Tuesday, September 8, 2015

கவிஞர் பிரகாசக்கவி அன்வர் அவர்களின் "தடம் தொலைத்த தடயங்கள்" நூலுக்கான ரசனைக் குறிப்பு

   


        கவிதை மொழியென்பது மலர்கள் செழித்த பூந்தோட்டத்தைப் போல வண்ணமும் வாசனையும் இரண்டறக் கலந்து வருவோர் கண்ளையும் கருத்தையும் கவர்ந்து, கவலைகளை மறந்து விடச்செய்திடும். அழகான அனுபவத்தினை இக்கவிதை எழுதுதல், வாசித்தல் என்பன மூலம் பெற்றிடலாம். அந்த உணர்வேடு எழுதப்பட்ட 'தடம் தொலைத்த தடயங்கள்' எனும் கவிதை நூல் வாசிப்போருக்கும் ஒரு பூரணத்தை தநது விடுமென்பதில் ஐயமில்லை. காத்தான்குடியிலிருந்து கவிதையினை சம்மட்டியாகவும் சாமரமாகவும் ஏந்திக்கொன்டு வந்திருக்கும் இளங்கவிஞர் எம்.பீ.அன்வர், தன் முதல் தொகுப்பிலேயே பக்குவப்பட்டவராக தெரிகின்றார். நிலையாமை, மனிதம், விடுதலை போன்றவற்றை வலியுறுத்தி சமூகத்தில் ஒரு மாற்றத்தை , விழிப்பை கட்டாயமாக கொன்டுவர வேண்டும் என்ற வெறியோடும் வேட்கையோடும் வெளிப்பட்டுள்ளார். 

இளையோர் மட்டுமல்லாது மூத்த படைப்பாளிகள் கூட காதலை முதன்மைப்படுத்தி எழுதிக்கொன்டிருக்கையில், இவரின் படைப்பை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அத்தனையும் சமூகத்தின் மீதான அக்கறை, 'விக்கல்' என்ற ஒற்றைத்தலைப்பைத் தவிர. கவிஞர் வதிலை பிரபா (இந்தியா) அவர்களின் ஓவியா பதிப்பகத்தின் வெளியீடான இந்த நூலிற்கு ஆழமான, காத்திரமான அணிந்துரையினை முனைவர். ப. பானுமதி (ஆதிராமுல்லை) (இந்தியா) அவர்களும், வாழ்த்துரையினை கவிஞர் ரியாஸ் குரானாவும், பின்னட்டைக்குறிப்பினை இளையநிலா.எம்.ரீ.எம். யூனுஸ் அவர்களும், வழங்கியுள்ளனர். முனைவர்.ப.பனுமதி அவர்களின் அணிந்துரை நூலுக்கு ஒரு கனதியை வழங்கியுள்ளதென்பதை மறுப்பதற்கில்லை. தமிழ்ப் பேராசிரியர் என்பதானல் பரந்துபட்ட தமிழறிவுடன் கூடிய தரமான ஓர் விமர்சனத்தையே தரிசிக்க முடிகின்றது. 

நீர்க்குமிழி போல நிரந்தரமில்லா மானுட வாழ்வை நிஜமென்று நம்பி அல்லல்படும் மனிதவர்க்கத்தை நினைத்து நொந்தவராக, அவர்களுக்கு உணர்வை ஏற்படுத்த்தும் வகையில் பல கவிதைகளை புனைந்துள்ளார். 'நீயும் மனிதன்' என்ற முதல் கவிதையில், 'கடற்கரையில் கட்டப்பட்ட மணல் வீடு மனிதா – நீ இதை உணர்ந்தால் நீயும் மனிதன்..' என அதனை நினைவூட்டுகிறார். உடலுக்குள் உயிர் உலவுமட்டுமே எம் எல்லோரினதும் அதியுச்ச மனித வாழ்தலின் உத்தரவாதம். அதற்குள் பகை, பொறாமை, போட்டி, பேராசை என நம்மை நாமே நரகப்படுத்திக்கொள்கிறோம். இதனை யாவரும் சிந்திக்க வேண்டும் என்ற அதிக பிரயத்தனத்தோடு பல கவிதைகளை புனைந்துள்ளார். கவிஞர். வாழ்க்கை வட்டத்தில் சுழலப்படாமல் எவரது வாழ்வும் ஒரே நிலையில் இருப்பதில்லை. மேலோர் கீழோராகவும், கீழோர் மேலோராகவும் மதிக்கப்படும் சந்தர்ப்பங்கள் ஏதோ ஒரு வகையில் நிகழவே செய்யும் அந்த மெய் நிலையினை உணர்ந்தால் நாமும் மனிதர்தான் . 

'வாழ்க்கை கோலங்கள்' எனும் தலைப்பு அதனை இவ்வாரு சித்திரிக்கின்றது. 'சூப்பி எறியப்பட்ட முருங்கைக் காயாய் வகுப்பறையின் மூலையில் நான்.'.. என தொடர்ந்து, 'மூன்றே வருடத்தில் ஆசானாய் நான். பல்கலைக்கழகம் சென்ற நண்பர்களோ மறியற் போராட்டத்துடன் வீதியில் வேலைக்காய்.'.. போராட்டங்களுடன் அல்லல்படும் நம் சமூகத்தை தூக்கி நிறுத்தும் , சீர்திருத்தும் பொருப்பு, கடமை அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் உண்டு. அதனை உணர்ந்து செயற்படுவோர் எவருன்டு என பொங்கி எழுகின்றார் கவிஞர். 'ஆர்பரிக்கும் ஆன்மாக்கள்', 'பேய் தேசமும் சிட்டுக்குருவிகளும்', 'களவு போகும் உரிமைகள்', 'தேர்தல் திருவிழா', போன்ற தலைப்புக்களில் கோபத்தையும், இயலாமைகளையும், எதிர்ப்பையும், எதிர்ப்பார்ப்புக்களையும் வெளிப்படுத்தியுள்ளார். 'தூரத்தே ஓர் அசரீரி நாளையும் இத்தெருவில் யாரோ ஒருவன் யானையை பூனையாய் மாற்றப் போவதாய்;'. எப்பொழுதும் வாக்குறுதிகளை நம்பியே ஏமாந்து போகும் நம் வாக்குரிமை கலாச்சாரம் எப்போது மாறப்போகின்றது என்ற ஏக்கத்தோடும் கோபத்தோடும் நிறைவு பெறுகின்றது கவிதை. நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி எத்தனை பாடுபடுத்துகின்றது என்பதனை 'விலைவாசி' என்ற தலைப்பிலேயே நகைச்சுவை குணத்தோடு சுட்டிகாட்டியுள்ளார். 

'சீரும் பாம்பாய் சீறிப் பாய்கின்றாள் சில அடி தூரம் தள்ளியே படுக்கச் சொல்லி என் அன்பான வீட்டுக்காரி காரணம் கேட்டால் கடுப்போடு சொல்கிறாள் பொட்டிப் பால்மா பொல்லாத விலையாம்'. இதனை விடவும் அதிகம் விளக்கம் தேவையே இல்லையென தோன்றுகின்றது. யானைப்பசியும் சோளப் பொறியும்', 'நிதர்சனம்' என்ற கவிதைகளில் இன்னும் விரிவாகவும், அழகாகவும். பெண்ணியம் பேசும் ஆண்கள் பெண் சமுகத்தின் மத்தியில் அதிகமாகவே வரவேற்கப்படுகின்றனர். உண்மையில் வார்த்தையில் வடிக்கும் இவையெல்லாம் வாழ்க்கையில் வளர்க்கப்படுகின்றதா என்பது பற்றியெல்லாம் எனக்கு தொரியாது. இருந்தாலும் இப்படி சிந்திப்பதும் பெண் பிரச்சினை பற்றி அறிந்திருப்பதும் அதுபற்றி பேசுவதுமே ஓர் மைல்கள் தான். ஆவேசமாக, ஆணித்தரமாக காத்திரமாகவே கவிஞர் அன்வர் அவர்கள் பெண் பிரச்சனை பற்றி பேசுகின்றர். சமூகத்தில் இன்னுமே மாறாமல் கிடக்கின்ற பெண்ணடிமை, சீதனப்பிரச்சினை, முதிர்க்கன்னிகளின் மனநிலை என உண்மையாகவே பல தளங்களை தொட்டிருக்கின்றார். இதற்கு 'எப்போது', 'இயற்றிவிடு', 'மாதவிடாய்', போன்ற கவிதைகளை சுட்டிக்காட்டலாம். திருமண வயதை தாண்டிய ஓர் பெண்ணின் மனவுனர்வு மிக அப்பட்டமாக'இயற்றிவிடு' என்ற தலைப்பிலான கவிதையில் மிக அருமையான வரிகளைக் கையாண்டு கூறியிருக்கின்றார். 

காலத்தின் தேவையாக நிச்சயம் அவை நடைமுறைப்படுத்த வேண்டும். கவிஞரின் கனவு நிஜமானால் வாலாற்றில் இவருக்கென்று ஓர் இடம் ஒதுக்கப்படுவதில் ஐயமில்லை. இலஞ்சம் வேண்டிவிட்டால் தண்டனை வழங்குவது அரசின் சட்டமாச்சு ! சீதனம் வேண்டுகின்ற கலியுக அசுரர்களை தண்டிக்க – அரசு சட்டமியற்ற மறந்து போச்சு ! சுனாமியின் வடுக்கள் பற்றியும், நாட்டில் சமாதான கூக்குரல்கள் ஒலித்துக்கொன்டு இருந்தாலும் அந்த சுதந்திரத்தை அனுபவிக்க முடியாத அவலத்தையும், யுத்தம் சுமத்திச்சென்ற பொல்லாத நினைவுகளையும், பொருளாதார குறைபாடுகளின் நிமித்தம் வெளிநாடு செல்வோரின் அவல நிலைகளையும் கவிஞர் அழகுதமிழில் வடித்திருப்பதுவாசிப்பவரின் இதயத்தை மகிழ்வடையச் செய்துள்ளது. 

ஆங்காங்கே சில கவிதைகளில் நாட்டார் பாடலின் சாயல் வந்துபோகின்றது. இதனை முறையாக செதுக்கியிருப்பின் அக்கவிதைகளின் சுவை இன்னும் மெருகேறியிருக்கும். 'வெட்டி குத்தி சுட்டு அப்படி இப்படி ஒட்டியும் ஒட்டாமலும் என நிறைவு பெருகின்றது நூலின் தலைப்பில் அமைந்த கவிதை. இத்தொகுப்பில் அமைந்த எல்லாக் கவிதைகளுமே மனிதம் பேசுபவையாக கானப்படுகின்றது. குறைத்து மதிப்பிடுமளவு கவிதைகளோ அதன் கருத்துக்களோ அமையவில்லை எனலாம். நடைமுறை வாழ்வியலை கவிதைகளாகக்கொன்டு இந்தநூல் ஆரவாரமில்லாது இலக்கிய உலகத்தில் இடம்பிடித்திடும். கவிதைத் தலைப்புக்கள் கூட சமூகத்திற்கு பரீட்சயமான சொற்களில் அமைந்திருப்பது வாசித்தலில் ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகின்றது. அவ்வாறே 'வேலிபாய்தல்', 'மண்ணாங்கட்டி','வைத்தெரிச்சல்' போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் ரசிக்கும்படி உள்ளது. சாதிக்க வேண்டும், சமூகக் கண்களை திறக்க வேண்டும் என்ற உத்வேகத்தோடு புறப்பட்டுள்ள 'பிரகாசக்கவி' எம்.பீ.அன்வர் அவர்கள் 'நாங்களெல்லாம் வாழும்போதே வரலாறு படைக்கத் துடிப்பவர்கள் என நம்மத்தியில் வெளிப்படுகின்றார். 

கவிஞரின் முயற்ச்சிகள் யாவும் வெற்றியடைந்து அவரின் கவிதைக் கத்திகள் இச் சமூகத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றபிரார்த்தனையோடு உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்சியடைகின்றேன்.

 நன்றி 
த.ராஜ்சுகா.

(நன்றி மகாகவி இதழ் -2014 நவம்பர் இதழ்)

No comments: