Wednesday, November 20, 2013

அதனால்தான்

உணர்ந்து காதலித்தேன்
உண்மையாய் காதலித்தேன்
உயிராக காதலித்தேன் -அதனால்தான்
உதறிவிட முடியாது
உருக்குழைந்து தவிக்கின்றேன்!!


Tuesday, November 19, 2013

உன்னிடம் மட்டுந்தான்

பத்துப்பேரும்
பலவிதமாய் பேசலாம்
பித்துக்கொள்ளவைக்கும்
பிதற்றல்களை உதறிடலாம்
குத்திக்கொல்ல
குறியும் பார்க்கலாம் -ஏன்
கூட இருந்தே
குழியும் பறிக்கலாம்
பலவீனப் பட்டு மட்டும்
போய்விடாதே -எல்லாவற்றையும்
தூக்கிநிறுத்தும்
துணிவு என்பது
உன்னிடம் மட்டுந்தான்
உலகளவில் குடிகொண்டிருக்கின்றது!!








தமிழ் ஓதர்ஸ் இணைய இதழில்...

http://tamilauthors.com/04/222.html


ஈழத்து இலக்கிய பரப்பில் 'புதுக்கவிதை' என்ற மகுடத்தோடு களமிறங்கியிருக்கின்றது 'மனவெளியின் பிரதி'. அநுராதபுர மாவட்டத்தைச்சேர்ந்த நாச்சியாதீவு பர்வீன் அவர்களின் 2வது தொகுதியாக வெளிவந்திருக்கும் இக்கவிதை தொகுதியானது வாசித்தலுக்கும் யோசித்தலுக்கும் உகந்த மிகச்சிறந்த நூலெனலாம். முற்றிய கரும்பை நுனியிலிருந்து அடிவரை சுவைக்கும் அநுபவத்தை பெற்றுத்தரும் மனவெளியின் பிரதியானது மொழியைவிட்டு புரிதலைவிட்டு இலகுவைவிட்டு சிதறிவிடாமல் பக்குவமான தண்டவாளப்பயணமாய் இருப்பது வாசகனுக்கு அவனது வாசிப்புப்பயணத்தை இலகுவாக்கிவிட்டிருக்கின்றது.

39கவிதைகளை உள்ளடக்கிய இத்தொகுப்பில் இயற்கையோடும் இதயங்களோடும் சந்திக்கின்ற உணர்வுகளை மிக அழகான கவித்துவத்துடன் வெளிப்படுத்தியுள்ள கவிஞரை நிச்சயமாக தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கும்போதே வாழ்த்தத்தோன்றும். அத்தோடு மனித‌ மனவோட்டங்களை அப்படியே பிரதியிட்டிருக்கும் இத்தொகுதிக்கு, 'மனவெளியின் பிரதி' எனும் நாமம் மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது.


அட்டைப்படத்துடன் நூலுக்கான முன்னுரையினை கவிஞரும் எழுத்தாளருமான மேமன்கவி தந்துள்ளார். சற்று வித்தியாசமாக 'பின்னுரை' என்ற பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது அதனையும் மேமன்கவி அவர்களே வழங்கியுள்ளார். கவிஞரின் கவிதையினை பரிந்துரை செய்ததுடன் அவரின் வளர்ச்சியில் பங்குகொண்டுள்ளவர்கள் குறிப்பாக மூத்த படைப்பாளி ஷம்ஸ் அவர்களைப்பற்றியும், நாச்சியாதீவு பர்வீன் அவர்களுக்கு நடைபெற்ற சுவாரஸ்யமான ஒரு விடயத்தினையும் நயம்பட குறிப்பிட்டிருப்பது விஷேடமாக காணப்படுகின்றது. இதனை நீங்களே வாசித்து அந்த சிறந்த அநுபவத்தினை பெற்றுக்கொள்ளுங்கள்.


'நாளை' என்ற  ஆரம்பத்தோடு தொடங்கும்  இத்தொகுப்பின் முதற்கவிதை, நாளைகாலப்புத்தகத்தின்ஒரு புதிய பக்கம்... என தொடங்கி

நாளைக்கே தெரியாதுநாளை என்ன‌நடக்குமென்று" என முடிகின்றது. நாளைய நாளைப்பற்றிய அழகான கனவை கொண்டிருக்கும் இக்கவியானது 'நாளை; என்பதனை நம்பிக்கையின் நதிமூலம் என குறிப்பிட்டிருப்பது மாசுப்படாத அந்நாளைப்பற்றி எங்கள் மனமும்கூட ஒரு நீண்ட எதிர்பார்ப்பினை பெறுகின்றது. அதுபோல‌ இயற்கையை தொட்டுப்பேசாத கவிஞர்கள் இல்லையெனலாம் அந்த வகையில் கவிஞர் பர்வீன் அவர்களும் இதில் விதிவிலக்கல்ல ஆனால் இவரின் இயற்கை கவிதைகளில் ஒரு விஷேடத்தன்மை காணப்படுவதை அவதானிக்கலாம். வெறும் இயற்கை ரசிப்போடு நின்றுவிடாமல் அதற்குள் சமூகத்தை பிரதிபலித்திருப்பதே அவ்விடயமாகும். இதனை 'நிலவு இராட்சியம்', 'இரவுத்திருடன்', 'பட்டாம்பூச்சியின் பறத்தல்பற்றி','மழைகொறித்த பூமி' போன்ற கவிதைகளினூடாக காணலாம்.


'எதிர்த்த சில நட்சத்திரங்கள்
எரி நட்சத்திரமாய்
உருமாறிப்போக‌ 
ஏக்கம் நிறைந்த மனதுடன்
சில நட்சத்திரங்கள்
பேசிக்கொண்டன‌
இன்னொருநிலவின் வருகைபற்றி..... என்ற வரிகளில் அரசியல்பற்றிய ஆதங்கங்களை இயற்கை ஆதாரத்தோடு வெளிப்படுத்தியிருப்பது கவிஞரின் கவித்துவத்தை ஆழம்பார்த்திருக்கின்றது எனலாம்.

காதலை விடுத்து கவிஞர்களின் பேனை,கவிவடித்துவிடுவது என்பது அரிதிலும் அரிது ஏன் இல்லையென்றே சொல்லலாம் அந்தளவுக்கு உலகத்தை சூழ்ந்திருக்கும் இக்காதல் இன்பமாகவோ துன்பமாகவோ எவ்வகையிலேனும் இணைந்தே இருக்கின்றது அந்த மனவுணர்வுகளை மிகப்பக்குவமாக செதுக்கிவிட்டிருக்கின்றார் கவிஞர்.

எல்லை கடந்த‌எனது ஞானவெளியில்நீ இல்லாத‌இந்தப்பொழுதுகள்மிக மிக இனிமையானவை ...

                                               என்ற வரிகள் 'எல்லை கடந்த ஞானம்' எனும் கவிதையில் இடம்பெற்றுள்ளது. காதலை கடந்துவரும் எமது வாழ்க்கை அத்தியாயத்தில் அதன் வடுக்களும் வலிகளும் மட்டும் எம்மோடு ஒட்டிக்கொண்டே வந்துவிடுகின்றது. ஞாபகங்களை விளக்கிவைக்க எத்தனித்தாலும் அதிலிருந்து விலகிடமுடியாத நிர்ப்பந்தத்தில் ஒவ்வொரு மனங்களும் தவிப்பதை இக்கவிதையில் துல்லியமாக வரிகளாக்கியுள்ளார். அதனை,

நமக்கான‌இடைவெளிகள் என்னமோஅதிகம்தான் இருந்தும்இன்னும் துரத்துகின்றதுஉனது ஞாபகம்...'  என்ற வரிகளில் அவதானிக்கலாம்.

இதுபோன்று 'நீ பற்றிய நினைவுகள்', கனவுக்கோடுகள், ரயில் சிநேகம், பழைய டயரி, இந்த நாள் எப்பவரும், நீ இல்லாத சாயங்காலம், போன்ற கவிதைகளையும் சுட்டிக்காட்டலாம். குறிப்பாக 'சம்மதமில்லாத மெளனங்கள்' என்ற தலைப்பில்,

எனதான விட்டுக்கொடுப்புக்களைஉன் பிழையான மொழிபெயர்ப்புக்கள்எத்தனை நாட்கள்என் தூக்கத்தை விழுங்கிஉள்ளது தெரியுமா?

      என்ற வரிகள் புரிதல் இல்லாத பிரிவுகளின் வேதனைகளோடும் ஏனைய கவிதைகளில் அன்பும் நேசமும் ஆறாய்ப்பெருகும் அழகிய காதல் வரிகளையும் படைத்திருப்பது வாசிப்பார்வத்தை இன்னும் அதிகப்படுத்துகின்றது.

உண்மையில் கவிஞர் நாச்சியாதீவு பர்வீன் அவர்கள் தனதுரையில் குறிப்பிட்டிருப்பதைப்போல இவரின் கவிதைகளை வாசிக்கும்போது கவிஞர் வைரமுத்துவின் தாக்கம் மிகத்தெளிவாகத்தெரிகின்றது. வாசகர்களுக்கு சிரமமில்லாத மொழிநடை, நூலுக்கு வலுசேர்த்திருப்பதோடு கவிதைகளையும் வளப்படுத்தியுள்ளது

முன்பு கூறியதுபோல சமூகத்தின் பல தளங்களில்நின்று பாடியுள்ள இவரது கவிதைகளில் அழுத்தமான வரிகளை கொண்டு ஆற்றாமைகளையும் ஆளுமைகளையும் விதைத்திருப்பது வேலைக்காக வெளிநாடு செல்பவர்களின் மனநிலை, தேசத்தில் நிகழ்ந்த காயங்கள் கண்ணீராறுகள் அதன் வலிகள் வடுக்கள், முட்டுக்கட்டைபோடும் மூடநம்பிக்கைகள்,நட்பு, பிரிவு ஒரு தந்தையின் மனநிலை என நீள்கின்றது இதனை தொட்டுக்காட்டி செல்வதற்கும் தொடுத்துவிட்டு செல்வதற்கும் இந்நூலில் ஒருசிலவற்றை பொறுக்கியெடுக்க முடியாமல் திகைக்கின்றது என் ரசனைக்கண்கள் ஏனெனில் அத்தனை கவிதைகளும் அத்தனை சுவைமிகுந்தவை.

வாசகனை சந்தத்தோடும் சந்திக்கின்றது 'பாவியாகிக்கிடக்கின்றேன்' 'அழுது வடிக்கிறோம்' போன்ற கவிதைகள். என்னதான் ஒரு விடயம் பிறரிடமிருந்து எம்மை பாதித்திருந்தாலும் அவ்விடயம் எம்மை பாதிக்கும்போதுதான் அதன் உண்மையான வலியையும் அந்த உணர்வினையும் எம்மால் விளங்கிக்கொள்ளமுடியும் அதனை கவிஞரின் 'மரியம் என்ற என் மகளுக்கு' என்ற கவிதையில் இனங்காணலாம்.


'மரியம் என் உயிரே
உனக்கு நன்றியம்மா
பெற்றோரின் பெறுமதியை
உணர்த்தியமைக்கு....

                          என்ற வரிகள் தான் தந்தையாகிய பிறகுதான் தன்னுடைய பெற்றாரின் மகத்துவத்தை தன்னால் நன்றாக உணரமுடிகின்றது என்பதனை தெளிவுபடுத்துகின்றார் இது எல்லாவிதமான அநுபவங்களுக்கும் பொருத்தமான உதாரணமாக கொள்ளலாம்.


இத்தொகுப்பின் சில கவிதைகளில் 'நிர்வாணம் கலைந்த இரவு', 'எனது நிர்வாண மனத்தின்', இந்த நிர்வாண வெளியில்' என 'நிர்வாணம்' என்ற வார்த்தையை அடிக்கடி பிரயோகித்திருப்பது கவிஞர், சில உண்மைகளை உயிரோட்டமாக காட்டுவதற்கும் வெளிப்படையாக தெரிவிப்பதற்கும் முயற்சித்திருந்தாலும் மீண்டும் மீண்டும் ஒரே வார்த்தையை வாசிப்பது சுவாரஸ்யத்தை குறைத்துவிடுகின்றது.

நாம் சந்திக்கின்ற மனிதர்களின் குணவியல்புகள் எம் வாழ்வியலிலும் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கும் இதனை எம்மால் தவிர்த்திடவும் முடிவதில்லை அது நல்ல விளைவாகவும் இருக்கலாம் தீய விளைவாகவும் இருக்கலாம் அதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தினை கவிஞரின் 'வாழ்க்கைக்குறிப்புக்கள்' எனும் கவிதையில் துரோகம்,வஞ்சனை, ஏமாற்றங்களுக்கெதிரான குரலாகவும் வேதனை ஒலியாகவும் வெளிப்பட்டிருப்பது எமது வாழ்வில் சந்தித்த ஒர் அநுபவமாக எல்லோராலும் உணரமுடியும்.

