இழந்துபோனதற்காய்
இடிந்து போகாதே
விழுந்து போனதற்காய்
விரக்தி கொள்ளாதே
காலம் பதில்சொல்லுமென்றும்
காத்திருக்காதே
கோலமாய் போகுமட்டும்
பொறுமை கொள்ளாதே
சிரித்தாலும்
பழிசொல்லும் நீ
முறைத்தாலும்
பலிசொல்லும்
தலைகீழாய் மாற்றிவைக்கும்
தடுக்காமல் நீயிருந்தால் உலகம்
வலைவிரித்து காத்திருக்கும்
விழிக்காமல் நீயிருந்தால்
கையில் எடுத்துக்கொள்
உன்னுடைய காலந்தனை
கால்களுக்கு சொல்லிக்கொடு
உனதான பாதைகளை
தடைகளை கடந்துபோ
தடுப்புக்களை உடைத்தெறி
தன்மானக்கவசமணிந்து
தனித்துவமான பயணத்தைக்கொள்
கண்ணீர் வழிகளை
கண்காணித் தறி
கண்களை கசக்குமுன்
கனவுகளை பகுத்தறி
ஏணிகளை கண்டவுடன்
ஏறிட துணியாதே
ஏற்றது உனக்கென்றால்
எள்ளளவும் தயங்காதே
ஏனிந்த நிந்தையென்று
எப்போதும் நினையாதே
தானாயழிந்த சிந்தைதனை
வீணாய்ப்போக விடாதே
உனக்குள்ளே எப்போதும்
உயிருள்ள கலையுண்டு
தயங்காமல் நீமுயன்றால்
தரணியிலில்லை உனைவெல்ல
இழந்து போனதற்காய்
இடிந்து போகாதே!!
No comments:
Post a Comment