Sunday, April 20, 2014

எதிர்வீட்டு நாயும் என் ஏழை நாயும்' கவிதை நூலுக்கான ரசனைக்குறிப்பு



கவிதை இலக்கியம் புதிய புதிய எழுச்சியோடும் புதுக்கவிதையெனும் மிரட்சியோடும் தற்கால எழுத்துலகை சந்தித்துக்கொண்டிருக்கின்றது. பெறும்பாலும் இன்றைய இளம் படைப்பாளர்களை வெறும் காதல் கட்டியத்தை கூறுபவர்களாகவே நம் சமூகத்தின் மத்தியில் ஓர் விம்பம் உலவிக்கொண்டிருக்கின்றது. அதனை தகர்த்தெறியும் விதமாக அண்மையில் ஓர் கவிதைநூல் வெளியீடு. 

கடலைக்கண்டாலே காததூரமோடிய எம‌க்கு, பெரும் வலிகளையும் வடுக்களையும் தந்து நம்ம‌க்களை சுக்குநூறாக்கிப்போட்ட அதே நினைவுச்சின்னமதில் 16.03.2014 அன்று முல்லைத்தீவு கடற்கரையினில் இயற்கையோடும் எழிலோடும் ஒரு நூல்வெளியீடு. எத்தனை காலத்துக்குத்தான் ஒரு சில எழுதப்படாத விதிமுறைகளுக்குள் அடைபட்டுக்கிடப்பதென்ற விடுதலை நோக்குடன் இம்முறையினை கவிஞர் தேர்ந்தெடுத்தார்போலும், நூலின் பெயருக்கேற்றாற் போல.

'இடம் பெயர்ந்த ஊரில் இடம்பெயரா நாய்' என்ற கன்னிக் கவித்தொகுப்போடு எழுத்துலகில் பாதம் பதித்த கவிஞர் யோ. புரட்சி அவர்கள் 'எதிர்வீட்டு நாயும் என் ஏழை நாயும்' என்ற இர‌ண்டாவது தொகுப்போடு இலக்கியத்திற்கு தன் பங்களிப்பினை வழங்கியுள்ளார். இரு நூல்களிலும் தலையங்க நாயகனாக நாயை முதன்மைபடுத்தியுள்ளார். ஆனால் கவிதைகளோ ஒன்றையொன்று முந்தவிடாது அதிக கனதியோடு படைக்கப்பட்டிருப்பதை வாசித்தலின்பின் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமொரு உண்மையாகும். கவிஞர் யோ. புரட்சி அவரது படைப்புக்களில் ஏதொவொரு புரட்சியினை புரிபவராகவே நம்மத்தியில் பிரகாசிக்கின்றார்.

இத்தொகுப்பிற்கு அணிந்துரையினை கவியரசர் கண்ணதாசனின் புதல்வர் காந்தி கண்ணதாசன் அவர்களும் வாழ்த்துரைகளினை வவுனியூர் இரா.உதயணன் அவர்களும் எழுத்தாளர் தம்பு சிவா அவர்களும், பின்னட்டைக்குறிப்பை ஜேர்மனியைச்சேர்ந்த திருமதி சாந்தி அவர்களும் வழங்கியமை நூலின் கனதியை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. ஐம்பது கவிதைகளுடன் அடக்கமான இத்தொகுப்பு சமூகத்தை அப்பட்டமாய் வெளிப்படுத்துவதாகவும் மனித இயல்புகளையும் இதயங்களையும் திரைவிலக்கி காட்டுவதாகவும் அமைந்துள்ளது. 

'அவைக்கு அப்படி' என்ற ஆரம்பக்கவிதையானது, அழகான உண்மையினை ஆர்ப்பாட்டமில்லாமல் கூறிச்சென்றாலும் வாசித்தலின்பின் நம்மை அதிகமாகவே சிந்திக்கவைக்குமென்பதில் ஐயமில்லை.

நீயோ 
உன் வயிறு என்கின்றாய்
உன்னிடம் கேட்காமலே
ஓராயிரம் கிருமிகள் அங்கு
குடும்பம் நடத்துகின்றன‌

எத்தனை யதார்த்தமான விடயமிது. உயிரின‌ங்களில் உயர்ந்தது மனிதப்பிறவியென்கின்றோம் ஆனால் இதுபோன்ற சின்ன சின்ன விடயங்களில் இயற்கையின் எச்சசொச்சங்களிலும் எச்சில்களிலும் தங்கிவாழும் எத்தனையோ இக்கவிவரிகள் நிரூபிக்கின்றன.

ஒத்த கருத்துக்கள் அல்லது ஒரேவிதமான சாயலோடு கவிதைகள் காணப்படாமல் ஒவ்வொருவிதமான உண்ர்வுகளை அநுபவங்களை தந்திருப்பது வரிகள் அனைத்திலும் உயிர்ப்புத்தன்மை காணப்படுவது கவிஞரின் தனித்துவம். 'ஒரு சாரம் ஓடுகின்றது' எனும் தலைப்பில் நீள்கின்ற வரிகளில் சாரத்திற்கும் தனக்குமான தொடர்பினை கவியாக்கியிருப்பது வியக்கச்செய்கின்றது. யுத்தகாலத்தில் உதவிக்கரமாக துணைக்குவந்த அந்த சாரத்தின் உபகாரங்களை சொல்லியிருப்பதுகூட கவிதைக்குரிய மகத்துவத்தினை நிரூபிக்கின்றது ஏன் இந்த தலைப்பு கூட பல‌விதமான கருத்துக்களை சுருக்கிக்கூறுவதாகவே தோன்றுகின்றது. 

காலவோட்டத்தில் நம் இயல்புகள் குணங்கள் மாறினாலும் இதயத்தின் ஆழத்தில் தேங்கிவிடும் நினைவுகள் மட்டும் அழிந்துபோவதில்லை அதற்கு கட்டியம்கூறும் வகையில் 'காணாமல் போய்விட்ட கண்ணான தங்கைக்காய்" எனும் கவிதை

ஒருவ‌யிற்றில் உதித்த‌
உயிர்த்தங்கையே....
                                                        என ஆரம்பித்து 
மணமேடையிலே
மணமகளாய் உன்னை
கண்டுவிட நினைத்தேன் இன்று
மலக்குழி தன்னில்
பொலித்தீன் சுற்றப்பட்ட
புழுக்க நிறைந்த உடலாய்
புன்னகை அழகியுனை
கண்களாள் கண்டுசெத்தேன்'

                                   எனும் ஓலக்குரலோடு ஓங்கிநிற்கின்றது. இவ்வாறான அநுபவத்துளிகளில் தேங்கியிருக்கும் வேதனை கண்ணீர் நிஜம் வலிகள் என்பவற்றினை வாசகர்களுக்கும் கடத்திவிடுவதில் கவிஞர் வெற்றிபெறுகின்றார்.


எப்படித்தான் நாம் பல மீள் எழுச்சிகளோடு வாழ்ந்தாலும் எம்மை ரணமாக்கிச்சென்ற அந்த கோர நினைவுகள் நிகழ்வுகளிலிருந்து மீளமுடியாதவர்களாய் இருக்கின்றோம் என்பதனை சமகாலத்தில் எழுதும் எழுத்தாளர்களின் படைப்புக்கள் சாட்சி கொடுக்கின்றன. எத்தனை துரித வளர்ச்சி, எப்படிப்பட்ட எழுச்சி ஏற்பட்ட போதிலும் வலிகளுக்கு விலைகளில்லை என்பதனை இந்நூலிலும் பல கவிதைகளில் காணமுடிகின்றது. "செஞ்சோற்றுக்கடன், இரண்டாம் உயிர்தந்தவள், அவள் செத்துவிட்டாள்" போன்ற கவிதைகளை கூறலாம்.

அதுபோலவே சமூகத்தில் எத்தனை பெரிய படிப்புக்களோடும் பட்டங்களோடும் இருந்தாலும் சில மூடநம்பிக்கைகளுக்கு நாம் முகங்கொடுத்துக்கொண்டேதான் இருக்கின்றோம். தெரிந்தா அல்லது தெரியாமலா இப்படி ந‌டக்கின்றது? எதிலும் பொறுமையில்லா வேகம், விதையிட்டதும் விருட்சத்தினை தேடும் அசுரத்தனமான தேடல், இறைச்சட்டங்களை உடைக்கநினைக்கும் மெத்தப்போக்கு, என்பனவே இவற்றுக்கு காரணமெனலாம். இதுபோன்ற நம் மூடநம்பிக்கைகளில் ஒன்றுதான் சாமியாரிடம் குறி கேட்டல். இவ்விடயத்தில் காணப்படும் முட்டாள்தனங்களை ப‌கிரங்கமாகவும் பதட்டமில்லாமலும் 'சாமியாரிடம் கேட்காத கேள்வி' என்ற கவிதையில் காணலாம்.

இதுபோன்றதான இன்னொரு விடயம்கூட 'இருந்தும் இல்லாமல்' என்ற கவிதையில் அழகுபெறுகின்றது இதற்கு அவலம் அல்லது கொடுமை என்றுதான் வரைவிலக்கணம் கூறலாம். விதவை என்று மகுடமணிந்த ஒரு பெண் பற்றியதான வரிகள். இவ்வரிகளைவிட இன்னும் அழகாக இவ்விடயத்தினை எப்படிக்கூறிவிட முடியும் அத்தனை அழகாக அர்த்தம் பொதுத்து கூறியுள்ளார் கவிஞர் சுவைகெடாமல் அதனை வாசித்தே தெரிந்துகொள்ளுங்கள்.

நான் ஏலவே கூறியதுபோலவே ஒவ்வொரு தலைப்பிலும் ஒவ்வொரு தனித்துவம், வித்தியாசமான உணர்வுகள் பாமரனுக்கும் பரீட்சயமான வார்த்தைகள் என்று வித்தியாசப்படும் இந்நூலின் தலைப்பிலான கவிதைகூடன்வித்தியாசம். நூலினை கையிலெடுத்ததும் தலைப்பையும் நூலாசிரியரையும் பார்க்கும்போது நிச்சயம் இதுஒரு காதல் விடயமே மறைந்திருக்கும் என்ற எதிர்வுகூறல் 5ம் பக்கத்தினை கடக்கின்றபோதே சுக்குநூறாய்ப்போய்விட்டது அந்த இரண்டு நாய்களுக்கிடையிலான வேறுபாடு கூட ஒரு பாடமாகவே நம்க்கு போதிக்கின்றது இடையிடையே சிறுகவிதைகளும் ஹைக்கூக்களும் படங்களும் அர்த்தப்புஷ்டியாய் காட்சிதருகின்றது.


'வறுமை' என்ற அநுபவத்தினை கடந்த எத்தனையோ பாக்கியசாலிகள் நம்மத்தியில் இருக்கின்றோம் உண்மையில் வறுமை ஒரு வரம். அடையமுடியாத அறிவினையும் படிக்கமுடியாத படிப்பினைகளையும் இலவசமாய் கற்றுத்தரக்கூடிய வல்லமை வறுமையிடம் மிக வசதியாகவே வாழ்கின்றது அதனை மிக ஆழமான அநுபவத்தினூடாக வரிகளாக்கியுள்ள கவிஞரை பாராட்டாமல் இருக்கமுடியாது. 'அற்புத அநுபவங்கள், ஏழையெந்தன் கைகள்" போன்ற தலைப்புக்களே அவை. அந்த அநுபங்களில் ஒன்று இதோ,

'பாதத்திலே செருப்பின்றி
பலமைல்கள் நடந்தே
பள்ளி சென்று 
படித்துவந்த அநுபவம்.... என இன்னும் பல அநுபங்களை பகிர்ந்து இறுதியில் இவ்வநுபவங்கள் தந்த கனமான அநுபவமொன்றை கவிஞர் இவ்வாறு குறிப்பிடுகின்றார்

வறுமை தந்த‌
அநுபவப்பூக்கள்
வாடியே போவதில்லை
எளிமை என்ற‌
எழில்மிகு பூவும்
ஏழையைவிட்டு அகழ்வதில்லை


'மோசடிப்பேர்வழிகள்' என்ற கவிதையில் நேர்முகத்தேர்வில் நடக்கும் அநியாயங்களில் ஆத்திரப்படுகின்றார் கவிஞர். ஊர்களில் வேறுபட்டாலும் உணர்வுகளினால் மனிதனை மனிதன் நெருங்களாம் என்பதற்கு உதாரணமாய் 'ஒரு லயன் அழுகின்றது' என்ற கவிதை மலையக மாந்தர்களின் பிரச்சனைகளில் ஒன்றான வதிவிடப்பிரச்சனை பல மாற்றங்களை கண்டபோதிலும் இன்னும் மாறாப்பிரச்சனையாக இருக்கும் ஆரோக்கியமில்லா வீட்டுச்சூழலினை இவ்வரிகள் தாங்கிநிற்கின்றது.

காதல் பற்றி அதிகம் பேசாத இந்நூலில் திருஷ்டிப்பொட்டாக ஒரேயொரு கவிதை 'காதல் தேர்தல்' வாக்குப்போதாமையாலும் நிராகரிக்கப்பட்ட வாக்குகளாலும் செல்லாக்காசாய்ப்போய் சொல்லொணாத்துயரில் வாடும் எத்தனையோ காதலர்களின் உணர்வுகளைப்போல சாதாரணக்காதலாக அல்லாமல் சபதக்காதலாக  இப்படிப்பேசுகின்றது

எம்மை எதிர்ப்போரை
நிராகரிக்கப்பட்ட‌
வாக்குகளாய் ஆக்கி
நிச்சயம் வெல்வோம்
காதல் தேர்தலில்
அடிக்கடி இடம்பெறும்
ஆட்சிக்கான தேர்தலா இது
ஆயுளில் ஒருமுறைவரும்
காதல் தேர்தல்'

இதுபோன்ற காதல்களை இந்தக்காலங்களில் வெகுச்சுலபமாக பொறுக்கியெடுத்துவிடலாம். அத்தனைக்கு வஞ்சகமும் விளையாட்டும் கேலிக்கூத்தாகவும் நம் இளையவர்கள் வழிநடத்திச்செல்கின்றார்கள் இதற்குப் பொருந்துமாப்போல இன்னொரு தலைப்பு "ஆண் விபச்சாரன்" 
விபச்சாரி என ஒரு பெண்ணை விழிக்கும் சமூகம் அவளோடு/அதனோடு தொடர்புபட்ட ஆணைமட்டும் விட்டுவிடுவது ஒரு புரியாத வழக்கமே 'விபச்சாரி' என்றால் அதனை ஒரு பெண்சமூகத்தை குறிக்கும் சொல்லாக மிளிரும் சமூகக்கண்களுக்கு 'விபச்சாரன்' என்ற சொல் புதிதாக இருக்கும் அல்லது 'ஆமாம் அப்படியென்றால் என்ன? ' என கேட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தில் "ஆண் விபச்சாரன்" என்று அழுத்தம் திருத்தமாக முன்வைக்கின்றார் கவிஞர்.

திருமணமான ஒரு ஆணோ பெண்ணோ இன்னொரு நபருடன் வைத்திருக்கும் தொடர்பு விபச்சாரமே ஆனால் ஒரு திருமண முறிவுக்குப்பின் ஏற்படும் தொடர்புகூட விபச்சாரமே என்ற உண்மையினை கவிஞராக அல்லாமல் ஒரு மனிதனாக இருந்துசொல்வதில் கவிஞர் நல்வழிகாட்டியாக பிரதிபலிக்கின்றார். தந்தை சொல்லுக்கு தாய் சொல்லுக்கு உறவுகளின் சொல்லுக்கு என்று ஒன்று தவர இன்னொரு பெண்ணுக்கு சீதன சீர்வரிசைகளோடு தாலியிடும் ஓர் ஆணின் சுயமதிப்பீடாக இக்கவிதை. கடைசி வரிகளில் ஆணியடித்தாற்போல சொல்கின்றதி இப்படி,

'நாளை வரும்
காலை திருமணம் இன்று
மாலையென் மனது
மெளனமாய் சொல்கின்றது
வாழ்க்கை இழந்தவுனக்கு
வாழ்க்கை தருவோருக்கு
வாரி வழங்கவேண்டிய நீ
வாரி வாங்கிடும்ம்
காரியம் செய்கின்றாயே
அடே போடா

ஆண் விபச்சாரா..."

   
'தங்கமான புருஷன்' என்றொரு கவிதை தாய் மனைவி தந்தை என்ற உற‌வுகளின் மத்தியில் 'தங்கமான புருஷனாய் எப்போது தெரிவேன் என்ற ஆதங்கமாய் வரிகள் ஒவ்வொருவருக்கும் ஏற்றாற்போல சிந்தையிலும் எதிர்பார்ப்பிலும் வேறுபட்ட அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப வாழ சிரமப்படும் ஓர் ஆணின் அவஸ்தை இக்கவிதையில். இதேபோல பெண்களின் உள்ளத்து உணர்வுகளையும் அவர்களது பிரச்சனைகளையும் அவர்களுக்கான பாராட்டுக்களையும்கூட இந்நூலின் பல கவிதைகள் சுமந்துவந்துள்ளது. 

நிஜங்களை வெளிப்படையாக சொல்லிக்காட்டிய வரிகள் போலித்தனங்களில்லாத உணர்வுகள் நகரத்து புகையில் மாசுபடாத இயற்கையான காற்று குற்றங்களை மூடிமறைக்காத வெகுளித்தனமான போக்கு என ஆரோக்கியமான நூலாக யோ.புரட்சி அவர்களின் 'எதிர்வீட்டு நாயும் என் ஏழை நாயும்' கவிதை நூலினை கூறலாம் ஒரு சில விடயங்கள் அவரது கன்னித்தொகுதியினைப்போலவே காணப்பட்டாலும் கவிதைகளில்  மிகப்பெரிய மாறுதலும் மகத்துவமும் காணப்படுகின்றது. கவிதை எழுதப்பட்ட நேரவிடயங்கள் வாசகர்களின் கருத்துப்பதிவுகள் ஒரு ரசிகரின் கடிதம் நன்றிக்கூறல் போன்றன பரீட்சயமான விடயங்களாக இந்நூலிலும் இடம்பெற்றிருப்பது இத்தொகுப்பின்மீதான எதிர்பார்ப்பில் ஓர் ஏமாற்றத்தினை தருகின்றது

பெயருக்கேற்றாற்போல பசுமையான அட்டைப்படத்தினை தாங்கிய இந்நூலினை கவிஞர் தன் தங்கைக்கு சமர்ப்பித்திருக்கின்றார் இத்தங்கையே 6ம் கவிதையில் தலைப்பாகி நம் கண்களையும் ஈரப்படுத்தியவர் என்பது வாசிப்பவர்களுக்கு புரியும். 

சமகாலத்தில் வெளிவந்த நூல்களில் இந்நூல் வித்தியாசத்தை உணர்த்துகின்றது வாசித்தலுக்கு ஏற்றதாகவும் ஆவணப்படுத்தக்கூடிய தகுதியினையும் பெற்று தற்போது புத்தகசாலைகளில் காத்துநிற்கின்றது உங்களின் வரவுக்காய். தரமான ஓர் வாசிப்பனுபவத்தினை எதிர்பார்க்கும் வாசகர்களுக்கு உன்னதமான படைப்பே இக்கவிதை நூல் என முன்மொழிகின்றேன். இன்னும் பல புதிய முயற்சிகளோடும் வேறுபாடுகளோடும் இதுபோன்று நிதர்சனங்களை சுமந்த படைப்பாகளை ஈழத்து இலக்கிய வரலாற்றுக்கு வரப்பிரசாதமாய் பிரசவிக்கவேண்டுமென கவிஞர் யோ.புரட்சி அவர்களுக்கு வாழ்த்துக்களை சமர்ப்பிக்கின்றேன்.

நன்றி.


நூல்:                                              எதிர்வீட்டு நாயும் என் ஏழை நாயும்' கவிதை நூல்
ஆசிரியர்:                                     யோ.புரட்சி
நூல் வெளியீட்டு தினம்:    16.03.2014
விலாசம்:                                     வள்ளுவர் புரம்
                                                            விசுவமடு
                                                            முல்லைத்தீவு
தொடர்புகளுக்கு:                    0775892351
விலை:                                           200/= 

No comments: