Saturday, December 28, 2013

உனது வானம்

ஆகா தென்றுதானே
அவசரமா யொதுங்கினாய்
போகா தென்றுநான்
போர்க்கொடிதுக்கவில்லையே
உனது வானம்
உனது எல்லைகள்
உனது சிறகுகள்
தடுக்கும் கரங்கள் எனதில்லை
கெடுக்கும் மனதென தில்லை

வேர்கள் பூப்பதில்லையென்பது
ஊரறிந்த கதையாயிற்றே!!









Friday, December 27, 2013

கலையாமலென் காதல்

தொலைதூரம் நீ
கலையாமலென் காதல்
அலைமோதும் நினைவிலே
அசையாமலுன் கனவு!!



இயற்கையின்க (ன)தி

செயற்கையி னதி
மெத்தச் செருக் கால்
இயற்கையின்க னதி
இளகியோடுமோ??

Thursday, December 26, 2013

இதயமானவன் நீ

முதலும்
முடிவானவனும் நீ
இதழும்
இதயமானவன் நீ
இன்றேன்
கண்ணீர் தேசத்திற்கு
காதலியாக்கிப்போனாய்??



கலைந்துபோனேன்

தொலைந்துபோனாய் -என்னை
தொலைத்துவிட்டு
கலைந்துபோனேன் -வாழ்வின்
கலைகளைவிட்டு!!



சந்தர்ப்பங்கள்

சந்தர்ப்பங்கள்
சந்தோஷங்களை தரும்
சாதகமாக்கிக்கொள்வதும்
சாதித்துக்கொள்வது நம்
சாமர்த்தியமே!!

கா(த)லனா??

நினைத்துப்பார்த்திடா நம்
நினைவுகளை என்
கல்லறை வாசலில்தான்
காண்பாயென்றால் 
காதலென்ன உயிர்வாங்கும் 
கா(த)லனா??


Friday, December 20, 2013

அழகோ!!

வலிகள் நிறைந்தாலும்
வசந்தம் குறையாததுதான்
மொழியில்லா -இக்
காதலுக்கு அழகோ!!

விலகிநடக்க ஆரம்பிக்கின்றேன்

நெடிய முள்ளொன்று வழி
நெடுகிலும் வந்தது
கொடிய வலிதந்த போதும்
தொலைத்தொதுக்கவில்லை

விலகிநடக்க ஆரம்பிக்கின்றேன்
விடுதலையில்லாவிட்டாலும்
அழவைத்த முள்ளினால் -மீண்டும்
அழுத்தங்கள்தர முடியவில்லை!!



இயல்பாயல்ல‌

கிழித்துப்போட்டாய்
காகிதத்தையல்ல -என்
காதலை
வலித்தது
இயல்பாயல்ல‌
இதயமியங் காவண்ணம்!!


Tuesday, December 17, 2013

எனது கவிதை அறிவிப்பாளர் சிறோவின் குரலில்

http://www.youtube.com/watch?v=B3C5i8pPnMA&feature=youtu.be


தோற்றுப்போனது
வாழ்க்கையில்தான்
துவண்டுபோனது
துடிப்புள்ள இதயமல்ல!

அடிவீழ்ந்தது
உயிரில்தான்
அணைந்து போனது
ஆழ்மனதல்ல!

காயம் கண்டது
கனிவான காதல்தான்
நோயாகிப்போனது
கண்ணியங்கொண்ட கடமைகளல்ல!

இன்னும் ஆணிகளும்
இரக்கமில்லா வஞ்சனைகளும்
என்னைச்சுற்றி சூழட்டும்

எரிந்துகொண்டிருப்பது மனமாயிருந்தாலும்
எழுந்து புன்னகைப்பேன் மலராகவே!!!

தளிரோ நான்?

வெறும் கானலில்
விதி செய்து
வருகின்ற‌ கண்ணீரை
வாழ்வில் குவித்து
தரணியில் வீசிவிட்ட‌
தளிரோ நான்???!!



Monday, December 16, 2013

இன்னு மினிக்கின்றது



இமைகள் நிறைத்த‌
இதழ் சேமித்த நினைவுகள்
இன்னு மினிக்கின்றது -நீ
இதயம் கொன்றுபோனபிறகும்!!



நிஜமா????

நிஜமா அவையெல்லாம்
நிஜமாகவே நிஜமா
நம்பவேமுடியவில்லை
நீயும் நானும் வேறுவேறென்று!!



Sunday, December 15, 2013

Friday, December 13, 2013

எழுந்து புன்னகைப்பேன்

தோற்றுப்போனது
வாழ்க்கையில்தான்
துவண்டுபோனது
துடிப்புள்ள இதயமல்ல!

அடிவீழ்ந்தது
உயிரில்தான்
அணைந்து போனது
ஆழ்மனதல்ல!

காயம் கண்டது
கனிவான காதல்தான்
நோயாகிப்போனது
கண்ணியங்கொண்ட கடமைகளல்ல!

