Friday, February 12, 2016

“கல்குடா நேசனின் 26 வது இலக்கிய நேர்காணலில் இந்திய ஹைக்கூ கவிஞர் கவிஞர் தக்ஷன் (12.02.2016)




பிரதி வெள்ளி தோறும் கல்குடா நேசன் இணைய தளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது.

 வெற்றிகரமாகப் பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இந்நிகழ்ச்சியூடாக நாம் சந்திக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கின்றது. 

இதன் தொடரில் இன்று 12.02.2016ம் திகதி வெள்ளிக்கிழமை எம்மோடு 26 வது படைப்பாளியாக இணைந்து கொள்கின்றார் எமது அயல்நாடான இந்தியாவைச்சேர்ந்த ஹைக்கூ கவிஞர் தக்ஷன் அவர்கள். 

இளம் எழுத்தாளர்கள் புதுக்கவிதையை புடைசூழ்ந்து ஆக்கிரமித்துக்கொண்டிருக்கையில், ஹைக்கூ, லிமரைக்கூ, மகிழ்வூட்பா, லிமர்புன் போன்ற இலக்கிய வடிவங்களில் தனது ஆர்வத்தைச் செலுத்தி, அதில் தனக்கென ஓர் தனியிடத்தை தக்க வைத்துக்கொள்ளப் போராடும் இளம் படைப்பாளியான தக்ஷன் அவர்களை கல்குடா நேசனுக்காக சந்தித்தோம். 

இத்துறையில் பல சாதனைகளைப் புரிய வேண்டுமென்ற கனவில் உழைத்துக்கொண்டிருக்கும் இக்கவிஞருக்கு கல்குடா நேசன் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இந்நேர்காணல் கவிஞரைப் பற்றி தெரிந்து கொள்வது மட்டுமல்லாது, மேற்கூறப்பட்ட பா வடிவங்களின் அடிப்படை அறிவைப் பெற்றுக்கொள்ள உதவுவதாகவும் அமைகின்றது. எனவே, இந்நேர்காணல் பலருக்குப் படிப்பினையாக இருக்குமென்பதில் ஐயமில்லை.




தங்களைப் பற்றிய அறிமுகத்தோடு எமது வாசகர்களுடன் கைகுலுக்கிக்கொள்ளலாமா? 


கவிஞர் தக்ஷன் :வணக்கம்.  என் பெயர் தக்ஷன். நான் தஞ்சாவூர் தமிழ் நாட்டைச்சேர்ந்தவன். பொறியல் துறையில் பணி புரிந்து வருகிறேன். கல்குடா நேசன் இணையத்தினூடாக உங்களைச் சந்திப்பதில் நான் பெருமைப்படுகிறேன். பல கவிஞர்களின் நேர்காணலை நான் இத்தளத்தில் கண்டு மகிழ்வடைந்திருக்கிறேன். 



 எப்படி இந்த இலக்கியத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது? 



கவிஞர் தக்ஷன் இலக்கியங்கள் என்பது என் பள்ளிப்பருவத்திலேயே வந்த ஆசை. நான் ஆங்கிலப் பள்ளியில் பயின்றவன். இருப்பினும், தமிழ் மீதும் தமிழில் இயற்றப்படும் துளிப்பாக்கள் என்ற வடிவம் தான் என்னைப் பெரிதும் வசியம் செய்தது. அணில் வரிக்கவிதைகள் என்று சொல்வார்கள் மூன்று வரிக்கவிகளை அவ்வபோது ஏற்பட்ட அணில் வரிகள் தான் இன்றும் எனது பெரிய ஆர்வம். சாதியம், இன, மதவாதம் மறைந்த ஓர் இலங்கை உருவாகட்டும். இலங்கையர் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் 



 படைப்புக்களை சமூகத்திடன் சேர்ப்பதில் உங்களுக்கான களத்தினை எவ்வாறு அமைத்துக்கொள்கின்றீர்கள்? 



கவிஞர் தக்ஷன் படைப்புக்களை சமூகத்திடம் சேர்ப்பதில் இன்றைய நிலையில் எனக்கு என் ஆசிரியரான கவிஞர்கள் பெரிதும் ஊக்கப்படுத்துகிறார்கள். படைப்பாளிகளை உருவாக்கவும் நிறைய கவிஞர்கள் இன்று முன்வருகிறார்கள் என்பதில் தமிழ் இலக்கியம் நல்ல ஆரோக்கியமான நிலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனக்கான களத்தினை சற்று போராடியே அமைத்துக்கொள்கிறேன். 





 உங்களைப் பாதித்த இந்தியப் படைப்பாளிகள்? 




கவிஞர் தக்ஷன் என்னை பாதித்த இந்திய படைப்பாளிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள், வைரமுத்து அவர்கள், கவிஞர் இரா. இரவி அவர்கள். 



 எவ்விலக்கியத்தில் அதிகமான ஈடுபாடுள்ளது? ஏன்? 


கவிஞர் தக்ஷன் கவிதை இலக்கியத்தில் ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, லிமர்புன், மகிழ்வூட்பா என்ற பா வகைமைகளை என் உயிராக நேசிக்கிறேன். இவற்றில் தான் என் முழு ஈடுபாடும். கவிதாயினி ராஜ் சுகா நீங்கள் கூறிய “ஹைக்கூ” பற்றிய விளக்கம் எமது வாசகர்களுக்காக‌ கவிஞர் தக்ஷன் ஹைக்கூ பற்றிய விளக்கம் என்றால்… ஹைக்கூ என்பது ஒரு கண நேர காட்சியாகும். எவரும் கண்டிராத கோணத்தில் 3 வரிகளில் சொல்லப்படும் அதிகளவு பொருள் கொண்டதாகும். -மூன்றடிகளால் பாடுவது. -ஹைக்கூ கற்பனையை ஏற்காது. -ஹைக்கூ உவமை, உருவகங்களைப் பயன்படுத்தாது. -ஹைக்கூ உணர்ச்சியை வெளிப்படையாய்க் கூறாது. -ஹைக்கூ தன்மைப் பாங்கினைத் தவிர்க்கும். -ஹைக்கூ கவிதைக்குள்ளே ஒரு சொல் மட்டும் குறியீடாய்ப் பயின்று வருதல் இல்லை. -ஹைக்கூ இருண்மையை மேற்கொள்ளாது. -ஹைக்கூவில் நுண்பொருண்மை இல்லை. -கவிஞன் தன் கருத்தை ஏற்றிச் சொல்லாமை. -பிரச்சாரமின்மை. -எளிமையாகக் கூறுவது. -சொல்லுவதைக் காட்டிலும் சொல்லாமல் விடுவது. -சின்ன உயிர்களையும் சிறப்பித்துப் பாடுவது. -மின்னல் என வரும் ஈற்றடி அமைப்பினைக் கொண்டதாக இருப்பது. -மெல்லிய நகைச்சுவையுணர்வு இழையோடியிருக்கும்படி அமைவது. -இயற்கையைப் பாடுவதுடன் இயற்கையை மனித உணர்வுகளோடு இணைத்துப் பாடுவது. -ஆழ்மன உணர்வுகளும் மெல்லிய சோகமும் இழையோடும்படி அமைவது. -பிற உயிர்களைத் தனக்கு இணையாக மதித்துப் பாடுவது. என்ற கருத்தை ஹைக்கூ படைப்பாளர்களும், வாசகர்களும் கருத்திற்கொண்டு ஹைக்கூ கவிதைகளை அணுக வேண்டும். 



 லிமரைக்கூ, மகிழ்வூட்பா, லிமர்புன் எனும் வடிவங்கள் பற்றிக் கூற முடியுமா? 


கவிஞர் தக்ஷன் லிமரைக்கூ என்பது 3 வரி கவி வடிவம். ஆங்கிலத்தில் லிமரிக் எனப்படும் 5 வரி கவிதையின் வடிவத்தை ஹைக்கூ போலவே 3 வரிகளில் இயைபு பொருத்தி எழுதுவது லிமரைக்கூ எனப்படும். இதற்கு கடைப்பிடிக்க வேண்டிய இலக்கணமானது சீர் பிரித்து எழுதுதலே ஆகும். முதல் வரியில் மூன்று சீர்களும் இரண்டாம் வரியில் நாங்கு சீர்களும், மூன்றாம் வரியில் மூன்று சீர்களும் பொருத்தி எழுத வேண்டும். முதல் வரியின் கடைசி சீர் இயைபு மற்றும் மூன்றாம் வரியின் கடைசி சீர் இயைபும் பொருத்தி எழுதுதலே லிமரைக்கூ ஆகும். 

மகிழ்வூட்பா என்பதும் இயைபு பொருத்தி எழுதும் ஒரு வித கவி வடிவம் தான். ஆங்கிலத்தில் Clerihew என்பார்கள். 4 வரி கவி வடிவம், முதல் வரியின் கடைசி சீரும் இரண்டாம் வரியின் கடைசி சீரும் இயைபு இருக்க வேண்டும். மூன்று மற்றும் நாங்காம் வரியின் கடைசி சீரில் இயைபு பொருந்தி இருக்க வேண்டும். 

லிமர்பும் என்பது ஒரு உரைநடை போலவோ அல்லது சிறு கட்டுரை போலவோ 15 வரிகளில் ஒரு பாடுபொருளைப்பற்றி எழுதி, அதன் முடிவில் கட்டுரைக்கு ஏற்றாற்போல் லிமரைக்கூ எழுதி முடித்தல் ஆகும். லிமர்புன் மற்றும் மகிழ்வூட்பா எழுதி கவிதைப்போட்டியில் நான் பரிசு பெற்றுள்ளேன் என்பதையும் மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன். 



 ஹைக்கூ என்பதற்கும் மேற்கூறிய இலக்கிய வடிவங்களுக்கும் என்ன ஒற்றுமை வேற்றுமை காணப்படுகின்றது? 



கவிஞர் தக்ஷன் ஹைக்கூ என்பதை வாசித்து பொருள் புரிந்து கொள்ள வாசகர்களும் சிறு கவித்தன்மை ஏனெனில், ஹைக்கூ என்பது நம்மைத் தட்டி அழைக்கும் கை… 3 வரியில் எத்தனை எத்தனை பொருள் விரிகிறது என்பது வாசகர்களின் கவித்தன்மையை பொருத்து அமையும். இதுவே மற்ற வடிவங்களுக்கும் ஹைக்கூவுக்குமான வேற்றுமை. 



 ‘இன்றைய சமகால எழுத்தாளர்கள் புதுக்கவிதைக்குள் புகுந்து விளையாடுகின்றார்கள் மரபு சார்ந்த இலக்கியங்களை புறந்தள்ளுகின்றார்கள்’ எனும் குற்றச்சாட்டு இருக்கின்றது ஏன்? இவ்வாறான நிலை எனக் கருதுகின்றீர்கள்? 


கவிஞர் தக்ஷன் மரபு மற்றும் மேற்கூறிய கவிதைகளைப் படைப்பதற்கு இலக்கண வரைமுறைகளை நன்கறிந்து கையாள வேண்டும். புதுக்கவிதைகளில் கற்பனையை அழகாக வடிவமைத்து அனைவரையும் வசியம் செய்து விட முடிகிறது என்பதே காரணமாக இருக்கிறது. ஹைக்கூ கவிதைகளை பொறுத்த வரை கற்பனையை ஏற்காது, அசைகள் கடைப்பிடித்தல் போன்ற இலக்கணங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். புதுக்கவிதைகளுக்கு கற்பனை தான் கரு என்பதால் அனைவராலும் எழுதிடவும் முடிகிறது. மரபு சார்ந்த இலக்கியங்களின் தெளிவில்லாமையே புறந்தள்ளக் காரணமாகும். மரபு சார்ந்த கவிதைகளை எளிதில் படைத்து விட முடியாது என்பதும் காரணமாகும். 




 இலங்கைப் படைப்புக்களை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதா? 


கவிஞர் தக்ஷன் இலங்கைப் படைப்புக்களை வாசிக்கும் சந்தர்ப்பம் அதிகமுண்டு. முகநூலில் அதிகளவிலான படைப்புகளை என்னால் காண முடிகிறது. அதிகளவிலான கவிஞர்களையும் காண முடிகிறது. ஹைக்கூ பற்றிய ஆர்வம் இலங்கை கவிஞர்களில் அதிகளவில் கண்டேன். குறிப்பாக, அதிகளவு இலங்கைப் படைப்புகளைக் கண்டு தான் ஹைக்கூவில் ஆர்வமாகிறேன். 


 அப்படியாயின், இலங்கைப் படைப்பில் எவ்வகையான வித்தியாசங்கள், அநுபவத்தினை  உணர்கின்றீர்கள்? 


கவிஞர் தக்ஷன் ஹைக்கூ பற்றிய சிந்தனைகள் இலங்கை படைப்பாளிகள் அருமையாக தூவுகின்றனர். புதுப்புது வடிவங்களைக் கற்கவும் வலைத்தளங்களில் அதிக இளம் கவிஞர்களைக் காண்கிறேன். மரபு, ஆசிரியப்பா, வெண்பா, துளிப்பா போன்ற படைப்புகளில் நான் வித்தியாசமான அனுபவத்தினை உணர்கிறேன். 


உங்களைக் கவர்ந்த எழுத்தாளர்கள்? எவ்வாறு உங்களை இலக்கியத்தில் வளப்படுத்திக்கொள்கின்றீர்கள்? 


கவிஞர் தக்ஷன் கவர்ந்த எழுத்தாளர்கள். நா.முத்துக்குமார் அவர்களின் ஹைக்கூக்கள், முனைவர் கவியருவி ம. ரமேஷ் அவர்கள், கவிஞர். நாகை ஆசைத்தம்பி அய்யா, கவிஞர். தா. துளசி, ஹைக்கூ கவிஞர் கி.சார்ல்ஸ் அய்யா. இவர்களின் இலக்கியங்கள் என்றென்றும் நின்று பேசும். இவற்றை வாசித்தே என்னை இலக்கியத்தில் வளப்படுத்திக்கொள்கின்றேன்



 ஹைக்கூ இலக்கியங்களில் இன்றைய இளையவர்களின் ஆர்வம் எவ்வாறு இருக்கின்றது? அதனை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்த நீங்கள் எவ்வகையான முயற்சிகளை மேற்கொள்கின்றீர்கள்? அதில் பெற்றுக்கொண்ட வெற்றிகள் பற்றிக்கூற முடியுமா? 


கவிஞர் தக்ஷன் ஹைக்கூ இலக்கியங்களில் இன்றைய இளையவர்களின் ஆர்வம் மிக அதிகமாக இருக்கின்றது. கற்றுக்கொள்ள ஆர்வமும் அதிகளவிலுள்ளது. ஹைக்கூவில் எவ்வாறான விடயங்களைச் சொல்ல முடியும்? எவற்றை ஹைக்கூவாகப் பார்க்கலாம் எனப் பல கேள்விகளுடனும், ஆர்வத்திடனும் இன்றைய இளையவர்கள் இருகின்றார்கள். இதனை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தவும், கற்பிக்கவும் முகநூல் குழுமங்கள் என்னை நாடினர். கவிஞர் கவியருவி, கவியன்பன் கலாம் அய்யா அமைத்துக் கொடுத்த களத்தின் மூலமாக நான் ஹைக்கூ பற்றிய அறிமுகத்தையும் நான் பெற்ற தெளிவுகளையும் மற்றவர்களுக்கும் கற்பிக்க எளிமையாகவுள்ளது. இவற்றைக்கற்று ஹைக்கூ படைத்து பிரபல இலக்கிய இதழ்களிலும் மற்றவர்களின் படைப்பை காண்கிறேன். மகிழ்ச்சியடைகிறேன். 





 இத்துறையில் நீங்கள் வளர தங்களது ஆசான்களாக கருதுவது? 


கவிஞர் தக்ஷன் இத்துறையில் நான் எனது ஆசான்களாக கருதுவது முனைவர் ம. ரமேஷ் அய்யா மற்றும் மகிழ்நன் மறைக்காடு அய்யா, தா. துளசி, எஸ். நாகலிங்கம் தென்னம்பூவயல் ஆவார்கள். 

 எதிர்காலத்திட்டம்? 


கவிஞர் தக்ஷன் சிறந்த ஹைக்கூவை உருவாக்குவது. ஹைக்கூ கவிதைகளைப் புத்தகமாக வெளியிட்டு, அனைவரிடமும் ஹைக்கூ இருக்கிறது என்பதை உணர வைப்பது. ஹைக்கூ பற்றிய தேடலில் வெற்றியடைந்து அனைவருக்கும் மென்மேலும் கற்பித்து சிறந்த ஹைக்கூ கவிஞர்களை உலகிற்கு அறிமுகஞ்செய்வது







No comments: