http://kalkudahnation.com/
கல்குடா நேசன் இணையத்தினூடாக வாராவாரம் கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து அவர்களுடனான கலந்துரையாடலை நேர்காணலாகத் தந்து கொண்டிருக்கின்றோம். பலரது ஆதரவையும் எதிர்பார்ப்பையும் சுமந்த இப்பகுதியானது வாசகர்கள் அனைவரினது ஆசியோடு வெற்றிநடை போடுகின்றது.
இலைமறை காய்களாக இருக்கும் படைப்பாளிகளை அறிமுகப்படுத்துவதிலும், வளர்ந்த கலைஞர்களின் கருத்துக்களை, திறமைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதினாலும் மகிழ்ச்சியடைகின்றோம். இதன் தொடரில் இன்று 06.05.2016ம் திகதி வெள்ளிக்கிழமை 36வது படைப்பாளியாக எம்மோடு இணைந்து கொள்கிறார் பதுளையைச்சேர்ந்த கவிஞரும் ஊடகவியலாளருமான அருண் வெங்கடேஷ் அவர்கள்.இலக்கியம் சமூகம் அரசியல் ஊடகம் கலைஞர்கள் என பல பக்கங்களிலும் தன் கருத்துக்களால் அலசும் இவர் திறமைமிக்க ஊடகவியலாளர் கவிஞர் மட்டுமல்ல புரட்சி சிந்தனை மிக்க தன் சமூக மாற்றத்திற்காக அதிக பாடுபடும் ஓர் துடிப்புள்ள இளைய சமூக சிந்தனையாளர். இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் இவரின் நேர்காணல் இதோ
01. அருண் வெங்கடேஷ் என்ற படைப்பாளியைப்பற்றி நாங்கள் அறியலாமா?
கல்குடா நேசன் இணையத் தளத்திற்கும் தாங்களுக்கும் முதலில் என்னுடைய பணிவான வணக்கம்.
நிச்சயமாக.
எனது பெற்றோர் திருவெங்கடேஷ்வரன்,பார்வதி,நான் பதுளை,ஹாலிஎல நேப்பியர் தோட்டத்தை சேர்ந்தவன்.சாதாரண குடும்பம்,பதுளை சரஸ்வதி தேசிய பாடசாலை மற்றும் பதுளை அல்-அதான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றேன்.வாழ்வில் சிறிய வயதில் வயதிற்கும் மீறிய அனுபவங்களை பெற்றதால் என்னையறியாமலே படைப்பாளியாக்கப்பட்டேன்.அவ்வளவுதான்......
02. கவிதை மீதான ஆர்வம் எவ்வாறு ஏற்பட்டது?
இயற்கையாக ஏற்றபட்ட ஆர்வம் தான்,
காரணமோ அல்லது முதல் கவிதையோ சொல்ல தெரியாது..முதலாவது நூல் எழுதி மூன்று வருடங்களுக்கு பின் 2004 ஆம் ஆண்டு சாதரண தரம் கற்கும் போதே நண்பர்களின் உதவியில் வெளியிட முடிந்தது....மிகப் பெரிய செலவில் அதை வெளியிட்டு வைத்தார்கள்...என்னுடைய பங்கு எழுத்துக்கள் மட்டுமே மற்றவையாவும் நண்பர்களே
0. தொழிற்துறை பற்றி?
பாடசாலைக்கு பின் சம்பந்தமற்ற சில கற்கை நெறிகளை முடித்தேன் ஆதலால் பல வகையில் தொழில் மாற்றம் ஏற்பட்டு நிரந்தரமாக ஒரு இடத்தில் நிற்காமல் அவதியுற்றேன்.ஆனால் தற்போது 4 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறையில் பணியாற்றி வருவதோடு தற்போது வீரகேசரி பத்திரிகையில் ஊடவியலாளனாக பணிபுரிகின்றேன்.
0. ஊடகங்களில் வெளிவரும் கவிதை கட்டுரை சிறுகதை போன்ற படைப்புக்கள், பெரும்பாலான எவ்வித பரிசீலிப்புமின்றி பிரசுரமாகின்றது 'தரம்' குறித்து பார்க்கும்போது சில குறைபாடுகள் காணப்படுவதாக பேசப்படுகின்றது இது குறித்து?
உண்மைதான்.இதற்கு விளம்பர நோக்கம் கொண்ட ஊடகங்களே காரணமே தவிர படைப்பாளிகள் அல்ல.மிகச் சிறந்த படைப்பாளிகள் அதனால் ஊடகங்களுக்கு எழுதுவது வெகுவாக குறைந்து வருகிறது.இது ஆரோக்கியமானது அன்று .உதாரணமாக ஒரு பத்திரிகையில் கவிதை பக்கத்தை வாசித்து பார்த்தால் பிரசுரமாகியிருக்கின்ற கவிதைகள் கவிதைகளாகவே இருப்பதில்லை வெறுமனே வார்த்தை கோர்வைகளே...அன்பே..ஆருயிரே கண்னே கண்மணியே,இவ்வாறான வார்த்தைகளால் நிரப்பியிருக்குமே தவிர அவை கற்பனைகள் பிரசவித்த கவிக்குழந்தைகள் என்று சொல்வதற்கு எழுதியவர்களுக்கே மனம் வருவதில்லை.எனவே இவ்வாறான படைப்புக்களை லட்சக்கணக்கான மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது குறித்து ஊடகங்கள் சிந்திக்க வேண்டும்.ஆகவே யார் வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் அவை படைப்புகளுக்கு உரித்தான தகுதிகளை 10மூ கொண்டிருக்கிறதா என தெளிவுபடுத்திக் கொண்டு படைப்பாளிகள் அவற்றை வெளிப்;படுத்துவது இலக்கியத்தின் மகத்துவத்தை காப்பாற்றும்.
06. ஊடகத்துறைக்குள் பிரவேசிக்கும் இளையவர்கள் பற்றி?
பாராட்டத்தக்கதோடு ஊடகத்துறைக்கும் மிகமுக்கிய தேவையுமாகும்..காலத்திற்கேற்ப ஊடகம் மாற்றம் கண்டு வருவதால் இளையவர்களின் பங்களிப்பு கட்டாயத் தேவையாகும்.இன்றைய இளைஞர்கள் இயற்கையாகவே தொழிநுட்பத்திற்கான இசைவாக்கத்ததை கொண்டிருப்பதால் ஊடகத்துறையின் வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பாக அமைகின்றது.ஆளுமைமிக்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தடுமாறி நிற்கின்றார்கள் இவர்கள் ஊடகத்துறையை நம்பிக்கையோடு தேர்ந்தெடுக்க முடியும் என்பதையும் கூறிக் கொள்கின்றேன்.
07. இன்றைய இளம் படைப்பாளிகளாகட்டும், ஊடகத்திலிருப்பவர்களாகட்டும் மூத்தவர்களின் ஆலோசனை விமர்சனங்கள் இன்றி செயற்படுவதால், குறைகளை சுட்டிக்காட்டுமிடத்து சில மனக்கசப்புக்கள் ஏற்படுவதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே இதுபற்றி?
மனக்கசப்புகள் இருப்பது உண்மைதான் அது இருதரப்பினருக்கும் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பது என்னுடைய கருத்தாகும்.காரணம் ஊடக அறம்,ஊடக தர்மம் என்பது எவ்வளவு காப்பற்றப்படவேண்டுமோ அவ்வளவுக்கவ்வளவு ஊடக உரிமைகளும் முக்கியமாகும் இது போன்ற விடயங்களில் மூத்தவர்களுடன் பல முரண்பாடுகள் ஏற்படுகிறது ஆனால் இத்துறையில் இளைஞர்கள் மூத்தவர்களின் ஆலோசனை அவர்களின் அனுபவங்களை அறியாது ஊடகத்துறையில் துளியளவேனும் எதையும் கற்றுக் கொள்ளவியலாது என்பதுதான் உண்மை.
08.மலையகத்தில் இருக்கும் குறைபாடுகள் பற்றி காலங்காலமாக பல்வேறு தரப்பினர்களால் பேசப்படுகின்றது அவ்வகையான விடயங்களில் மாற்றங்கள் ஏதேனும் நடந்துள்ளனவா?
நிறையவே நடந்துள்ளது.ஆரம்ப கால மலையகத்திற்கும் இப்போதிருக்கும் மலையகத்திற்கும் பல்வேறு மாற்றங்கள் உள்ளது.ஆரம்ப காலத்தில் வேலை செய்யாமல் யாரும் தோட்டங்களில் இருக்க முடியாது,வேறு தோட்டங்களுக்கோ நகரங்களுக்கோ செல்ல முடியாது,5ம் தரத்திற்கு மேல் கல்வி கற்க இயலாது இப்படி நூற்றுக் கணக்கான மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும் இன்னும் நிறைய தேவைகளும் மாற்றங்களும் இன்னும் பெற வேண்டியுள்ளது
09. மலையக அரசியல் வெறும் சம்பளப்பிரச்சனையை பேசுவதாக மட்டும் காணப்படுவதாக கூறப்படுகின்றதே இதுபற்றி?
யார் சொன்னது ,
அதை கூட பேசுவதற்கு அவர்களுக்கு திறமில்லை முதுகெழும்பற்ற பைத்தியங்கள்...