இன்னும் ஆணிகளும்
இரக்கமில்லா வஞ்சனைகளும்
என்னைச்சுற்றி சூழட்டும்

எரிந்துகொண்டிருப்பது மனமாயிருந்தாலும்
எழுந்து புன்னகைப்பேன் மலராகவே!!!




ஊடறு இணைய இதழில் (Wednesday, December 11, 2013 @ 7:55 PM)

வாழபுறப்பட்டுவிட்டேன்…



http://www.oodaru.com/?p=6827

வாழபுறப்பட்டுவிட்டேன்…

   

த.எலிசபெத் (இலங்கை)
 
பெண்மையின் மேன்மையெல்லாம்
தென்றல் கலைத்த மேகம்போல‌
அநாயசமாய் அழிந்துபோகின்றது
 
தீக்கொண்டு சாம்பல்கண்டிடும்
தீவிரம் நெஞ்சுக்குள் பற்றியெறிகின்றது
எத்தனை காலத்துக்குத்தான்
புத்தகத்தில் மூடிய மயிலிறகாய்
பத்தினிக்கிரீடத்தை பாதுகாப்பது…
 
முப்பத்தைந்தை தாண்டிய -என்
முதிர்க்கன்னித்திரை கிழித்து
முழுமையாய் மூச்சுவிட்டது பிழையென்றால்
என்னைக் கிழித்த உம்
வார்த்தைக் கணைகளுக்கு
விஷந்தடவி எய்துகொண்டிருந்ததேன்…
 
இத்தனை வருட மிருந்தவள் -இப்போ
இஸ்டத்துக்கா செல்ல வேண்டும்
சாதிவிட்டு சாதிசென்றதற்கு
சாக்கடையில் வீழ்ந்து செத்திருக்கலாமென்ற‌
உங்கள் அற்பங்கள் என்னையொன்றும்
அழித்துவிடுவதில்லை…
 
மதம்மீறியது பிழையென்றால் -நீங்கள்
மருமகளுக்கு பதிலாக
மனையுடன் சேர்ந்த லட்சங்களை கேட்டதேன்??
சாதிக்கலந்தது சாபமென்றால்
சீதனத்தை மட்டுமே நீவீர்
தேடியதும் தீண்டாமைதான்
 
காதல் பாவமென்றுதானே
இத்தனை வருட காத்திருப்பு
அதற்கு உங்களால்
முதிர்க்கன்னியென்ற
முக்காட்டை மட்டுமல்லவா போர்த்தி
மூழ்கடிக்க முடிந்திருந்தது
வேர்கள் வெளிக்கிளம்பிய பின்னுங்கள்
வேலிகளுக்கிங்கு வேலையில்லை
 
மனம் பொறுக்குமளவுக்குங்கள்
சுடுசொற்கள் இருந்ததில்லையே அதனால்தான்
மனச்சிறைக்குள் மாண்டுபோயிருந்த‌
மாங்கல்யத்தை மருந்தாயிட்டுக்கொண்டேன்
 
 
வாலிபவேட்கையில் நானின்று
வர‌ம்புமீறி காதல்செய்யவில்லை
காலத்திடம் சிக்கிக்கிடந்த சில‌
முடிச்சுக்களை அவிழ்த்துவிட்டிருக்கின்றேன்
அவ்வளவுதான் ஆனந்தப்பட்டுக்கொள்ளுங்கள்
 
காலம்முழுக்க கன்னியாகவே
வாழவிட்டிருப்பீர்களா
மூச்சுக்கு மூச்சு
முடிந்திடா கேள்விகளால் என்னை
மூர்க்கத்தனமாயல்லவா கொன்றிருப்பீர்கள்
 
இரண்டில் ஒன்று
எடுக்கும் நேரத்தில்தான்
இதயமறிந்த இவன்வந்தான்
வாழ்வோடு போராடி சாவதிலும்
சாவோடு போராடு வாழ்வதென்ற முடிவோடே
சாதியினை கடந்து
மதத்தினை மறந்து
மனிதத்தோடு மட்டுமே
வாழபுறப்பட்டுவிட்டேன்…
 
எப்போது கல்யாணம்
ஏனின்னும் கல்யாணம்
சரிவரவில்லை என்ற‌
ஏளனங்களை தவிர்க்க‌
உங்களிடமிருந்து உத்தரவாதம்
வழங்கப்பட்டிருந்தால்
என்னாலும் வாழ்ந்திருக்கமுடியும்
காலமெல்லாம்
முதிர்க்கன்னியாகவல்ல‌
முழுக்கன்னியாக….
 
 

மலர்களை கொய்யவேண்டும்

காயங்களை
பரிசோதிக்காதீர்கள்

வடுக்களானதை மீண்டும்
வலிக்கச்செய்யாதீர்கள்

இன்னு மெத்தனை காலத்துக்கு
இரத்தத்துளிகளையே துடைப்பது

இரண்டு கரங்களும்
மலர்களை கொய்யவேண்டும்

வேலிகளை போட்டுவிடாதீர்கள்!!