உருண்டுவிழும் ஆலங்கட்டியாய்
திரண்டு உதிர்ந்த அத்துளிகள்
உருண்டை விழிகளை நிறைத்து
உள்ளக்காயத்தை ரணப்படுத்திக்கொண்டிருந்தது
இயலாமைகளை சுட்டிக்காட்ட
இமையிதழ்களில் கதறுவதே- இவளின்
வழமையாகிப் போனதில்
இப்போதெல்லாம் உடன்பாடேயில்லை
வெறும் ஏமாற்றங்களிலும்
வெறுமையான உறவுகளினாலும்
வெளிரிப்போன அவளுணர்வுகளில்
வெளித்தள்ளிக்கொண்டிருந்தது ஒருதுளிர்
அன்பெனும் முகமூடிதரித்த
அத்தனை திரைகளும் விலகியபின்
அவளுக்கென்ற ஒற்றைநாதம்
அசரீரியாய் ஒலித்தது 'நம்பிக்கை'யென்று
பயணங்களுக்கு மட்டுமுதவும் பாதணியாய் -அவளை
பயன்படுத்திக்கொண்ட சில பாதைகள்
படிவாசலில் கழற்றிவிட்டு சென்றதைக்கூட
பாடங்களுக்கான விளக்கங்களாவே ஏற்றுக்கொண்டாள்
இனியவள் வாசலுக்குள் கோலங்களின் அலங்கரிப்பில்லை
இனியொரு வார்த்தையிலேனும் காயங்களின் பரிசீலிப்பில்லை
தனியொரு சாம்ராஜ்யமுருவாக்கி தரணிக்கெலாம் சொல்லிடுவாள்
தன்னம்பிக்கை உண்டெனில் தாக்கமெல்லாம் பூக்களென்று!!
No comments:
Post a Comment