10. மலையக அரசியல், கல்வி, பொருளாதார, சமூக வளர்ச்சி பற்றி உங்கள் பார்வையில்?
தற்போதைய நிலை மிகவும் கவலைக்கிடமானது,சாதாரண சமூகத்தினரின் நிலையிலிருந்து 90மூ பின் தங்கியிருக்கிறோம்,1000 மாணவரில் ஒருவர் பல்கலைக்கழகம் செல்வதே கேள்விக் குறியாக இருக்கிறது .ஆகவே நீங்கள் குறிப்பிட்ட மலையக அரசியல், கல்வி, பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு மிக அடிப்படையாக கல்வியில் வளர்ச்சியும் வெற்றியும் கிடைத்துவிட்டால் நாம் மற்ற எல்லாவற்றையும் மாற்றி விடுவோம்.
11. மலையக சமூகத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என நினைக்கின்றீர்கள்? அதில் தங்களது ஏதேனும் பங்களிப்பு பற்றி?
மிக முக்கிமாக கல்வியில் வெறித்தனமான அக்கரையும் அதன் பிரதி பலனையும் யாவரும் நன்றாக உணர வேண்டும்.மலையக மாணவர்களுக்கும் பெரும்பான்மை மாணவர்களுக்குமான இடைவெளியை புரிந்துக் கொள்ள வேண்டும்.அடிப்படை வசதிக் குறைபாட்டை தீர்ப்பதற்கு சரியான திட்டமிடலோடு கூடிய அணுகுமுறைகளை கையாள்வது பற்றி அறிவினை பெற்றுக் கொள்ள வேண்டும்.சமூக ஒற்றுமை என்பதை எங்கே பிரயோகிக்க வேண்டும் என்பதை நன்றாக தெரிந்துக் கொள்ள வேண்டும்.
இதனடிப்படையில் என்னால் முடிந்த அளவான விழிப்புணர்வையும் ,நேரடியாக இயலுமான உதவிகளையும் குறுகிய காலத்தில் வழங்கியிருக்கிறேன் .இனியும் அதிகமாக வழங்க தீர்மானித்துள்ளேன்.
12. இளைஞர்களிடம் நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள்?
பொதுவாக இளைஞர்களிடம் என்பதைவிட மலையக இளைஞர்களிடம் என்பதை கேள்வியாக்கிக் கொள்கின்றேன்.
கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள் மலையகத்திற்கு பாரிய புத்திஜீவிகளை உருவாக்கி தரவேண்டும்,புரட்சி என்பதை ஒவ்வோரு இளைஞனும் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் .நமது
சமூகம் பாதாளத்திற்கு போய் கொண்டிருக்கிறது என்பதை மலையக இளைஞர்கள் புரிந்து கொண்டு அவர்களால் முடிந்த மாற்றத்தை,உதவியை அவர் இருக்கும் இடத்திற்கு செய்தாலே போதும்
13. பெண்களுக்கிருக்கும் சம அந்தஸ்து அவர்களின் திறமைகளின் வளர்ச்சி பற்றி நீங்கள் நினைப்பது?
சம அந்தஸ்த்து என்பதைவிட கொஞ்சம் அதிகமாகவே கிடைத்திருப்பதாக பார்க்க கிடைக்கிறது .தற்போது இலங்கையை எடுத்துக் கொண்டால் மிக முக்கிய அரச தனியார் நிறுவன உயர் பதவிகளை பெண்களே வகிப்பது குறிப்பிடத்தக்கது .அத்துடன் குடும்பத்திலும் பெண்களின் ஆதிக்கமே அதிமாக செல்வாக்கு செலுத்துகின்றது .ஆனால் இவையாவுமே திறமையின் அடிப்படையில் அவர்கள் கண்ட வெற்றியே..பாராட்ட வேண்டிய விடயம்
14. இன்னும் பெண்களை அடிமையாக அவர்களின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஆண்கள் பற்றி?
சிறய வட்டத்திற்குள் இருப்பவர்களே இப்படியானவர்கள் அத்துடன் நம்பிக்கையற்றவர்கள் ஆனால் நிச்சயமாக கெட்டவர்களாக இருக்க மாட்டார்கள்.அவர்களை குறித்த பெண்கள் மாற்ற முடியும் என்பது என் கருத்து .
15. தேயிலை தோட்டத்து பணியாளர்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சனையாக நீங்கள் காண்பது?
தனியாக ஒரு பிரச்சனையை கூறுவது இயலாது.தற்போதைய நிலையில் உழைப்பிற்கும் அவர்கள் செய்யும் அர்ப்பணிப்புப்புக்கும் துளியளவும் சம்பந்தமற்ற ஊதியமே மிகப் பெரிய பிரச்சனையாக காணப்படுகிறது.
16. இதில் ஏதாவது மாற்றங்கள் தீர்வுகள் கிடைக்க என்ன வழி இருக்கின்றது என நினைக்கின்றீர்கள்?
கம்பனிகளோடு தொழிற்சங்கள் மாத்திரம் தொடர்புபட்ட கூட்டு ஒப்பந்தத்தில் ஜனாதிபதி,பிரதமர் மற்றும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் இணைந்து சம்பளப் பிரச்சனையை தீர்ப்பதற்கான முடிவை காண்பதோடு கூட்டு ஒப்பந்தத்தையும் மாற்றியமைத்தல் வேண்டும்.
17. நீங்கள் வெளியிட்ட நூல்கள், அந்த வெளியீட்டு அநுபவங்கள் தங்களுக்கு கிடைத்த பாராட்டுக்கள் விருதுகள் பற்றி எம்மோடு பகிர்ந்துகொள்ள முடியுமா?
இதுவரையில் இரண்டு நூல்களை மாத்திரமே வெளியிட முடிந்தது.2004,தோண்டாப் புதையல்,2011 நெருப்புச்சோலை அத்துடன் சில காரணங்களால் தண்டவாளப்பூக்கள் எனும் வெளியிட முடியாமல் தடைப்பட்டுள்ளது .அத்துடன் இவ்வருட இறுதிக்குள் “மலையகம் 2020” எனும் வெளியிட தீர்மானித்துள்ளேன்.
முதலாவது நூல் பாடசாலை காலத்தில் வெளியிடப்பட்டது .நூல் வெளியிடுவதற்கான எந்த வித அனுபவமும் இல்லாது அவ்வாறான அனுபவசாலிகளோடும் தொடர்புபடாது வெளியிட்ட நூல் தோண்டாப் புதையல்.முற்றுமுழுதான நண்பர்களின் பங்களிப்பு .பவர் ஒப் யூத்ஸ் என்கிற எம்முடைய இளைஞர் அமைப்பினூடாக சகல ஏற்பாடுகளும் செய்து மிக பிரமாண்டமாக வெளியிடப் பட்டது .இதற்கு எல்லா நண்பர்களுக்கும் நான் எப்போதும் நன்றி கூர்வதோடு அருமை நண்பன் ளு,மகேந்திர குமார் அவர்களின் ஒப்பற்ற ஒத்துழைப்பிற்கும் அவரின் தலைமைத்துவத்திற்கும் நான் என்றும் கடமைப் பட்டவன்.
இரண்டாவது நூலான நெருப்புச் சோலையில் ஓரளவு நூல் வெளியீட்டிற்கான அடிப்படையறிவு இருந்ததால் பவர் ஒப் யூத்ஸினுடாக அதனையும் சிறப்பாக வெளியிட முடிந்தது.
நிறைய இடத்தில் பாராட்டுக்கள் கிடைத்திருக்கிறது,ஓரிரு விருதுகள் கிடைத்திருக்கிறது.பல இடங்களில் ஒதுக்கப்பட்டதுதான் அதிகம்.காரணம் தெரியாது.
18. எமது வாசகர்களுடன் வெளிப்படுத்த நினைக்கும் விடயம்?
சிறந்த வாசகர்களே படைப்பாளிகளின் தோற்றத்திற்கான,வளர்ச்சிக்கான முக்கியகர்த்தாக்கள்.வாசகர்களின் அறிவுப்பூர்வமான விமர்சனங்களே படைப்பாளிகளின் கற்கை நெறிகள்.ஆகவே வாசகர்கள் தரமான படைப்புகளுக்கு தகுந்த அங்கீகாரத்தையும் ஜீவனற்ற படைப்புகளுக்கு புரிந்த கொள்ளும்படியான விமர்சனத்தையும் வழங்கவேண்டும்.
மேலும் கல்குடா நேசனின் மிகப் பெரிய மனசு கொண்ட பார்வையாளர்களே வாசகர்களே உங்களால்தான் இவ்வாறானதொறு களம் இளம் படைப்பாளிகளுக்கும் கிடைத்திருக்கிறது தொடர்கிறது என்பதை மகிழ்ச்சியோடு கூறிக் கொள்கிறேன்.ஆகவே எப்போதும் இதன் வெற்றிக்கு நாம் உட்பட யாரும் பங்களிப்பு வழங்குவோம் என்பதோடு மிகச் சிறந்த சமூக,வலைப்பதிவாளரும் ஆசிரியருமான மதிப்பிற்குரிய ராஜ்சுகா அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு விடை பெறுகின்றேன்.
No comments:
Post a Comment