Tuesday, March 15, 2016

கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல் (11.03.2016) கவிதாயினி பாத்திமா சிமாரா





நேர்காணல்-கவிதாயினி த. ராஜ்சுகா 

பிரதி வெள்ளி தோறும் கல்குடா நேசன் இணைய தளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது.

 வெற்றிகரமாகப் பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இந்நிகழ்ச்சியூடாக நாம் சந்திக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கின்றது. இதன் தொடரில் இன்று 11.03.2016ம் திகதி வெள்ளிக்கிழமை எம்மோடு 28வது படைப்பாளியாக இணைந்து கொள்கின்றார் இலங்கையின் தலைநகராம் கொழும்பைச்சேர்ந்த வளர்ந்து வரும் கவிதாயினி பாத்திமா சிமாரா அவர்கள்.


 “பெண்ணியம் பேசுவது வெறும் கண் துடைப்பு. மகளிர் தினம் ஒரு விளம்பர  நோக்குடந்தான் இருக்கிறது” என்று தனது ஆதங்கத்தை நியாயமான முறையில் வெளிப்படுத்துகின்றார் கவிதாயினி சிமாரா அவர்கள். தரமான பதில்கள். ஆழமான பார்வை. தடுமாற்றமில்லா நோக்கங்கள் என்பவற்றைக் கொண்ட இவர், வளரும் படைப்பாளிகளுடன் போட்டியிட்டுக்கொண்டு இலக்கிய உலகத்தில் தனக்கான தடயங்களை மெதுவாகவும், அதே வேளை, மிக ஆழமாகவும் எடுத்து வைக்கின்றார். 


பெண்மை பற்றி சில நிஜங்களையும், கோபங்களையும் வெளிப்படுத்தும் இவரின் கருத்துக்கள் பெண்ணியம் பற்றிய நேர்மையான நோக்கங்களைக் கொண்டுள்ளது. கவிதாயினி சிமாரா அவர்களின் எதிர்கால இலக்கியப் பணிகளுக்கும் அவரது ஆளுமை இன்னுமின்னும் வளர்ந்து பிரகாசிக்கவும் கல்குடாநேசன் சார்பில் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். 






கவிதாயினி த. ராஜ்சுகா : இலக்கியத்தில் நுழைந்த சந்தர்ப்பம்? 

கவிதாயினி பாத்திமா சிமாரா:  13 வயது முதல் எனக்கு எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது. அந்த ஆர்வத்தினை அறிந்து கொண்டு, சந்தர்ப்பத்தையும் ஊக்கத்தையும் தந்தது வளர்த்து விட்டது திரு.மானா மக்கீன்  அவர்களும் திரு.அஷ்ரப்  ஷிஹாப்தீன் அவர்களும் தான்.


 கவிதாயினி த. ராஜ்சுகா கவிதை மீதான ஆர்வம் எப்படி ஏற்பட்டது? 


கவிதாயினி பாத்திமா சிமாரா ஆரம்ப நாட்களில் இலக்கியம் படிப்பது பிடிக்கும். பின் நானே எழுத முயற்சிக்கும் போது, பார்க்கும் யாதும் ஒரு வித்தியாசமான கோணத்தில்  தெரிய ஆரம்பித்து. பின் கவிதை என் நெருங்கிய தோழியானது.






 கவிதாயினி த. ராஜ்சுகா உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு கிடைக்கும் ஆதரவு எவ்வாறு காணப்படுகின்றது?


 கவிதாயினி பாத்திமா சிமாரா மறுப்பு  இல்லை. ஒரு பெண் ஈடுபடும் துறையில் வரும் அவப்பெயர் காரணமாகவும், அப்பெண்ணின் வேலைகள்  பின்னடிக்கப்படக்கூடும் என்பதாலும், தான் மறுப்பும் எதிர்ப்பும் வெளிப்படுவது. நான் இறைவனின் உதவியையே அதிகம் நாடுவதால் அந்தப்பிரச்சினை எனக்கில்லை. 


கவிதாயினி த. ராஜ்சுகா இதுவரை நீங்கள் பங்குபற்றிய போட்டிகள், கிடைத்த பாராட்டு, விருதுகள் பற்றி? 


கவிதாயினி பாத்திமா சிமாரா பாராட்டும் வெற்றியும்  நிறைவே இருக்கிறது. குறிப்பாக, இணையத்தங்களில் நடாத்தப்படும் போட்டிகளில் பங்குபற்றி ‘தங்க முத்திரை கவிஞர், சந்தக்கவிஞர் போன்ற சான்றுகள் உண்டு. 


கவிதாயினி த. ராஜ்சுகா இவ்விலக்கியப் பரப்பில் பெண்கள் தனித்து, சுதந்திரமாக இயங்கக்கூடிய சூழல் காணப்படுகின்றதா? 







கவிதாயினி பாத்திமா சிமாரா தனித்துச் செயற்படும் போது, சேற்றை வாரி இறைக்கும் சமூகம் இது. நாம் சுதந்திரமாகச் செயற்படலாம். அவை எல்லைகள் மீறாமலிருந்தால் சிறப்பு. 



கவிதாயினி த. ராஜ்சுகா உங்கள் கவிதைகளை எவ்வாறு பட்டைதீட்டிக்கொள்கின்றீர்கள்? 


கவிதாயினி பாத்திமா சிமாரா என் கவிதைகளுக்கு வரும் விமர்சனங்களை நான் ஏற்றுக்கொள்வேன். மூத்த எழுத்தாள‌ர்களிடம் ஆலோசனை கேட்பேன். 


கவிதாயினி த. ராஜ்சுகா உங்களை இலக்கியத்தில் வளர்த்து விட உதவியாய் இருப்பது யார் என நினைக்கின்றீர்கள்?


 கவிதாயினி பாத்திமா சிமாரா இலக்கியம் மீதான பற்றும், தன்நம்பிக்கையும். 







கவிதாயினி த. ராஜ்சுகா “முகநூல் கவிதைகள்” பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? 


கவிதாயினி பாத்திமா சிமாரா நல்ல கவிதைகள்  படைக்கக் கூடியவர்கள்  இருக்கிறார்கள். ஆனால், காதல் கவிதையைத் தாண்டி வருவதில்லை. சிலர் மிகச்சிறந்த படைப்புகளைத் தருகிறார்கள். இவர்களை முகநூல் கவிஞர்கள் என்று சிலர் சொல்வது வருத்தமே. இதுவும்  ஒரு ஊடகமல்லவா? 



கவிதாயினி த. ராஜ்சுகா உங்கள் நூல் வெளியீடு எப்போது? 


கவிதாயினி பாத்திமா சிமாரா வெகு விரைவில். 


கவிதாயினி த. ராஜ்சுகா எவ்வகையான கருவை உங்கள் கவிதைகளில் உள்ளடக்க வேண்டுமென நினைக்கின்றீர்கள்? 


கவிதாயினி பாத்திமா சிமாரா வாழ்வியல், குழந்தைகள், அடக்குமுறை, பெண்களின் சொல்ல முடியா சில மனநிலைகள் 








கவிதாயினி த. ராஜ்சுகா த‌ங்களின் கவிதைகளுக்கு கிடைத்த விமர்சனங்கள்? 


கவிதாயினி பாத்திமா சிமாரா பல வகையுண்டு. மனம்  உடையும் விதமாகவும் வந்ததுண்டு. ஒரு சிலர் இவை கவிதைகளே இல்லை. வேறு வேலை பார்க்கும் படியும், பெண்ணுக்கு இது தேவையா? என்றும் பகிரங்கமாகக் கூறியிருக்கின்றார்கள். 


கவிதாயினி த. ராஜ்சுகா கவியாளுமையினை வளர்த்துக்கொள்ள நீங்கள் மேற்கொள்ளும் வழி முறைகளைக் கூற முடியுமா? 


கவிதாயினி பாத்திமா சிமாரா நல்ல மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள் வாசிப்பது. அகராதியில் சில வார்த்தைகள் எடுத்து அதில்  கவி எழுதுவது போன்ற சாதாரண  விடயங்கள் தான். கவியரங்கம், கவி விவாதங்களில் பங்கேற்று வருகின்றேன்.






 கவிதாயினி த. ராஜ்சுகா “பெண்ணியம்” எனும் விடயத்தில் உங்களது நிலைப்பாடு? இதில் எந்தெந்த விடயங்கள் வலியுறுத்தப்பட வேண்டும்? முன்னேற்றம் வேண்டுமென நினைக்கின்றீர்கள்? 


கவிதாயினி பாத்திமா சிமாரா என்னுடைய நிலைப்பாடு என்றால், ஆடை குறைப்பும் ஆணுடன் நிகராய் நிற்பது மட்டும் என்று தான் எம்மில் பலர் நினைப்பது. இதுவே இன்று  நடக்கும் பல இழி செயலுக்கு  வித்திடுகிறது. பெண்ணியம் என்றால், ந‌மக்கான அங்கீகாரம். நாம் உழைப்புக்கு மட்டுமல்ல. எமக்கான பிரச்சினைகளுக்கும் நியாயம் கிடைக்கப் பேச‌ வேண்டும். இன்று அந்த நியாயம் கிடைக்கிறதா? என்றால் கேள்விக்குறியே? பெண்ணியம் பேசுவதில்  புண்ணியமில்லை. பேச்சில் மட்டுமே. உண்மையில் நடைமுறையில் இல்லை. பெண்ணுடைய உணர்வு, ஆசை, சின்னச்சின்ன தேவைகள் இவையெல்லாம் இன்னும் நம் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. உதாரணமாக, இலக்கியத்துறை, சமூக சேவை இது போன்ற விடயங்களில் பெண்களின் வருகையில் இன்னும் நம் சமூகம் “இவளுக்கு இது தேவையா”என்று தான் சொல்லுகின்றது. பெண்ணியம் பேசுவது வெறும் கண் துடைப்பு. 






கவிதாயினி த. ராஜ்சுகா பகிர்ந்து கொள்ள நினைக்கும் உங்களது கருத்துக்கள் வேண்டுகோள்கள் இருப்பின்….?? 


கவிதாயினி பாத்திமா சிமாரா நாம் எந்நிலையிலிருந்தாலும், நமக்கான வாழ்க்கையில் பிடிப்பு வர எம் இலட்சியத்துக்கு நாம் மதிப்புக் கொடுக்க வேண்டும். வாழ்க்கை வசந்தமாக வாழ்க்கைத்துணைக்கு பூங்காற்றாக வீசுங்கள். நறுமண கமலங்கள் பூத்துக் குலுங்கும். என்னுடைய வேண்டுகோள் பெண் பிள்ளைகளுக்கு இப்போது பாதுகாப்பில்லாத ஒரு நிலை உருவாகியிருக்கின்றது. முதலில்  நாம் சிறுபிள்ளைகளுக்கு  முன்னெச்சரிக்கைகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். யாருடனும் தனிமையில்  இருக்கக்கூடாது. எம்மை யாரும் தொட அனுமதிக்கக்கூடாது. மீறினால், கத்தும்படி இன்னும் எம்மால் முடியுமான வரை சொல்லிக் கொடுக்க வேண்டும்.








 கவிதாயினி த. ராஜ்சுகா மகளிர் தினத்தைக் கொண்டாடுகின்றோம். இதனை முழுமையாகக் கொண்டாடக்கூடிய ‘சூழ்நிலை தற்போது காணப்படுகின்றதா? பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினையாக நீங்கள் காண்பது? 


கவிதாயினி பாத்திமா சிமாரா நிச்சயமாக  இல்லை. மகளிர் தினம் ஒரு விளம்பர நோக்குடந்தான் இருக்கிறது. உண்மையில், இது கொண்டாட வேண்டுமாயின், துஷ்பிரயோகத்துக்குட்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் தான் இன்று  தண்டனை  அனுபவிக்கின்றார்கள். எத்தனை பெண்கள் திருணமாகி சரியான  வாழ்க்கைத்துணை அமையாமல், வெளியே சொல்ல இயலாமல் நரக வேதனையை அனுபவிக்கின்றார்கள். தனிமையிலிருக்கும் நம் பெண்களுக்கு  பாதுகாப்பில்லை. ஏன் பொது இடங்களில் கூட இல்லை. இவையெல்லாம் எப்போது சரியான நிலைக்கு வருமோ அப்போது  தான் மகளிர் தினம்.

Wednesday, March 9, 2016

28.02.2016 அன்று ஓட்டமாவடி ரியாஸ் அவர்களின் "முகவரி இழந்த முச்சந்தி" நூல் வெளியீட்டில்


நூலாசிரியரிடமிருந்து நூலினை பெற்றுக்கொள்ளும்போது











கிராமிய பொருளாதார அலுவல்களுக்கான பிரதி அமைச்சர் M.S.S அமீர் அலி அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும்போது
















நூலாசிரியரின் தாய் மற்றும் சகோதரியுடன்...






                     விழாவில் சில வித்தியாசமான அநுபவங்களுடன்......



01..




02.





03.













Tuesday, March 8, 2016

எங்கிருந்து வந்தாய்

யாரடி நீ
எங்கிருந்து வந்தாய்
உனக்கு மெனக்கும் என்ன
எப்படி எனக் குறவானாய்
ஏன் போக மறுக்கிறாய்.....

நீ வெள்ளி நிலவு
நான் வேடிக்கை பார்ப்பவன்

நீ ஆகாயம்
நான் அண்ணாந்து பார்ப்பவன்

நீ தாமரை
நான் தரிசிக்க வந்தவன்...

வண்ண மயிலே என்னை
வதைக்காமல் போய்விடு

உனக்கு மெனக்கும்
உறவில்லை -என்
உணர்வுகளை வதைக்காமல்
ஒதுங்கிவிடு.....

நமக்கிடையில்
நல்லுறவொன்றுதான்
நெருங்காமல் போய்விடு....


நான் என்னை தொலைத்துக்கொண்டிருக்கிறேன்..!!

மகளிர்தின கவிதை (08.03.2016)


பெண்பிள்ளையினை
படுக்கை பொருளாய் பார்க்கும்
பாவியின் கண்கள் பறித்து
பருந்துக்கு விருந்திடுவோம்....

தனிமையின் அலங்காரத்தை
தீனியாக்கி கொள்ள வெண்ணும்
தீயோர் கரமெடுத்து
தீயிட்டு கொளுத்துவோம்.....

குழந்தையின் அழகைகூட
குரூரத்தனமாய் ரசிக்கும்
கயவர்தம் கழுத்தை நெரித்து
கல்லறை வாசலை காட்டிடுவோம்...

பேதையரெம் பாதுகாப்புக்காய்
வேங்கையென எழுவோம்
போதையாய் எமைநோக்கும்
போக்கிரிகளை எதிர்ப்போம்.....

மாந்தரெங்கள் மகிமையுணர்த்த
மணிமாலையாக இணைவோம்
மாண்டுகிடக்கும் சட்டங்களுக்கு
மருந்தளித்து உயிரூட்டுவோம்.....

Saturday, March 5, 2016

ஊடறு இணையத்தில்... (03.03.2016)

http://www.oodaru.com/?p=9737#more-9737



த.ராஜ்சுகா ,(இலங்கை)

பெண்மையின் மேன்மையெல்லாம்
தென்றல் கலைத்த மேகம்போல‌
அநாயசமாய் அழிந்துபோகின்றது
தீக்கொண்டு சாம்பல்கண்டிடும்
தீவிரம் நெஞ்சுக்குள் பற்றியெறிகின்றது
எத்தனை காலத்துக்குத்தான்
புத்தகத்தில் மூடிய மயிலிறகாய்
பத்தினிக்கிரீடத்தை பாதுகாப்பது…
முப்பத்தைந்தை தாண்டிய -என்
முதிர்க்கன்னித்திரை கிழித்து
முழுமையாய் மூச்சுவிட்டது பிழையென்றால்
என்னைக் கிழித்த உம்
வார்த்தைக் கணைகளுக்கு
விஷந்தடவி எய்துகொண்டிருந்ததேன்…
இத்தனை வருட மிருந்தவள் -இப்போ
இஸ்டத்துக்கா செல்ல வேண்டும்
சாதிவிட்டு சாதிசென்றதற்கு
சாக்கடையில் வீழ்ந்து செத்திருக்கலாமென்ற‌
உங்கள் அற்பங்கள் என்னையொன்றும்
அழித்துவிடுவதில்லை…
மதம்மீறியது பிழையென்றால் -நீங்கள்
மருமகளுக்கு பதிலாக
மனையுடன் சேர்ந்த லட்சங்களை கேட்டதேன்??
சாதிக்கலந்தது சாபமென்றால்
சீதனத்தை மட்டுமே நீவீர்
தேடியதும் தீண்டாமைதான்
காதல் பாவமென்றுதானே
இத்தனை வருட காத்திருப்பு
அதற்கு உங்களால்
முதிர்க்கன்னியென்ற
முக்காட்டை மட்டுமல்லவா போர்த்தி
மூழ்கடிக்க முடிந்திருந்தது
வேர்கள் வெளிக்கிளம்பிய பின்னுங்கள்
வேலிகளுக்கிங்கு வேலையில்லை
மனம் பொறுக்குமளவுக்குங்கள்
சுடுசொற்கள் இருந்ததில்லையே அதனால்தான்
மனச்சிறைக்குள் மாண்டுபோயிருந்த‌
மாங்கல்யத்தை மருந்தாயிட்டுக்கொண்டேன்
வாலிபவேட்கையில் நானின்று
வர‌ம்புமீறி காதல்செய்யவில்லை
காலத்திடம் சிக்கிக்கிடந்த சில‌
முடிச்சுக்களை அவிழ்த்துவிட்டிருக்கின்றேன்
அவ்வளவுதான் ஆனந்தப்பட்டுக்கொள்ளுங்கள்
காலம்முழுக்க கன்னியாகவே
வாழவிட்டிருப்பீர்களா
மூச்சுக்கு மூச்சு
முடிந்திடா கேள்விகளால் என்னை
மூர்க்கத்தனமாயல்லவா கொன்றிருப்பீர்கள்
இரண்டில் ஒன்று
எடுக்கும் நேரத்தில்தான்
இதயமறிந்த இவன்வந்தான்
வாழ்வோடு போராடி சாவதிலும்
சாவோடு போராடு வாழ்வதென்ற முடிவோடே
சாதியினை கடந்து
மதத்தினை மறந்து
மனிதத்தோடு மட்டுமே
வாழபுறப்பட்டுவிட்டேன்…
எப்போது கல்யாணம்
ஏனின்னும் கல்யாணம்
சரிவரவில்லை என்ற‌
ஏளனங்களை தவிர்க்க‌
உங்களிடமிருந்து உத்தரவாதம்
வழங்கப்பட்டிருந்தால்
என்னாலும் வாழ்ந்திருக்கமுடியும்
காலமெல்லாம்
முதிர்க்கன்னியாகவல்ல‌
முழுக்கன்னியாக….

பேசினாய்......பேசினாய்

கண்களால் கவிதை பேசினாய்
கவிதையால் காதல் பேசினாய்

காதலால் மெளனம் பேசினாய்
மெளனத்தால் வார்த்தை பேசினாய்

வார்த்தையால் வாழ்க்கை பேசினாய்
வாழ்க்கையால் வசந்தம் பேசினாய்

வசந்தத்தால் வழிகள் பேசினாய்
வழிகளால் நல் மனிதம் பேசினாய்

மனிதத்தால் மகிழ்வை தேடினாய்
மகிழ்வால் என் மனதில் வாழ்கிறாய்

மனதால் நம் நேசம் சேர்க்கிறாய்!!




ஓட்டமாவடி ரியாஸ் அவர்களின் நூல் வெளியீடு பற்றி கல்குடா நேசனில்.. (04.03.2016)





ஓட்டமாவடி கவிஞர் றியாஸ் முகம்மட் அவர்களின் கன்னிக்கவி நூலான “முகவரி இழந்த முச்சந்தி” 28.02.2016ம் திகதியன்று ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் மாலை மூன்று மணிக்கு மிக விமர்சையாக நடைபெற்றது. தடாகம் கலை இலக்கிய வட்டம் மற்றும் கல்வி கலை கலாசார பன்னாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட இவ்விழாவில், இந்திய-இலங்கைப் படைப்பாளிகளும் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது விஷேடமாகும். 


நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக‌ கிராமிய பொருளாதார அலுவல்களுக்கான பிரதியமைச்சர் சட்டத்தரணி அமீர் அலி அவர்களும், வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிசாத் பதியூதின் அவர்களும் கலந்து கொண்டனர். கெளரவ அதிதிகளாக திருமதி மட்ட‌களப்பு மாவட்ட அரச அதிபர் பி.எஸ். எம் சார்ள்ஸ் அவர்களும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி க.தங்கேஸ்வரி அவர்களும் கலந்து சிறப்பித்ததோடு, விஷேட அதிதிகள் உட்பட பலர் விழாவில் கலந்து சிறப்பித்தனர். 






நிகழ்வில் வரவேற்புரையை கவிஞர் சேமமடுவூர் சிவகாசன் அவர்கள் வழங்க, தலைமையுரையினை தடாகம் அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களும், நூல் அறிமுகத்தினை சிரேஷ்ட ஊடகவியலாளர் கவியருவி ரீ.எல். ஜெளபர்கான் அவர்களும் தந்திருந்தார்கள். சக எழுத்தாளனைப் பாராட்டி சிறப்பான இரண்டு கவி வாழ்த்துக்களை கவிஞர் நுஸ்ரி அவர்களும், மலேசியாவைச்சேர்ந்த கவிதாயினி ஆர்.எஸ். கலா அவர்களின் வாழ்த்தினை செல்வி சஹானா ஜிப்ரி அவர்களும் பாடி மகிழ்வித்தனர். 



எழுத்தாளர்களைக் கெளரவித்துப் பாராட்டி விருது வழங்கி உயர்த்தி விடுவதில் கடந்த முப்பது வருடங்களாக அளப்பறிய சேவையாற்றி வருகின்ற ‘தடாகம் கலை இலக்கிய வட்டம்’ கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களின் தலைமையில் இவ்வமைப்பானது இலங்கை கலைஞர்களை மட்டுமல்லாமல், பிறநாட்டு திறமையாளர்களையும் கண்டெடுத்துப் பாராட்டிக் கெளரவிப்பதில் முன்நிற்கின்றது. அந்த வகையில், இந்நூல் வெளியீட்டு விழாவிலும் இந்திய கவிஞர்களுக்கு விருது வழங்கி பொன்னாடை போர்த்திப் பாராட்டுதல்களை தந்து அவர்களின் உள்ளம் குளிர்வித்திருந்தது. 






நிகழ்ச்சிகளை சாய்ந்தமருது டாக்டர் ஆரிப் அவர்கள் தொகுத்து வழங்க, நூலின் முதற்பிரதியினை அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் மெளலவி எம்.எம்.எஸ் ஹாறுன் அவர்களுக்குப் பதிலாக பிரதிப்பணிப்பாளர் எச்.எம்.ஜாபிர் பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து, பிரமுகர்கள், படைப்பாளர்கள், கவிஞர்கள், நண்பர்கள் என விஷேட பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர். 


இந்நிகழ்வில், பிரதம அதிதி கெளரவ பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலி அவர்களின் சிறப்புரையே விஷேட அம்சமாக அமைந்தது. இதனை இந்நூலுக்கான விமர்சனமாக மட்டுமல்லாது, விளம்பரமாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஒரு கவிதையால் பல சமூக மாற்றங்கள் உட்பட தனி மனிதனுக்குள்ளும் பல்வேறுபட்ட உணர்வு ரீதியிலான தாக்கங்களை ஏற்படுத்த முடியும். பாரதியின் கவிதைகள் அக்காலத்தில் அதனைச் சிறப்பாக செய்திருந்ததை நாம் அனுபவ ரீதியாகக் காணலாம். அந்த பாரதியின் கவிதை போல கவிஞர் ஓட்டமாவடி றியாஸ் அவர்களின் கவிதை நூலும் வெளியீட்டு விழாவில் ஓர் அனலை ஏற்படுத்தியிருந்தது. அதற்கேற்றாற் போல பிரதம அதிதியின் உரையும் செவிகளுக்கு விருந்தாகவும் சிந்தைக்கு தீனியாகவும் ரசனைக்கு குறைவில்லாது பார்வையாளர்களைக் கட்டிப்போட்டிருந்தது. இலங்கை, இந்திய படைப்பாளர்களின் சினேகபூர்வ சந்திப்புடன் விருதுகள், கெளரவிப்புக்கள், பாராட்டுக்கள், புகைப்படமெடுத்தல், நூல் வழங்கல்களுடன், வெளியீட்டு நிகழ்வு வெற்றியுடன் இனிதே நிறைவடைந்தது.



http://kalkudahnation.com/








வானமுயர்த்து உன்செயலை....

கல்வி கற்போம் சீராக
கனவு காண்போம் எதிர்கால
வெல்லும் வழியை உயர்வாக
நெஞ்சினில் சுமப்போமே...

வரலாறு சொல்லட்டும் உன்நாமம்
வளங்கள் காணட்டும் உன்சமூகம்
அறத்தின் வழிகளைநீ கொண்டால்
அகிலமுந்தன் பெயர்சொல்லும்....

தோல்வி வந்தால் துவழாதே
தோற்பது உந்தன் இயலாமையே
வாழ்க்கை பாடம் கற்றிட்டே
வானமுயர்த்து உன்செயலை....

ஒழுக்கமுறையை மறவாதே
ஒழுகு அதனால் உயர்வாமே
எழுது சரித்திரம் விரைவாக

எழும்பும் புதிய எதிர்காலம்....




Friday, March 4, 2016

நித்தம் நித்தம் வியக்கிறேன்



நினைவுகளை தொலைத்துவிட்டு
நிம்மதியாய் கழிக்கும் உன்
வழிமுறைகளெனக்கு ஆச்சரியம்....

நோகாமல் வலிகளைத்தந்து
ஓரமாயிருந்து சந்தோசிக்குமுன்
நடைமுறைகளென்னில் அதிசயம்...

பயப்படாத உன் திமிர் கண்டு
நித்தம் நித்தம் வியக்கிறேன்
ஊமையாகிப்போன விழிகளோடு....



Thursday, March 3, 2016

உன் பார்வைகள்

ஒற்றை பெருமூச்சுக்குள்
ஓராயிரம் வலிகள் கலந்து
கரைந்து போவதைப்போல‌
உன் பார்வைகள் எனக்கு...!!

நீ தரும்...


நீ தரும்
சின்ன சின்ன சந்தோசங்களும்
எனக்குள் ஓர்
பிரளயத்தையே
உருவாக்கிவிடுகின்றது.....

தயாராகவில்லை

விடை கொடுத்துவிடுனேன்
எல்லா வேதனைகளுக்கும் -ஆனால்
நானின்னும் தயாராகவில்லை
கல்லரை வாசலைதட்டுவதற்கு...!!

அன்பில்லை...

உன் வார்த்தையில்
அன்பில்லை -வெறும்
விசாரிப்பும் கடமையுமே....
என்னிடமிருந்து
பதிலை
எதிர்ப்பார்க்காதே...!!

மித்திரனுக்கு வாழ்த்துக்கட்டுரை (06.03.2016)

மித்திரன் வாரமலர் தனது 50வது ஆண்டு பொன்விழாவினை 06.0 3.2016 அன்று கொண்டாடுகின்றது. அதனை முன்னிட்டு மித்திரனின் நீண்டகால வாசகியான நான் எழுதிய வாழ்த்துக்கட்டுரை இவ்வார இதழில்...



                                                                         



பொன்விழாக்காணுதலென்பது போற்றுதற்குரிய பெருமையே. காலச்சக்கரம் இத்தனை வேகமாய் சுற்றுகின்றதென்பதை இவ்வாரான நிகழ்வுகளே எம்மையும் விழிப்படையச்செய்கின்றது. 1966களில் இலங்கையின் பத்திரிகைத்துறையில் காலடிவைத்த மித்திரன் வாரமலர் சஞ்சிகையானது நம் எல்லோர் மனங்களிலும் மனம் பரப்பிக்கொண்டிருக்கின்றது. தனிமனிதனின் தேவைகளில் ஒன்றாக, அவனின் உரிமை சுதந்திரம் என்பவற்றில் பாரிய பங்களிப்பு செய்யும் இவ்வூடகங்களின் சேவையில் மித்திரனுக்கு தனியிடமுண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

வாசிப்பறிவுகொண்ட சகல் மட்டத்தினரும் மித்திரன் வார இதழை வாசித்து நேசிக்கின்றனர் ஏனெனில் எல்லா தரப்பினருடைய விருப்பு வெறுப்புக்களை அறிந்த ஊடகமாக மித்திரன் திகழ்கின்றது. சிறுவர்முதல் பெரியவர்வரை அவரவர் ரசனைத்தேவைக்கேற்ப சுவாரஸ்யங்கள் குறையாமல் பல அம்சங்களை தருவதில் முன்னிற்கின்றது. அதிலும் மித்திரனின் நல்ல வாசகர்கள் பலர் இன்று படைப்பாளர்களாக கலைஞர்களாக உருவாகியிருப்பது ஓர் வரலாற்று சாதனை என்பதைத்தவிர வேறு என்னவென்பது....

பலதரப்பட்ட படைப்புக்களை அதாவது கவிதை கதை சிறுகதை தொடர்கதை கட்டுரை குறிப்புக்கள் என அனைத்தையும் தன்னகத்தே தாங்கி அதனை புடமிட்டு மெருகேற்றி எழுதியவர்களை ஊக்கப்படுத்துவதில் மித்திரன் பெரும் பங்காற்றிவருகின்றது. காலத்துக்கேற்ப தனது தரத்தையும் வடிவமைப்பினையும் மாற்றி பல்சுவை கதம்பமாக வளர்ச்சி கண்டுள்ளமை பாராட்டுக்குரியதாகும்.

எத்தனையோ சஞ்சிகைகள் வார, மாத இதழ்கள் வந்த போதிலும் மித்திரனுக்குரிய வாசகர்வட்டத்தினையோ அதன் தரத்தினையோ வரவேற்பிலோ எவ்வகையான பாதிப்பினையும் ஏற்படுத்த முடியவில்லை. யதார்த்தத்தை கையிலெடுத்து செயற்படுவதால் சோரம் போகாது செழுமையாக காட்சியளிக்கின்றது.

இத்தனை சிறப்புக்களைத் தன்னகத்தே தக்கவைத்திட பாடுபடும் மித்திரன் வாரமலரின் ஆசிரியம் தொடங்கி அனைத்து அங்கத்தவர்களுக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்தினை தெரிவிப்பதில் ஓர் வாசகியாய் நானும் பெறுமையடைகின்றேன்.

பள்ளிக்காலத்திலிருந்து தொடங்கிய என் எழுத்துப்பயணத்தில் தேக்கம் ஏற்படாதவாறு நீரோடையாய் பயணிக்க உதவிக்கரம் நீட்டிய மித்திரனின் பலவருட வாசகி என்பதில் பெறுமிதமடைகின்றேன்.  ஆரம்பத்தை மித்திரனிலேயே ஆரம்பித்த என் எழுத்துக்களுக்கு மிக அதிகமான களம் தந்ததில் மித்திரன் முன்நிற்கின்றது. ஓர் ஊடகமாய் அதன் தர்மத்தினை சிறப்பாக செய்துகொண்டிருக்கும் மித்திரனை இலங்கை வாசகர்களோடு இணைந்து அவர்களின் சார்பாகவும் என் வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

பாடசாலை மாணவர் தொடங்கி பலருக்கும் உபயோகப்படும் விடயங்கள் ஆவணப்படுத்தப்படவேண்டிய விடயங்கள் மித்திரனில் ஏராளம். நம்நாட்டு படைப்பாளிகள் திறமையாளர்களுக்கு களம் கொடுப்பதோடு அவர்களை உலகுக்கு அறிமுகப்படுத்துவதிலும் மித்திரனுக்கு தனியிடமுண்டு மொத்தத்தில் ஊடகத்துக்குரிய அனைத்து கடமைகளையும் இத்தனை காலமாக முன்னெடுத்துவந்த மித்திரன் வாரமலரை ஆண்டு வரையறையில்லாத ஆயுள் கண்டு நீண்ட சேவையினை கொண்டொழுக என்னிதயத்தின் இன்சொற்களைத்திரட்டி இச்சிறுவாழ்த்தை மனம் நிறைய தெரிவிக்கின்றேன்.


"வாழட்டும் உங்கள் பணியில் தமிழ் 
வளரட்டும் உங்கள் சேவையில்"



நன்றி.



Wednesday, March 2, 2016

தயாராகவில்லை...

விடை கொடுத்துவிடுவேன்
எல்லா வேதனைகளுக்கும்  ஆனால்
நானின்னும் தயாராகவில்லை
கல்லரை வாசலைதட்டுவதற்கு...!!


க‌ன்னித்த‌மிழாக‌வே...

என்னைத்தோற்றுத்தான்
உன்னை வெல்லமுடிந்தது
நான் நானாக இருப்பதை விட‌
நான் நீயாக இருப்பதை விரும்பும்
நியாயவாதி நீ...

எழுத்துக்கள் எப்படியோ-உன்
எண்ணங்கள் மட்டும்
எனக்கு முரணானவை
இதயத்துக்கு வலிக்கும்-ஆனாலுன்
இதழ்கள் அப்பாவியாயிருக்கும்
மனம் புண்படும்-ஆனாலுன்
முகம் பால் வடிக்கும்...

பெண் விடுத‌லை சுத‌ந்திர‌ம் ப‌ற்றி
உன் எழுத்துக்க‌ள் உக்கிர‌மாய்
குர‌ல் கொடுத்திருந்த‌து -உன்னுட‌ன்
சேர்ந்து உண்ணாத‌
ப‌ல‌ நேர‌ங்க‌ள் என‌க்கு
ப‌ட்டினியாய் க‌ழிந்திருந்த‌து...

ம‌ன‌ம் விட்டு பேசிய‌து ந‌ம்
ம‌ண‌நாளில் ம‌ட்டுமாக‌க்கூட‌
இருந்திருக்க‌லாம்
ம‌ன‌ம் திற‌க்கும் போதெலாம்-நீ
புத்த‌க‌ம் திற‌ந்துவைத்திருப்பாய்
இர‌வுக‌ள் ப‌க‌லாக‌வும்
ப‌க‌ல்க‌ள் இர‌வாக‌வும்
வேற்றுக் கிர‌க‌வாசிபோல‌
வீட்டுக்குள் நீ...

நான் உன் அடிமையென்ப‌தை
தெளித‌மிழில் "இவ‌ள் மெள‌னி"யென்று
ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்காய் ப‌ட்ட‌ம் கொடுத்திருக்கிறாய்...

கடைத்தெரு முத‌ல்
க‌ல்யாண‌ வீடுவ‌ரை என் ப‌ய‌ண‌ங்க‌ள்
பாதை வெறுக்கும்
பாத‌ங்க‌ளாக‌த்தானிருந்தது-என்
புடவை விண்ணப்பங்கள் கூட சில நேரங்களில்
புத்தகமாகத்தான் வீட்டுக்கு வந்திருக்கின்றன...

உன்னையே சுற்றும்
உள்ள‌ம‌றியாது -நீ
உல‌கையே சுற்றிவ‌ந்தாய்
அர‌ங்க‌ம் காணா ஊமைக‌விக‌ளாய்
அந்த‌ர‌ங்க‌மாயெனை புதைத்துக்கொண்டிருக்கிறேன்...

த‌னிமை சாம்ராஜ்ய‌த்தில் நான்
தலை‌மை ‌வ‌கித்தாலும்-நீ
மேற்பார்வைக்கேனும் வ‌ருவ‌தில்லை
நான் உண்ப‌தில் உற‌ங்குவ‌தில் உடுத்துவ‌தில்
உன் விம‌ர்ச‌ன‌ம் ஆம் இல்லை ம‌ட்டுமே...

த‌மிழை சுவாசிக்கிறாய்
த‌லைவ‌ண‌ங்குகிறேன்
தார‌த்தின் சுவாச‌த்தையேன்
த‌ண்டிக்கிறாய்
ப‌ரிசுக‌ளும் ப‌த‌க்க‌ங்க‌ளும் நீ வென்ற‌தாய்
ப‌டுக்கைய‌றை முத‌ல் ப‌ளிச்சிடுகிற‌து
ப‌ட்ட‌ம் கொடுத்த‌வ‌ர் எவ‌ரோ...

என‌க்கான‌ உன் விட்டுக்கொடுப்புக‌ள் இல்லை
நான் பெற்றுக்கொண்ட‌ உரிமை நீ
மீத‌ம் வைக்கும் தேநீரொன்றுதான்...

உல‌குக்கெலாம் த‌மிழூற்றிக்கொடுத்தாய்
நானின்றும் க‌ன்னித்த‌மிழாக‌வே...

வேசமென்று.....

அன்பென்றாய் நம்பினேன்
பாசமன்றாய் மலர்ந்தேன்
உயிர் என்றாய் உருகினேன்...
அலைகடல் நடுவே தள்ளி
சலனமே இன்றி - நீ
போகும்வரை அறியவில்லை
எல்லாம் வேசமென்று.....



வாழ்க்கை

சில மாற்றங்கள் தரும் இன்பத்தையும்
சில மாற்றங்கள் தரும் வேதனையையும் 
கடந்து போகின்ற போதுதான்
வாழ்க்கை வாழ்க்கையாகிறது!!
.

Tuesday, March 1, 2016

என் இதயவறை

வாடகை வீடாய்
பயன்படுத்திக்கொண்ட -என்
இதயவறை வெறிச்சோடிக்கிடக்கிறது
எங்காவது நிரந்தரமாய் குடியேறிவிடு
இடப்பற்றாக்குறை

அதிகமாகிக்கொண்டிருக்கிறதாம்!!

விழுது வாழ்வியலில்...

கரிய இருளுக்குள்
காணாமல் போன
சூரியனை தேடிக்கொண்டிருக்கின்றேன்...

பார்வையில் பழுதும் இல்லை
உறக்கநிலையில் நானுமில்லை ஆனாலும்
எல்லாமே கருமையாகவே......

இதற்கிடையில்

எப்போதும் புன்னகைக்கும்
என் னுதடுகள் அதிசயம்

எவரிடமும் புலம்பாத
என் நாவு மதிசயம்

எந்நிலையிலும் ஆறுதலுக்கலையா
என் அழுகைகளும் அதிசயந்தான்....

தொலைத்தல் பற்றிய
தெளிவில் நான்

துயரங்களின்
தொடர்ச்சியில் இவ்
வாழ்க்கைச்சங்கிலி

கட்டப்பட்டு வெட்டப்பட்டு
ஒட்டப்பட்ட என்னிதயம்
திட்டமிட்டு வட்டமடித்து
இறக்கை விரிக்குது

விழுந்து எழுந்து
அழுது புலம்பி
தொழுது பழுதான என்
விழுது வாழ்வியலில்
அழுத்தி சொன்னது
இதுவொன்றுதான்

கண்களை சரியாக்கிடு
கனவுகளை கதவாக்கிடு
உண்மையை உரமாக்கிடு

உயர்வுகளை உனதாக்கிடு.....