Sunday, October 25, 2015

யன்னலோர இருக்கை







பேரூந்து பயணத்தில்
மகிழ்ந்து போவதுஎன்னவோ
யன்னலோர இருக்கையில்தான்..


நாசியை துளைக்கும்
வியர்வை மணத்தையும்
நாகரிகமில்லா நரகர்களின்
வினைகளில் விடுபடவும்
விரும்பிடுவது ஏனோ
யன்னலோர இருக்கையில்தான்....

முன்னெழுந்து பிந்தூங்கும்
முறைமையில் உழல்வதால்
சின்ன உறக்கத்தில் தேக‌
இறுக்கத்தை குறைத்திட‌
ஏங்குவதோ இந்த
யன்னலோர இருக்கைக்காகத்தான்....

என் தொலைபேசியில்
குவிந்து போ யிருக்கும்
குறுஞ்செய்திகளுக்கும்
பதிலளிக்க முடியாது போன‌
அம்மாவின் அழைப்புக்கும்
ஆறுதலாய் பேசிட‌
ஆர்வமாய் தேடுவது
யன்னலோர இருக்கையைத்தான்...

முகநூலில் மலர்ந்துபோயிருக்கும்
நண்பர்வட்டத்து அரட்டைக்கும்
வகைவகையான அவர் படைப்புக்களை
வாசித்து பின்னூட்டமிடவும்
வாஞ்சித்து நிற்பது
யன்னலோர இருக்கைக்காகத்தான்...

காற்றோடு சுமந்துவரும்
கவிக்கருவை சுகமாய் அள்ளிக்கொள்ள‌
நேற்றோடு மறந்துபோன பல‌
நேச நினைவுகளை மீட்டுச்சுவைத்திட‌
தேர்ந்தெடுப்ப தென்னவோ
யன்னலோர இருக்கையைத்தான்..


என்னதான் இரக்கக்குணம்
இதயத்தோடு ஒட்டிக்கொண்டாலும்
பட்டென எழுந்து
இருக்கையை பகிர்ந்தளித்தாலும்
நின்றுகொண்டு ஏக்கமாய்
நெஞ்சுக்குள் ஏங்குவது இந்த‌
யன்னலோர இருக்கைக் காக‌
மட்டு மாகத்தானிருக்கும்
பேருந்து பயணத்தில்.....!!

No comments: