http://www.oodaru.com/?p=6827
வாழபுறப்பட்டுவிட்டேன்…
Wednesday, December 11, 2013 @ 7:55 PM
த.எலிசபெத் (இலங்கை)
பெண்மையின் மேன்மையெல்லாம்
தென்றல் கலைத்த மேகம்போல
அநாயசமாய் அழிந்துபோகின்றது
தீக்கொண்டு சாம்பல்கண்டிடும்
தீவிரம் நெஞ்சுக்குள் பற்றியெறிகின்றது
எத்தனை காலத்துக்குத்தான்
புத்தகத்தில் மூடிய மயிலிறகாய்
பத்தினிக்கிரீடத்தை பாதுகாப்பது…
முப்பத்தைந்தை தாண்டிய -என்
முதிர்க்கன்னித்திரை கிழித்து
முழுமையாய் மூச்சுவிட்டது பிழையென்றால்
என்னைக் கிழித்த உம்
வார்த்தைக் கணைகளுக்கு
விஷந்தடவி எய்துகொண்டிருந்ததேன்…
இத்தனை வருட மிருந்தவள் -இப்போ
இஸ்டத்துக்கா செல்ல வேண்டும்
சாதிவிட்டு சாதிசென்றதற்கு
சாக்கடையில் வீழ்ந்து செத்திருக்கலாமென்ற
உங்கள் அற்பங்கள் என்னையொன்றும்
அழித்துவிடுவதில்லை…
மதம்மீறியது பிழையென்றால் -நீங்கள்
மருமகளுக்கு பதிலாக
மனையுடன் சேர்ந்த லட்சங்களை கேட்டதேன்??
சாதிக்கலந்தது சாபமென்றால்
சீதனத்தை மட்டுமே நீவீர்
தேடியதும் தீண்டாமைதான்
காதல் பாவமென்றுதானே
இத்தனை வருட காத்திருப்பு
அதற்கு உங்களால்
முதிர்க்கன்னியென்ற
முக்காட்டை மட்டுமல்லவா போர்த்தி
மூழ்கடிக்க முடிந்திருந்தது
வேர்கள் வெளிக்கிளம்பிய பின்னுங்கள்
வேலிகளுக்கிங்கு வேலையில்லை
மனம் பொறுக்குமளவுக்குங்கள்
சுடுசொற்கள் இருந்ததில்லையே அதனால்தான்
மனச்சிறைக்குள் மாண்டுபோயிருந்த
மாங்கல்யத்தை மருந்தாயிட்டுக்கொண்டேன்
வாலிபவேட்கையில் நானின்று
வரம்புமீறி காதல்செய்யவில்லை
காலத்திடம் சிக்கிக்கிடந்த சில
முடிச்சுக்களை அவிழ்த்துவிட்டிருக்கின்றேன்
அவ்வளவுதான் ஆனந்தப்பட்டுக்கொள்ளுங்கள்
காலம்முழுக்க கன்னியாகவே
வாழவிட்டிருப்பீர்களா
மூச்சுக்கு மூச்சு
முடிந்திடா கேள்விகளால் என்னை
மூர்க்கத்தனமாயல்லவா கொன்றிருப்பீர்கள்
இரண்டில் ஒன்று
எடுக்கும் நேரத்தில்தான்
இதயமறிந்த இவன்வந்தான்
வாழ்வோடு போராடி சாவதிலும்
சாவோடு போராடு வாழ்வதென்ற முடிவோடே
சாதியினை கடந்து
மதத்தினை மறந்து
மனிதத்தோடு மட்டுமே
வாழபுறப்பட்டுவிட்டேன்…
எப்போது கல்யாணம்
ஏனின்னும் கல்யாணம்
சரிவரவில்லை என்ற
ஏளனங்களை தவிர்க்க
உங்களிடமிருந்து உத்தரவாதம்
வழங்கப்பட்டிருந்தால்
என்னாலும் வாழ்ந்திருக்கமுடியும்
காலமெல்லாம்
முதிர்க்கன்னியாகவல்ல
முழுக்கன்னியாக….
No comments:
Post a Comment