்டியது பலபடியாயினும் ஒரிரு படியிலாவது ஏறி நிற்கின்றேன்


03.    அண்மையில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது, தங்களின் பார்வையில் இந்த தினம் பற்றி?

கொண்டாட வேண்டியது என  குறைகாணாதவர்கள் கூறலாம், தவறில்லை  ஆனால் பேச்சளவில் தான் பெண்கள்  சுந்தந்திரம் . ஒருசிலர் விதிவிலக்காயிருப்பினும்.  பெரும்பான்மையினர் அடக்குமுறையினுள் அகப்பட்டே. பெண் குழந்தைகளுக்கே பாதுகாப்பில்லாத கொடுமை இன்று. . ஒரு  உபயோகப்பொருள் என  பெண்மை  . இதில்  மகளிர்மட்டும் மகளிர்க்காக  என்பது கந்துடைப்பே//




04.    நீங்கள் முன்னெடுக்கும் இலக்கிய செயற்பாடுகள்?

கலைஞர்கள்  ஊக்குவிப்பு  . எமது  கலைஞர்களுக்காக  தாய்தேசக்கலைஞச்ர்கள்   அமைப்பு  என உருவாக்கி சிறந்தமுறையில் கொண்டு செல்கிறோம், அதன் செயலாளராய்  உள்ளேன், அத்துடன்  . செந்தணல் வெளியீட்டக அமைப்பின் செயலாளராயும் உள்ளேன்,  வெளியீடுகள் போன்றவற்றிற்கு முடிந்தவரை பங்களிப்பு செய்து ஊக்குவிப்பு தர முயல்கின்றேன்.

05.    நீங்கள் சந்தித்து அதிர்ச்சியான வேதனைப்பட்ட விமர்சனங்கள் பற்றியும் நெகிழ்ந்துபோன கருத்துக்கள் பற்றியும் கூற முடியுமா?
அதிர்ச்சியடைந்த விடயம் . இலக்கியவாதிகளென்  சிலமுகமூடி அணிந்த குள்ளநரிகளை காண்கையில் ஒருத்தை புறம்பேசி தன்னை முன்னிலைப்படுத்துபவரையும் காண்கையில். ஆதங்கமாயும் வேதனையாயும் இருக்கும்.

நெகிழ்ந்த சந்தர்ப்பங்கள் நிறைய  .வயதுமுதிர்ந்த அனுபவசாலிகளின்  வாழ்த்து என் எழுத்துக்களுக்கு அவர்களின் அனுபவ முத்துக்களில் ரசிகதனமை இப்படி. பல  அத்துடன்  தடாகம் கலையிலக்கிய வட்டமும் மலேசிய எழுதாளர் சங்கமும் வழ்ங்கிய கவியருவி பட்டமும் விருதும்.அத்துடன்  நான் நீண்ட காலம் காணத்துடித்த  சிரேஸ்ட  அறிவிப்பாளர்  நாகபூசனி  கருப்பையா  அவர்களின் முன் அவர்களால் வசந்தம் தொலைக்காட்சியின் நேரகாணலில் சந்தித்த பொழுது. இந்திய உறவுகள்  என் இல்லம்  வந்த போது. /
எல்லாவற்றிற்கும் மேலாக  என்  நூல் வெளியீட்டின் போது./




06.    வாசிப்பறிவை பொறுத்தவரையில் நம் சமூகம் மிக பின் தங்கிய நிலையில் இருப்பதாக கூறப்படுகின்றது இதுபற்றி?

உண்மை  அன்று  செய்திகளோ கதைகளோ கவிதைகளோ  எழுத்துவடிவில் மட்டுமே  . நூல்கள்  படிப்பதில் ஆர்வம் தேடல் அதிகம்.  இன்று  நாகரீக வளர்ச்சி உலக செய்திகளே உள்ளங்கை கைபேசியில்  தொலைக்காட்டி செய்தி படம் நாடகம்  வானொலி செய்தி எதுவோ எதையும் பார்க்கமுடியும். அப்படியான  சூழலில் வாசிப்பு திறன் அருகிவிட்டது என்றால் மிகையில்லை

07.    இலங்கை படைப்புக்கள் மக்களிடையே எவ்வாறான வரவேற்பினை பெற்றுள்ளது?

திறமைகள்  அது நிறையவே உண்டு  உலக அரங்கில் சரியான  அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதுவும் தற்போது கொஞ்சம் கொஞ்சம் மாறிவரும் சூழல்  காணப்படுகிறது .அதனால் எனிவரும் காலத்தில் நல்லவரவேற்பினை பெறும் . எப்போதும் வரவேற்பு உண்டு.




08.    இலக்கிய உறவுகளுடன் தங்களுக்கிருக்கும் நட்புறவு பற்றி பகிர்ந்துகொள்ள முடியுமா?

கடல்கடந்தும் பலர்  என் நட்பில் இதனை சாத்தியமாக்கியது  முகநூல். யாருடனும் போட்டிபொறாமையில்லை அதனால் யாவரும் நல்லநட்புடனேதான் பயணம்

09.    இலக்கியத்தில் தாங்கள் சாதிக்க நினைப்பது?

நிறைய எழுதனும் .தற்போது  சஞ்சிகை ஒன்று தொடங்க உள்ளேன் . அது பெரியளவில் எல்லோராலும் பேசப்பட்டு போற்றப்படனும்.

10.    குடும்பப்பெண்ணான உங்களுக்கு, இலக்கிய செயற்பாடு தொடர்பில் கிடைக்கும் சுதந்திரம் பற்றி?

நேரம்  பிரச்னைக்குரிய விடயமே. இருந்தும் நேரம் ஒதுக்கி செயற்படுவேன் அதனால்  எந்த பிரச்னையும் இல்லை. என் இலக்கிய செயற்பாட்டில் தடையில்லை




11.    நீங்கள் சந்தித்தவரையில் கலைத்துறையோடு இளையவர்களுக்கு இருக்கும்  ஈடுபாடு எவ்வகையில் காணப்படுகின்றது?

நல்லமுறையில் . பலர் ஆர்வமிகுதியாய் உள்ளார்கள் நல்லவழிக்காட்டல் இருந்தால் சாதிக்கவல்லவர்கள் ஆனால்  அவர்களின் பாதை அவர்களின் தேர்வு  சிறப்பாய் இருத்தல் வேண்டும்

12.    இணையத்தளங்களின் அதிகரிப்பு, சமூக வலைத்தளங்களின் தளர்வு நிலை போன்றவற்றால் இன்று அதிகமானவர்கள் படைப்பாளர்களாக தங்களைஇணங்காட்டி விருதுக்குரியவர்களாகின்றார்கள். இந்நிலையின் ஆரோக்கியத்தன்மை பற்றி?

அது  ஒரு  மாயை  ஆனால் திறமைகள் போற்றப்படனும்/ பல கவிஞ்சர்களோடு பலகவிதைகளோடு   போட்டியிட்டு தம்ம்மை வளர்த்துக்கொள்ளமுடியும். ஆனால் தகுதியில்லாதவர்கள் தூக்கிவைப்படும்போதும் பொருந்தாத விருதின் போதும் சலுகைகளால் சிலர் பெரியவர்களாக உருவகிக்கப்படும் போதும் இலக்கியத்தின் ஆரோக்கியம் இருட்டடிப்பே





13.    நீங்கள் வெளிப்படுத்த நினைக்கும் எண்ணங்களை வாசகர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்?

எல்லோரிடமும் ஏதோ ஒரு திறமை கொட்டிக்கிடக்கும் அதனை  உணரவேண்டும். அதற்கு தம் உணர்வுகளால் மூலாம் பூசவேண்டும்.சிற்பியில்லா  சிற்பம் ஏது உளிபடாத கல் சிலையாவதேது. ஒவ்வொரு கலைஞனும் தன்னை செதுக்கவேண்டும் . தனித்துவமான பாதையில் பயணிக்க வேண்டும் . இலக்கு எதுவோ அதை அடைய இறுதிவரை போராடவேண்டும். .விற்பனைக்காக  கலையில்லை  கலைக்காகத்தான் நாம்.

  #விலைக்கள் கேட்காதே  கலையை வளரவிடு
  தலையைக்கொடுத்தேனும் தமிழை வாழவிடு..  இது எமது செந்தணல் அமைப்பின் தாரகமந்திரம்

# உயிர் நிகராவது உயர் தமிழ் உயிர் கலைதாகம். இது தாய்தேசக்கலைஞர்களின் அமைப்பின் தாரகமந்திரம்.

# தமிழோடு  தமிழுக்காக  கலையோடு கலைக்காக வாழ்வ்தே கலைஞர்கள் இது கவிச்சுடர் சிவரமணி


Friday, April 1, 2016

கல்குடா நேசனின் 31வது இலக்கிய நேர்காணலில் (01.04.2016) மரபுக்கவிதாயினி சாரா பாஸ்

கல்குடா நேசனின் 31வது இலக்கிய நேர்காணலில் இந்தியா மரபுக்கவிதாயினி சாரா பாஸ் அவர்கள்-





வாராவாரம் வெள்ளிக்கிழமை நாளில் கல்குடா நேசன் இணைய தளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது. 

வெற்றிகரமாகப் பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இப்பகுதியினூடாக‌ நாம்  எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கின்றது.

 இதன் தொடரில் இன்று எம்மோடு 31வது படைப்பாளியாக இணைந்து கொள்ளகிறார் இந்தியா திருச்சியைச் சேர்ந்த மரபுக்கவிதாயினி சாரா பாஸ் எனும் புனைப்பெயருடைய திருமதி.சரஸ்வதி பாஸ்கரன் அவர்கள். பத்தாண்டுகளாக பேராசிரியையாகக் கடமையாற்றி வந்த இவர், தற்போது தனியார் வகுப்புக்களை நடாத்தி வருகின்றார். பல பட்டங்களைப்பெற்று இணையத்தளங்களினூடாக மரபுக்கவிதையில் தனக்கென ஓர் சிறப்பிடம் வகித்து வரும் இவரை கல்குடா நேசனின் நேர்காணலுக்காகச் சந்தித்தோம்.


 பல்வேறுபட்ட ஆழமான கருத்துக்களோடு வாசகர்களை வரும் வெள்ளியன்று சந்திக்க வரும் இவர், “பிறப்பால்  நாமனைவரும்  மானுட  சாதியினரே” என்று பாரதி கண்ட புதுமைப்பெண்ணாய் முழங்குகின்றார். அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சாதியக்கொடூரங்கள் பற்றி வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கல்வி, இலக்கியம், சமூகம், பெண்கள் தொடர்பான விடயங்களென பல்வேறுபட்ட சுவாரஸ்யமான கருத்துக்களோடு, இணையும் இவரின் எல்லா முயற்சிகளும் வெற்றியடைய கல்குடாநேசன் சார்பாக வாழ்த்திய வண்ணம் நேர்காணலோடு இணைந்து கொள்வோம். 

நேர்காணல்-ராஜ்சுகா



01. தங்களைப்பற்றி  எமது வாசகர்களுக்காக? 


கவிதாயினி சாரா பாஸ்:  பெயர் திருமதி.சரஸ்வதி பாஸ்கரன், திருச்சி சொந்த ஊர். படிப்பு M.SC. M.Ed.M.Phil.PG.D. G.C தொழில் பேராசிரியை (வேதியியல்துறை). பெற்ற பட்டங்கள் மரபுக்கவிதாயினி, கவிதைத்தாரகை’ கவிக்குயில் மற்றும் கவியருவி. பள்ளியில் 7ம் வகுப்பு படிப்பதிலிருந்து கவிதை எழுதுவது வழக்கம். பள்ளியிலும் கல்லூரியிலும் பல பரிசுகளையும், பட்டங்களையும் பெற்றுள்ளேன். பல நூல்களுக்கு அணிந்துரை எழுதியுள்ளேன். சுமார் 10 ஆண்டுகள் பேராசிரியை, 8 ஆண்டுகள் பள்ளி முதல்வர். தற்போது தனிப்பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறேன்.


02.இலக்கியத்தில் உங்களது அறிமுகம் ? 


கவிதாயினி சாரா பாஸ்: நான். என்  ஐந்தாம்  வகுப்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் திருக்குறள் முழுவதையும் ஒப்பித்து “குறளின் அரசி” என்ற பட்டம் வென்றேன். பின்னர் ஏழாம் வகுப்பிலிருந்து கவிதைகள்  எழுதத்தொடங்கி விட்டேன். இதுவே இலக்கியத்தில் என் அறிமுகம். 


03. எவ்வாறு  இலக்கியத்தில்  உங்களுக்கான அடையாளத்தைத்  தக்க வைத்துக்  கொள்கிறீர்கள் ? 

கவிதாயினி சாரா பாஸ்: என் படைப்புகள் பெரும்பாலும் உணர்வுப்பூர்வமானதாகவும், இன்றைய கால கட்டத்திற்குப்  பொருந்துவதாகவும், அனைவரும் படிக்கும் போதே ரசிக்கத்  தூண்டும் எளிமையான தமிழ்ச்சொற்களை  எடுத்தாழ்வதும் என்  தனித்தன்மை. இதனால், இலக்கியத்தில் எனக்கான  அடையாளத்தைத்  தக்க வைத்துக் கொள்கிறேன். 





04. மரபுக்கவிதைகளைத்  தேர்ந்தெடுத்தமைக்கான காரணமென்ன? 

கவிதாயினி சாரா பாஸ்: பள்ளிப் பருவத்திலிருந்தே இலக்கியங்கள் மீதும் தமிழ் இலக்கணத்தின் மீதும் அதீத  ஈடுபாடுண்டு. பள்ளியில் படிக்கும் போதே மரபு கவிதைகள் எழுதுவதுண்டு. அப்பொழுது  எதுகை  மோனை  மட்டுமே  பயின்று  வர  எழுதுவேன். தெளிவாக தமிழ் இலக்கணம்  கற்றுக் கொள்ள  வேண்டும் என்ற  தணியாத ஆர்வம்  அப்போதே  இருந்தது. என் பாடல்களை முகநூலில் பார்த்த கவிதைச்சங்கமத்தின்  மூத்த  நிர்வாகியும், தற்போது  கவியருவி  குழுமத்தின்  நிர்வாகியும்  ஆகிய  மதிப்பிற்குரிய  கவியன்பன்  கலாம் ஐயா  அவர்கள்  வெண்பா  எழுதவும்  அதற்கான  முறையான  இலக்கணத்தைக்  கற்பித்தார்கள். மற்ற பரபுப்பாக்கள்  புனையவும்  ஆணிவேராக  இருந்தவர்  ஆசான்  கவியன்பன்  கலாம்  அவர்கள்  தான். பின்னர்  பைந்தமிழ்ச்சோலை குழுமத்தில்  மரபுமாமணி பாவலர்  மா.வரதராசன்  ஐயா  அவர்கள்  பாட்டியற்றுக  பயிற்சியின்  மூலம் ஒவ்வொரு  வாரமும்  ஒவ்வொரு  இலக்கண  வகையையும்  அதற்கான  இலக்கணத்தையும்  அதன்  நுணுக்கத்தையும்  கற்பித்தார்கள். இதுவே  நான்  மரபின்  மீது  நாட்டம்  கொண்டு  மரபு கவிதைகளைத்  தேர்ந்தெடுத்தமைக்கான  காரணமாய்  அமைந்தது. 


05. எல்லோராலும்  மரபினைப்  பின்பற்ற முடியாமைக்கான  காரணம்  என்னவென்று  நினைக்கின்றீர்கள்  ? 

கவிதாயினி சாரா பாஸ்: மரபின்  கடலில் நீந்தி  மரபுப்பாவாகிய  முத்தினை  மூழ்கி  எடுக்க  முடியாமைக்குக்  காரணம். மரபுப்பாடல்கள்  அதற்குரிய  இலக்கண  வகையோடும், விதிகளோடும், வாய்ப்பாடுகள் பெற்று  அசை, சீர்கள், அடிகள், தளைகள் என்று ஒரு சேர  யாப்பினால்  கட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லோராலும்  எளிதில் மரபினைப் பின்பற்ற  முடியவில்லை. மேலும், ஒரு  குறிப்பிட்ட  வரையறைக்குள்  அடங்குவதே  மரபுப்பாடல்கள். 

06. வலைதளங்களில்  தங்களின்  புகைப்படங்கள்  இட்டு  அடையாளப்படுத்திக் கொள்ள படைப்பாளர்கள்  முனைப்பாக  இருக்கும்  கால கட்டத்தில், விதி விலக்காக  நீங்கள் இருப்பதற்கான காரணம் என்ன? 



கவிதாயினி சாரா பாஸ்: ஒருவரின்  முகமோ, முகவரியோ  அவருக்குச்  சிறப்புச்சேர்த்து விடாது  என்று  கருதுபவள்  நான். என்  எழுத்தையும்  படைப்பையும்  மட்டுமே  மதிக்க  வேண்டும் வலைத்தளங்கள் என்றும்  எண்ணுபவள்  நான். ஒரு  படைப்பாளிக்குப்பெருமை  அவன்  படிப்புகளே. அதுவே  அவனின்  அடையாளம்  என்று  உறுதியாக  நினைப்பவள். இதனால்  விளம்பரங்களை  விரும்பாது  விதி விலக்காக எந்தச் சமூக  வலைதளங்களிலும் என்  புகைப்படத்தைப் பதிவதில்லை. சான்றாக, அண்மையில்  மார்ச் 5 ம்  தேதி  தொடங்கி  6 ம் தேதி  வரை  ” நிலா முற்றம் ” குழுமத்தில்  நடைபெற்ற  கவியரங்கில்  தலைமை  ஏற்றும்  நடுவராகவும்  செயலாற்றும்   பொழுதும் என் புகைப்படத்தை  வெளியிடவில்லை. ஆனால், வரவேற்பும் மதிப்பும்  மிகுதியாகவே  இருந்தது  என்பதே இதற்குரிய  மிகப்பெரிய சான்று.


07.ஏனைய நாட்டு படைப்பாளிகளுடன் தங்களுக்கு இருக்கும் நட்புறவு  பற்றி ? 

கவிதாயினி சாரா பாஸ்: இன்றைய  கால கட்டத்தில்  பல வலைதளங்களையும், குழுமங்களையும்  நிர்வாகம்  செய்வோர் வெளிநாடுகளில் வசிப்பவர்களாகவேயுள்ளனர். துபாய், இலங்கை  போன்ற நாட்டுப் படைப்பாளிகளுடன்  மிகவும் சுமூகமான  நட்புறவேயுள்ளது. அனைவரும்  என்  படைப்புகளை  விரும்பிப்படிப்பார்கள். 



08.நீங்கள் வாசித்து, ரசித்த  இலங்கைப்படைப்புக்கள்  பற்றி? 


கவிதாயினி சாரா பாஸ்: இலங்கை  படிப்பாளிகளின்  படைப்புகள்  பலவற்றை நான்  விரும்பி ப் படிப்பதுண்டு. கவிஞர்  அனாரின்  கவிதைகள், கவிஞர்  தமிழ் ஓவியாவின் படைப்புகள், திரு . கோபிநாத்தின்  தெருவெல்லாம்  தேவதைகள், யுவகிருஷ்ணாவின் சைபர் க்ரைம், கவிஞர் இரா. இரவியின்  கவிதை படைப்புகள், தமிழ் மகனின்  வெட்டுப்புலி  என்று  அடுக்கிக்  கொண்டே  போகலாம். ஒவ்வொரு  நூலும்  அதற்குரிய  தனிச்சிறப்புடன்  மிளிர்கின்றது என்பது  மிகையாகாது. 


09.சாதியம் சம்பந்தமான கொடுமைகள்  தீவிரமடைந்து  வருகின்றது. இது பற்றி ?

 கவிதாயினி சாரா பாஸ்: “சாதிகள்  இல்லையடி  பாப்பா ” என்ற  பாரதியின்  குரலோசை தான்  என்றன்  காதுகளில்  ஒலிக்கின்றது. “சாதிகள்  இரண்டொழிய வேறில்லை.” என்பது  ஆன்றோர் வாக்கு. பிறப்பிச்சான்றிதழ் முதலாக இறப்புச்சான்றிதை வரையிலும் சாதிகள் பற்றியக்கேள்விகள்  எந்த  இடத்திலும்  இடம்  பெறுதல்  கூடாது. பிறப்பால்  நாமனைவரும்  மானுட  சாதியினரே. 


10. நீங்கள்  செயற்படும் இலக்கிய  செயற்பாடுகள் ? 


கவிதாயினி சாராபாஸ்: முக‌நூலில், தமிழை  முன்னிலைப்படுத்தும்  அனைத்துக்குழுமங்களிலும் என்  இலக்கியப்படைப்புகள்  தவறாமல் இடம்பெற்று வருகின்றது. மகளிர் தினத்திற்காக மருத்துவ நூலில் “மகப்பேறு மருத்துவம் ஒரு பார்வை” என்ற தலைப்பில் 160 வரிகளில் நான் எழுதிய பாடல் வெளிவந்து அனைவரது பாராட்டையும் பெற்றது. இறை வணக்கப்பாடல் ஒன்றும் அதே நூலில் வெளிவந்துள்ளது. காவேரி டைம்ஸ் பத்திரையில் ஒவ்வொரு வாரமும் என் கவிதை  வெளிவந்துள்ளது. துபாய் தமிழ்த் தேர் பத்திரிக்கையில் ஒவ்வொரு மாதமும் என் கவிதை இடம்பெற்று வருகிறது. துபாய்த் தமிழ்ச்சங்கம் நடத்திய உலகளாவியக் கவிதைப்போட்டியில் நடுவராகப் பங்கேற்றேன். 





11. மகளிர் தினம் அண்மையில் கொண்டாடப் பட்டது. இதில் பெண்களுக்கான  சுதந்திரம், உரிமை  பற்றி  என்ன  நினைக்கின்றீர்கள்? 


கவிதாயினி சாரா பாஸ்: பெண்ணடிமை  உள்ள மட்டும்  பெற்ற சுதந்திரத்தால் பலனேதுமில்லை. பெண்கள்  எல்லாத்துறைகளிலும்  ஆண்களுக்கு நிகராகச்  சாதிக்கப்  பிறந்தவர்கள். இன்றைய  சட்டத்தில் பேச்சுரிமையும், சொத்துரிமையும் பெண்களுக்குண்டு. பெண்களுக்கான  சட்ட திட்டங்களை பற்றிய  விழிப்புணர்வு  படித்த பெண்கள்  முதல்  பாமரப்  பெண்கள்  வரையிலும்  அறிந்து  வைத்துக்  கொள்ளுதல் வேண்டும். ஆண்டின்  ஒரேயொரு நாள்  மட்டும்  மகளிர்  தினமாகக்  கொண்டாடி எந்தப்  பயனுமில்லை. ஆண்டின்  ஒவ்வொரு  நாட்களும் மகளிர் தினமாக  மாற வேண்டும். 



 12.பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினையாக  நீங்கள்  காண்பது  ? 


கவிதாயினி சாரா பாஸ்: இன்று  பிறந்த  குழந்தைகள்  முதற்கொண்டு பாலியியல் பலாத்காரம்  செய்யப்படுகிறார்கள். பெண்கள்  பருவமடையும்  முன்னரும்  பருவமடைந்த  பின்னரும்  எதிர்நோக்கும்  மாபெரும்  பிரச்சினை. இந்நிலை  உறுதியாக  மாறுதல்  வேண்டும். சமுதாயத்தில் பெண்கள் அடிமைகளாக  நடத்தப்படாமல்  அன்போடு  நடத்தப்படுதல்  வேண்டும். 


13. தங்களுக்குக் கிடைத்த பட்டங்கள், பாராட்டுக்கள் பற்றி? 


கவிதாயினி சாரா பாஸ்: கல்லூரிக்காலத்தில் “கவிக்குயில்” பட்டம் பேராசிரியையாகப் பணி புரிந்த காலத்தில் “இசையருவி” பட்டம் கவிதைச்சங்கமம்  முகநூல்  குழுமத்தில்  மதிப்பிற்குரிய  கவியன்பன்  கலாம்  ஐயா  வழங்கிய  “மரபுக்கவிதாயினி ” பட்டமும், “வெண்பா  வேங்கை” பட்டமும். நேசகானம்  வலைத்தள  வானொலி  நடத்தியக்  கவிதைப்போட்டியில்  நடுவராக இருந்து, பாவலர்  மரபுமாமணி  மா.வரதராசன்  ஐயா  அவர்கள்  வழங்கிய  “கவிதைத்தாரகை ” பட்டம். பைந்தமிழ்ச்சோலை குழுமத்தில் பங்கேற்ற  கவியரங்கம். இவையனைத்திற்கும் முத்தாய்ப்பாக  “நிலாமுற்றம்” குழுமத்தில்  மதிற்பிற்குரிய  திரு.முத்துப்பேட்டை மாறன் ஐயா அவர்கள்  வழங்கிய மகளிர் தின சிறப்புக்கவியரங்கத்திற்காக  தலைமை  தாங்கியது. புதுமை  முகநூல்  குழுமத்தில்  ஒவ்வொரு முறை  நடத்தும்  கவிதைப்போட்டியிலும்  மரபுக்கவிதைகளுக்கான  சிறப்புப்பரிசைப் பெறுதல். இப்படி  பலவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம். 


14. தாங்கள் வெளியிட இருக்கும் நூல் பற்றி? 



கவிதாயினி சாரா பாஸ்: “மரபின் வழியே நான்” என்ற நூலினை வெளியிடவுள்ளேன்.


15.இந்திய தேசத்தைப்பொறுத்த வரையில், இளம் கலைஞர்களும், படைப்பாளிகளுக்கான  களம், வாய்ப்புகள்  எப்படியாகக்  காணப்படுகின்றது? 


கவிதாயினி சாரா பாஸ்: போட்டியும், பொறாமையும்  நிறைந்த உலகமாக  இருந்தாலும், இந்திய தேசத்தைப்  பொறுத்த வரையில், இளம் கலைஞர்கள் மற்றும்  படைப்பாளிகளுக்கான களம்  வெகு  சிறப்பாகவேயுள்ளது. தம்மைத்தேடி வரும்  வாய்ப்புக்களை  கலைஞர்களும்  சிறப்பாகப் பயன்படுத்திக்  கொள்ள வேண்டும். 



16.மக்களின்  வாசிப்பார்வம்  நூல்களின் மீதான  ஈடுபாடு  எந்த வகையில் காணப்படுகிறது? 


கவிதாயினி சாரா பாஸ்: தற்போது மக்களின்  வாசிப்பார்வம்  நூல்களின் மீதான  ஈடுபாடு மிகவும் குறைவாகவே  காணப்படுகின்றது. நூல்களை  இணையத்தின்  வாயிலாக வாசிப்போர் எண்ணிக்கை  இன்று  பன்மடங்காகப்  பெருகி விட்டது. நூல்களை  உட்கார்ந்து  அதற்கென  சிரத்தையெடுத்து  வாசிப்போர்  எண்ணிக்கை  மிகவும் குறைவே. 



17. கல்குடா நேசன்  இணைய  வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள நினைப்பது? 


கவிதாயினி சாரா பாஸ்: கல்குடா நேசன்  இணையம் ஆற்றும்  அரும்பணிகள் ஏராளம். கவிஞர்களையும், படைப்பாளிகளையும் தேர்ந்தெடுத்து, அவர்களை உலகிற்கு வெளிக்காட்டி, முன்னிலைப்படுத்தி  உலகம் முழுவதும் அறியச்செய்யும் அற்புதப்பல்கலைக்கழகம் என்றே  நான் கூறுவேன். இவ்விணையத்தின்  தொண்டுகள்  வளரவும், தமிழ் மீது  கல்குடா  நேசன்  இணைய வாசகர்கள் கொண்ட பற்றும் வியக்கத்தக்கது. என் போன்ற படைப்பாளியை உலகிற்கு  எடுத்துக்காட்டிய சகோதரி  ராஜ்சுகா  அவர்களுக்கும், கல்குடா நேசன்  இணையத்திற்கும் என் நெஞ்சார்ந்த  நன்றிகள்.