Sunday, December 13, 2015

பறவை

சிறகுள்ள பறவை
எல்லை தாண்டியும் பறக்கும்
மனித மனம்




Friday, December 11, 2015

ஊடறு இணையத்தில் (10.12.2015)



ன்றும் மழைநாளாய்ப் போனது

   

த.ராஜ்சுகா -இலங்கை
ஒற்றைக்குடையில் உன்னோடு
ஒட்டிக்கொண்டு நடக்குமந் நாளுக்காகவே
மழை வர(ம்) வேண்டிய‌
நாட்களும் இருந்தது…
பாதி மழையிலும்
மீதி விழியிலுமென்று நனைய‌
மனதுக்குள் அச்சாரலுக்காகவே
மழைவிரும்பிய நாட்களும் இருந்தது…
அரைமணி நேர அடைமழைக்குப்பின்
அவலங்கள் எட்டிவிடுமிந் நாட்களில்
ஆசை குறைந்தே போனது என்
ஆனந்தமான மழைநாட்களில்…
வீதியெங்கும் விலகமுடியா
வாகன நெரிசல்கள்
மீதிவழியை கடக்கமுடியா
மாபெரும் திண்டாட்டங்கள்…
பளிச்சென பள்ளிசெல்லும் மாணாக்கரும்
பாதையிலே செல்லும் மற்றோரும்
பயந்தே பயணிக்கவேண்டியதாயிற்று
சலாரென வீசியடிக்கும்
சேற்றிலிருந்து மீண்டுகொள்ள…
.ஆற்றங்கரையருகிலும்
அடுக்குப்பெட்டி வீடுகளிலும்
அன்றாடங்காய்ச்சிகளின் நிலை
அதோ கதிதான்…
ஏழ்மைக்கூரைகளில்
ஏராளமாய் துளையிடும்
மழைக்கரங்கள்
வீழ்ந்து உயிர்பறிக்கும் மண்மேடுகள்
இரக்கமில்லாது சுறுட்டிக்கொண்டுபோகும்
வெள்ளச் சக்கரங்கள் என‌
வெள்ளை மனதை காயப்படுத்திவிட்டிருந்தது
இந்த மழைக்காலம்….
என் ஒற்றை இதய‌
ஆனந்தத்துக்காய் இறைவா
அதிகமாய் கொடுத்துவிடாதே
அகதிகளாய் போகுமெம் மக்களுக்கு
அதிக இடமில்லை இவ்வையத்தில்…


இறவா என் தேடுதல்மட்டும்

எனக்கான கதவுகள் மூடப்பட்டும்
எதிர்பார்ப்பின் கைகள் நிறுத்தப்படவேயில்லை...


முயற்சிகள் முழுமூச்சாய் பறந்தாலும்
முட்டுக்கட்டைகள் அங்கங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது..


கனவுகள் நீண்டுகொண்டிருப்பினும்
இரவுகள் இன்னும் அப்படியேதான்....


பாதங்களில் வேகத்தை கூட்டினும்
பாதைகள் பாறைகளால் மறைக்கப்பட்டேயிருக்கின்றது...


வெறித்தனமான எண்ண அலைகள்
வெளிக்கிளம்பியவுடனேயே வெப்பக்குகை திறக்கப்படுகின்றது....


பார்வைக்கணைகளால் அராஜகம் எரித்தும்
பக்கத்திலேயே பாதகங்கள் நடந்தேறிவிடுகின்றது...


இன்னுமின்னும் இம்சைகள் சூழ்ந்திடினும்
இறவா என் தேடுதல்மட்டும் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றது....


Thursday, December 10, 2015

“நம்மவர் படைப்புக்கள் சமூக வெளியில் சளைத்தவைகள‌ல்ல”-ஓர் அநுபவக்குறிப்பு - (கல்குடா நேசன் இணையத்தில் 04.12.2015)

http://kalkudahnation.com/



“நம்மவர் படைப்புக்கள் சமூக வெளியில் சளைத்தவைகள‌ல்ல”-ஓர் அநுபவக்குறிப்பு inShare ராஜ் சுகா இலங்கை படைப்புக்களுக்கும் இந்திய படைப்புக்களுக்குமிடையிலே, தரத்தில் ஒரு போட்டி நிலை காணப்படுவதென்பது பற்றி காலங்காலமாக பேசப்பட்டு வருகின்றது. இலக்கியமோ, சினிமாவோ, சமையலோ எதிலுமே இந்திய தரத்துக்கேற்ப எமது ரசனைத்தன்மை  காணப்படுகின்றது. அந்த வகையில் என்னைப் பொறுத்த வரை, இந்தியப் படைப்புக்களுக்கு ஈழத்துப் படைப்புக்கள் ஈடுகொடுக்க முடியாதளவுக்கு வலிமையற்றவையல்ல சகலவித கனதியோடும் காத்திரத்தோடுமே படைப்புலகை வலம் வருகின்றது.ஆனால், வாசக இதயத்துக்குத்தான் அத்தனை வலிமை இல்லையோ என நினைக்கின்றேன். குறுகிப்போன மனநிலை காணப்படுகின்றதோ என்ற எண்ணம் அடிக்கடி எனக்குள் எழுந்து மறையும். எம்மவர்கள் என்ன செய்திருக்கின்றார்கள் என்பதனையே பார்க்க முடியாமலும் அப்படிப் பார்த்தாலும், அதைப் பற்றி சிலாகிக்கவோ பெருமைப்படவோ பாராட்டவோ முடியாதளவிற்கு மன இறுக்கமாகவே பலர் இருப்பதை மறுப்பதற்கில்லை.

இலங்கை தேசத்தில் கலைத்துறையைப் பொறுத்த வரையில், இசை, இலக்கியம், நடனம், ஓவியம், சினிமா போன்று பல்வேறு துறைகளிலும் பாண்டித்தியம் பெற்றவர்கள், சிறப்பான திறமை கொண்டவர்கள் தாராளமாகவே இருக்கின்றார்கள். ஆனால், அவர்களைச் சமூகத்துக்கு கொண்டு செல்ல சரியான வழி முறைகள் தான் காணப்படவில்லை.ஒரு கலைப்படைப்பு சாதராண ஒரு குடி மகனிடம் (வாசகன்) சென்றடைந்து சிலாகிக்கப்படுவதையே அப்படைப்பின் வெற்றியென்பது என் தனிப்பட்ட கருத்து. ஒரு விமர்சகனாலோ அல்லது விருதுகள், சான்றிதழ்கள், பரிசுகள், பாராட்டுக்களாலோ தீர்மானிக்கப்படுவதை விட ஒரு வாசகனால் பாராட்டுதலுக்குட்படும் படைப்பே சிறந்த படைப்பென அடையாளப்படுத்த விழைகின்றேன். மாற்றான் தோட்டத்து மல்லிகை மணப்பது போல, இக்கரைக்கு அக்கரை போல நம் படைப்புக்கள் பேசப்படுவதும் ரசிக்கப்படுவதும் பாராட்டப்படுவதும் எண்ணிக்கையில் குறைவே. காரணம் சாமன்ய ஒரு ரசிகனால் ரசிக்கப்படாததே காரணம் அவனிடம் சென்று சேராததே அதன் தடை. ஆனால், எனது இந்தக் கருத்துக்களை நீண்ட நாட்களாக மனத்திரையில் மூடப்பட்டிருந்ததை வெளியில் கொண்டு வரும் வகையில் ஒரு சந்தர்ப்பம் எனக்கு உருவானது.


 எனது சக ஆசிரியர் ஒருவரின் வீட்டில் (சகோதர மொழியைச் சேர்ந்தவர்) தமிழ்ப்பெண் ஒருவர் வேலை செய்கின்றாராம். இந்த ஆசிரியைக்கு மொழிப்பிரச்சனை காரணமாக அந்தப்பெண்ணுக்கு நல்ல புத்தகமோ பத்திரிகையோ வாங்கிக்கொடுக்க முடியவில்லை என குறைபட்டுக்கொண்டே எனது உதவியை நாடினார். நானோ என்னிடமிருந்த இலங்கை படைப்பாளிகளின் சிறுகதை நூல்களை கொடுத்தனுப்பினேன். முதலில் 2 நூல்களையே அனுப்பினேன் வாசகரின் ரசனை எப்படியென்று தெரியாததினால். அது எழுத்தாளர் ரிஸ்னா அவர்களுடைய “வைகறை” மற்றும் யோ.புரட்சி அவர்களின் ” ஆஷா நாயும் அவளும்” சிறுகதை நூல்களே. மூன்று நாட்களுக்குப்பின் புத்தகம் திரும்பி வந்தது. அதனோடு ஒரு விருது பொதியும் சேர்த்தே. ஆமாம் அந்த வாசகியின் சிலாகிப்பும் ஆனந்தமும் ரசனையுமே அந்த விருதுகள். “எல்லா கதைகளும் உண்மைக்கதைகள் போலவே அவ்வளவு நன்றாக இருந்தது. இது போல இன்னும் புத்தகங்கள் இருந்தால் கோபிக்காமல் தந்துதவுங்கள்” என்பதே அச்சான்றித‌ழின் கோரிக்கை. அதன் பிறகு எழுத்தாளரும் கவிஞரும் ஒலிபரப்பாளருமான அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களுடைய “ஒரு சுரங்கை பேரீச்சம்பழம்”  நூலோடு இன்னும் சிலவற்றை அனுப்பினேன். அந்தப்பெண்ணுடைய தொழில் சூழல் சாதகமாக அமைந்தது. இன்னொரு நன்மையாக முடிந்தது. ஆக, ஒரு படைப்பை ரசிக்கவும் விமர்சிக்கவும் படிப்போ பட்டமோ பாண்டித்தியமோ அவசியமில்லை. நல்ல வாசிப்பறிவும் ரசிக்கும் கலையும் சிலாகிக்கும் பெருந்தன்மையும் இருந்தாலே போதும் நம்படைப்புக்கள் சிகரங்கள் எட்டிவிட. இந்த தகுதிகளை நான் இந்த வாசகியிடம் கண்டேன்.


 சாதாரண கல்வித்தரம் கொண்ட  ஒரு நல்ல வாசகியை கண்டு கொண்டதில் எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. எனது படைப்புக்களுக்கு கிடைத்த பாராட்டைப்போல உள்ளம் நிறைந்து போனேன். இது போல, இலங்கை படைப்புக்கள் சகல மட்டங்களிலும் உட்புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி நிலைத்திட வேண்டும். நமது மக்களிடம் நமது படைப்புக்கள் நன்மதிப்பைப் பெற வேண்டும். தேடித்தேடி பெற்றுக்கொள்ளக்கூடிய மனநிலையை உருவாக்க வேண்டும் என்பதே என் மேலோங்கிய அவா. இந்த ஆசையை சமூக மட்டத்துக்குக் கொண்டு செல்லக்கூடிய அனைவரும் பங்கெடுத்துக்கொள்ளுமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

Wednesday, December 9, 2015

பார்வையால் நீயெனை தொட்டாலே...



அலைகள் தாளம் போடுது
அருகில் நீவந்து நின்றாலே
மலைகள் பாடல் பாடுது
மயக்கும் விழிகள் பட்டாலே...

பூக்கள் குலுங்கிச் சிரிக்குது
பூரிப்பு உனில் கண்டாலே
பாக்கள் கூடப் படிக்குது
பார்வையால் நீயெனை தொட்டாலே...

கருமேகம் காணாமல் போகுது
கலைவானம் நீயிங்கு வந்தாலே
தெருவெல்லாம் விழாக்கோலம் பூணுது
தெளிதமிழ்க் காதலாலெனை சுட்டாலே......




ஏற்றிவிட நீதான் ஏணி


அறம் செயத் துணி -அது
மனம் காக்கும் துணி
தரம் பார்த்து அணி -உடை
தந்திடும் முதலா மணி....


பெறுமை தீயதோர் பிணி
கொன்றால் நீயுமோர் மணி
பொறுமையை நித்தமும் திணி
புகழுவார் உன்னையு மினி....



கைக்கு பலந்தான் பணி
வாழ்வுக் கதுதான் கனி
'தை'க்கு அழகுதான் பனி
தகாததை சீக்கிரம் தணி....


ஏழைக்கும் வேண்டுமோர் காணி
ஏற்றிவிட நீதான் ஏணி
வாழையை பார்த்துனை பேணி
வாழ்வினை அமைத்திட வாநீ....!!



Monday, December 7, 2015

அலறியழுவீர்கள்!!



உரிமை இல்லாத இடத்தில்
உணர்வுகளை கொட்டாதீர்கள்
அருமை தெரியவில்லை யென‌
பின்னாளில் அலறியழுவீர்கள்

வாழ விடுங்கள்



ஆறு குளம் குட்டைகளையும்
வாழ விடுங்கள்
கூடுகட்டி குடிசையமைக்காதீர்கள்
பாடைகட்டி பரிதவிக்கவிட்டிடும்!!

மனிதத்தை





அங்கங்கே தேங்கிநின்ற‌
மனிதத்தை
அங்கங்களாக சேர்த்தமைத்தது
மழைவெள்ளம்!!

ஊடறு இணைய இதழில் கவிதை (04.12.2015)

http://www.oodaru.com/?p=9371


ஆயத்தமாகிக்கொண்டிருக்கின்றேன்

   

த.ராஜ்சுகா -லங்கை,
திரும்பிப்பார்க்கு மொருநாள் நான்
வெறுமையாய் நின்றிருப்பேன்
உறவுகளாய் எனைச்சுற்றியிருந்த‌
வரவுகளெல்லாம் தளர்ந்திருக்கும்…..
நான் செலவழித்த நிமிடங்கள்
நடையாய் நடந்த இலட்சியங்கள்
ஓடாய்தேய்ந்த உழைப்புக்களெல்லாம்
ஓர்நாளில் ஒடுங்கிப்போயிருக்கும்…
வாலிபத்தளைப்பின் வெற்றிகள்
வாரிசேர்த்த சொந்தங்கள்
தேடிவைத்த நேசங்களெல்லாம்
தேவையில்லையென எனை ஒதுக்கியிருக்கும்….
முதியோர் இல்லமோ
முகமறியா ஓர் நிறுவனமோ என்னை
முன்னின்று நடத்தலாம் இல்லை
கைத்த‌டியெனை தாங்கலாம்…
பாகம் பிரித்துக்கொண்ட பாசங்கள்
பாராமுகம் காட்டி ஓடலாம்
பாசமூட்டி வளர்த்த அவர்கள் எனை
பாதியில்கூட நிற்கவைக்கலாம்…
ஆயத்தமாகிக்கொண்டிருக்கின்றேன்
அனைத்தையும் சந்திப்பதற்கு
அடுத்தடுத்து செயற்படுகின்றேன்
அந்த நாளை சுமப்பதற்கு…..!!!

கானல் நீரில்

கானல் நீரில்
மீன்கள் வாழ்வதில்லை
கனவு நிலையில்
கண்கள் ஜெயிப்பதில்லை!!





Friday, December 4, 2015

கவிஞர் கவித்தீபம் நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்-நேர்காணல் (04.12.2015)


http://kalkudahnation.com/





பிரதி வெள்ளி தோறும் கல்குடா நேசன் இணைய தளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது. வெற்றிகரமாக பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இந்நிகழ்ச்சியூடாக நாம் சந்திக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக எமது வாசகர்களுடன் பகிர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கின்றது. 

இதன் தொடரில் இன்று 04.12.2015ம் திகதி வெள்ளிக்கிழமை எமது “கல்குடா நேசனின் 17வது இலக்கிய நேர்காணலில்” இணைந்து கொள்கிறார் கவிஞர் கவித்தீபம் நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள். “சமூகத்தில் நடக்கும் தீமைகளைச் சுட்டிக்காட்டி சமூகக்கண்களைக் கலங்க வைக்கக்கூடிய, இதயங்களோடு பேசக்கூடிய கவிதைகள் தான் தேவை, குரல் வடிவம் கொடுக்கப்படும் கவிதைகள் இதயங்களோடு பேச இலகு வழியாக அமையும். அப்படிப்பட்ட படைப்புகளை கவிஞர்கள் சமூகத்திற்குத் தர வேண்டும்” என்ற வேண்டுகோள்களுடனும் இன்னும் பல சுவாரஸ்யங்களோடும் இணைந்து கொள்கின்றார் கவிஞர். 


01.இளம் படைப்பாளியான நீங்கள் எமது இணையத்துடன் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி. உங்களைப் பற்றி?   

நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் 

என் பெயர் நுஸ்ரி ரஹ்மதுல்லாஹ். 26.11.2015 அன்று எனது 24 வயதும் பூர்த்தியாகியது எனது தந்தை ரஹ்மதுல்லாஹ் தாய் ஜரீனா உம்மா. புத்தளத்தில் 24 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருகிறோம். நான் பிறந்தது புத்தளம் எனினும் என் தாய் தந்தையார் மன்னாரில் முசலி பிரதேச சபைப் பிரிவில் பண்டாரவெளி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகளால் விரப்பட்டு பல சிரமங்களுக்கு மத்தியில் புத்தளத்தில் வந்து குடியேறியவர்கள்.


 02. “கடல் தேடும் நதி” கவிதைத் தொகுதியினை அண்மையில் வெளியிட்டு வெற்றியும் பெற்றுள்ளீர்கள். அந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியுமா?   


நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் 

நூல் வெளியீடு என்பது ஒரு ஆசிரியனின் பிரசவம் என்பதை உணர முடிந்த சம்பவம் தான் அது. அதுவும் என் கன்னி வெளியீடு என்பதால் பல பாடங்களையும் சோதனைகளையும் தாங்கிக் கொள்ள நிறையவே சந்தர்ப்பங்கள் கிட்டின. அதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். வெற்றியோ தோல்வியோ சந்தித்து விடலாம் எனும் தைரியத்தில் தான் களமிறங்கினேன். அல்ஹம்துலில்லாஹ் வெற்றி கிடைத்தது. சந்தோஷம் தருகிறது. 


03.கவிதை தவிர்ந்த உங்களது ஏனைய திறமைகள்? 



நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் 

கலைத்துறையில் கவிதை போக சிறுகதை, குறுந்திரப்படக் கதைகள் எழுதுதல், நடிப்பு போன்றவற்றில் ஆர்வமிருக்கிறது. இது வரைக்கும் “உயிர் மடல்” எனும் குறுந்திரப்படத்தின் கதையும் அடுத்ததாக “பேச மறந்த வார்த்தை” எனும் குறுந்திரைப்படத்தின் கதை வசனம் எழுதி, நானே நடித்தும் இருக்கிறேன். பார்வையாளர்களின் கை தட்டல்களும் வாழ்த்துக்களும் அதன் வெற்றியைப் பறைசாற்றுவதாய் அமைந்தது. அதற்கும் மேலதிகமாக கணனி வடிவமைப்பில் ஆர்வம் அதிகம். அத்துறையில் தான் தனியார் நிறுவனமொன்றில் வேலையும் செய்கிறேன். 



04.இலக்கிய உலகில் காலடி வைத்த முதல் அனுபவம் பற்றி? 



நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ்

 என் கவியார்வத்தை அதிகரித்த பெருமை முகநூலையே சாரும். ஆரம்ப காலங்களில் கவிதை என்றல்லாமல் சமூகத்தில் நடக்கின்ற தீமைகள், பிழைகளைச் சுட்டிக்காட்டி சிறு சிறு கருத்துக்களை பதிவிட்டு வந்தேன். சில பொழுது அதை வாசிப்பதற்கு நீளமானதாக அமைந்து விடுவதுமுண்டு. நீளமான வரிகளை வாசிக்கும் அளவு பார்வையாளர்களும் அவ்வளவு தயாரில்லை என்பதைப் புரிந்து கொண்டு, கவிதையை கையில் எடுத்தேன். அழகிய வசன நடை சேர்த்து சிறிது சிறிதாக எழுதுவது வாசிக்க இலகுவாகவும் என் கருத்துக்களை மக்களோ பேச விடுவதிலும் எனக்கு பெரும் துணையாய் இருந்தது. அதன் பின் என் எழுத்தில் ஆர்வங்கொண்டவர்கள் தந்த ஊக்கம் பெரிய பெரிய கவிதைகளையும் எழுதும் ஆர்வத்தைக் கொடுத்தது.


 05.இத்துறையில் நீங்கள் கற்றுக்கொண்ட மனிதர்கள், பாடங்களைக் கூற முடியுமா? 


நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ்

 “கவிதை உலகத்தில் நானே ராஜா” எனும் எண்ணத்துடன் வாழ்கின்றவர்கள் பலர். அதற்கும் மேலாக என் எழுத்துக்களை வரவேற்கின்ற, ஊக்கம் தருகின்ற மூத்த கவிஞர்கள் பலர் இருக்கிறார்கள். தான் மட்டும் வளர்ந்தால் போதாது புதிய முகங்களுக்கும் சந்தர்ப்பம் கொடுத்து அவர்களையும் முன்னேற்ற வேண்டும் எனும் ஆவல் கொண்டவர்கள் பலர். அவர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் என் நன்றிகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். இன்னும் சிலர் தன்னை விட ஒருவன் உயர்ந்து விடக்கூடாது எனும் எண்ணத்துடன் அலைகிறார்கள். அவர்கள் அவ்வெண்ணத்தைக் கை விட வேண்டும். 


06. ஒரு நூலினை வெளியிட்டு, அதில் வெற்றி பெறுவது அத்தனை சாதாரணமான விடயமல்ல. உங்கள் வெளியீட்டின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட அனுபவங்கள்… 


நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் 

தொழிநுட்பம் வளர்ந்து விட்ட காலமிது. எதற்கும் ஒரு அன்ரொயிட் கைப்பேசி போதும் எனும் நிலை உருவாகி விட்ட பின், நூல் என்பதன் பதம் “மின்நூல்” எனும் திசையில் நகர்வதைக் காணக்கூடியதாய் இருந்தது. நூல் வெளியீடுகளுக்கு வருகை தருகின்ற ஆர்வம் பலருக்கும் இல்லை என்பதை கற்றுக்கொண்டேன். நூலின் அறிமுக நிகழ்வில் பலரும் வருவதாய் சொல்லி விட்டு நூல் வெளியீடுகள் முடிந்த பின் தன்னால் வர முடியவில்லை என மன்னிப்புக்கோருகிறார்கள். அதை என்னால் ஏற்றுக்ககொள்ள முடியவில்லை. நூல் வெளியீட்டிற்கு கண்டிப்பாக சமூகம் தர வேண்டுமென ஒருவர் நினைத்திருந்தால், பல வேலைப்பழுக்களைத் தள்ளி வைத்து விட்டு, நிச்சியம் சமூகந்தந்திருப்பார்கள். காரணம் சொல்பவர்கள் அதிகம் என்பதை நன்றாகவே கற்றுக்கொண்டேன். 



07. இன்றைய திறந்த சமூக வலைத்தளங்களினூடாக கவிதைக்கென்று ஒரு திறந்த வெளி காணப்படுகின்றது. இதில் எவ்வாறு நிலைப்பது,வெற்றியடைவது என நினைக்கின்றீர்கள்?


 நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் 

உண்மை தான். யார் வேண்டுமானாலும் எழுதலாம். எதை வேண்டுமானாலும் எழுதலாம். அத்தனையும் முகநூல் தாங்கிக்கொள்ளும் எனும் நிலை தான். இருந்தாலும், சமூக நோக்கோடு எழுதப்படும் பதிவுகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பிருக்கிறது. சமூகத்தில் நடக்கின்ற தீமைகளைத் தட்டிக் கேட்கின்ற அல்லது கேட்க நினைக்கின்றவர்கள் பலர் அவ்வாறான பலரும் முக நூல் பதிவுகளுக்கு காத்திரமான பின்னூட்டத்தை இடுவார்கள். தன் புகழ் பாடுவதை விட்டு விட்டு சமூக நோக்கோடு நடப்பதால் நின்று நிலைப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும். 


 08.நல்ல “கவிஞன்” என்ற இடத்தை எவ்வாறு தக்க வைத்துக்கொள்ளலாம் என நினைக்கின்றீர்கள்? 


நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் 

ஒரு பாடசாலையைப் பொறுத்த வரை மாணவர்களைத் தண்டிக்கின்ற ஆசிரியர்கள்இ மாணவர்களுக்கு கெட்டவர்கள் ஏனையவர்கள் நல்லவர்கள் அது போலத் தான் கவிஞனும். யாரையும்இ எந்தக் குழுவையும்இ எந்த கட்சியையும்இ எந்த அரசையும் வசை பாடாமல் கவிதைகள்இ எழுத்துக்கள் வரைவானேயானால் அவன் நல்ல “கவிஞன்” எனும் இடத்தில் உள்ளவன். ஏனையவர்கள் யாரை வசை பாடுகிறார்களோ அவர்களின் எதிரிகளுக்கு மட்டும் நல்ல “கவிஞன்”. கவிதை என்பது சிறந்த மொழி. அதை சிறந்த முறையில் பேசப் பழகிக்கொள்வது நல்லது. வார்த்தைகள் வந்த பின் மீட்டிக்கொள்ளுதல் கடினம். 


09. உங்கள் கவிதைக் களத்துக்கான சூழல் எவ்வாறானது எப்படிப்பட்ட கவிதைகள் சமூகத்துக்குத் தேவையென நினைக்கின்றீர்கள்?


 நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் 

மண் வாசனைக்கவிதைகள்இ பேச்சு வழக்கு கவிதைகளை எழுத ஆர்வம் எனக்கு அதிகம். சமூக மட்டங்களில் இளைஞர்இ யுவதிகளைப் பொறுத்த வரை காதல்இ நட்புஇ பிரிவுஇ தனிமை பற்றிய கவிதைகள் அதிகம் வரவேற்கப்படும். அந்த ஆசை இளைஞனான எனக்கும் இருக்கிறது. அதனால் பல கவிதைகள் அவ்வாறான தலைப்புகளை தாங்கியே எழுதியிருக்கிறேன். சமூகத்துக்குத் தேவையான கவிதைகள் எனும் போது போதைஇ வரதட்சனைஇ துஷ்பிரயோகங்கள் போன்ற சமூகத்தில் நடக்கும் தீமைகளைச் சுட்டிக்காட்டிஇ சமூகக்கண்களைக் கலங்க வைக்கக் கூடியஇ இதயங்களோடு பேசக்கூடிய கவிதைகள் தான் தேவைஇ குரல் வடிவம் கொடுக்கப்படும் கவிதைகள் இதயங்களோடு பேச இலகு வழியாக அமையும். அப்படிப்பட்ட படைப்புகளை கவிஞர்கள் சமூகத்திற்கு தர வேண்டும்.


10. எமது கலைஞர்களின் “அல்பம்” “குறுந்திரைப்படம்” “இறுவெட்டுக்கள்” போன்றவற்றில் இலங்கை ரசிகர்களின் ஆதரவு அல்லது ரசனைத்தன்மை எப்படியிருக்கின்றது? 


நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் 

அல்பங்களை யூடியுப் அல்லது முகநூலில் பதிவேற்றிய பின்இ அதை ரசித்துக் கேட்கின்றஇ பார்க்கின்றவர்கள் நிறையவே இருக்கிறார்கள். இருந்தும்இ வெளியீடுகளில் பங்கெடுத்தல்இ இறுவெட்டுக்களை பணம் கொடுத்து வாங்கி கலைஞர்களுக்கு உதவுகின்ற மனம் மிகவுமே குறைவு. திருட்டு வீசிடிகளுக்கே இப்போது கிராக்கி. 



 11.குறுந்திரைப்படம் பற்றிச் சொன்னீர்கள் இலங்கையின் சினிமாத்துறையில் இதற்கான வாய்ப்புக்கள் வரவேற்புக்கள் பற்றி? 


நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் 

இலங்கை சினிமாத்துறையைப் பொறுத்த வரையில் வாய்ப்புக்கள்இ வரவேற்புக்கள் மிகக்குறைவென்றே தோன்றுகின்றது. முதலீடு செய்து எமது படைப்புக்களை வெளியீடு செய்வதற்கு எவரும் தயார் நிலையில் இல்லை. அண்மையில்இ இலங்கையில் பிரமாண்டமான திரைப்படம் ஒன்று எடுக்கப்பட்டது. அதனை வெளியீடு செய்வதற்கு அந்தப்படக்குழு பட்ட அவஸ்தைகள் கொஞ்சநஞ்சமல்ல. முகநூலில் கூட அதன் விளம்பரத்தையிட்டு அதற்கான உதவிகளைக் கோரியிருந்தனர். ஆனாலும்இ அதனை வெளியிட்டுக்கொள்ள முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. இலங்கை தொலைக்காட்சிகளிலும் எமது படைப்புக்களைப் பெற்று ஒளிபரப்ப எவரும் முன்வருவதில்லை. காரணம்இ எம் படைப்பாளிகளின் மீதுள்ள அவநம்பிக்கையே. இந்திய சினிமாஇ சின்னத்திரை நாடகங்கள்இ பாடல்களுக்கு இருக்கும் வரவேற்புக்கள் எமக்கில்லை என்றே சொல்லத்தோன்றுகின்றது. அத்தி பூத்தாற்போல சில வாய்ப்புக்கள் அமைந்து விடுவதுமுண்டு தான். முகநூல்இ யூடியுப் மூலமாகவே கலைஞர்கள் தங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிக்கொள்கின்றார்கள். சிறந்த விளம்பரத்தையும் ரசிகர்களுக்கு நமது படைப்புக்கள் மீதான ஆர்வத்தையும் நம்பிக்கையூட்டும் விமர்சனங்கள் எழாததே ஓர் குறைபாடாகக் கருதுகின்றேன். அத்தோடுஇ பிரமாண்டமான தொழிநுட்ப வளர்ச்சியினையும் பொருளாதார நிலையிலும் பிந்தங்கியே இருக்கின்றோம். 



12 .இதில் ஊடகங்கள் தரும் ஆதரவு பற்றி?

நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் 

இணையத்தளங்கள்இ செய்தித்தளங்கள் பாராட்டக்கூடிய சேவையை வழங்கி வருகிறார்கள் என்பதில் ஐயமில்லைஇ செய்திகளையும்இ குறுந்திரைப்படங்களையும் தங்கள் பக்கத்தில் பதிவிட்டு அவர்களே அதற்கான விளம்பரங்களையும் செய்கிறார்கள். அப்படிப்பட்ட இணையத்தளங்களுக்கு நன்றிகள். அதற்கும் மேலதிகமாக தொலைக்காட்சி வானொலிஇ பத்திரிகை போன்றவற்றில் பணியாற்றுகின்றவர்கள் கலைஞர்களைத் தேடிப்பிடித்துஇ இலைமறை காய்களை சமூகத்திற்கு அடையாளங்காட்டி நாளைய நாளை ஒளி மயமாக்கும் வழிகளை அவர்களுக்காக திறந்து விட வேண்டும். 


13.எதிர்காலத்தில் சாதிக்க நினைப்பதும் சம காலப்படைப்பாளிகளுடன் பகிர்ந்து கொள்ள நினைப்பது 


நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் 

சமூக சிந்தனைக் கவிதைகள் இன்னும் நிறையவே எழுத வேண்டும். சமூகத்துடன் இலகுவில் பேசக்கூடிய குறுந்திரைப்படங்கள்இ கவிதைக் காணொளிகளை சமூகத்திற்காக வழங்க வேண்டும் எனும் ஆவலிருக்கிறது. என்னைப் போலவே இன்னும் பல இளைய கலைஞர்கள் சிறு வயதிலேயே நிறை சாதிக்க வேண்டும். அதற்காக என்னால உதவிகளைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன். சம காலப் படைப்பாளிகளே! “பேனா ஓர் ஆயுதம்” அதைக் கொண்டு யாரையும் காயப்படுத்த நினைக்காதீர்கள். “கவிதை ஒரு மொழி” யாருக்கும் அது புரியும் அதைக் கொண்டு யார் மனதும் புண்படும் படியாக பேசி விடாதீர்கள். சமூகக் கறைகளை உங்கள் எழுத்துக்களால் கழுவி விடுங்கள். காலத்திற்கேற்ற பதிவுகளை தாருங்கள். அதை வரவேற்கின்றவர்கள் பாராட்டுகின்றவர் இந்த உருண்டை உலகத்தில் எங்காவது ஒரு பாகத்தில் இருந்து கொண்டு தான் இருப்பார்கள். நம்பிக்கையோடு முன்னேறிச் செல்லுங்கள். 



14. நீங்கள் நன்றி கூற வேண்டும் என நினைப்பவர்கள்?


 நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் 

நன்றிகள் கூற பொருத்தமாவன் என்னைப்படைத்த அல்லாஹ் தான் முதலானவன். மேலும்இ என்னை பல சிரமங்களுக்கு மத்தியிலும் என்னைப் பெற்ற தாய் சுமைகளைத் தாங்கி வளர்த்த தந்தை என் வெற்றியைப் பார்த்து உள்ளுக்கும் அதிகம் மகிழ்ந்து பாராட்டும் என் சகோரஇ சகோதரிகள் என் நன்றிகளின் அடுத்த படியிலுள்ளவர்கள். அதற்கு அடுத்ததாக என் எழுத்துக்கு களம் தரும் ஆதரவு தரும் அத்தனை முகநூல் சொந்தங்களும் என் நன்றிக்கு காத்திரமானவர்கள். என் கருத்துக்களைப் பகிரந்து கொள்ள வாய்ப்பளித்த கல்குடா நேசன் இணையத்திற்கும்இ சகோதரி ராஜ் சுகா அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.




ஊடறு இணைய இதழில் கவிதை (04.12.2015) ஆயத்தமாகிக்கொண்டிருக்கின்றேன்

http://www.oodaru.com/?p=9371


Wednesday, December 2, 2015

02.12.2015 கட்டார் "தமிழ் டைம்ஸ்" பத்திரிகையில் வெளியான கவிதை



ஆயத்தமாகிக்கொண்டிருக்கின்றேன்






திரும்பிப்பார்க்கு மொருநாள் நான்
வெறுமையாய் நின்றிருப்பேன்
உறவுகளாய் எனைச்சுற்றியிருந்த‌
வரவுகளெல்லாம் தளர்ந்திருக்கும்.....

நான் செலவழித்த நிமிடங்கள்
நடையாய் நடந்த இலட்சியங்கள்
ஓடாய்தேய்ந்த உழைப்புக்களெல்லாம்
ஓர்நாளில் ஒடுங்கிப்போயிருக்கும்...


வாலிபத்தளைப்பின் வெற்றிகள்
வாரிசேர்த்த சொந்தங்கள்
தேடிவைத்த நேசங்களெல்லாம்
தேவையில்லையென எனை ஒதுக்கியிருக்கும்....

முதியோர் இல்லமோ
முகமறியா ஓர் நிறுவனமோ என்னை
முன்னின்று நடத்தலாம் இல்லை
கைத்த‌டியெனை தாங்கலாம்...

பாகம் பிரித்துக்கொண்ட பாசங்கள்
பாராமுகம் காட்டி ஓடலாம்
பாசமூட்டி வளர்த்த அவர்கள் எனை
பாதியில்கூட நிற்கவைக்கலாம்...

ஆயத்தமாகிக்கொண்டிருக்கின்றேன்
அனைத்தையும் சந்திப்பதற்கு
அடுத்தடுத்து செயற்படுகின்றேன்
அந்த நாளை சுமப்பதற்கு.....!!!

Tuesday, December 1, 2015

போலியாய் சிரிக்கின்றது!!

பழைய நினைவுகளை கொஞ்சம்
புரட்டிப்பார்க்கிறேன் அங்கே
குழைந்து குழைந்து நீபேசிய‌
குதூகலங்கள் போலியாய் சிரிக்கின்றது!!





WISH U A HAPPY BIRTHDAY DEAR (02.12.2015)





Monday, November 30, 2015

தரணியிலுனை போலோ தலைவனா...



உம்மாவின் கண்ணீர்த்துளிகளை
உலக அதிசயமாய் ஜொலிக்கவைத்தாய்
அவளான்மாவின் முடுக்குகளில்கூட‌
ஆனந்தங்களை அடுக்கிவைத்தாய்...

வாப்பாவின் கனவுகளை
வரிசையாய் நிறைவேற்றிநின்றாய்
காப்பாற்றவெனவே கஷ்டங்களை
கச்சிதமாய் மறைத்துக்கொண்டாய்...

ஊண் உறக்கம் தொலைத்ததை
உறுதியாய் எடுத்துக்கொண்டாய் நமதும்மா
ஆண்போலே காத்ததை
ஆதாரமாய் பற்றிக்கொண்டாய்...

அடியாய் நடந்துவர எனக்கு
பிடியாய் இடமளித்தாய்
படியாய் முன்னிருந்து எனை
மகனாய் ஏற்றிவிட்டாய்...

ஓடிவிளையாடும் காலத்தில்
ஒன்றையும் பார்த்திடாதிருந்தாய்
ஓடாய் இளைக்குந்தாய்க்காய்
ஓராயிரம் வழிகளை வகுத்துக்கொண்டாய்....

விழிநீர் சேமித்த நமதன்னைக்கு
விருதுகளை பரிசளித்தாய்
மொழியிழக்கும் தருணத்தை யின்று
மொத்தமாய் கையளித்தாய்...

தமையானா நீயென் தந்தையா
தரணியிலுனை போலோ தலைவனா...
இமையென காப்பதில் இறைவனா -இன்று
இதயம் மகிழ்ந்தெனுன்னில் இளையவனாய்....

(ஒரு சகோதரனின் வேண்டுகோளுக்கிணங்க அவருக்கு எழுதிக்கொடுத்த கவிதை இது)


நீயென் வாழ்க்கையா...

நில வா
நினைவா
நிழலா  -நீயென்
நிஜமா...

அன்பா
அருகாமையா  -நீயென்
அரவணைப்பா...

காதலா
காவியமா  -நீயென்
கானலா...

இன்பமா
இளமையா  -நீயென்
இதயமா...

வாலிபமா
வானவில்லா  -நீயென்
வாழ்க்கையா...

தூரமா
தூபமா  -நீயென்
தூண்டிலா...

நட்பா
நன்மையா  -நீயென்
நம்பிக்கையா...

வினாவா
விடையா  -நீயென்றும்
விடுகதையா...