அல்லல்கள் எமக்கொன்றும்
ஆச்சரியங்களில்லை
அழுகைகள் இங்கொன்றும்
அதிசயங்களில்லை
சொத்துக்களை இழந்ததாலா
சோர்ந்துபோனேமென்றீர் இல்லை
சொந்தங்களை பறித்ததாலல்லவோ
சோபையிழந்துபோனோம்
அன்னையை தந்தையை
அண்ணனை தம்பியை தொலைத்து
அநாதைகளானோம் மகுடமாய்
அகதிகளாயுமானோம்
கணவனை மனைவியை
கண்ணான எம்சொந்தங்களை
கண்ணீருக்குள் தொலைத்திட்டு
கதி(ளை)யிழந்துபோனோம்
கண்ணிவெடிகளுக்கு எம்
கால்களை கொடுத்தோம்
மண்ணைத்தின்றிடும் குண்டுகளுக்கு
கண்களையும் கொடுத்தோம்
அங்கங்கள் ஒவ்வொன்றையும் கொடுத்துவிட்டு
எஞ்சிய உயிரோடு இதோ
ஏதிலிக்கூட்டங்களாய்
ஏதுமறியாமல் நிற்கின்றோம்
பூமிக்குள் எங்கள்
புன்னகையை புதைத்துவிட்டு
உதடுகளை பொருத்தச்சொல்வதில்
நியாயமென்ன?
அப்பாவிகளெமது
அமைதியை குடித்துவிட்டு
ஆரவாரப்பூக்களை அள்ளித்தெளிப்பதில்
அர்த்தமென்ன?
கருவாட்டுக்குள் மொய்க்கும் ஈக்களாய்
உருமாறிப்போன எம்முலகுக்கு
ஒளிதேடியே களைத்துப்போனோம்
வருவோர் போவோரின் வார்த்தைகளுக்குள்
முடிந்துவைத்துள்ள மூச்சுக்காற்றின்
முடிச்சுக்களை அவிழ்த்துவிடுங்கள்
நாங்கள் சூறாவளியாகியுமை
மூழ்கடித்திடமாட்டோம் எங்கேனும்
முயல்கள் சிறுத்தையை
விழுங்கிவிட்டதாய் இதுவரை
கதைகளேதும் வெளியாகவில்லை
பாவத்தீயை பற்றவைத்துவிட்டீர் இனி
சாபக்காயங்கள் ஆறிவிடப்போவதில்லை!!
No comments:
Post a Comment