Saturday, July 23, 2016

30.10.2015 12வது படைப்பாளி மலேசிய எழுத்தாளரும், தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சில் சிறப்பதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் கே.எஸ்.செண்பக வள்ளி

http://kalkudahnation.com/26657






பிரதி வெள்ளி தோறும் கல்குடா நேசன் இணையதளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக சர்வதேச இரீதியாகவுள்ள எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது. வெற்றிகரமாக பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இந்நிகழ்ச்சியூடாக நாம் சந்திக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக எமது வாசகர்களுடன் பகிர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கின்றது. இதன் தொடரின் இன்று 30.10.2015 திகதி வெள்ளிக்கிழமை எமது “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணலில்” பன்னீராவது வார கலைஞராக இணைந்து கொள்கிறார் மலேசிய எழுத்தாளரும், தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சில் சிறப்பதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் கே.எஸ்.செண்பக வள்ளி அவர்கள்.

 கேள்வி: மலேசியாவில் வசித்து வரும் நீங்கள், உங்களைப் பற்றிய அறிமுகத்தை உலக தமிழர்களுக்காகவும் சர்வதேசமெங்கும் பரந்து வாழும் கல்குடா நேசன் வாசகர்களுக்காகவும் பகிர்ந்து கொள்ள முடியுமா?


பதில்: நான் மலேசியாவில் ‘சுங்கை சிப்புட்’ என்னும் இடத்தில் பிறந்து வளர்ந்தேன். என்னுடன் பிறந்தவர் எண்மர். தந்தை மறைந்து விட்டார். தாயார் என்னோடு வசிக்கின்றார். உடன் பிறந்த அனைவரும் நல்ல துறைகளில் பணியாற்றி வருகின்றோம். தற்சமயம் பணி நிமித்தமாக மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் வசித்து வருகிறேன்.


 கேள்வி: இலக்கியத்துறையில் உங்களுக்கான ஈடுபாடு எவ்வாறு ஏற்பட்டது? அதன் பிரவேசம் பற்றியும் இதுவரை நீங்கள் படைத்த எழுத்தாக்கங்கள் பற்றியும் கூறுங்களேன்?


பதில்: கடந்த 25 வருடங்களாக எழுத்துத்துறையில் ஈடுபட்டு வருகிறேன். சிறிய வயதாக இருக்கும் போதே இலக்கிய ஆர்வம் என்னுள் வேரூன்றியது. காரணம் என் குடும்பத்தில் நிலவிய தமிழ்ச்சூழல். என் தந்தை தான் எனது ஆசான். பள்ளியில் தடம் பதிக்கும் முன்னே திருக்குறள், ஆத்திச்சூடிச் சொல்லித்தந்தவர். என்னுள் தமிழ்த் தாகத்தை ஏற்படுத்தியவர். அதன் வெளிப்பாடு தான் இன்று உங்கள் முன்னிலையில் நான் அறிமுகப்படுத்திக்கொள்ள பாலமாக அமைந்தது. எழுத்துத்துறைப் பிரவேசத்திற்குக் காரணம் என் தமக்கை. நான் சிறிய வயதாக இருக்கும் போது, மாணவர்களுக்காக சிறுவர் கதை, மர்மக்கதை எழுதி வந்தார். அதைப் படிக்கும் போது ஏற்பட்ட ஆர்வம் என்னையும் எழுதத் தூண்டியது. எனது 13ஆவது வயதில் ‘மரம்’ என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதினேன். எங்கள் நாட்டில் வெளியாகிக் கொண்டிருக்கும் மூத்தப் பத்திரிகையான தமிழ்நேசன் நாளிதழில் அது வெளியானது. எனது முதலாவது சிறுகதை 17ஆவது வயதில் “கல்வியின் நிறம் என்ன?” என்ற தலைப்பில் அதே தமிழ்நேசன் நாளிதழின் 70ஆம் ஆண்டு மலரில் வெளியானது. எனது முதலாவது ஆய்வுக்கட்டுரை 2004ஆம் ஆண்டு ‘அரசியல் பயணத்தில் டத்தோஸ்ரீ சாமிவேலு’ என்ற தலைப்பில் எழுதி பரிசும் பெற்றேன். இம்மூன்று முதல் பதிவுகளும் எனது முத்திரைப் பதிவுகளாகும். நாட்டின் தேசத்தலைவர்கள், முக்கியமான நாட்களைக் குறித்து இதுவரை 60 ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். தேசிய நில, நிதிக்கூட்டுறவுச் சங்கம், கிள்ளான் வாசகர் இலக்கியச்சோலை, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழ்நேசன், மன்னன் மாத இதழ், சூரியன் மாத இதழ், மலேசியத் தேசியப் பழஞ்சுவடிக்காப்பகம், பொது இயக்கங்கள் போன்ற அமைப்புகள் வாயிலாக நடத்திய இலக்கியப் போட்டிகளில் பங்கு கொண்டு சிறுகதை, கவிதை, கட்டுரை என அனைத்திலும் பல பரிசுகள் பெற்றுள்ளேன். தற்சமயம் நம்நாடு, தினக்குரல், மக்கள் ஓசை, தமிழ்நேசன், மலேசிய நண்பன், அன்பு இதயம், தமிழ் ஓவியம் போன்ற நாளிதழ் மற்றும் வார மாத இதழ்களில் சிறுகதை, கவிதை, கட்டுரைகளைப் எழுதி வருகிறேன். மலேசியத் தமிழ் எழுத்துலகம், தங்கமீன், திண்ணை ஆகிய இணையத்தளங்களிலும் படைப்புகளை எழுதியுள்ளேன். இதில் ‘அன்பு இதயம்’ என்னும் மாத இதழில் இரு ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வருகின்றேன். என் பதிவுகளுக்கு நல்ல தளம் அமைத்து பேராதரவு வழங்கி வருகின்றனர். எழுத்துறை வாயிலாக உலக ரீதியில் எனது படைப்புகள் கவனிக்கப்படுகின்றன. 2012ஆம் ஆண்டு மலேசியத் தொலைக்காட்சியில் “வசந்தம்” என்னும் நிகழ்ச்சியில் எனது பணி தொடர்பான ஒரு மணி நேர நேர்க்காணல், மலேசிய வானொலியான மின்னல் பண்பலையில் ஒரு மணி நேர நேர்க்காணல், மீண்டும் இவ்வருடம் உலக மகளிர் தினத்தையொட்டி “வசந்தம்” நிகழ்ச்சியில் ஒரு மணி நேர நேர்காணல், கடந்த 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலண்டன் தமிழ் வானொலியில் ஒரு மணி நேர நேர்க்காணல், கடந்த பெப்ரவரி 14-15ஆம் திகதிகளில் சென்னையில் நடைபெற்ற உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் தேசியக் கருத்தரங்கில் “அயல் நாட்டு தமிழ் இலக்கியங்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற அமர்வில் முனைவர் பா.த கிங்ஸ்டன் எனது கவிதைகளை ஆய்வுச் செய்து “புலம்பெயர் இலக்கியங்கள் பார்வையில் மலேசியக்கவிஞர் கே.எஸ்.செண்பகவள்ளி” என்ற தலைப்பினில் கட்டுரை சமர்ப்பித்துள்ளார். இவையனைத்தும் எனக்குக் கிடைத்த சமூக அங்கீகாரமாகவே கருதுகிறேன்.


கேள்வி: நீங்கள் கலந்து சிறப்பித்த இலக்கிய மாநாடுகள் தொடர்பாகவும் வெளிநாட்டு அனுபவங்களையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்?



பதில்: மலேசியாவில் பல இலக்கிய மாநாடுகளில் கலந்துள்ளேன். நான் கலந்து கொண்ட முதல் வெளிநாட்டு மாநாடு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்துடன் 2010ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. என் வாழ்க்கையில் மறக்க முடியாத மாநாடு. காரணம் அம்மாநாட்டின் போது, உலகளாவிய நிலையில் அறிஞர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் எனப்பலரை நேரடியாகச் சந்திக்க முடிந்தது. அடுத்து மலேசியாவில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு. இங்கும் பல நட்புள்ளங்களைச் சந்திக்க முடிந்தது. குறிப்பாக, கவிக்கோ அப்துல் ரஹ்மான், ஐயா சாகுல் அமீது, கவிஞர் நஜ்முல், கவிஞர் அஸ்மின், சிங்கப்பூர் அறிஞர் ஹிமானா சயிட் இவ்வாறாகப் பலரை நேரில் கண்டேன். தொடர்ந்து மாநாடு என்றில்லாமல் கருத்தரங்கில் பங்குக் கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம். அவ்வகையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதன் முதலாக கொல்கத்தா தமிழ் மன்றத்தில் “மலேசியத் தேசியப் பழஞ்சுவடிக் காப்பகம் ஒரு வரலாற்றுக் களஞ்சியம்” என்ற தலைப்பில் என் முதல் கட்டுரைப் படைத்தேன். அதனையடுத்து, கடந்த நவம்பர் மாதம் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் “மலேசியப் பெண் படைப்பாளர்களின் வளர்ச்சி ஒரு பார்வை” என்ற தலைப்பிலும் கட்டுரைப் படைத்துள்ளேன். இதைத் தவிர பல இலக்கிய கருத்தரங்குகளிலும் பங்குப் பெற்றுள்ளேன். இந்தியாவின் பல முக்கிய இடங்களுக்கு 2004ஆம் ஆண்டு தொடங்கி 2012ஆம் ஆண்டு வரை பயணம் மேற்கொண்டு வருகிறேன். நான் சென்ற ஒவ்வொரு இடமும் எனக்கு புதிய அனுபவமும், செய்திகளும், பாடங்களும் கிடைத்துள்ளன.


 கேள்வி: மலேசியாவில் இலக்கியத்துறையில் பெண்களின் பங்களிப்பும், ஆர்வமும் எவ்வாறு காணப்படுகின்றது? அவர்களை ஊக்கப்படுத்தும் களமாக விளங்கிக்கொண்டிருப்பது?


பதில்: இக்காலக்கட்டத்தில் மலேசியப் பெண் படைப்பாளர்கள் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகின்றனர். காரணம் இன்று பெண்களுக்கு உயர் கல்வி பெறும் வாய்ப்பும் வளமும் பெருமளவில் வழங்கப்பட்டு வருகின்றன. ஆய்வுகளுக்காக எழுதத் தொடங்கியவர்கள், அத்துடன் நிறுத்தாமல் தொடர்ந்து பல படைப்புகளைப் படைப்பதில் முனைந்து ஆர்வங்காட்டி வருகின்றனர். ‘இலக்கியம்’ என்பது தனி மனித அகவெழுச்சியாகும். அவ்வகையில், பெண் படைப்பாளர்கள் பெரும்பாலும் தங்கள் அனுபவங்களைத்தானே கற்பனையுடன் கலந்து கலை நயத்துடன் வெளிப்படுத்துகின்றனர். தங்களின் அனுபவங்களை எழுத்துக்களின் வழி படைப்புகளாகக் கொண்டு வருகின்றனர். பெண்களின் புனைவுகளில் யதார்த்தமும், நேர்மையும் பண்பாட்டுக் கூறுகளும் மொழித் தூய்மையும் சிறப்பாகவே வெளிப்படுகின்றன. தங்களின் மனவுணர்வுகளை எழுத்தில் வடிக்கின்றனர். மலேசியப் பெண் படைப்பாளர்கள் சிறந்த முறையில் இலக்கியத்துறைக்கு வித்தாக அமைந்து வருகின்றனர் என்பதற்கு ஆதாரமாக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், தேசிய நில நிதிக்கூட்டுறவுச்சங்கம், இன்னும் பிற சமூக அமைப்புக்களும், மன்றங்களும் பெண் படைப்பாளர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுத்து, பொற்பதக்கம், கேடயம் ஆகியவைகளை வழங்கி சிறப்பித்து வருகின்றன.



 கேள்வி: உங்களுடைய குடும்பமும் கலைத்துறை சார்ந்ததாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். அது பற்றிக் கூற முடியுமா?


பதில்: நான் சிறிய வயதிலிருந்தே என் தந்தையின் கப்பீரமான குரல், தோற்றங்கண்டு பிரமித்து வளர்ந்தேன். அவர் முத்தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கியவர். நாடகத்துறையின் வாயிலாக கலைத்துறை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர். “முத்துக்குமரன் நாடகம் மன்றம்” அமைத்து சரித்திரம், இலக்கியம், சமூக நாடகங்களைப் பல மேடைகளில் அரங்கேற்றியவர் அவர். உடன் பிறந்த நாங்கள் எண்மரும் நாடகத்துறையில் பணியாற்றியுள்ளோம். நான் எனது 12ஆவது வயதில் பெருந்தலைச் சாத்தனாராக நடித்தேன். பிறகு செண்பகப் பாண்டியனாகவும் நடித்துள்ளேன். எனது சகோதர்களும் பல மேடை நாடகங்களில் நடித்துள்ளனர். அனைவருமே தமிழ் ஆர்வலர்கள். தந்தை மறைந்த காலத்தின் சுழற்சியின் காரணமாகவும், பணி நிமித்தமாகவும் எல்லோரும் ஒவ்வொரு திசையில் இருக்கிறோம். தந்தை வழி இலக்கியப் பணியை நான் மட்டும் தான் தொடர்ந்து வருகிறேன்.


கேள்வி: இலங்கையுடன் மலேசிய தமிழ்ச்சங்கம் தொடர்பினைக் கொண்டுள்ளதா?


இங்கு நடைபெறும் மாநாடுகள், கருத்தரங்குகள் போன்வற்றில் அதன் பங்கிருக்கின்றதா? பதில்: மலேசியத் தமிழ்ச்சங்கங்கள், அரச சார்பற்ற பொது இயக்கங்கள் தனிப்பட்ட முறையில் இலங்கை தமிழ் அமைப்புடன் தொடர்பு கொண்டிருக்கின்றார்கள். ஆனால், அங்கு நடைபெறும் மாநாடுகளிலோ, கருத்தரங்குகளிலோ கலந்து கொள்வதில் விருப்பம் காட்டுவதில்லை. காரணம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகள். இதனால், இலங்கையுடனான தொடர்பினை தள்ளியே நிற்கின்றோம்.


 கேள்வி: உங்களது செயற்பாடுகளுக்குக் கிடைத்த விருதுகள் மற்றும் பட்டங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?


பதில்: இலக்கியப் படைப்புகள் வாயிலாக பல பரிசுகள் பெற்றுள்ளேன். அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க விருதுகளாக 2005ஆம் ஆண்டு பெற்ற வாசகர் நற்பணி விருது, 2007ஆம் ஆண்டு பெற்ற சிறந்த சேவையாளர் விருது, 2012ஆம் ஆண்டின் இளைய தலைமுறை சிறந்த கட்டுரையாளருக்கான ‘டான்ஸ்ரீ ஆதி நாகப்பன் விருது’ என்பவற்றைக் குறிப்பிடலாம்.



கேள்வி: சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் உங்களது செயற்பாடுகளின் இரகசியம் என்ன? இப்பெண்களுக்கு நீங்கள் வழங்கும் ஆலோசனைகள் என்ன?


பதில்: எனது வெற்றியின் இரகசியம் எனது தன்னம்பிக்கை தான். என் மனதுக்கு சரி என்று பட்டதைச் செய்வேன். சொல்வேன். என் குடும்பம், நெருங்கிய நண்பர்கள் ஆதரவு தவிர்த்து நான் நம்புவது என் தன்னம்பிக்கையை தான். உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும் ஓது பற்பல நூல்வகை கற்கவும் இலகு சீருடை நாற்றிசை நாடுகள் யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே..! என பாரதி கண்ட புதுமைப்பெண்களாய் என்றும் தன்னம்பிக்கையோடு செயற்பட்டால் பெண்கள் தங்களுக்கான ஓர் அடையாளத்தை வளர்த்துக் கொள்ளலாம். இவ்வேளையில், கல்குடா நேசன் இணையத்தில் இந்த வாய்ப்பை வழங்கிய ஆசிரியருக்கும் கல்குடா நேசன் குடும்பத்தினருக்கும் சகோதரி ராஜ் சுகாவுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்களையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments: