Friday, February 21, 2014

தீயில் நடப்பதும் நன்றே!!

கடந்த காலத்தின்
கறைகளை
நடந்த பாதத்தின்
வலிகளை
உடைந்த சிலைகளின்
புலம்பல்களை
தடுத்து நிறுத்திடவோர்
எதிர்காலமுண்டென்றால் இன்று
தீயில் நடப்பதும் நன்றே!!



மனிதர்

குறைகளில்லாமல் மனிதர்களில்லை
நிறைவானவர்கள் மனிதர்களுமில்லை!!

ஊடறு இணைய இதழில் எனது கவிதை (18.02.2014)

http://www.oodaru.com/?p=6960


த.எலிசபெத் (இலங்கை)

எழுந்து புன்னகைப்பேன்


தோற்றுப்போனது
வாழ்க்கையில்தான்
துவண்டுபோனது
துடிப்புள்ள இதயமல்ல!
அடிவீழ்ந்தது
உயிரில்தான்
அணைந்து போனது
ஆழ்மனதல்ல!
காயம் கண்டது
கனிவான காதல்தான்
நோயாகிப்போனது
கண்ணியங்கொண்ட கடமைகளல்ல!
இன்னும் ஆணிகளும்
இரக்கமில்லா வஞ்சனைகளும்
என்னைச்சுற்றி சூழட்டும்
எரிந்துகொண்டிருப்பது மனமாயிருந்தாலும்
எழுந்து புன்னகைப்பேன் மலராகவே!!!

Wednesday, February 19, 2014

தூக்குக்கயிறு!!

கழுத்தில் ஏறினால்
தாலிக்கயிறு -இது
கழுத்திலேறாவிட்டால்
பலருக்கு வாழ்வின்
தூக்குக்கயிறு!!

நம் காதலே காட்சி!!

காதல் அழகானதென்பதற்கு
நாமே சாட்சி
அதி ல‌ழுகை தவிர்க்கமுடிதாதென்பதற்கு
நம் காதலே காட்சி!!



என் கேள்விக்குறி நீ

எப்போதும்
என் கேள்விக்குறி நீ
என்று முற்றுப்புள்ளி வைத்து
விடைதரப்போகின்றாய்??



Tuesday, February 18, 2014

என்னதான் செய்யவேண்டுமென்று நீங்க நினைக்கிறீங்க????

பெண்களுக்கெதிராய் நீட்டப்படும் கேள்விகள் எந்த சந்தர்ப்பத்தில் திருப்தியாகும் அல்லது விடைபெற்று சமாதியாகுமென்று புரியவில்லை உங்களுக்கென்டாலும் புரியுதா நண்பர்களே இது இப்படித்தாங்க ஆரம்பிக்குது ஆனால் முடிவுதான் இன்னுமில்லை.

01. 18‍ 20 வயதுக்குள்ள விரும்பியவனை திருமணம் செய்துகொண்டால், 'பாரு ஆடுகாழி இந்த வயசில விருப்பத்துக்கு புருஷன் தேடிக்கொண்டா...'

02. 28 வயதுக்கு மேல் திருமணம் முடிக்காமல் இருந்தால், 'என்ன ஒன்றும் பார்க்கவில்லையா? இப்ப காலம் சரிதானே அப்படி இப்படியென்று இறுதியில் முதிர்க்கன்னியென்ற முத்திரையோடு நிற்கவிடுவர் (இந்த வயதுக்காரருக்கு இன்னொரு சிறப்புமுண்டு அதாவது, இத்தனை காலம் காதல்வலையில் வீழாமல் அம்மா அப்பா பிள்ளையாக இருந்தபோது தூக்கிவைத்த சமூகந்தான் முதிர்க்கன்னியென்ற முக்காட்டை சடுதியில் போட்டு அழகுபார்ப்பர்)

03. அப்பெண், திருமணம் முடித்து ஒரு வருடம் கடந்துவிட்டால், 'இன்னும் ஒரு விஷேசமுமில்லையா?

04. அதுவே வருடங்கள் பலவற்றை தொட்டுவிட்டால் 'மலடி' யென்ற மகுடத்தை பகிரங்கமாகவே வழங்கிடுவார்

05. ஒரு பெண்ணுக்கு ஒரேயொரு பெண்குழந்தை மட்டும் பிறந்துவிட்டால், 'என்னம்மா பொண்ணு மட்டுந்தானா ஒரு பையன் இருந்தா நல்லது நாளைக்கு பின்னுக்கு ஆம்பிள பிள்ளதான் உதவுவான்' என்றொரு குதர்க்கம்

ம்ம்ம்.... இப்படியே வேண்டாக் கதைகளை சொல்லிக்கொண்டு போனால் கடைசியில ஒரு பெண் எப்படித்தான் இருக்கவேண்டும் என்னதான் செய்யவேண்டுமென்று நீங்க நினைக்கிறீங்க????

அழி தெளி...

விழிநுதழ் பதிக்கும்
அழுநிலை அகற்று
வழியதில் நிலைக்க‌
அழி தெளி ஜொலிக்கும்!!


Monday, February 17, 2014

உன்வாசம்

அடிக்கடி உன்வாசம்
வந்துபோகின்றது
துடிக்கின்ற‌ சுவாசந்தனில்!!



காதல் - மோதல்

புரிந்துக்கொள்ளும் வரை
காதல் -நன்றாக‌
புரிந்துகொண்டபின்னரோ
மோதல்!!


பிரித்துப்பார்க்காதே

உன்னையு மென்னையும்
பிரித்துப்பார்க்காதே -அந்நொடியதில்
உயிர் இருப்பதில்லை!!


Sunday, February 16, 2014

அத்தனை இலகுவில்....

மறுத்துப்போகும் உறவுகளை
அத்தனை இலகுவில்
மறந்துபோக முடிவதில்லை!!



Saturday, February 15, 2014

உயிராக!!

உதட்டோடு
உன்னை வெறுத்தாலும்
உள்ளத்தோடு
உயிர்வாழ்ந்துகொண்டேயிருக்கின்றாய்
உயிராக!!



Friday, February 14, 2014

தமிழ்லீடர் இணைய இதழில் எனது கவிதை 12.02.2014


http://tamilleader.com/?p=27616



இனியும் வேண்டாம்…..!!!

 
காதல் பிரிவு





வாழ்வின் பாதியும் நீதான் என்
இதயத்தின் பகுதியும் நீதான்
தாழ்வின் கோரம்வரும்போதும்
தாங்கிடுவேன் உன்னை நானென்று
தாராளமாயுரைத்த கண்மணியே
தாங்காச்சோகந்தனை தந்து
தாலிபெற்று சென்றதென்ன?
நோயாய் நீகொளுத்திய தீதா னின்றும்
நொடியிடை வெளியின்றி
பொடிப்பொடியாக்கிப் போட்டது
தத்தளிக்கும் தளிராய்
தனித்துவிடப்பட்டிருக்கின்றேன்
நினைவுகளை கொன்றழித்திடமுடியாது
செத்துபிழைக்கின்றேன் எப்படியடி
சேர்த்தெல்லாவற்றையும் புதைத்திட்டு
செந்தாமரையாய் புன்னகைக்கின்றாய்?
நிமிடத்துக்கொருமுறை சொல்வாயே என்
நிம்மதியெல்லாம் நான்தானென்று
அடிக்கடியணைப்பாயே கண்ணாளனே
அழிவொன்றில்லாது நமைபிரிப்ப
தரிதென்று
என்னவென்றடி எல்லாவற்றையும்
புதைத்திட முடிந்தது
மணிமணியாய் செதுக்கி
மாளிகையா யெழுப்பிய‌
காதலிதயத்தை கலைத்தெறிவதெப்படி
நிறைந்திருக்கும் உன்
நினைவுகளை நீக்கிடும் வழியறியாது
உறைந்திருக்கின்றேன்
ஒற்றைநொடி திரும்பிப்பார்த்திருக்கலாம்
ஓராயிரம் ஆழம்பொதிந்த நம்
காதல் நினைவுகளை
ஆனந்துத்துக்கும் அன்புக்கும் குறைவிலா
அந்த நிமிடந்தனையொரு நொடி
மீட்டியிருக்கலாம் என்னிடம்
ஓடிவந்திருப்பாய்….
இனியும் வேண்டாம்
இரவான எனதுகளில்
ஒளிநிரப்ப வேண்டாம்
நிம்மதி தேடும் வழிகளெனதில்லை
நிகழ்ச்சிகளை நிரப்புவதில் உடன்பாடில்லை
உன்பாதை வேறு
எனது பயணம் வேறு
பிரிவோம் செல்வோம் இனியொருமுறை
சந்திக்காதபடி…
- த.எலிசபெத் (ராஜ்சுகா)

உனக்கான திறவுகோல்கள்

வாழ்வு உன் தவறல்ல‌
தாழ்வு முன் தவறல்ல‌
அதுவே உனக்கான திறவுகோல்கள்
அதுதான் உனக்கான வாழ்க்கைப்படிகள்

நிமிர்ந்து நின்றிட முயற்சிசெய்
உதிர்ந்து விழுந்திடும் மனச்சிதை
துளிர்த்து முளைத்திட எழுந்திடு
தளர்ந்து ஒதுங்கிடும் வீண்வதை!!


Thursday, February 13, 2014

வேரறுந்த மரத்தில்

வேரறுந்த மரத்தில்
பூப்பதெப்படி
காய்ப்பதெப்படி??
நீங்கள்
தண்ணீர் தெளிக்காதீர்கள்!!



Tuesday, February 11, 2014

மிகக்கோரமானவை

நம் நினைவுகள்
எத்தனை அழகானவை இன்று
என் நிகழ்வுகள் மட்டும்
கோரம் மிகக்கோரமானவை
கோரிக்கையறிவாயா???



கண்ணாடிக்காண்கையில்

கண்ணாடிக்காண்கையில் 
கண்களை பதிக்காமல் 
கடப்பதாரோ
கன்னியரை காணும்
காளையரைப்போல‌!!


அடிகள் வலிப்பதில்லை!!

படிகள் ஒவ்வொன்றும்
அடிகளாகவே இருந்ததால் -இப்போதெல்லாம்
அடிகள் வலிப்பதில்லை
பிடிகளாய் எழுந்துவிடுகின்றேன்!!



Monday, February 10, 2014

நிஜம்‬

அழகான காதலியைத்தேடி சிலர் 
அருமையான மனைவியை இழந்துவிடுகின்றார்கள்