Wednesday, November 20, 2013

எனக்கு மட்டுமா?? இல்லவே இல்லை...




என்னதான் நாம் மற்றவர்களுக்கு முன்பாக சிரித்து மகிழ்ந்துகொண்டிருந்தாலும் ஒவ்வொரு இதயத்துக்குள்ளும் ஏராளமான வலிகளும் வேதனைகளும் குமுறிக்கொண்டிருப்பதை அநேக சந்தர்ப்பங்களில் நாம் மறந்துவிடுவதுண்டு. இன்று ஒரு மரணவீட்டுக்கு போகவேண்டியிருந்தது (சகோதர‌மொழி பேசும் ஒரு தோழியின் தாயார்) நாங்கள் பத்துபேர் போயிருந்தோம், அங்கிருந்து வரும்வழியில் தெரிந்த ஒரு பெண்ணை சந்திக்கவேண்டியிருந்தது அவருடன் கதைத்துக் கொண்டி ருக்கும் போதே அவரின் கணவர் அவரை அழைக்க 'ஐயோ அவர் கூப்பிடுகின்றார்..' என்றவண்ணமாக வாகனத்தை நோக்கி ஓடினார். இதனைப்பார்த்து என்னுடன் வந்த மற்ற நண்பியிடம்(என்னைவிட வயதில் மூத்தவர்தான்) நீங்களும் இப்படியா பயந்து ஓடுவீங்க என்று கேட்டதற்கு, இல்லை நான் யாருக்கும் பயப்படுவதில்லை என்றார் அதற்குநான், அப்போ அவர்தான் உங்களுக்கு பயமா என்று கேட்க தனது வெறுமையான மோதிரவிரலைக்காட்டினார். 'ம்ம்ம் அப்போ பிள்ளைகள்? பிள்ளைகளும் இல்லை' அம்மா அப்பா? அம்மா இல்லை அப்பா மட்டும் இருக்கின்றார் அவருக்கு பக்கவாதம் வந்த பிறகு அவர் தம்பியோடு இருக்கின்றார் விடுமுறை நாட்களில் அவரை பார்த்துவருவேன் நான் தனியாகத்தான்' என்றார். எனக்கு இதயம் ஒரு விநாடி இயல்பை மறந்தது ஏனோ மனதுக்குள் காயமேயில்லாம் வலிக்கத்தொடங்கியது.





அந்த சகோதரி எப்போதும் கலகலப்பாகவும் சுறுசுறுப்பாகவும் கடமையில் கருத்துமாக வலம்வரும் ஒருவர். மற்றவர்களின் அநுதாபங்களை எதிர்பார்க்காதவர் அவர் ஒரு ஆசிரியர் என்பதால் மாணவர்களோடு அவரது வாழ்நாட்கள் மகிழ்வாக கழிகின்றது (எங்களின் பார்வைக்கு) உண்மையில் அந்த சகோதரியை பார்த்து வேதனையோடுகூட‌  பெறுமையாகவும் இருந்தது யாருமில்லையே என முடங்கிப்போகாமல் தன்மீதுகொண்ட அபரிதமான நம்பிக்கை அவரை மிக இயல்பாக வைத்துக்கொண்டிருந்தது. அநேக பிரச்சனைகளும் வேதனைகளும் நாமாக திணித்துக்கொள்வதுதான் அதுவாக வந்தாலும் நாமாக விலகிப்போனால் அல்லது தவிர்த்துக்கொண்டால் அதுவும் இல்லையென்றால் அலட்டிக்கொள்ளாமலிருந்தாலே நாம் நாமாக வாழமுடியுமென்ற உணர்வு என்னக்குள் உந்திக்கொண்டேயிருந்தது.

வாழ்க்கையை நாம்தான் நல்லவழியில், நமக்கு பிடித்தமான வழியில், மற்றவர்களுக்கும் பயன்படும் விதத்தில், எவருக்கும் கஸ்டம் கொடுக்காத வகையில் சவாலாக வாழ்ந்துவிட வேண்டும். பிரச்சனைகள் வரட்டும் எம்மை விரும்பியது, நாம் விரும்பியது எம்மை கடந்து போகட்டும் ஆனாலும் நாம் நாமாக இருக்கமுயற்சிக்கவேண்டும். நல்லதோ கெட்டதோ உலகம் இரட்டை நாவினால்தான் எம்மை அணுகும் அதனால் அவற்றை கணக்கிலே எடுக்காவிட்டால் நாமும்கூட மகிழ்ச்சியாக வாழலாம் மனநிம்மதியாக சாதிக்கலாம்.

வாருங்கள் வாழ்வோம் வரும் வலிகளை தூக்கியெறிவோம் புதிய வழிகளை உருவாக்குவோம்




No comments: