Friday, October 2, 2015
துடிப்பே இல்லாத பயணம்...
அதிகாலையை எழுப்பிடும் அலாரம் விழிகளுக்கோ
அலாதிக்குள் மூழ்கிடும் உறக்கம்
அலுவலக நினைப்போ நெஞ்சுக்குள்
அலறியடிக்கத் தூண்டிடும் நெருக்கம்
சிட்டாய் தேனியாய் எனக்குள்
சில்லென்ற உற்சாகம் தொற்ற
பட்டாய் பட்டமாய் நானும்
பறப்பதற்காய் பாதையிலே
தேங்கி நின்றிடும் தேக்கங்களாய்
வேகமெடுக்கா வாகன சில்லுகள்
ஓங்கி அடித்தான் ஒருவன் சேற்றை
ஓரத்தில் நிற்குமென்மேல்
மனிதம் தேடும் உலகினில் அந்தோ
மடிந்து போனது உள்ளம்
துணிந்து தவறை இழைத்தும்
துடிப்பே இல்லாத பயணம்...
அமைதியாய் விடிந்த அழகான காலை
ஆர்ப்பரிக்கும் கடலலையானதே இதயம்
சுமையாய் படர்ந்து அழுக்கான அவனை
சுட்டெரிக்கத்தோன்றியதே...
எக்கேடு கெட்டாலும் தன்னலம் காக்க
எதனையும் செய்திடும் மக்காள்
பக்கத்தில் நின்றிடும் மனிதம் காக்கா தூநீ
பறந்து எங்கேபோய் முடிவாய்....
(மழைக்காலமான இந்நாட்களில் வாகன சாரதிகளின் மெத்தப்போக்கு இன்று காலையில் என்னை கடுப்பாக்கியது. ஏதோ பெரிய அப்பாடக்கர்களைப்போல வேகமாக போகும் அவர்களின் திமிர்தனங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அந்த ஆதங்கம். சம்பவம் இதுதான்: வயதான ஒருவர் குடையுமில்லாமல் வேகமாக வேலைக்கு போகும்போது அதிவேகமாய் வந்த அந்தக்கார் சேற்றை அள்ளியடித்து விட்டுபோனதும் அப்பாவியாய் பார்த்து தனது உடையின் சேறுகளை தட்டிக்கொள்கிறார் அந்தப்பெரியவர்.... )
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment