அண்மையில் வெளியீட்டைக்கண்ட "அறுவடைகள்" எனும் விமர்சன நூலினை வாசகர்களுக்காக வழங்கியவர் கவிதாயினியும் எழுத்தாளருமான ரிம்ஸா முகம்மத் அவர்கள். திறனாய்வில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் எழுத்தாளர்கள் மிகக்குறைவு அதிலும் பெண் விமர்சகர்கள் குறைவென்றே சொல்லலாம். ஏனைய கவிதை சிறுகதை படைப்பாளிகளுடன் ஒப்பிடும்போது விமர்சகர்கள் எண்ணிக்கையில் குறைவே.
அப்படிப்பட்ட எழுத்தாளர்களிடையே மிளிர்ந்து கொண்டிருக்கும் பெயர் குறிப்பிட்டு சொல்லக்கூடியவர் வெலிகமையைச் சேர்ந்த ரிம்ஸா முகம்மத் அவர்கள். கணக்கியல் துறையில் தொழில் புரியுமவர் இலக்கியத்தில் சாதித்துக்கொண்டிருப்பது மிகப்பெருமைக்குரிய விடயமே. தன் இலக்கியப்பணியின் மூலம் தமிழ் இலக்கிய உலகிற்காக ஏலவே 10நூல்களை தந்து தற்போது அறுவடைகள் எனும் 11வது நூலுடன் நம்மை சந்திக்கின்றார். கணக்கியல் சார்ந்த மூன்று நூல்களும் கவிதை,சிறுகதை, சிறுவர்கதை,சிறுவர் பாடல், விமர்சனம் சார்ந்த ஏழு நூல்களுமே அவைகளாகும்.
நூலாசிரியரான ரிம்ஸா அவர்கள், பல்துறைசார்ந்த திறமை கொண்டவர். கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம்,விமர்சனமென ஆழமான எழுத்தாற்றல் மிக்கவர். பரந்துபட்ட வாசிப்புத்திறமை கொண்டவர். நேரமே இல்லையென ஓடிக்கொண்டிருக்கும் நமக்கெல்லாம் பத்திரிகையொன்றை முழுமையாக வாசிப்பதற்கே நேரமில்லாதபோது கிட்டத்தட்ட நாற்பத்து மூன்று நூல்களை படித்துவிட்டு அத்தோடு நின்றுவிடாமல் அதற்கு ஆய்ந்து ஆராய்ந்து தன் மன உணர்வுகளை விமர்சனமாக தந்திருப்பதை பாராட்டாமல் இருக்கமுடியாது. பத்திரிகைகள் வானொலிகள் வலைதளங்களென தன்னுடைய படைப்புக்களை வெளியிட்டுவரும் இவர் 'பூங்காவனம்' எனும் காலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியராவார். ரிம்ஸா அவர்கள் தன்னுடைய இலக்கிய பணிகளுக்காக பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் வென்றவர்.
'அறுவடைகள்' இது எழுத்தாளர் ரிம்ஸா அவர்களை ஒரு சிறந்த வாசகியாக அடையாளப்படுத்தும் நூலாகும். ஆம் வாசிக்காத ஒருவனால் நல்ல எழுத்தாளனாக முடியாது
நூலுக்கு ஆழப்பொருந்தும் பெயருடனும் அதற்கு அழகான அட்டைப்படத்துடனும் பிரசவமான இந்நூலுக்கு அணிந்துரையினை சோ.பத்மநாதன் அவர்களும் வாழ்த்துரையினை வவுனியூர் இரா.உதயணன் அவர்களும் பின்னட்டைக்குறிப்பினை இலக்கியவாதி கலைவாதி கலீல் அவர்களும் வழங்கி சிறப்பித்துள்ளனர்.
ஒரு எழுத்தாளனை உருவாக்குவதிலும் அவனின் திறமையை உருக்குலைப்பதிலும் இந்த விமர்சனம் எனும் விடயம் அதிக பங்கு வகிக்கின்றது. தான் படைத்த படைப்பு சமூகத்திடம் எவ்வாறு போய்ச்சேர்ந்துள்ளது என்பதனை படம்பிடித்து காட்டுவதும் இவ்விமர்சனமே. அதனை அழகாக செய்துமுடிப்பதற்கும் ஒரு கலைவேண்டும் அதாவது தெளிவான வாசிப்பு, விடயத்தினை புரிந்துகொள்ளும் பக்குவம், சரிபிழைகளை பகுத்தறியும் தெளிவு, சரியாயின் திறந்த மனதுடன் வாழ்த்திடும் பரந்த மனது, பிழைகளாயின் நாசுக்காக பகிர்ந்தளிக்கும் சமயோசிதம் என்பவையே ஒரு நல்ல விமர்சனத்துக்குரிய பண்புகளாகும். இவ்வத்தனை பண்புகளையும் இந்நூலினை வாசிக்கும்போது நம்மால் உணர்ந்து கொள்ளமுடிகின்றது.
இவ்வாறான பக்குவம் கொண்ட ரிம்ஸா அவர்கள், கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களை மகிழ்வித்து அவர்களின் திறமையை உலகுக்கு வெளிக்காட்டவும், அவர்கள் தங்களை வளர்த்துக்கொள்ளவும் அதிகமாகவே பிரயாசப்பட்டிருக்கின்றார். (அவரது இரு விமர்சன நூல்களையும் சேர்த்து)
நான் கூறியதுபோல வாசிக்கும் பழக்கம் அருகிக்கொண்டுவரும் இக்கால கட்டத்தில் எதற்கெடுத்தாலும் இணையத்தில் உருகிக்கொண்டிருக்கும் நம்மவர்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதம் எனலாம். இவ்வாறான விமர்சனங்களினூடாக சிறந்த நூல்களினை தெரிவுசெய்து வாசிப்பதற்கும் ஒரே புத்தகத்தில் பல நூல்களை காண்பதற்கும் துணைசெய்வதோடு சேமித்து பாதுகாப்பதற்கு உகந்த பொக்கிஷமாகவும் காணப்படுகின்றது. உண்மையில் "அறுவடைகள்" சேமித்து பாதுகாக்கப்படவேண்டிய பெட்டகமே.
கவிதை நூல்கள், சிறுகதை நூல்கள்,நாவல்,சிறுவர் இலக்கியம், ஏனையவை என பிரித்து விமர்சிக்கப்பட்டுள்ள இந்நூலில் முக்கியமான ஒன்றுதான் நூலாசிரியர்கள் பற்றிய தகவல்கள். வெறுமனே எழுத்துக்களை பற்றி மட்டுமல்லாது எழுத்தாளர்களை பற்றியும் குறிப்பிட்டிருப்பது இலக்கிய தேடல் உள்ளவர்களுக்கு பிரயோசனமாக இருக்கும்.அதற்காக ஒன்றை குறிப்பிடுகின்றேன்
'அமைதிப்பூக்கள்' கவிதை தொகுப்பின் ஆசிரியர் மூதூர் எம்.எம்.ஏ.அனஸ் அவர்களை இவ்வாறு அறிமுகப்படுத்துகின்றார். பலருக்கு தெரியாத விடயமும் கூடத்தான்."சீறாப்புராணத்தின் பதுறுப் படலத்திற்கு தெளிவுரை எழுதிய மூதூர் உமர் நெய்னார் புலவரின் மகள் வழிப்புத்திரர்.அவரின் இலக்கியப்பார்வையும் சொற்களை லாவகமாக கையாளும் திறனும் இந்த நூலாசிரியரிடம் வந்திருப்பது வியப்பதற்கான ஒன்றல்ல ஏனென்றால் இலக்கிய பாரம்பரிய குடும்பத்தில் பிறந்த இவரிடம் கவிதை உணர்வு வெளிப்படாவிட்டால்தான் அதிசயப்படவேண்டும். ஆகவே கவிதா உணர்வு இவரது பாரம்பரியம். கண்ணியமும் சமூகப்பற்றும் தந்தைவழி வந்தது. இத்தனைக்கும் மேலாக அரசியலில் நன்னோக்குள்ள முனைப்பு இத்தனை குணாம்சங்களையும் வெளிப்படுத்தி நிற்கும் கருத்தியல் வாதத்தை இந்தக்கவிதைத் தொகுதியில் தரிசிக்கமுடிகின்றது" என தொடரும் அவ்விமர்சனத்தினைப்போல இன்னும் பல படைப்பாளர்களைப்பற்றிய தகவல்கள் இந்நூலினில்.
வாசித்தலில் பெற்றுக்கொண்ட சிறந்த அறுவடைகளை தொகுப்பக்கியுள்ள ரிம்ஸா அவர்களின் பிரதிபலிப்பு இவ்வாறும் அமைகின்றது தான் பெற்றுக்கொண்ட இன்ப உணர்வினை வாசகர்களாகிய எம்மிடமும் புகுத்திவிட எத்தனிக்கின்றார். இன்றைய இளம் தலைமுறையிடம் அருகிக்கொண்டுவரும் வாசிப்புத்திறமை மோலோங்கச்செய்திட, 1970 களுக்கு பின்னர் எழுத்துலகிற்கு வந்த கவிஞர் ஷெல்லிதாசன் 2010ம் ஆண்டில்தான் அவரது முதலாவது நூல் பிரசவமாகியுள்ளது அவர்களின் நூலுக்கு எழுதிய விமர்சனத்தின் மூலமே அழைப்பு இந்நூலாசிரியரிடமிருந்து. 'இலங்கையின் மூத்த எழுத்தாளர்கள் வரிசையிலுள்ள கவிஞர் ஷெல்லிதாசனின் கவிதைகள் மனிதநேயம் சார்ந்த சிந்தனைகளாக வெளிப்பட்டுள்ளது இக்கவிஞரின் நூலினை வாசிப்பதின் மூலம் இளைய எழுத்தாளர்கள் தங்களது இலக்கியப்பாதையில் வெற்றிபெறாலாம்' என ஓர் ஆலோசனையையும் சொல்லிவைக்கின்றார் எழுத்தாளர் ரிம்ஸா அவர்கள்.
ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக எழுதிவரும் நூலாசிரியர், தனதுரையில் இவ்வாறு கூறுகின்றார்,'நாம் வாசிக்கின்றவற்றில் இரசனைக்குரிய அம்சங்கள் பல காணப்படுகின்றன அவற்றை ஏனையவர்களுக்கும் தெரியப்படுத்தி குறித்த எழுத்தாளர் பற்றிய அறிமுகத்தினையும் நூல் பற்றிய அறிமுகத்தினையும் செய்வதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்' என்று தன்னுடைய விமர்சனப்பார்வைக்கு பதிலினை படைக்கின்றார். இலண்டன் மற்றும் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகத்தின் வெளியீடான இந்நூலினை எழுத்தாளர் அவர்கள்,'படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு' சமர்ப்பணம் செய்திருப்பதும் நெஞ்சைத்தொடும் நெகிழ்வே.
இவ்வாறு பல்வேறுபட்ட பரந்த வாசிப்பனுபவத்தினையுடைய இவர், திறனாய்வின் முன்னோடியும் விமர்சனத்துக்கு புகழ்பெற்றவருமான இலங்கையின் மூத்த எழுத்தாளர் திரு கே.சிவக்குமாரன் அவர்களுடைய இரு ஆய்வு நூல்களுக்கு விமர்சனம் வரைந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
அயராது இலக்கிய பணிகளுக்காக தன்னுடைய தொழில் தவிர்ந்த நேரங்களை செலவிடும் ரிம்ஸா முகம்மத் அவர்களின் 'அறுவடைகள்' விமர்சனத்தொகுப்பானது, நூல்கள் பற்றிய, நூலாசிரியர்கள் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்வதற்கும் ஊசாத்துணையாக பயன்படுத்திக்கொள்ளவும் படைப்பாளிகள், மாணவர்களுக்கு பயனுடையாதான ஓர் சிறந்த நூலாகும். இந்நூலினை பெற்று பாதுகாப்பது தமிழ் பற்றாளர்களின் கடமையே என்பேன்.
இப்பாரிய பொறுப்பு மிக்க இலக்கியப்பணிகளை, எவ்வித எதிர்பார்ப்புகளும் இன்றி ஆற்றிவரும் பல்துறைசார் திறமை கொண்ட எழுத்தாளர் ரிம்ஸா அவர்கள் இன்னும் இலக்கிய உலகிற்கு ஆற்றவேண்டிய கடமைகள் ஏராளம். மூத்த எழுத்தாளர்களுடைய ஆலோசனைகளுடனும் அவருடைய தனித்தன்மைவாய்ந்த ஆற்றல்களுடனும் பல படைப்புக்களுடன் இலக்கிய சாம்ராஜ்யத்தில் வீறுநடைபோட வாசகர்களாகிய எமது நல்வாழ்த்துக்கள்.
நூல் :அறுவடைகள்
நூலாசிரியர்: வெலிகம ரிம்ஸா முகம்மத்
நூலின் வகை: விமர்சனம்
நூலாசிரியரின் தொடர்புகளுக்கு:0775009222
விலை:600/
நன்றி.
த.ராஜ்சுகா.
No comments:
Post a Comment