**** **** **** **** **** ***** **** ***** **** **** **** **** ****
இந்த நிமிடங்களில் என் மன அழுத்தங்கள் எனை கொன்றுபோட்டிருக்கவேண்டும் இறைவனின் மாபெரும் இரக்கத்தினால் உயிரை சிறைப்பிடித்து வைத்திருக்கின்றேன் என நினைக்கின்றேன். இதயத்தை திறக்கமுடியாத நிர்ப்பந்தம் எனக்கு, அப்படி மற்றவரிடம் என் உள்ளக்கிடக்கையை உடைத்துக்காட்டினால் சிலநேரங்களில் அது அவர்களுக்கு சலிப்பையோ அல்லது என்மீது வெறும் அநுதாபமோ இல்லை அவர்களுக்கு ஒரு பாரமாகவோ போய்விடும் என்ற ஒரே காரணத்துக்காக என் சுமைகளை நானே சுமக்கவேண்டுமென்ற எண்ணம் எனக்கு அமைதியை தருகின்றது ஆனால் சிலநேரங்களில் அவ்வழுத்தங்களை குறைப்பதற்காகவே என் பேனைகளுக்கு சிரமங்களை கொடுத்துக்கொண்டிருப்பேன் அவை அநேகமாக கவிதையாகவே பதிலையும் தந்துவிடும். அந்த ஆறுதலே என்னை இயல்பாக இயங்கவைத்துக் கொண்டிரு க்கின்றன எனலாம்.
சின்ன சின்ன விடயங்களுக்கும் சோர்ந்துவிடும் இயல்பைக்கொண்டாலும் அதனை அடுத்தடுத்த நிமியங்களுக்குள் மறந்திட முயற்சிப்பேன் ஆனாலும் வாழ்க்கையின் அடித்தளம் ஆனந்தம் என்று நினைக்கும் விடயங்களில் அவ்வாறான மனப்போக்கை ஏற்படுத்திக்கொள்ளமுடியவில்லை. எத்தனையோ அடிகளுக்கூடாக பயணிக்கும் என் வாழ்க்கைப்படகு சிலநேரங்களில் கவிழ்ந்து என்னை கலங்கடித்துவிடும் அச்சந்தர்ப்பங்களில் நான் மீண்டு வருவதற்கு நீண்ட நாட்களை எடுத்துக்கொள்வேன்.ஒரு சிறிய விடயத்திற்கும் என்னில் காணப்படும் அதிகமான எதிர்பார்ப்புதான் காரணமோ என்று தோன்றுகின்றது
அவ்வாறான ஓர் ஆழமான காயத்தை ஏற்படுத்திய விபத்தை அண்மையில் சந்தித்தேன். எதை என் கனவாக, வாழ்வாக இன்பமாக இதயமாக ஜீவனாக இன்னும் உலகத்தில் மிக உயர்ந்த விடயமாக எண்ணியிருந்தேனோ அது என்னை விட்டு நான் நினைத்திடாத அதிகதூரத்துக்குள் சென்று ஒளிந்துகொண்டது. வெறும் கண்ணீரால் சரிசெய்திட முடியாமல் நான் தவிப்பதும் இதயத்தின் அத்தனை வலுவையும் இழந்து நிர்கதியாக நிற்பதும் மற்றவர்களுக்கு முன்னால் என்னை சாதாரணமாக காட்டிக்கொள்வதும் எனக்கு மிகச்சிரமத்தை ஏற்படுத்தியது அப்போது மரணத்தின் ஏக்கம் மட்டுமே என்னை தாலாட்டிக்கொண்டிருக்கும் ஆனாலும் கோழைத்தனத்தின் வெளிப்பாடாக அதனை நான் அடக்கிக்கொன்றுவிடுவேன்.
வாழ்க்கை என்றால் என்ன? அதனை எவ்வாறு வாழ்வதனால் சந்தோசமாக இருக்கமுடியும் எதனை தவிர்த்து எவ்வாறான விடயங்களை கடைப்பிடித்து வாழ்ந்தால் எமக்கான நிறைவை எட்டமுடியுமென்ற விடயங்களை நான் இதுவரை சிந்தித்ததே இல்லை ஏனெனில் அதனை சிந்திக்கவேண்டுமென்ற சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அன்பான அழகான ஓர் குடும்பம் என்ற ஒன்றுமட்டுமே என்னை எந்தவித எண்ணங்களுக்கும் இழுத்துச்செல்லவிடாது தடைசெய்துகொண்டிருந்தது ஆம் வெறும் அன்பாலும் பாசத்தாலும் அரவணைப்பினாலும் மட்டுமே நிறைந்திருந்த என் குடும்பத்தாரிடம் அதிகமான பாசமும் நேசமும் கொட்டிக்கிடந்ததை இப்போதுதான் என்னால் முழுமையாக உணரமுடிகின்றது காரணம் இந்த உலகத்துக்குள் கொஞ்சம் தலையைப்போட்டுப் பார்த்ததால்தான்.
உலகம் ரொம்ப பெருசு மட்டுமில்லை ரொம்பவும் ரவுசு மிக்கதுதான் இங்குள்ள எதிர்பார்ப்புக்கள் மிக விசித்திரமாக இருக்கின்றது. ஒன்றை பெறுவதற்கு எதை வேண்டுமென்றாலும் செய்யத்துணியும் மனங்கள், வெறும் பணத்துக்காகவே பழகும் உறவுகள், நட்புகள், பா(வே)சங்கள் என பட்டியலிட்டு வைக்கலாம். இதெல்லாம் எதற்கு? ஏன் இப்படி நடந்துகொள்கின்றார்கள் என நினைக்க மலைப்பாக இருப்பதோடு வேதனையாகவும் இருக்கின்றது உண்மையான அன்பு பாசம் உறவுகளுக்கு இந்த உலகில் பெறுமதியற்றுப்போவதை நினைக்கையில் மனம் வெம்பி வெடிக்கின்றது. ஏன் எல்லா விடயங்களும் "பணம், பதவி, பகட்டுக்களுடனே முடிந்துவிடுகின்றது? அதைத்தாண்டி மனித மனங்களை உணரவும் பெறுமதியான உறவுகளை அணுகவும் முடியாமல் எதனை அடைவதற்காக மனிதம் மாண்டு மற்றவர்களையும் கொன்று வாழ்கின்றது? இந்த வினாக்களுக்கு பதிலற்று இன்றைய நாட்களில் மிகவும் மனம் குழம்பிப்போயுள்ளேன் இதற்கு விரைவில் பதில் கிடைக்குமா?????
நான் ஏழை. என்னிடம் எந்த பூர்வீக சொத்துக்களோ, வசதிகளோ இல்லையென்பதனை முதன்முறையாக உணர்ந்த சந்தர்ப்பம் இப்போதுதான் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் ஆனால் இதுதான் நிஜம். மூன்று வேளையும் போதுமான போஷாக்கான உணவு, ஆடைமுதல் ஆசைப்பட்ட அனைத்தும் கிடைத்த சந்தர்ப்பங்கள் கல்வி கண்டிப்பு தம்பியின் சண்டை தங்கையின் குறும்பு என் குழப்படிகள் அப்பாவின் பிரம்படிகள் அம்மாவின் அனுசரிப்பு என்று அனைத்தும் அளவாக என எங்கள் மட்டத்தில் ஒரு வசதியான வாழ்க்கை. எதிர்காலத்திற்கென எதனையும் சேமிக்காத குறைகூட இன்றுதான் பெரிதாக அதுவும் பூதாகரமான குற்றம் என தெரியவந்தது. எங்கள் ஒவ்வொருவருக்கும் தகுதிக்கேற்ற தொழில், வரும்படிக்கேற்ற வாழ்வு என அமைதியாக பயணித்த படகுக்குள் தகுதி என்ற பெருஞ்சூறாவளி என் வாலிபத்திலும் மிகவேகமாய் சுழற்றியடித்து என்னை நிலைகுலையச்செய்தது
அன்பு என்றால் என்ன? இன்றைய என் கேள்விக்கு பதிலில்லை மனம் சம்பந்தப்பட்டதாக உறவுகளின் முக்கியத்துவமாக எனதளவில் கருதப்பட்ட இந்த அன்பு ஒன்றுமில்லாததாய் நிற்கின்றது. என் முழுமையான விடயங்களை பகிரவும் வெளிப்படுத்தவும் நான் தெரிந்துகொண்ட விடயத்தில் நான் தவறிவிட்டேனா இல்லை ஏமாந்துவிட்டேனா என்று தெரியவில்லை ஆனால் என் அன்பை உணரவில்லை என்றுமட்டும் தெரிந்துகொண்டேன் அதுவும் உறவுகள் வெறும் பணத்துடனே மட்டுப்படுத்தப்பட்டுவிடுகின்றது என்ற பெரிதான தத்துவார்த்தத்தையும் கற்றுக்கொண்டேன். அதற்காக இந்த உலகமே பணந்தான் வாழ்க்கை அதுசம்பந்தப்பட்டவைகள்தான் சந்தோஷம் என கூக்குரலிட்டாலும் என் எண்ணங்களளவில் அன்பு ஒன்றுதான் உயர்ந்தது என்ற கோட்பாட்டை மீறமாட்டேன் அதற்காக இதனை போதிப்பதற்கும் இறங்கிவிடமாட்டேன் விழலுக்கு நீர் இறைத்து நான் வியாதிப்படவிரும்பவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகச்சொல்லிட முடியும் இறுதியில் அன்புதான் ஜெயிக்கும் ஏனெனில் என்னதான் ஒருவன் ஆஸ்தியிலும் ஆடம்பரத்திலும் வசதியிலும் சலுகைகளிலும் புரண்டாலும் ஒரு நாள் நிச்சயம் இந்த அன்புக்காக ஏங்கிடும் காலம் வரும் இதுதான் இயற்கை இதுதான் இறைவனின் விதி.
சரி அதுபோகட்டும் காதலுக்கு ஏனுங்க இந்த தகுதி அந்தஸ்தெல்லாம் பார்க்குறீங்க? கல்யாணம் தான் பெரியவர்களால் பார்த்து செய்யப்படுவதால் சம்பிரதாயம் சடங்கு என்று ஆயிரம் காரணங்கள். ஒருவருக்கு ஒருவர் பிடித்து ஒருவருக்கொருவர் ஒத்துப்போகும் தன்மையுடன் இருந்து இவர் நம் வாழ்க்கைக்கு பொருத்தமானவர் என்ற நிச்சயம் வந்தபின் ஏன் திடீரென்று கல்யாணம் நெருங்கும்போது மனம் வெறுத்து பணப்பொருத்தம் பார்க்கின்றீர்கள்? உங்கள் காதல் புதுமைதானுங்கோ. தனக்கு இப்படித்தான் ஒரு வாழ்க்கை அமையவேண்டுமென்று நினைத்தால் அதற்கு ஏற்றபடி ஒருவரை சந்தித்தித்தாலோ அல்லது அமைந்தாலோ இணைவதுதானே நியதி? அதைவிட்டு எல்லாம் முடிந்து காதலும் கசக்கும் தருவாயிலா உங்கள் ஆளுமைகளையும் ஆசைகளையும் அளவெடுத்து அமைத்திட முனைவீர்கள்? வாழ்க்கையின் அடித்தளமே அன்பிலும் அனுசரிப்பிலுமே இருப்பதை நம்மில் பலபேர் உணர்ந்துகொள்ளாமலில்லை ஆனால் உணரப்படுவதற்கு காலதாமதம் ஏற்பட்டுவிடுகின்றது உணர்ந்திடும்போது எல்லாம் காலாவதியாகியும் விடுகின்றது.
எது எப்படியோ அன்பில்லா எல்லாமே அர்த்தமில்லா ஆதாயங்கள்தான். உங்கள் உறவுகளை நிச்சயித்துக்கொள்ளுமுன் சிந்தித்து செயற்படுவது நன்று ஏனெனில் பாதிக்கப்படுபவரின் நிலையோ அதோகதியாகப்போய்விவது மட்டுமல்ல அவரின் வாழ்க்கையே சிலநேரங்களில் கேள்விக்குறியாகிவிடும்
அடடா எங்கேயோ என் பிரச்சனையில் ஆரம்பித்து எதிலோ கொண்டுவந்து முடித்துவிட்டேன் உண்மைதானுங்க எதாவது ஒன்றை பேசத்துவங்கினால் சந்து சாக்கடை என்று வேறுஎதிலோ வந்துமுடிந்துவிடுவது இயற்கைதானே அதைத்தான் என் பேனாவும் செய்துவிட்டது ஆனால் இதில் இரண்டு நன்மை இருக்கின்றது ஒன்று என் மனது கொஞ்சம் இலேசான திருப்தியை உணர்ந்ததோடு சில பிரச்சனைகளை மேலிடையாக தொட்டுக்காட்டிய இன்பமும் இதயத்தில் ஒட்டிக்கொண்டது.
நன்றி
மீண்டும் ஒரு பிரச்சனையில் சந்திப்போம்
1 comment:
மனக்கிடக்கையை பகர்ந்துள்ளீர்கள் உங்கள் எழுத்துக்கள் உங்களுக்கு அமைதியை கொடுப்பதுபோல எமக்கும் அது ரசனைக்கும் வாழ்க்கைக்கும் இனிமை சேர்க்கின்றது வாழ்த்துக்கள்.
Post a Comment