Saturday, July 23, 2016

17.01.2017 23வது படைப்பாளி வைத்தியரும் எழுத்தாளருமான திரு. ஆரிஃப் அவர்கள்




http://kalkudahnation.com/31137#!/tcmbck




பிரதி வெள்ளி தோறும் கல்குடா நேசன் இணைய தளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது. வெற்றிகரமாக பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இந்நிகழ்ச்சியூடாக நாம் சந்திக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக எமது வாசகர்களுடன் பகிர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கின்றது. இதன் தொடரில் இன்று 15.01. 2016ம் திகதி வெள்ளிக்கிழமை எமது “கல்குடா நேசனின் 23வது இலக்கிய நேர்காணலில்” இணைந்து கொள்கிறார் இலங்கை சாய்ந்தமருதைச்சேர்ந்த வைத்தியரும் எழுத்தாளருமான திரு. ஆரிஃப் அவர்கள். சிறந்த மருத்துவராக தன்னை தொழிலுடன் மட்டும் மட்டுப்படுத்திக்கொள்ளாமல், சமூகத்தின்பால் இருக்கின்ற அக்கறை, தேடல், சேவை மனப்பான்மை காரணமாக எழுத்துத்துறையிலும் தன்னை ஆழமாக ஈடுபடுத்தி வருகின்றார் இந்த வைத்தியக்கவிஞரான ஆரிப் அவர்கள். “எனக்கு பிழை என்று படுகின்ற விடயங்களை அது எந்த விடயமாக இருப்பினும் எழுத்துருவில் சுட்டிக்காட்டி விட வேண்டுமென்று துடித்து விடுவேன்” என தனது எழுத்தின் மீதான ஆர்வத்தினை மிக உற்சாகத்துடனும் இந்த நேர்காணலில் பல சுவாரஸ்யமான அநுபவங்களோடும் அவர் நம்மோடு இணைந்து கொள்கின்றார். வாருங்கள் அவருடன் நாமும் இணைந்து கொள்வோம். 





01. தங்களைப் பற்றிய அறிமுகம்?


    நான் இலங்கைத் தீவின் கிழக்கு மாகாணத்திலே அம்பாறை மாவட்டத்தின் எழில் கொஞ்சும் கரையோரப் பிரதேசங்களில் ஒன்றான சாய்ந்தமருதுவைப் பிறப்பிடமாகக் கொண்டவன். நாகூர் மேனேஜர் என்றழைக்கப்படும் காலஞ்சென்ற ஆ. நாகூர் மற்றும் அ. லெ. கதீஜா பீவி என்பவருக்கும் கிடைக்கப்பெற்ற அரை டசின் செல்வங்களில் நான் நான்காமவன். சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த எங்களின் குடும்பத்தில் அல்லாஹ்வின் உதவியால் ஆரம்பம் தொட்டே கல்வியின் பால் ஒரு ஊக்குவிப்பு இருந்ததன் காரணமாக என்னாலும் ஒரு நல்ல நிலையை அடைய முடிந்தது.
    சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் எனது ஆரம்பக் கல்வியை வித்திட்டு, இரண்டாம் னியாளிக் கல்வியை கல்முனை சாஹிராக் கல்லூரியில் தொடர்ந்து, அங்கிருந்து பல்கலைக் கழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு, காலி கராப்பிட்டியவில் அமைந்துள்ள ருகுணு பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்தில் மருத்துவத் துறைக்கான கற்கை நெறியைத் தொடர்ந்தேன். எதிர்காலத்தில் ஒரு வைத்தியராக வரவேண்டுமென்று ஆசைப்பட்ட என் கனவு 1997 ஆம் ஆண்டு நிறைவேறியது.தோற்றத்தில் சிறிது கடுப்பான முகபாவம் இருந்தாலும், மென்மையான இதயம் கொண்டவன் என்பதை என்னோடு பழகியவர்கள் தெரிந்திருப்பார்கள்.


02. உங்கள் தொழிற்துறை பற்றி?


    அதன் ஆரம்பம் அவ்வளவு எளிதானதாகவோ, இனிமையானதாகவோ இருக்கவில்லை. கடினமானதாக இருந்தாலும் நான் சோர்ந்து விடவில்லை.
மருத்துவப் படிப்பை முடித்துக் கொண்ட நான், எனது முதல் நியமனத்தை அன்றைய மூதூர் மாவட்ட வைத்தியசாலையில் ( தற்போது தள வைத்தியசாலை ) வைத்திய அதிகாரியாக கடமை ஏற்ற  காலப்பகுதி மிகவும் சுமையான சுகமானது.மூன்று தசாப்தங்களாக எமது நாட்டை உலுக்கிக் கொண்டிருந்த பயங்கரவாதத்தின் உக்கிர செயற்பாடுகள் இடம்பெற்ற காலப்பகுதி அது. சாய்ந்தமருதில் இருந்து மூதூருக்கு தற்பொழுது மூன்று மணித்தியாலங்களில் பயணித்து இன்புறும் நாங்கள் அன்று இரண்டு நாட்கள் பயணித்தோம். மூதூர் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலும், அதன் எல்லைக் கிராமமான சம்பூர் எல். ரீ. ரீ. ஈ. இனரின் கட்டுப்பாட்டிலும் இருந்தது. நாங்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து சுமார் ஒரு மைல் தான் சம்பூர். இனி என்ன, கேட்கவும் வேண்டுமா? இரவானால் செல் முழக்கங்களும், பூட்ஸ் காலடிச் சத்தமும் எங்களுக்குப் பழகிப் போயிருந்தது.இத்தனை பயங்கரமான சூழ்நிலையில், பிறந்து ஆறு மாதங்கள் மட்டுமே கடந்து, தவழும் பருவத்தில் எனது மூத்த மகனாருடன் என் மனைவி என்னோடிருந்ததனால் தான் அக்காலப் பகுதியை சுமையான சுகம் என்று ஆரம்பத்தில் சொல்லியிருந்தேன்.
பிறகு அங்கிருந்து கேகாலை மாவட்டத்தில் பெலிகல வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியாக இடமாற்றம் பெற்று கடமையாற்றிய அந்த மூன்று வருடங்களும் என் வாழ்வில் மறக்க முடியாத காலம். பெரும்பான்மையான பெரும்பான்மைச் சமூகத்துடன் தோட்டப்புறத் தமிழ்ச் சகோதரர்களும் ஒன்றாக வாழ்ந்த அந்த பிரதேச மக்களும், பௌத்த மதகுருமாரும் எனக்கு சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினார்கள். எந்தவிதமான குறைபாடுகளும் இல்லாமல் சந்தோசமாக இருக்கையில் யார் கண் பட்டதோ தெரியவில்லை. எதிர்பாராத விதமாக இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டில் நிகழ்ந்த வாகன விபத்தினால் தடுமாறிப் போனாலும், நாங்கள் உயிர் தப்பியது அல்லாஹ் எங்களைக் கை விடவில்லை என்பதை உணர்த்தியது.
அதன்பிறகு, கொழும்பு தேசிய வைத்தியசாலை, சவூதி அரேபியாவில் தனியார் வைத்தியசாலை என்று நகர்ந்து, மீண்டும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமை செய்து தற்சமயம் கடந்த மூன்று வருடங்களாக என் தாய் மண்ணில் கடமை கலந்த பொதுப்பணி செய்து கொண்டிருக்கிறேன்.



03. வைத்தியத்துறை தவிர்ந்த உங்களது ஏனைய செயற்பாடுகள்?



தற்பொழுது குறிப்பாக தாய் மண்ணிற்கு வந்ததன் பிற்பாடு, எழுத்துத் துறையிலும், சமூக சேவையிலும் முடிந்தவரையில் என் உத்தியோகபூர்வ கடமைக்கு அப்பாலும் என்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன். அதாவது, மருத்துவத் துறையோடு மட்டும் என்னை மட்டுப்படுத்திக் கொள்ளாமல் என் பார்வையை சிறிது பரவலாக்கியிருக்கின்றேன். தொழில் சார்ந்தவர்களில் அநேகமானவர்கள் தங்களைத் தொழிலோடு மட்டுப்படுத்திக்கொண்ட கலாச்சாரம் மேலோங்கியிருப்பதன் காரணமாக சிலவேளைகளில் சில விமர்சனங்களுக்கு ஆளாக வேண்டியிருந்தாலும் நான் சளைத்து விடவில்லை.


04. எப்படி உங்களுக்கு எழுத்திலும் ஆர்வம் ஏற்பட்டது?


    சிறுவயது முதல் இலக்கியத்துறையிலும், செய்தி வாசிப்பதிலும் ஆர்வம் இருந்தாலும், அன்றைய காலப்பகுதி அதற்கு சாதகமாக அமையவில்லை. கடந்த மூன்று வருடங்களாக எழுத்துத் துறையில் என்னை ஈடுபடுத்தி வருகின்றேன். கவிதை, தொழில்சார் கட்டுரைகள், சமூகக் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள் மற்றும் செய்திகளையும் அவ்வப்போது எழுதி வருகின்றேன். அவைகள் பத்திரிகைகளிலும், இலத்திரனியல் ஊடகங்களிலும் வெளிவருகின்றன. ஊடகத்துறையில் எனக்குள் இருக்கும் ஆர்வத்தின் காரணமாக அதனை முறையாக பயின்று வருகின்றேன்.



05. உங்கள் எழுத்துக்களில் எந்தெந்த விடயங்களுக்கு முன்னுரிமை வழங்குகின்றீர்கள்?


    தொழில்சார் விடயங்கள், சமூகம் சார்ந்த விடயங்கள், பொதுவான் பிரச்சினைகள், சுருக்கமாக சொல்வதாயின் எனக்கு பிழை என்று படுகின்ற விடயங்களை அது எந்த விடயமாக இருப்பினும் எழுத்துருவில் சுட்டிக்காட்டி விடவேண்டும் என்று துடித்து விடுவேன்.



06. உங்களது எண்ணங்களை இலகுவாக வெளிப்படுத்த எந்த எழுத்து வடிவத்தை தெரிந்தெடுத்துள்ளீர்கள்?


    எண்ணங்களை எந்த எழுத்து வடிவத்திலும் வெளிப்படுத்தலாம். எந்த வடிவத்தில் வெளிப்படுத்தினாலும் அது சேர வேண்டியவர்களை சேருவதைப் பொறுத்துத் தான் எமது செயற்பாட்டின் வெற்றி தங்கியுள்ளது. அந்த வகையில் நான் எனது எண்ணங்களை கட்டுரை வடிவில் அதிகமாகவும், கவிதை வடிவில் சில நேரங்களிலும் வெளிப்படுத்துகிறேன். எண்ணம் எவ்வகையானது என்பதைப் பொறுத்தே  அதை கட்டுரை வடிவிலா அல்லது கவிதை வடிவிலா வெளிப்படுத்துவது என்பதைத் தீர்மானிப்பேன். பொதுவான பிரச்சினை எனும் பொது அதிகமாக கட்டுரை வடிவிலேயே என் எண்ணங்களை வெளிப்படுத்துவேன். ஏனெனில், அப்போது தான் அது அதிகமானவர்களை  சென்றடையும்.



07. ஒரு வைத்தியராக வேண்டுமென்ற எண்ணத்திலா படித்தீர்கள்? உங்களது பள்ளிக்கால, இளமைக்கால அநுபவங்களை எங்களோடும் பகிர்ந்துகொள்ள முடியுமா?


    
ஆமாம் நிச்சயமாக.
ஒரு வைத்தியராக வேண்டும் என்பது தான் என் இலட்சியமாக இருந்தது. அதனை மனதில் முன்னிலைப்படுத்திக் கொண்டே கல்வியைத் தொடர்ந்த எனக்கு என் ஆசான்கள் நல்ல வழிகாட்டிகளாக இருந்தார்கள். ஆசான்கள் மத்தியில் நல்ல பெயரோடு கல்வி கற்ற மாணவர்களில் நானும் ஒருவன் என்பதைச் சொல்லிக்கொள்வதில் எனக்குப் பெருமை தான். பள்ளிப்பருவத்தில் பல பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளில் பங்குபற்றியுள்ளேன். பல வகுப்புக்களில் வகுப்புத்தலைவனாகவும், உயர்தர வகுப்பில் மாணவத் தலைவனாகவும்  செயற்பட்டு, அந்நாட்களிலேயே தலைமைத்துவ அனுபவத்தைப் பெற்றுள்ளேன்.
    இளமைக்காலம்....அது மறக்க முடியாத பசுமை நினைவுகள் நிறைந்த காலம். நண்பர்களோடு சேர்ந்து மாலைப் பொழுதுகளைக் கழித்த சுவடுகளை மீட்டிப்பார்க்கும் போதெல்லாம் மனதில் ஒரு பரவசம் இழையோடும். இளமைக்கால விளையாட்டுக்கு நான் மட்டும் விதிவிலக்காகிட முடியுமா என்ன? எனக்கும் வந்தது. ம்ம்...அது தான் காதல். நானும் காதலித்தேன். அவளும் என்னைக் காதலித்திருக்கிறாள். ஆனால் சோகம் என்னவெனில், எங்களுக்கிடையில் பார்வை தவிர்ந்த எந்தவிதமான தொடர்பும் இருக்கவில்லை. ஏழு வருடங்களுக்குப் பிறகு, பல்கலைக்கழகப் படிப்பு முடிந்த கையோடு, அவளைத்தான் கரம் பிடித்தேன் என்பது ஆச்சரியமான உண்மை. அவள் தான் என் மனைவி. எங்களின் திருமணம் காதல் திருமணமா அல்லது பேசி முடிக்கப்பட்ட திருமணமா என்பது பலருக்கு இன்றும் விடை தெரியாத வினா. அண்மைய எனது கவிதை ஒன்றில்..


    நான் அழகில் கம்மி தான் 
இருந்தும் என்னைக் 
கல்லூரி நாட்களிலேயே 
அழகாய்க் காதலித்தவள்
அவள்...

கடிதங்களில்லை
பேச்சுக்களில்லை
தொடர்புகளேயில்லை
ஆனால்...
மனசார நேசித்தாள்
என்னை மட்டும்...

என்று எழுதியிருந்தேன்.    



08. இலங்கையின் மருத்துவத்துறை வளர்ச்சி பற்றி?


    சிறப்பாக இருக்கிறது. வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் நோயெதிர்ப்பு நடவடிக்கை தொட்டு சிகிச்சைக்குரிய எல்லா விடயங்களிலும் நமது நாட்டு மருத்துவத்துறை அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளது என்பது கண்கூடு. அதனை சிசு மரண வீதம், கர்ப்பிணித்தாய்மாரின் மரண வீதம் என்பவற்றில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி சான்றாகும்.



09. ஏனைய வளர்முக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்நாட்டின் வைத்திய வசதிகள் பற்றி?



    ஏனைய வளர்முக நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாடு நிச்சயமாக நல்லதொரு நிலையில் தான் உள்ளது. சொல்லப்போனால் அபிவிருத்தியடைந்த நாடுகளில் உள்ள வசதிகளின் அளவுக்கு இல்லாவிட்டாலும், அதற்கு அண்மித்த அளவுக்கு வசதிகள் இருக்கிறது. எனினும், வளர்முக நாடுகளில் எமது நாடு முன்னணியில் இருக்கிறது.



10. அரசாங்க வைத்தியசாலைகளில் ஒரு சில வைத்திய அதிகாரிகளினால் பொதுமக்கள் அசெளகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றார்களே இது பற்றி?


    இந்த விடயமானது சாதரணமான ஒரு விடயமோ அல்லது ஓரிரு வார்த்தையில் பேசி விடக்கூடிய ஒரு விடயமோ அல்ல. இது பல தரப்பினர் அதாவது வைத்தியர்கள், நோயாளர்கள், ஏனைய சுகாதார சேவை உத்தியோகத்தர்கள், திணைக்களங்கள், அரசு என்று பலர் சம்பந்தப்படுகின்றனர். 
எனினும், ஒரு சில விரல்விட்டு எண்ணக்கூடிய வைத்திய அதிகாரிகளினால் நீங்கள் சொல்கின்ற விடயம் நடக்காமலில்லை. ஆனால், அதற்காக ஒட்டுமொத்த வைத்தியர்களையும் அப்படிச் சொல்ல  முடியாது. அவ்வாறு ஏதாவது நடக்கின்ற போது, அதனை சம்பந்தப்பட்டவரின் பிரச்சினையாகத் தான் பார்க்க வேண்டுமே தவிர அதனை ஒரு பொதுவான பிரச்சினையாகப் பார்க்கக்கூடாது.

11. பாதிக்கப்படும் பொதுமக்களுக்கான தீர்வாக இருக்கும் வழிமுறைகள் பற்றி?


    எந்த விதத்திலும் வைத்தியசாலைகளில் பொது மக்கள் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், வைத்தியசாலைகள் இருப்பது நோயாளிகளான பொது மக்களுக்கு. எந்த நேரத்தில் அவர்கள் வைத்தியசாலைக்குப் போனாலும் அவர்களுக்குரிய சிகிச்சை இடம்பெற வேண்டும். அதேநேரம், வைத்தியசாலைகளின் நடைமுறைகளைப் பற்றியும் பொது மக்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். உதாரணமாக, வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை இடம்பெறாத நேரங்களில் சென்று, வெளி நோயாளர் பிரிவுச் சிகிச்சையை எதிர்பார்ப்பது பிரச்சினைகள் ஏற்படுவதற்கு  வழிகோலுவதாகவே அமையும். ஒரு வைத்தியசாலையில் திருப்தியான சேவை கிடைக்கவில்லை என்றால் அதனை உரிய முறையில்  உரிய இடத்துக்குத் தெரியப்படுத்தி கலந்துரையாட வேண்டும். அதன் மூலமாக சரியான தீர்வு கிடைப்பது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் தவறுகள் நடக்காமலோ அல்லது அதனை விட சிறப்பாக செயற்படுவதற்கோ அது உதவியாக இருக்கும்.


12. தனியார் வைத்தியசாலைகள் மீது மக்கள் அதீத நம்பிக்கை கொண்டுள்ளனரே இதற்கான காரணம்?


    தற்காலத்தில் நோயாளர்கள் தனியார் வைத்தியசாலைகளில் நம்பிக்கை வைத்திருப்பது என்பது உண்மை தான் என்றாலும் அதற்கான காரணம் என்ன என்பது என்னைப் பொறுத்தளவில் காத்திருக்கும் நேரம் தான். அதாவது, அரசாங்க வைத்தியசாலைகளில் வசதிகள் இருந்தாலும், சனத்தொகைக்கேற்ப ஈடுகொடுக்க முடியாத ஒரு நிலை காணப்படுகிறது. அதன் காரணமாக பதிவு செய்து அவசரமாக செய்யப்பட வேண்டியவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் நடைமுறைப்படுத்துகின்ற போது காத்திருக்க வேண்டி வருகிறது. பொதுவாக மக்கள் நோய் ஏற்பட்டவுடன் அதன் தாக்கம், தீவிரம் என்பவற்றை அறியாதவர்களாக உடனடித் தீர்வு வேண்டும் என்று  பயந்தவர்களாக வசதி குறைந்தவர்களாக இருந்தாலும் தனியார் வைத்தியசாலைகளை நாட முற்படுகிறார்கள். 
தனியார் வைத்தியசாலைகள் இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மக்களை முடிந்தவரையில் கவரும் வழிமுறைகளைக் கையாள்கிறார்கள். இதற்கு மற்றுமொரு காரணம், அரச வைத்தியசாலைகளின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப சில வசதிகளை மக்கள் பெற முடியாமை. உதாரணமாக, நினைத்த நேரம் செல்வதற்கும், தங்கியிருப்பதற்கும் உள்ள நடைமுறைகள். 
அதேநேரம், அரச சுகாதார ஊழியர்களுக்கு கிடைக்கின்ற கொடுப்பனவு தனியார் ஊழியர்களுக்கு கிடைப்பதை விடக் கம்மி என்கின்ற விடயமும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயமாகும்.



13. இத்துறையில் காணப்படும் குறைபாடுகளென நீங்கள் காண்பது?


    அரச ஊழியர்களுக்கும் தனியார் ஊழியர்களுக்கும் கிடைக்கின்ற கொடுப்பனவில் உள்ள வேறுபாடு, ஏனைய துறைகளைப் போன்று இங்கேயும் எல்லாப் பிரதேச மக்களுக்கும் சகல வசதிகளையும் வழங்க முடியாத நிலைமை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.


14. வைத்தியத்துறைக்குள் வரும் எம் இளைஞர்களின் விகிதம் எவ்வாறு இருக்கின்றது?


    இப்பொழுதுள்ள பொதுவான அபிப்பிராயம் ஆண்களை விட பெண்களே கூடுதலாக படிப்பில் அக்கறை எடுக்கிறார்கள் என்பதாகும். வெளிவருகின்ற பரீட்சை முடிவுகளும் அவ்வாறுதான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் முன்னரை விட கணிதப்பிரிவில் கல்வி கற்கின்ற வீதம் அதிகரித்து இன்று பெண்களும் அதிகமாக பொறியியல் துறைக்குத் தெரிவு செய்யப்படுகிறார்கள்.
ஏனைய துறைகளிலும் ஆண்களை விட பெண்களின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது என்பதை தரவுகளும் உறுதிப்படுத்துகின்றன.
என் பார்வையில் இதற்கு முக்கியமான காரணமாக, ஆண்கள் இப்பொழுது பல்கலைக் கழகம் சென்று பயின்று தொழிலுக்கு வருவதை விட, தொழில் சார் கல்வியில் அதிகம் நாட்டம் கொண்டு, கூடிய விரைவாக தொழிலுக்குச் செல்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று சொல்லலாம். அத்தோடு இளம் வயதிலேயே குடும்ப வாழ்க்கைக்குள் நுளைவதிலும் அதிகம் ஆர்வம் காட்டுவதையும் குறிப்பிடலாம்.



15. உங்களது வேலைப்பளுவுக்கு மத்தியில் எழுதுவதற்கு எவ்வாறு நேரத்தை ஒதுக்கிக்கொள்கின்றீர்கள்?


    இது பலரும் இன்று என்னிடம் நேரடியாகவும், முகநூல் வாயிலாகவும் எழுப்புகின்ற கேள்வி தான். தனிப்பட்ட தேவைப்பாடுகள், குடும்பம், தொழில்( எந்நேரமும் ஒரு பதற்றமும், மன அழுத்தத்துடனான தொழில் ), சமூக மற்றும் பிரதேசம் சார்ந்த பொதுப்பணிகள் என்று என்னை நான் ஈடுபடுத்திக் கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். பெரும்பாலானவர்கள் தமது தொழிலோடு குடும்பத்தைக் கவனிப்பதே கஷ்டமாக இருக்கிறது என்று புலம்புகிறார்களே, உங்களால் இத்தனையும் போதாதென்று எழுதுவதற்கும் நேரம் எப்படிக் கிடைக்கிறது, எப்படி முடிகிறது என்று கேட்பார்கள். 
அந்த விடயத்தில் முதலில், அப்படியான ஒரு சக்தியைத் தந்த சர்வ வல்லமையுடைய அல்லாஹ்வுக்கும், எனக்கு ஒத்தாசையாக என்பதை விடவும் பொறுமையாக  இருக்கும் என் மனைவி, பிள்ளைகள், குடும்பம்  மற்றும் நண்பர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
எது எப்படி இருந்த போதிலும், என் தொழில் விடயத்தில் அதன் கடமை விடயங்களில் நான் எனக்குத் தெரிந்து எந்தக் குறைவும் வைப்பதில்லை. என்னை விமர்சிக்க வேண்டும் என்று துடிக்கும் ஓரிரு நண்பர்களும் என் செயற்பாட்டைப் பூரணமாகத் தெரிந்து கொள்ளாமல், நான் என் கடமையைச் செய்யாமல் வேறு வேலையில் நேரம் கழிக்கிறேன் என்று ஆதாரமில்லாமல்  மொட்டையாகச் சொல்வார்கள்.


16. உங்கள் குடும்பம் பற்றி?


    அல்ஹம்துலில்லாஹ்! அது அளவான அழஹான குடும்பம். எனக்காக தன் பல்கலைக்கழக படிப்பையே கைவிட்டு, என்னையே உயிராக இன்னும் காதலிக்கும் என் மனைவி, இரண்டு ஆண் சிங்கங்களுக்கிடையில் ஒரு மகள். அல்லாஹ்வின் உதவியால் சந்தோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது.

எனக்காக அவள்
செய்த தியாகங்கள்
பற்பல...
பல்கலைக்கல்விக்கு வைத்த 
முற்றுப்புள்ளி அன்று
பெரிதானது எனக்கு
ஆனால் இன்று 
உணர்கிறேன் அது
என் பலவீனமென்று.

வசதியான வாழ்க்கை
வாழ முடியுமாயினும்
மாறினாள் எனக்காக
எளிமையாக வாழ
என் கரம் பிடித்ததால் தான் 
கஷ்டம் என்பது என்னவென்று
அனுபவித்தாலும் மனநிறைவாய்
தாங்கிக் கொண்டவள் அவள்.


17. வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றி?


        பல பிரச்சினைகள் இருந்தாலும் மக்களும் ஒரு யதார்த்தமான உண்மையை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். வைத்தியர்களும் சாதாரண மனிதர்கள், அவர்களுக்கும் எல்லோரையும் போன்று அவசரங்கள், தேவைகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனைய குடும்பங்களைப் போன்றே அவர்களுடைய குடும்பங்களுக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கும். சுகாதார சேவை அத்தியாவசிய சேவை என்பதை விட அது ஒரு தார்மீகப் பொறுப்பு என்பதால் எல்லோரையும் போன்று அவர்களால் பல சந்தர்ப்பங்களில் இருக்க முடிவதில்லை. குடும்ப நிகழ்வுகள், சமய நிகழ்வுகள், பெருநாள் போன்ற நிகழ்வுகளைத் தவிர்க்கின்ற சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. அப்படியான நேரங்களில் வைத்தியர்களை விட, அவர்களின் குடும்பத்தினர் தியாகம் செய்கிறார்கள். இந்த யதார்த்தமான உண்மையை விளங்கிக் கொண்டவர்கள் ஒரு சிலர் தான். ஏனெனில், வைத்தியர்களை உழைக்கும் யந்திரமாகவே அதிகம் பேர் பார்க்கிறார்கள்.



18.உங்கள் பார்வையில் ஒரு வைத்தியனுக்கு இருக்கவேண்டிய அடிப்படைத்தகைமைகள்?


        திறமை, பொறுமை, சகிப்புத் தன்மை, விட்டுக்கொடுப்பு, இரக்கம், உதவி செய்யும் மனப்பான்மை.


19. எதிர்கால வைத்தியர்களுக்கும், எமது இணைய வாசகர்களுக்கும் கூற நினைப்பது?



    . புத்தகக் கல்வியை மட்டும் கற்காமல் மனித நேயத்தையும் சேர்த்துக் கற்க வேண்டும். தானும், தன் தொழிலும் என்றில்லாமல், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றும் பார்க்க வேண்டும். எல்லோரையும் சமமாக மதித்து சஹஜமாகப் பழக வேண்டும். மனங்களை இறுக்கமில்லாமல் தளர்வாக வைத்திருக்க வேண்டும். தவறுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். முக்கியமாக மனிதத்தோடு வாழ வேண்டும்.  இவை எல்லோருக்கும் பொதுவானவை.

No comments: