Wednesday, December 26, 2012


கிறுக்கல்கள் சித்திரமாகின்றன கவிதைத்தொகுப்பின் மீதான ஓர்ரசனைக்குறிப்பு


 




   கவிஞர் பி.அமல்ராஜ் அவர்களுடைய "கிறுக்கல்கள் சித்திரமாகின்றன"கவிதை தொகுப்பானது,புதுக்கவிதைகளில் யதார்த்தபூர்வமான நகைச்சுவையுண‌ர்வுடன் கூடிய எழுத்துக்களாக  வெளிவந்துள்ளது.உண்மையில் இன்றைய இலக்கிய உலகில் மரபுக்கவிதையை தவிர்த்து புதுக்கவிதைகளுக்குள் ஓர் புரட்சியே நடந்துகொண்டிருக்கின்றது.எத்தனையோ மூத்த இலக்கியவாதிகளின் கடுப்புக்களுடனும் கண்டிப்புக்களுடனும் வளர்ந்துவரும் இப்புதுக்கவிதை சாம்ராஜ்யத்தில் கவிஞரின் கவிதைகளுக்கும் சிறந்த களம் உண்டு என்பதனை தொகுப்பை வாசிக்கும்போதே உண‌ரமுடிகின்றது.

 "கிறுக்கல்கள் சித்திரமாகின்றன" என்ற தொகுப்பின் கவிதைகள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும் அதன் எதிரலைகள் எண்ணற்ற எண்ணங்களை உருவாகிவிடும் சிறந்த கருத்துக்களமாக காணப்படுகின்றது வாழ்த்துக்கள்.
 "தியாகம் அவள் பெயர்" என்ற தாய்மைக் கவியூடே ஆரம்பித்து சிறப்பித்திருப்பது வ‌ரவேற்புக்குரியது.அதில்,

  " ஊர் உறங்கியும்
    உறங்காத‌
    உன் தாலாட்டும்
    இன்னும் என்
    காதுகளில் கேட்கும்
    ரகுமானின் 'ஜெய் கோ'தான்"... என்று தாலாட்டையும் இளைஞர்களின் இரவுநேர இசை மயக்கத்தையும் வர்ணித்துள்ளவிதம் ரசனை.அதிகமாக காதல் கருக்களை சுமந்துவந்த கவிதைகள், பலவிதமாக காதலை நோக்கியிருக்கின்றது."நீதான் அவள்" கவிதையில் காதலை ஏக்கத்தோடு பார்க்கின்ற வரிகளாகவும் "நீ நட்பு காதல்" தலைப்பில்,புரியும்போது விளங்காத காதல் பிரியும்போது உணர்கையில், காதலுக்கேயுரிய தடுமாற்றங்களின் வரிகளாகவும்,"கல்லறைக்கனவு" கவிதையில் ஒருதலைக்காதலின் ஓரங்க வலிகளை உண‌ர்த்தும் விதமாகவும்,"ஒரு ரயில் பயணம்" "ஒரு காதல் காவியம்" "அடங்காத காதல்" "மொட்டை மாடிக்காதலும் முடிந்துபோன கற்பனையும்" "கடற்கரை காதல்" என பல்வேறு கோணங்களில் கவிஞரின் பார்வை இளையவர்களின் மனதை வருடும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை.

 சின்ன சின்ன வரிகளோடு சித்திரம்போல் வரையப்பட்டுள்ள இத்தொகுப்பு பார்வைக்கும் வாசிப்புக்கும் புரிதலோடு நயந்துகொள்கின்றது.ஒவ்வொரு கவிதையும் சமூகத்தை வித்தியாசமான சிந்தனைகொண்டு தொட்டிருப்பதும் நிஜங்களின் பிரதியாக வெளிப்பட்டிருப்பதும் கவிதைகளுக்கு மேலும் கனத்தை சேர்த்திருக்கின்றது.இன்னும் கவிதையின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருக்கலாம் என தோன்றுகின்றது.

 "முதிர்க்கன்னி" என்ற கவிதையில் ஒரு பெண்ணின் உள்ளக்குமுறலை அணுகியிருப்பது கவிஞரை பாராட்டச்செய்கின்றது.இங்கு கவிஞர் இனியவன் இஸாருதீன் அவர்களுடைய கவிதையொன்று நினைவுக்கு வருகின்றது,

 அத்தோடு தேசத்தின் கடந்த கால வடுக்களின் வலிகளை கண்முன் காட்டியிருப்பது கண்ணீரை வரவழைக்கும் உருக்கமான வரிகள்."செத்தா போய்விட்டேன்" கவிதையில்,

 "ஒற்றைக்காலும்
  ஒற்றைக்கையும்
  ஒற்றையாய் நிற்க என்
  இதயம் மட்டும்
  இரட்டையாய் அடிக்கிறது
  இறந்துவிடுவதா
  இல்லை மறந்து
  வாழ்ந்து விடுவதா?" என்ற வினாக்களுக்கு இதயம் ஓர் கணம் நின்றியங்குகின்றது.அதே உணர்வை "முள்ளிவாய்க்கால் முடிவுரை" "பயணங்கள் முடிவதில்லை" ஆகிய கவிதைகளிலும் உணர முடிந்தது.

 பொதுவாக பெண்களை குறைகூறாத ஆண்கள் மிக அரிது கவிஞர் மட்டுமென்ன விதிவிலக்கா? தனது "புதுமை பெண்ணும் தோற்றுப்போன ஆணும்" என்ற கவிதையில் இவ்வாறு வெளிப்படுத்தியிருக்கின்றார்,

 "மானத்திற்கும்
 ஆடைக்கும்
 சம்பந்தமேயில்லை இவள்
 அகராதியில்
 பாவம்,
 வெளியில் தெரிபவை
 அவள் அங்கங்கள் மட்டுமல்ல‌
 வெளிறிப்போன நம் கலாச்சாரமும்தான்!" என கலாச்சாரத்துக்காய் கவலைப்பட்டுள்ள கவிஞர், "நீதான் அவள்" என்ற கவிதையில்,

" என்
 இளமையின் தாகம்
 உன்னுடைய தேகம்
 தீருமா என் சோகம்
 இதுவா காதல் வேகம்? என்பதனையும் அவரே உணர்த்தியிருக்கின்றார்.இதே விடயத்தினை " மொட்டை மாடிக்காதலும் முடிந்துபோன கற்பனையும்" கவிதையிலும் காணலாம்.இதிலிருந்து புரிந்துகொள்ள முடிவது என்னவென்றால்,எதிர்பார்ப்பதும் நீங்களே எதிர்ப்பதும் நீங்களே தான்.எதை வெறுப்பதாய், கண்டிப்பதாய் வெளியில் சொல்லுகின்றீர்களோ அதையே உள்வாங்கிக்கொள்ள முனைவது இந்த ஆண்களின் இயற்கையான இயல்பு என்பதை அழகாக கவிவரிகளில் தந்துள்ளார் வாழ்த்துக்கள்.

 எவ்வளவுதான் நம்முடைய வளர்ச்சி உயரத்திலிருந்தாலும் எமது பழைய நினைவுகளை மீட்டிப்பார்ப்பதும் பழைய வாழ்வின் நிழல்களில் ஒதுங்கிப்பார்ப்பதும் மனதுக்கு இனிமையான ஒன்றே அவ்வுணர்வுகளை கவித்துவத்துடன் காணும்போது இரட்டிப்பு சந்தோஷத்தில் மனம் குதுகலிக்கின்றது.அந்த இதத்தினை " எனது ஆட்டோகிராப்" "ஊர்ப்பக்கம்" ஆகிய கவிதைகளில் காணலாம்.

 உடைத்து வைக்கப்பட்ட மாதுளம்பழத்தினைப்போல கவிதைகள் அனைத்தும் கண்களையும் கருத்தினையும் கவர்ந்துள்ளது.ஓர் நல்ல புத்தகத்தினை வாசித்த திருப்தியும் பெறுமதியான சிந்தனை வெளிப்பாட்டினை ரசித்த நிறைவும் இத்தொகுப்பில் அடங்கியிருக்கின்றது.எத்தனை ஆர்வத்துடன் முதற்பக்கம் ஈர்த்ததோ அதே ஆவலோடு கடைசி ஏடுவரை தொடர்ந்தது இத்தொகுப்பினதும் கவிஞரினதும் வெற்றி எனலாம்.

 இன்னும் பல்வேறு தளங்களுடன் சிறந்த களம் காணவும் இப்பெரிய இலக்கிய உலகில் கவிஞர் அமல்ராஜ் அவர்கள் ஓர் சிறப்பான இடத்தினை தக்கவைத்துக்கொள்ளவும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

 நன்றி
த.எலிசபெத்


துலங்கிடுமோ மாயமான மாயமிது !!


வீடுகள் தோறும் வீதி வரையினில்
காடுகள் போலொரு கருமை படர்ந்தே
பாடுகள் தொடரும் பாதையெங்கிலும்
பாவம் எம்மக்காள் பயத்தினிலே...

வன்மம் நெஞ்சிலே வளர்த்த மிருகங்கள்
ஜென்மம் காத்திட வரைந்த உருவங்கள்
பெண்கள் மத்தியில் பீதியும் கிளம்பிட‌
பெலனில்லா மனங்களாய் புவியினிலே...

கல்லோடும் வாளோடும் காளையர்க ளிரவில்
பொல்லோடுந் தடியோடும் புலரும்வரை இருட்டில்
வல்லோர்கள் கூடிட்ட வேளையிலும் மாயனாய்
வந்ததும் பறந்தானாம் சிக்காமலே...

வாய்வழியாய் வந்திட்ட வதந்தியு மிங்கே
வானளவே விரிந்து வியாபித்தும் நின்றது
நோய் போலெமை பீடித்து மனதில்
நோக்க‌மெல்லாம் சிதறிட்டு பித்தானது...

காவலோனே காவலோனே காத்திரமாய் நீரும்
பாவப்பட்ட மக்களினை காத்திடுவீர் பாரும்
ஏவலோனாய் வந்துபோகும் மாயந்தனை தீரும்
ஏளனமேசெய்யாமல் வேகமாய்நீவீர் வாரும்...



          
            வேகமாய் நீள்கின்றது !!






சோகந்தனை சொல்லிடவும்
சொந்தமென்று எவருமில்லை
சோதனையை சுமந்திடவும்
இதயத்தினில் வலிமையில்லை...

ஆழ்ந்து அழத்தோன்றுகிறது
அடிமனதேனோ கனத்திடுகிறது
ஆனந்தங்கொண்ட நெஞ்சமின்று
ஆறுதலின்றியே அடங்கியிருக்கிறது...

தோல்வியினால் வீழ்ந்திடவே
கோழையல்ல என்நெஞ்சம்
வேள்வியினால் ஏழ்ந்திடவே
வாழ்வினிலே என்தஞ்சம்...

எண்ணை தீர்ந்த விளக்கிது
என்னை தீயாய் வளர்த்திட்டேன்
மண்ணைபோல விளைந்திட‌
கல்லையும் காலமாய்கொண்டிட்டேன்...

பாதை வேகமாய் நீள்கின்றது
பயண‌ம் எனையும் சூழ்கின்றது
வழியை எங்கோ தொலைத்திட்டேன்
விழியை ஒளியாய் தொடர்ந்திட்டேன்...


Tuesday, December 25, 2012



தலையநீட்டி மிரட்டவருது...



அடகுவச்ச தாலிக்கொடி
அமைதியாக படுத்துறங்க‌
தடவிகொடுத்த வறுமையது
தலையநீட்டி மிரட்டவருது...

சீதனமா எங்க அம்மா
செப்புகுடம் தந்திருந்தா
சாதனமா அதையுங்கொடுத்து
சாராயத்தை ஊத்திக்கிட்டான்...

பள்ளிக்கூடம் போனபிள்ளை
பாதியிலே போகவில்லை
கள்ளிச்செடி போல அவன்
கல்வியையும் பார்க்கவில்லை...

பாடப்புத்தகம் வாங்கும் செலவு
பாரமாக எனை அழுத்த‌
தேடும் பணம் கொஞ்சமும்
தேவைக்கே போதவில்லை...

கூலிவேலை செய்தாதான்
கொஞ்ச காசும் கிடைக்கிறது
காலியான எங்க வயிறு
கண்ணீரால நிறைகின்றது...

தேங்காய் உடைச்சு வந்தேன்
தெய்வங்களெதுவும் பார்க்கவில்லை
தேர்தல்காலம் வந்து போனது
தேவைகளெதுவும் தீரவில்லை...!!


வசந்தமாக போகுதையா !!!


காடேறி மேடேறி
கால்நோக மலையேறி
பாடாக பட்டபாடு
பலனாக வந்ததையா...

கைகடுக்க கொழுந்தெடுத்து
கைச்செலவ சேமிச்சு
பையனை படிக்கவைச்சேன்
பூநெஞ்சம் பொங்குதையா...

எண்ணவிளக்க எரியவச்சு
கண்ணமுழிச்சு படிக்கவைச்சேன்
விண்ணபோல ஒசந்துட்டான்
விதவமனம் துள்ளுதையா...

கால்வயிறு கஞ்சியூத்தி
கல்வியமட்டு பசியாக்கி
ஏழ்மையகாட்டி படிக்கவச்ச‌
ஏம்மகன பாருங்கையா...

பெரியபதவி கிடைச்சிருக்காம்
பேருஎன்னவோ எஞ்சினியராம்
வறியகுடும்ப கவலையெல்லாம்
வசந்தமாக போகுதையா...

தங்கமகன் குணமெல்லாம்
உங்களபோல இருக்குதையா
பொங்கவச்சு கும்பிடனும்
அங்க இருந்தே வாழ்த்துங்கையா...




சுற்றிக்கொண்ட மாயவலை!!




மனதெங்கும் வியாபித்த அந்த‌
மாயவலை தற்செயலாய்
சுற்றிக்கொண்டது தான்
உறுதியில்லாத நூல்களினாலும் 
உண்மையில்லா பிணைப்புக்களினாலும்
ஊருக்காக பின்னப்பட்ட‌து...

உதடுகள் மட்டும் மலரும் புன்னகைகள்
உயிரில்லாத உச்சரிப்புக்கள்
ஊமையாய்ப் போன நேசங்கள்என்பவற்றால்
நிறமூட்டப்பட்ட அந்த‌மாயவலைதான் மிக 
மிக இறுக்கமாக சுற்றிக்கொண்டது
சிக்கிக்கொண்ட இதயவலிகள் மட்டும்
கண்ணீர் பூவை சொரிந்துகொண்டே இருந்தது...

அபத்தமான பொய்களெல்லாம்
அலங்காரமிட்டுக்கொண்டு
வெட்கமேயில்லாமல் வெளியேவந்தது
மெய்யைப்போன்று...

நிஜங்களைப்போல வேடமிட்டாலும்
நீர்த்துப்போய் விடுகின்றது பல சந்தர்ப்பங்களில்...

பிரியமில்லாத பரிவுகள்
அன்பேயில்லாத ஆதரவுகள்
உண்மையில்லா உருகுதலகளென்று
வெற்றுத்தனங்களை ஒப்புவித்துக்கொண்டிருக்கும்
இந்த மாயவலையில்
ம‌னதை சிக்கவைப்பதென்பது
எத்தனைமடமையென்று 
மனங்களுக்கு மட்டும் புரிவதேயில்லை
மாயவலை மிக‌
மிக இறுக்கமாக சுற்றிக்கொண்டிருக்கின்றது...!!

நல்வாழ்வின் விடியலாய் பிறக்கட்டும்

நல்வாழ்வின் விடியலாய் விடியட்டும்



கழிந்ததெலாம் கழிவாய் கழிந்து போகட்டும்
ஒளிர்வதெலாம் கனிவாய் மிளிர்ந்து பூக்கட்டும்
வலிகளெலாம் வழிந்து வரட்சியா கட்டும்
தளிர்களெலாம் வெடித்து விருட்சமாகட்டும்...

பூமிப்பந்தின் அடிநுனியாட்டங்களெலாம் அமைதியாகட்டும்
சாமிப்பழி சட்டங்களெலாம் சகோதரத்துவம் பேசட்டும்
அக்கிரமக் கனிகளின் அதிஸ்டங்களெலாம் அடியோட‌ழியட்டும்
உக்கிர‌மான உண்மைக ளுயர்ந்துஜெயிக்கட்டும்...

ஊர்பிடிக்கும் ஏர்களெலாம் உயர்ச்சி காணட்டும்
யார்கேட்பினும் வரங்கள் வாரி கொடுக்கட்டும்
நீர்நிலைகள் யாவுமே செழித்து நிற்கட்டும்
பாரில்நற்பயன்கள் பயிராய் விழையட்டும்...

கல்விமுதற் கலைகள்யாவும் பொதுவுட மையாகட்டும்
செல்வஞ்சேர் மடமையெலாம் ஏழ்மையை தகர்க்கட்டும்
பொல்லாத சட்டங்கள் பொசுங்கியே சாகட்டும்
நல்வாழ்வை தந்திடும்விடியலாய் இவ்வாண்டு பிறக்கட்டும்...

வானவெடிகளின் பூரிப்பில் வசந்தவாழ்வு பூக்கட்டும்
தானத‌ர்மங்களின் பயன்களால் புத்தாண்டு மகிழட்டும்
ஞானமழை பொழிந்திடும் ஞாலமுருவாகட்டும் -அன்புக்
கானமிசைத்திடும் மனங்களுக் கிறையருள்கிட்டட்டும்...!!!‌

"மீண்டு வந்த நாட்கள்" வெளியீட்டு விழாவும் எனது அநுபவமும்....






 21.08.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணியளவில் வெள்ளவத்தை தமிழ்ச்சங்க மண்டப அரங்கில் இனிதான ஒரு மாலை வேளையில் மங்கள விளக்கேற்றும் நிகழ்வுடன் கவிஞர் வதிரி சி.ரவீந்திரன் அவர்களுடைய "மீண்டு வந்த நாட்கள்"  கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா சிறப்பான ஓர் ஆரம்ப விழாவாக தொடங்கியது.

 நிகழ்வுக்காக எனக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தாலும் இன்னுமொரு சிறப்பு விருந்தினருடன் செல்லும்சந்தர்ப்பம் கிடைத்ததால் இரு அழைப்பாக அவ்விடம் சென்றேன்.தமிழ்ச்சங்க விழாவில் கலந்துகொள்ளும் முதல் சந்தர்ப்பம் மகிழ்ச்சியோடும் ஒருவித படபடப்போடும் தான் சென்றேன்.அலங்கரிக்கப்பட்ட அரங்கத்தில் அதிகம் பேர் அமர்ந்திருக்கவில்லை அதனால் கொஞ்சம் பின்னால் இருந்த கதிரையில் அமர்ந்துகொண்டேன் படபடப்பும் காணாமல் போயேவிட்டது. முன் வரிசையில் சில பெண்கள் அமர்ந்திருந்தார்கள் எனக்கு அறிமுகமானவர்கள் என எவரும் தென்படவில்லை,ஆனால் நான் அறிந்த சில முகங்களை நேரடியாக கண்டதில் மிகுந்த மகிழ்ச்சியாயிருந்தது. சிலரை இவர்களாக இருக்கவேண்டுமென ஊகித்தேன் அநுமானம் சரியாகத்தான் இருந்தது. ஒவ்வொருவராக வந்து அமர்ந்ததும் சபையும் நிறைந்துவிட்டது.

 கொழும்பு பல்கலைக்கழக கல்வியற்துறை பேராசிரியர் மா.கருணாநிதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் முதல் கட்டமாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்து வரவேற்புரை,நூல் அறிமுகம், வாழ்த்துரை, கருத்துரை என நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக வழங்கப்பட்டது. நிகழ்வுக்கு வருகைதந்த பேராசிரியர்கள்,எழுத்தாளர்கள், சிறப்புவிருந்தினர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என அரங்கம் ஓர் அறிவியற்கூடமாக எனக்கு காட்சிதந்தது.
கவிஞர் திரு.மேமன்கவி அவர்கள் அங்குமிங்கும் ஓடியாடி ஓர் இளைஞனைப்போல இயங்கிக்கொண்டிருந்தார்.சகல வேலைகளிலும் மும்முரமாக சிரித்த முகத்துடனும்,ஓர் வேகத்துடனும் நிகழ்ச்சியை சிறப்பித்துகொண்டிருந்தார்.

 மேடையில் பேசிய அனைவரின் பேச்சுக்களும் கவிஞஎ வதிரி சி.ரவீந்திரன் அவர்களைப்பற்றியதாகவும் அவரின் கவிதைகள், மற்றும் இலக்கியம் சார்ந்த விடயங்களாகவே இருந்தது அதனால் கருப்பொருள் பிரள்வடையாமல் எமது கருத்துக்களும் சிந்தனைகளும் நிகழ்வுக்குள்ளே சுவாரஸ்யமாய் சுற்றிவந்து கொண்டிருந்தது.பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகளில் வேறு துறை சார்ந்த முக்கியஸ்தர்களின் பங்களிப்பு இருக்கும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் குறிக்கப்பட்ட விடயம் குறிதவறி விழுந்துகொண்டிருக்கும் அத்தகைய சம்பவங்களில் துளியேனும் இங்கு நடைபெறாதது மகிழ்வைத்தந்தது.

  அடுத்ததாக மூத்த இலக்கியவாதியும் மல்லிகை ஆசிரியருமான ஜீவா அவர்களின் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது அநுபவமும் முதிர்ச்சியும் அவருடைய பேச்சின் பெறுமதியை இன்னும் கூட்டியிருந்தது. அவர் குறிப்பிட்ட ஒருவிடயம், இன்றைய இளம் படைப்பாளர்களை பற்றியது அதாவது ஒரு தொகுப்பை வெளியிட்டதும் தங்களை பற்றிய பெறுமிதத்தில் இருப்பதாக சொன்னார் உண்மையில் அப்படி இருப்பதாக ஒத்துக்கொண்டாலும் இவர்களைப்போன்றவர்களை ஊக்கப்படுத்த வேண்டியதும் பொறுத்துக்கொள்ள‌வேண்டியதும் உங்களைப்போன்றவர்களின் கடமையல்லவா? இளம் இரத்தம் சில விடயங்களில் வேகம், சில விடயங்களின் ஆவல் நிமித்தமாகவும் பிழைகள் நடப்பது இயற்கையே. இளம் படைப்பாளிகளை வளர்த்துவிடுங்கள் ஐயா என என் மனம் கேட்டுக்கொண்டது.

 நிகழ்ச்சிகளை அமைதியாக ர‌சித்துக்கொண்டிருந்தேன் நேரம் மிக மிக வேகமாக சுழன்றுகொண்டிருந்தது வந்திருந்த எவரும் என்னை அடையாளம் கண்டுகொள்ள‌வில்லை  ஏனென்றால் என்னைதான்  யாருக்கும் தெரியாதே.
இவ்விழாவினை முழுமையாக இருந்து பங்குகொள்ளவேண்டும் என்ற ஆவலிலே வந்தேன் ஆனால் போக்குவரத்து பிரச்சனை காரணமாகவும் ந‌டைமுறையிலுள்ள சில நிகழ்வுகளின் பயம் காரணமாகவும் பாதி நிகழ்வுடன் எழுந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் அமர்ந்துகொண்டிருந்தேன் நேரத்தை பார்த்தவண்ணம். மாலை மயங்கிவிழும் நேரம் இருள் மெதுவாக தன் கரம் கொண்டு ஏந்த ஆயத்தமாகிக்கொண்டிருக்கையில் நானும் எனது சகோதரியுமாக இருக்கையைவிட்டு எழுந்தோம். மனம் வேண்டாம் என சொல்லியும் காலம் போ என கட்டளையிட்டுக்கொண்டிருந்தது வெளியீட்டுவிழாவில் கலந்துகொண்ட திருப்தியுடன் இனிய நினைவுகளை சுமந்தவண்ணம் பாதையை நோக்கிநடந்தேன்.
   











இலவசமாக்கிடுங்கள்

 கல்வியக அனுமதிக்கு
சிபாரிசு க‌டித‌ம் த‌ராதீர்
ச‌ம‌வுரிமை த‌ந்திடுங்க‌ள்...

ஏழை ப‌ண‌க்கார‌னென்ற‌ த‌குதி த‌விர்த்து
க‌ல்வித்த‌குதி த‌ந்திடுங்க‌ள்
இருதிவ‌ரை போராடுவோமென்ற‌
கோஷ‌ங்க‌ள் தவிர்த்து
கோரிக்கையாக்குங்க‌ள்...

நாளைய தலை‌வ‌ர்க‌ள் சிறுவர்களென்ற
சுயநல வார்த்தையை
சுதந்திரப்படுத்துங்கள்...

பெற்றுக்கொண்ட விளைநிலங்களில்
புற்களை வளர்க்காதீர்கள்
பணங்காய்க்கும் ம‌ரங்களாய்
பாட‌சாலைக்கு உர‌மிடாதீர்க‌ள்...

ச‌ம‌த்துவ‌த்தையும் சமாதான‌த்தையும்
அரிச்சுவ‌டியிலே ஆர‌ம்பித்திடுங்க‌ள்
ஏற்ற‌த்தாழ்வுக‌ளை வெட்டியெறிந்து
வெற்றிக‌ளை ம‌ட்டும் ஏந்திவ‌ர‌
ஏணிக‌ள் செய்திடுங்கள்...

வ‌றுமையெனும் சிவ‌ப்புக்கோடிட்டு
சின்ன‌ இத‌ய‌ங்க‌ளை
சின்னாபின்ன‌மாக்கி விடாதீர்க‌ள்
ஒற்றுமைக் காக‌ங்க‌ளாக‌
கூவி அழைத்திடுங்க‌ள் குழ‌ந்தைக‌ளை
அவ‌ர்க‌ள் வ‌ள‌ர‌ட்டும்
வ‌ழிகாட்டுங்க‌ள் ஒளி த‌ருவார்க‌ள்
இல‌வ‌ச‌மாகிடுங்க‌ள்
இளைய‌வ‌ர்க‌ள் நாளைய‌
த‌லைவ‌ர்க‌ளாக‌ட்டும்...

சொந்த‌ சொகுசுக‌ளை குறைத்து -எதிர்கால‌த்தை
சொர்க்க‌மாக்கிடுங்க‌ள் க‌ல்வியை -எல்லாருக்கும்
சொந்த‌மாக்கிடுங்க‌ள்...




உற‌வுக‌ளின் நிலையிதுவோ...

ஒவ்வொரு முறையுமே ஒன்றிடு ம‌வ்வேளையிலே
உற‌வென்று சொல்லியே உத‌றிவிட்டு செல்கையிலே
உள்ள‌ம‌து வெம்பியே உள்ளுக்குள் ளழுகையிலே
உயிர்க்கூடு த‌னிம‌ர‌மாய் உதிர்ந்தே போகிடுதே...

ந‌ட்பென்று நாசூக்காய் நாலுபேரு சொன்னாங்க‌
நானும‌தை நிஜ‌மாக உற‌வென்று ந‌ம்பினேங்க‌
நாலு நாளு பேசிட்டு நீங்கியே போனாங்க‌
ந‌ட்ட‌ந‌டு க‌ட‌லிலே ந‌ட்புக்காய் நானுமுங்க‌...
ஆளில்லா ஊரிலே ஆறுத‌லு ண்டாகிடுமோ
ந‌ண்ப‌ரில்லா வாழ்வினிலே நிம்ம‌திதா நிய‌ங்கிடுமோ
உண்மைக் கிங்கேன் ம‌திபேதும் வ‌ழ‌ங்க‌வில்லை
உறுதியாய் இருதிவ‌ரை உற‌வுக‌ளும் புல‌ங்க‌வில்லை...

வான‌ மேக‌முமே வ‌ங்க‌க் க‌ட‌ற்க‌ரையுமே‌
கொண்ட‌ முடிச்சினை தொட்டு தொட‌ருமே
வாங்கிவந்த‌ ப‌ந்த‌மும் வ‌லித‌ந்தே வில‌குதே
உற‌வுக‌ள் நிலையிதுவோ எண்ணிமன‌ம் புல‌ம்புதே...


நிய‌திக‌ளின் வ‌ழிய‌தினிலே....


ஆழ்வது மாள்வதும் மண்ணிலே நியதி
ஏழ்வதுந் தாழ்வதும் வாழ்வியல் பவனி வீழ்ச்
சியின் வடிவிலோர் விடியலின் மலர்ச்சி
சிந்தனையின் எழுச்சியில் சிகரம்போ லுயர்ச்சி...

குற்றஞ் சொல்லு லகைகுறையாய் நினைக்காதே
ஏற்றங் காண் பதிலுனக்குதவி மறக்காதே தற்
பெறுமையூ டதினால் தனித்துவ மிழக்காதே
பெற்ற பேற்றினையணைக்க  சோம்பலினை வளர்க்காதே...

பட்டப் பாடுதனை கற்களாய் கொண்டிடு
திட்டங்கள் தீட்டியதை கோபுரமாய் நட்டிடு எட்ட‌
நின்றிடும் சிக்கலை வீரமா யுடைத்திடு
நிசப்தமான தென்றலாய் மீண்டுமீண்டுஞ் சுழன்றிடு...

வேக‌மாய் போவ‌தெலாம் வெற்றியின் வ‌டிவ‌ல்ல‌
யோக‌மாய் வாய்ப்ப‌தெலாம் தோல்வியின் முடிவும‌ல்ல‌-வி
வேக‌மாய் ந‌ட‌ப்ப‌துவே வாழ்வ‌ழிய‌தின் வேட்கை
வேரூன்றி நிற்ப‌த‌ற்கு கிடைத்த‌ந‌ல் தீட்சை...



கனவுக் கதவுகள் .. 




                                                           வீங்கிய விழிகளுடனேயே
விடிந்ததெந்தன் இரவுகள்
விடையில்லா வினாவாய்
பாதையில்லா பயணமாய்
பரிதாபமாய் விம்மியழுகின்றேன்...

வெறித்தனமாய் எவரோ
என்இதயத்தை பிய்த்தெடுத்து
தீயிட்டதாய் உணர்கின்றேன்
ஸ்தம்பித்துப்போன சுவாசம்
உணர்வற்றுப்போன நடவடிக்கைகள்
ஊனமாகிக்கொண்டிருக்கும் என்
அத்தனை இயல்புகளும் ஐயகோ
அநியாயமாய் வலுவிழந்துகொண்டிருக்கிறது
வரப்போகுமந்த நொடிதனை
சந்திக்க முடியாதவளாய்
பயப்பிசாசு என் கழுத்தை
இறுக்கிக்கொண்டிருக்கின்றது..

ஊன்றிப்போன இந்த
வேரையறுத்துஉலகில்
வாழ்வதெங்ஙனம்...

கட்டிவைத்த கனவுக்கோட்டைகள்
அத்தியாய மத்தியாயமாய் வளர்ந்திருக்கின்றது
ஒற்றை நொடியில் அத்தனையும்
தகர்த்தெரிந்து விட்டு புன்னகைப்பதெங்ஙனம்..
இரக்கமேயில்லாமல் -என்
இளைய கவிகளை கசக்கியெறி(ரி)யும்
இந்த இதயமில்லாதவர்களை
என்னவென்பேன்..

எழுத்தில்லா விதியாய்
காம்பில்லா மலராய்
கடலில்லா கரையாய்
கண்ணில்லா இமையாய்
கலங்கி நிற்கின்றேன்...

கருக்கட்டிய என் கனவுகளை 
நானே அழித்துக்கொண்டிருக்கின்றேன்
கதறக் கதற....
இந்த இரவும் விடிந்தது
வீங்கிய விழிகளுடன்...

என் காதல்



என் காதல்
கை கோர்த்து பூங்காக்கள் தோறும்
பூரித்திட்டதில்லை...

கடற்கரை மணலில்
கால்கள் பதித்ததில்லை
காற்றுவாங்கி
காலாற காதல் வளர்த்ததில்லை...

காதலர்தின கொண்டாட்டங்களில்
களித்ததில்லை
பரிசுகளால்
பட்டைதீட்டப்பட்டதில்லை....

ச‌ந்துக்க‌ள் தோறும் ச‌ந்தித்து
ச‌மூக‌க் க‌ண்க‌ளால்
ச‌வுக்க‌டிவாங்கிய‌தில்லை
ஊர்வாய்க‌ள்
உமிழ்ந்து தூற்றிய‌தில்லை...

உயிருக்குள் சும‌ந்து
உண‌ர்வுக‌ளை நேசித்து
உள்ள‌த்தால் வ‌ள‌ர்த்த‌
உண்மைக்காத‌லிது...

இர‌வுக‌ளின் துணையோடு
இத‌ய‌த்தின் நாத‌ங்களை
க‌வியாய் மொழிபெய‌ர்த்த‌
காவிய‌க்காத‌லிது...

வீணென்று சொல்வ‌த‌ற்கும்
வீண்வார்த்த‌க‌ளிதிலில்லை
விளையாட்டாய் கோபித்து
செல்லமாய் ச‌ண்டையிட்டு
ச‌ம‌ர‌ச‌மான‌ சாதார‌ண‌க்காத‌லில்லை...

பொத்தி பொத்தி ப‌துக்கிவைத்தும்
பொசுக்கென்று முளைவிட்டு விருட்ச‌மாயிடா
க‌ண்ணீர் குவ‌ளைக்குள்ளே
நினைவுக‌ளால் நீந்திவ‌ரும்
நிறைவேறாக்காத‌லிது -‍என்
நிர்க‌தியான‌ காத‌லிது...


[  இக்கவிதை வெற்றி FM ன்(30.05.2011) "காற்றின் சிறகுகள்" நிகழ்ச்சியிலும்
   வசந்தம் தொலைக்காட்சியின் "தூவானம்" நிகழ்ச்சியில் 11.06.2011 லும் 22.06.2011 ல் தமிழ் ஓதர்ஸ் இணையத்திலும் 06.06.2011ல் வார்ப்பு  இணையத்திலும்  ஒளிபரப்பானது]


முறிய‌டிக்க‌ப்ப‌டாத‌ முடிச்சுக்க‌ள்

அலைகடல் நடுவே
அநாதரவாய் விடப்பட்ட
அகதிகளைப்போல என்
இதயவறைக்குள்
நீயில்லாத உன் நினைவுகள்...

தேயிலை செடிந‌டுவே
தேகமுறிஞ்சும் அட்டைகளாய் நம்
கடந்தகால கல்வெட்டுக்கள்
நிம்மதி சுவாசம் தர மறுக்கிறது...

பாவம் செய்தவன் மட்டும்
தண்டனை பெறுவதில்லை
அகதிமுகாமும் என்
காதலும் சொல்லுகிறது...

மனசாட்சி
உறுத்தல்க‌ள் ம‌னித‌த்துள்
ம‌ர‌ணித்துவிட்ட‌தோ
ச‌க்தியில்லாத‌ ச‌ட்டங்க‌ளால் என‌க்குள்
ச‌ந்தேக‌க்கோடுக‌ள் நீயெனை
தூக்கியெறிந்த‌ பிற‌கு...

நில‌வு வான‌ம் தாண்டிய‌
முன்னேற்ற‌ங்க‌ள் இவ்வுல‌கில்
காத‌லும் தொழிலாள‌ர் பிர‌ச்ச‌னையும் ம‌ட்டும்
கால‌த்தால் அழியாத‌ காவிய‌ங்க‌ள்...

கானல் நீரில்
முக்குளிக்க‌ச்சென்ற‌ காதலால் என்
க‌விதைக‌ளில் ஆழ‌மான‌ இட‌முன‌க்கு...


புது வருடம் பிறக்குது


வசந்தம் எங்கள் வழிகளில் நின்று
சுகந்த கீதம் பாடுது
கசந்த வாழ்வின் கறைகள் போக்க‌
கசக்கியின்பம் ஊற்றுது...


காலைவானம் பாலைப்போல‌
தூயவிடியல் தருகுது
நாளை எங்கள் சோலைப்பூக்கள்
தாம்பூலந் தருவதாய்ச் சொல்லுது...


கத்தியேந்தி வந்த நெஞ்சங்கள்
கைகள் கோர்க்கத்துடிக்குது
புத்திபுகட்டிய பத்திய வாழ்வு
புதிய பாதை திறக்குது...


தேசம் எங்கள் தேசமென்று
பாசப்பறவைகள் பறக்குது
தோஷமென்று சொல்லி விரட்டிய‌
வேஷம் கலைந்து ஓடுது...


புத்தம்புதிய கீதம்பாடி புதுவருடம் பிறக்குது
நித்தமெங்கள் இதயம்மகிழ புத்தாண்டு மலருது
தத்தம் செய்து அன்பைநாளும் வளர்த்திடுவோம்
சுத்தமான உலகமொன்றை இந்நாளில் இயற்றிடுவோம்...

நிஜங்களைத்தொலைக்கும் நிஜங்கள்...





 அலுவலகத்துக்கு போகும் அவசரத்தில் தனது ஈரத்தலையை பின்னலிட்டுக்கொண்டிருந்த அனிதாவிடம், 'ஏய் அனி இன்னக்கி நீ ரொம்ப அழகா இருக்க ஏதாவது ஸ்பெஷலா...'என்றாள் நண்பி ர‌ம்யா. "எனக்கென்னடி ஸ்பெஷல் அந்த வயசெல்லாம் தாண்டி வந்திட்டன் இனிமேல்தான் ஸ்பெஷல் வரப்போகுதா...என சலித்துக்கொண்ட அனிதாவின் மனதை ரம்யாவினால் புரிந்துகொள்ளமுடிந்தது.

'ஏய் நம்ம ரெண்டு பேருக்குமே ஒரே வயசு, என்னவோ நீமட்டும் கிழவியாகிட்டத போல பேசுற....ரொம்ப பீல்() பண்ணாத உனக்கென்று ஒருத்தன் பிறக்காமலா போயிருப்பான் கொஞ்சம் பொறுமையா இருடி...என்றவளிடம், சரி போதும் போதும் எனக்கு நேரமாகுது...நான் போயிட்டு வாரன் என்று கிளம்பியவளின் வேதனை ரம்யாவின் ஊமைக்காயத்தையும் வலிக்கச்செய்தது.

அனிதாவும் ரம்யாவும் தமது தொழில் நிமித்தம் தங்கியிருக்கும் விடுதியில் அறிமுகமானவர்கள். ரம்யா அனிதாவின் சுக துக்கங்களில் பங்கெடுத்துக்கொள்வாள். சாதாரணதரக் குடும்பத்தில் பிறந்த அனிதா பெற்றாருக்கு இளையவளாய் பிறந்தவள். உயர்தரம் முடித்த கையோடு தலைநகரில் ஒரு தொழில் கிடைக்கவும் வந்து இணைந்துகொண்டாள்.குடும்பத்தில் அநேகமாக மூத்த பிள்ளைக்குத்தான் பொறுப்புக்கள் அதிகம். ஆனால் இவள் அப்படியல்ல, குடும்ப பாரத்தையும் தாண்டி தனது மூத்த சகோதரியின் பாரத்தையும் சுமக்கின்றாள்.இல்லத்தரசியான தாயார் சாதாரண குமாஸ்தாவாக பணிபுரியும் தந்தை, பாடசாலைக்கு செல்லும் தம்பி தங்கை, திருமணம் முடித்த கையோடு பிறந்த வீட்டுக்கு வந்திட்ட அக்கா என்ற உறுப்பினர்களை கொண்ட குடும்பம். கடந்த ஐந்து வருடங்களுக்கு முதல் அனிதாவின் அக்கா சுகுணா, தான் காதலித்தவனை பிடிவாதமாக மணம் முடித்தாள்.தன்னால் முடிந்தளவு செலவு செய்து மூத்த மகளின் திருமணத்தை குடும்ப கெளரவத்துக்கு பங்கம் ஏற்படாதவாறு நடத்திமுடித்தார் அனிதாவின் அப்பா.

சீரோடு புகுந்தவீட்டுக்குள் போன சுகுணா, தான் காதலித்தவனோடு சந்தோஷமாகவே குடும்பம் நடத்தினாள்.ஆனால் சுகுணாவின் கணவனோ குடும்ப பொறுப்புக்கள் இல்லாத ஊதாரியாக இருந்தான்.ஏனோதானோவென்று தொழிலுக்கு செல்வான் சிலநேரங்களில் நண்பர்களோடு இணைந்து ஊர்சுற்றுவதற்கும் கிளம்பிவிடுவான்.பெற்றோரின் உழைப்பில் சுகம் கண்டவனுக்கு இப்போது குடும்பம் என்று ஆனவுடன் அவனால் சமாளிக்க முடியாமல் பலப்பல பிரச்சனைகள் நாளும் வெடித்தது.சில நாட்களில் தனது அலட்சியத்தினால் தொழிலையும் இழந்து போனான்.

மாமா மாமியாரின் தொந்தரவும் நாளும் குடித்துவிட்டு சண்டையிடும் கணவனோடு குழந்தையை வைத்துக்கொண்டு அங்கலாய்க்கும் சுகுணா பிரச்சனைகளிலிருந்து விடுபட தாய் வீட்டுக்குள் அடைக்கலமானாள்.

வந்தவர்களை போவென சொல்லத்தெரியாத வீட்டார் பலமுறை சமரசம் பேசிப்பார்த்தார்கள் பலனில்லை. ஊரெல்லாம் வட்டிக்கு கடன் வாங்கி மனைவியின் நகைகளை அடகுவைத்து வாழும் கணவனோடு எந்த பெண்தான் சந்தோஷமாக வாழ்ந்துவிடுவாள்? சுமையோடு வந்தவள் இங்கே இறக்கிவைத்துவிட்டாள் அதைத்தான் இப்போது அனிதா சுமந்துகொண்டிருக்கிறாள்.அக்காவின் கடன்கள் அவளது மாதச்சம்பளம் விழுங்கிவிடும். சின்னச்சின்ன சந்தோஷங்களையும் அநுபவிக்காது தனது எதிர்காலத்தையும் சிந்திக்காது சிறுகச்சிறுக சேமித்து சீட்டுக்கட்டி பல கடன்களை கட்டி முடித்து நகைகளையும் மீட்டிருந்த்தாலும் அவளது மனமும் உடலும் இயந்திரமாகவே இயங்கிக்கொண்டிருக்கின்றது.

எத்த‌னை வேதனை இருந்தாலும் அதை வெளியே காட்டி கண்ணீர்விட்டு அநுதாபம் தேடமாட்டாள் ஏன் தனது நெருங்கிய நண்பி ரம்யாவிடம் கூட அடிக்கடி வேதனைப்பட்டுக்கொள்ளமாட்டாள்.
சினிமாவிலும் கற்பனையிலும் மாத்திரம் சில பெண்பாத்திரங்கள் இவ்வாறு அமைவதுண்டு ஆனால் நிஜத்தில் நூறுவிகிதம் சாத்தியமில்லை.அனிதா அதில் ஒருத்தி எப்போதும் கலகல‌ப்பாகவே இருப்பாள் அவளின் நிலமையை சிந்தித்துக்கொண்டிருந்த ரம்யாவுக்கு நேரம்போனதே தெரியவில்லை வேகமாக தன்னை தாயார் செய்துகொண்டு அலுவலகத்துக்கு புறப்பட்டாள்.

ஓறரிவுள்ள புழுவுக்கும் கூட போராட்டமிருப்பது இயற்கை ஆறறிவுள்ள மனிதன் போராடுவது ஒன்றும் வியப்பில்லை என்றாலும் சாதாரண பெண்ணான அனிதாவின் போராட்டம் சிறியாதாக தோன்றவில்லை. சுயநலத்துக்காக எத்தனையோ மனித மனங்கள் பெற்றோர்களையே மதிக்காத இந்தக்காலத்தில் தன்னை நினைக்காமல் தன் குடும்பத்தையே சிந்தித்துக்கொண்டிருக்கும்  அவர்களை விசாரித்து தேவைகளை நிறைவேற்றும்  அவளது பொறுப்பை வியக்காமலிருக்க முடியவில்லை. அனிதாவைப்போல வாழ்க்கையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பல பெண்களுக்கு இறைவனே வழி காட்டவேண்டுமென மனம் பிரார்த்தித்துக்கொள்கின்றது.

புன்னகைக்காக விரியும் இதழ்களைத்தாண்டி அவள் இதயத்தில் சில்லிடும்  வேதனையை நினைத்து என் உள்ளம்தான் நிஜமாக அழுதது ஆனாலும் கண்கள் ஈரமாக இருந்தது.


Monday, December 24, 2012


நீ மட்டும்தான் என் வாழ்க்கை!!


நீ மட்டும்தான் 
என் வாழ்க்கை
நமக்கு மட்டுந்தான்
காதல் சொந்தம்
நம் காதலுக்குத்தான்
இந்த உலகம்
நம்மை வாழ்த்தத்தான்
இந்த இயற்கை
நாம் வாழத்தான்
இந்த அற்புதக்காதல்
நம் மூச்சுக்காற்றுத்தான்
இவ்வுலக சுவாசம்
நம் காதலை வெளிப்படுத்தத்தான்
இவ்வண்ண மலர்கள் என்று
நமதானவையாக மட்டும்
பார்த்த‌நம் காதல் கனவுகளை
இரத்தஞ் சொட்டச் சொட்ட‌பிய்த்தெடுத்து
ஒரு கொடூர அரக்கனால்
விளையாடப்படுகின்றது
பார்த்துக்கொண்டிருக்கும் விழிகளுக்குள்
எனதுயிர் பிழியப்பட்டு
ஊற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றது!!

தேடிக்கொண்டே இருக்கின்றது!!




தேடலின் பயணத்தில்
வேகத்தின் பிரயாசங்களில்
வெற்றுப்பிம்பமாய்
விழுந்துதெறிக்கின்றது மனம்...

ஓடியோடி களைத்த கால்கள்
தேடித்தேடி கனத்த இதயங்கள்
இறுதியில் பற்றிக்கொண்டதாய்
எதுவுமே இல்லாமல்...

மலரை நுகரும் வண்டுகளாய்
மாறி மாறி பறந்துதிரிந்தும்
மனதுக்கு இதமாய் எதுவும்
இன்னுமே கிட்டவில்லை...

கோடிக் கோடியாய் 
கொட்டிக்கிடந்தும்
மாடி மாடியாய் 
ஏற்றங்கண்டும் இதுவரை
முழுமையாயதனை அடையவில்லை...

அறிவுக்களஞ்சியங்கள் 
அகிலத்தை ஆண்டாலும்
அகக்கலையகத்தை 
ஆண்டுகொள்ள அவையின்னுமே
கிட்டிச்சேரவில்லை...

நேற்றைய பொழுதுக்காய்
இன்றைய பொழுதுகளை தொலைத்துக்கொண்டிருக்கும்
நாளை பொழுதுகள்
அடைந்துகொள்ள முடியாமல் 
தேடிக்கொண்டே இருக்கின்றது
நிம்மதியெனும் ஜீவ ஊற்றினை... 

(பூங்காவனம் கலை இலக்கிய சஞ்சிகை டிசம்பர் 2012 மாத இதழில்  வெளிவந்தது)


முட்க‌ள் முளைக்குஞ்சாப‌ம்!!

வாழ்க்கை ஒரு நாடக மேடை
வாழ்தல் அதில் வேடக்காட்சி
உறவுகள் இங்கு பாத்திர அமைப்பு
உரிமைகள் எல்லாம் பொய்யின் அமைப்பு...

உன்னகை வெறும் அலங்காரச் சாயந்தான்
எண்ணினால் ஒவ்வொன்றும் பிரம்மையின் வடிவம்தான்
நட்பெல்லாம் வெறும் நேரக்கடத்தல்தான்
உட்பொருள் ஒன்றிலா மாயக்கிடக்கைதான்...

அன்பென்ற பொருளோ அட்டைப்பட புகழ்ச்சிதான்
ஆழமா யூடுருவா ஆயுள்ளில்லா பூச்சிதான்
வம்பென்றே விலகிடும் வலிமையில்லா உறவுதான்
நம்பிநீயும் சென்றிட்டால் வாழ்க்கையுனக்கு வலியேதான்...

பாசமழையில் நனைத்திடும் வார்த்தையெலாம் பொய்மைதான்
வாச‌ம்வீசும் ம‌ல்லைகையாய் ம‌ல‌ரும்நேச‌ம் வெறுமைதான்
தேச‌ச்சுவ‌ரில் ம‌னித‌மெலாம் தோற்றுப்போன‌ காய‌ந்தான்
நேச‌க்கொடிக‌ள் வ‌ள‌ர்த்துவிட்டால் முட்க‌ள் முளைக்குஞ்சாப‌ந்தான்...!!!

Monday, December 10, 2012


"ஒரு சுறங்கை பேரீச்சம் பழங்கள்" சிறுகதை தொகுதியில் என்னை


 பாதித்தவை பற்றிய சிறுகுறிப்பு





 யாத்ரா' கவிதை இதழின் ஆசிரியரும் இலங்கையின் சிறந்த எழுத்தாளரும், அறிவிப்பாளருமான அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களின் மொழி பெயர்ப்பு இலக்கியமான 'ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்' சிறுகதை தொகுதியானது ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட அரபுமொழியில் பிரசவமான மூலக்கதைகளாகும். அதனை  தமிழிலக்கிய உலகுக்கு மொழிபெயர்த்து தந்துள்ளார் நூலாசிரியர்.

நூலின் முன்னுரையை பேராதனை பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் லறீனா  அப்துல் ஹக் அவர்கள் அருமையாக ஆழமாக தந்திருப்பது, வாசலிலேயே வண்ண அலங்காரங்களுடனும் ஆனந்தத்துடனும் கிடைக்கும் வரவேற்புப்போல மிக நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ளது. நூலாசிரியர் பற்றியும் ஏனைய மொழி இலக்கியங்கள் பற்றியும் , இச்சிறுகதை பற்றிய விமர்சனமாகவும் தனது முன்னுரையை விரிவுபடுத்தி அழகுபடுத்தியிருப்பது இந்நூலுக்கு கிடைத்த மகுடமாக காணப்படுகிறதெனலாம். அதேவேளை நேர்த்தியான, தொகுபிற்கு பொருத்தமான அட்டைப்படமும் நூலுக்கு வலுசேர்த்திருக்கின்றது.

ஏனைய மொழி இலக்கியங்களை நாம் தரிசிக்கமுடியாமக்கு பல காரணங்கள் காணப்படுகின்றன. ஆனால் அவ்வாறான இலக்கியங்களை நாம் வாசிக்கும்போது அது எமது இலக்கிய வளர்ச்சிக்கும்  வாசிப்பிற்கும் மிகுந்த உறுதுணையாக காணப்படுவதோடு பல்வேறுவகையான வார்த்தை நுட்பங்களையும் கலையம்சங்களையும் எமக்குள் ஊடறுத்துக்கொள்ள உதவுகின்றது.அப்பேருதவியை தமிழுக்கு தந்த நூலாசிரியரை வாழ்த்துவதோடு நன்றியினையும் கூற கடமைப்பட்டுள்ளோம்.

மொழிபெயர்ப்பு எனும் அம்சமானது மிகப்பெரிய சவாலான விடயமே.'கரணம் தப்பினால் மரணம்' எனும் கூற்றுக்கிண‌ங்க மிகுந்த அவதானத்தோடு மேற்கொள்ளப்படவேண்டியது. இப்பாரிய விடயத்தினை ஆசிரியர் மிகத்திறம்பட ஆற்றியிருக்கின்றார் என்பதனை இந்நூலை வாசிக்கும்போது எம்மால் புரிந்துகொள்ளமுடிகின்றது.

இச்சிறுகதை தொகுதியில் முத்தான பத்து சிறுகதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.'கதையை படித்து முடிந்ததும் கூட அதன் தாக்கத்திலிருந்து யாராலும் உடனடியாக வெளிவர முடியாது' எனும் ஆசிரியரின் முன்குறிப்பு கூற்று மிகச்சரியானதே. ஏனெனில் இந்நூலை வாசித்துமுடித்த எனக்குள்ளும் அந்ததாக்கம் இளையோடியதை எனது அநுபவத்தினூடாக நான் கண்ட உண்மை.அதிலும் குறிப்பாக 'கருப்புப்பூனை' எனும் கதையே என்னை வெகுவாகப்பாதித்தது என்பதனையும் கூறவிரும்புகின்றேன்.

'விசர்நாய்க்கடி'என்ற முதலாவது சிறுகதை ஈராக்கின் அதிபர் சாதாம் ஹூசைன் ஆட்சிக்காலத்தை வெளிப்படுத்துவதாக சொல்லப்படுகின்றது. அதாவது ஓர் அடக்குமுறையுடன் கூடிய தான்தோன்றித்தன ஆட்சிமுறைமையினை மிகத்துல்லியமாக வெளிப்படுத்திநிற்கின்றது.
'புகையிரதம்' என்ற இரண்டாவது கதையும் யுத்தக்கொடூரத்தின் பிரதிபலிப்பை சிறுவர் பாத்திரப்படைப்பினூடாக அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாத்திரமும் நெஞ்சில் நிற்குமளவிற்கு ரசனையோடு ஆக்கப்பட்டிருப்பது எதிர்பார்ப்பினை அதிகரிக்கச்செய்யும் சூட்சுமமாக கையாளப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கேயுரிய விளையாட்டுத்தனங்கள், இயல்புகள் என்பனவும், கதை நகர்ந்துசெல்லும் விதமும் மிக ரசனை. கதையை வாசித்து முடித்ததும் குழந்தைகளை நினைத்து வருந்தாமல் இருக்கவே முடிவதில்லை.

'விற்பனைக்கான அற்புதங்கள்'சிறுகதை நகைச்சுவை ததும்பும் விதத்தில் "ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள்" என்பதனை அருமையாக விளக்கியிருக்கும் இக்கதை மிகுந்த படிப்பினையை சொல்லியிருக்கின்றது. நூலின் பெயர்சொல்லும் 'ஒரு சுறங்கை பேரீச்சம்பழங்கள்' எனும் கதை 'மண் பொன் பெண்' எனும் மூன்று அம்சங்களில்  'பெண்' பற்றியதான மோகத்தின் இழப்பீடு பற்றிய மிக ஆழமான கருவை அற்புதமாக நகர்த்தியிருப்பதும் இக்கதையில் வரும் பாத்திரப்படைப்புக்களும் சுவாரஸ்யத்தை தருகின்றது.

'காஸாவிலிருந்து ஒரு கடிதம்' மனதை உருக்கும் அற்புதமான கதை. சொந்த மண்ணைவிட்டு வெளியேறிய நண்பனுக்கு எழுதப்படும் கடிதமாக இக்கதை செல்கின்றது. யுத்தத்தின் எதிரொலிகளையும் எது நடப்பினும் சொந்தமண்ணை விட்டு வெளியேறத்துணியாத காட்சியமைப்பும் நெஞ்சத்தை நெகிழச்செய்கின்றது.'கருப்புப்பூனை' முற்றிலும் மாறுபட்ட சுவாரஸ்யமான விடய‌த்தினை செதுக்கியிருக்கின்றது. எத்தனையோ ஆவி சம்பந்தமான கதைகளையும் உண்மைச்சம்பவங்களையும் படித்திருப்போம். ஆனால் இது முற்றிலும் வேறுபட்டு நிற்பது இவ்வாறான ஏனைய மொழி இலக்கியங்களின் மீதான ஆர்வத்தினை அதிகரிக்கச்செய்கின்றது என சொல்லலாம்.

இவ்வாறு 'சிவப்புப் புள்ளி' எனும் தலைப்பில் பெண்களின் அடிமைத்த‌னங்கள், திருமணம் என்ற பெயரில் இழைக்கப்படும் கொடுமைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. இறுதியாக 'நெடுநாள்வாசி' என்ற தலைப்பில் சிறைவாசம் அநுபவிக்கும் ஓர் இராணுவ வீரனது கதையாகும். அவன் சிறை செல்லும் விதமும் சிறைக்குள் நடக்கும் சமபவங்களுமாக தொடர்கின்றது. இறுதி முடிவு நல்ல சுவாரஸ்யத்தோடு முடிவடைகின்றது. பார்க்கப்போனால், நாட்டிலுள்ள கல்விமான்கள், அரசியலுடன் சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள் என்று பலதரப்பட்ட ஆளுமை மிக்கவர்கள் இச்சிறையில் இருப்பது ஆச்சரியமாயும் வேதனையான விடயமாகவும் கணப்படுகின்றது. அதேவேளை இக்கதையில் அதிகமான பாத்திரப்படைப்புக்கள் காணப்படுவது  'சிறுகதை' என்ற தரத்தை மீறிவிட்டதோ என எண்ணத்தோன்றிற்று.ஆனால் சுவாரஸ்யம் குன்றாமல் வாசகரை சலிப்படையச்செய்யாமல் நகர்ந்தவிதம் பாராட்டச்செய்தது.

"ஒரு சுரங்கை பேரீச்சம்ப‌ழங்கள்" மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு நூலாகும். வேற்றுமொழி இலக்கியங்கள் மீதான ஈர்ப்பினை அதிகரிக்கச்செய்ய்யும் ஒவ்வோர் சிறுகதையும் தனித்தனிச்சிறப்புடன் காணப்படுவதோடு ஒவ்வொரு கதையின் எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புக்களை தந்திருப்பது பொருத்தமானதாகவும் மிகப்பிரயோசனமானதாகவும் காணப்படுகின்றது. அரபுதேசத்து மக்களையும் அவர்களின் கலாச்சாரம், பண்புகள், குணாதிசயங்கள், உணவுவகைகள்,ஆளுமைகள், என ஓர் நீளமான அநுபவத்தினை இந்நூலினூடாக பெற்றுக்கொள்ளமுடிந்தது தமிழ்மொழி வாசகர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். எனவே மொழிபெயர்ப்பின் மூலம் ஓர் புதிய இலக்கியவீச்சுடன் தமிழிலக்கிய வரலாற்றில் தடம்பதித்திருக்கும் 'ஒரு சுரங்கை பேரீச்சம்பழங்கள்' நூலாசிரியர் அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களுக்கு வாசகர்கள் சார்பில் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இன்னும் இதுபோன்ற பலமொழிசார் நூல்களை தமிழுலகிற்கு தரவேண்டுமென்று வாஞ்சிக்கின்றேன்.