இவ்வாறு எல்லா கவிதைகளையும் வாழ்வியல் அநுபவத்தினூடாக சமூக அவலங்களோடு அரசியலையும் மூடத்தனங்களையும் வெளிப்படுத்தியுள்ள கவிஞர்  மிகத்தரமான ஒரு கவிதைத்தொகுப்பினை தமிழுலகிற்கு தந்திருப்பது வரவேற்கக்கூடிய விடயமாகும். கவியார்வம் சமூக ஆர்வமுள்ளவர்கள் மட்டுமன்றி வாசிப்பு பிரியர்கள்  அனைவரிற்கும் மிகப்பெறுமதியான கவிதைகளடங்கிய 'மனவெளியின் பிரதி'யை தந்திருக்கும் கவிஞர் நாச்சியா தீவு பர்வீன் அவர்களை வாழ்த்துவதோடு ஒரு நல்ல நூலை வாசிக்கவேண்டும் என நினைக்கும் உங்களுக்கும் மனவெளியின் பிரதியை பரிந்துரை செய்து கவிஞருக்கு மனப்பூர்வமான வாழ்த்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். இதுபோல நல்ல விளைவினை ஏற்படுத்தக்கூடிய இன்னும் பல தொகுப்புக்களை கவிஞரிடமிருந்து எதிர்ப்பார்க்கின்றேன்.



 நூல்: 'மனவெளியின் பிரதி' கவிதை தொகுப்பு
 ஆசிரியர்: நாச்சியாதீவு பர்வீன்
 விலை: 350/=


Monday, November 18, 2013

மலரும் விடியல்!!

விடியும் பொழுதுகள் உனக்காகத்தான்
விதியின் பிடியில் சிலகாலந்தான்
மடியும் மகிழ்வுகள் உயிர்பித்தால்தான்
மலரும் விடியல் வரமாகத்தான்!!

நல்ல நாடகம்

நல்ல நாடகம்
நளினமான நடிப்பு
மனதை வருடும்
மாயம்
உலகம் மயங்கும்
ஓவியம்
எப்படி முடிகின்றது
இப்படி நடிக்க‌
இதயங்கள் உணராவிட்டாலும் -இதனை
இறைவன் உணர்த்தியே ஆவான்!!

அகற்றுவதாகவே யில்லை..

உலகத்தவறுகளையெல்லாம்
உள்ளங்கையில் காண்பித்தோம்
உருகும் மொழிகளில்
உள்ளங்களை பிரதிபலித்தோம் -எம்
உள்ளங்களுக்குள் புதைந்திருக்கும்
அந்த அழுக்குகளைமட்டும்
அகற்றுவதாகவே யில்லை -ஏன்
உணருவதாகக்கூட இல்லை???

Sunday, November 17, 2013

உனக்குமெனக்குமிடையில்....

மறத்தல் என்பது
மனதை மாற்றுவது -உன்
மமதை அகராதியில்
நினைத்தல் என்பது
நீள்நித்திரைதாண்டி நீள்வது
நினதகராதியில்!!



கவிதை

கவிதை
ஊசியைப்போல‌
கிழிக்கவும் முடிகின்றது -அதினால்
கிழிந்ததை தைக்கவும் முடிகின்றது!!


Friday, November 15, 2013

உன்னோடு பேசமுடியாது

ஆயிரமாயிரம் வார்த்தைகள்
ஆழ்மனதிலிருந்து எழுகின்றது
உன்னோடு பேசமுடியாது
ஊமைநாவாய் ஒதுங்கிக்கொள்கின்றது
உறவில்லா சின்னஇதயம் !!



தனிமை

தனிமையே தோழனாக தனிமையே காதலனாக தனிமையே உறவாக தனிமையே நானாக நானே தனிமையாக என்று சுழன்றிடும் என்வாழ்நாட்களில் அண்மைக்காலமாக ஏராளமான மன அழுத்தங்களுக்கு ஆட்பட்டு அல்லல்படும் மனதை என்னால் கொஞ்சம் நிம்மதிநிலைக்கு அழைத்துசெல்லமுடியுமா என வகைப்பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.

மனதை திறந்திடும் தோழனாக அநேக  நேரங்களில் உதவிக்கு வருவது இந்த பேனைக்கரங்கள் மட்டுமே அதுதான் இந்தப்பதிவின் உருவாக்கம். ஆழப்புதைந்திடும் அழுத்தங்களை அள்ளிவீசிட முடியாது அல்லலுறும் போதெல்லாம் ஆறுதல்தரும் பேனைகளுக்கு என்னென்று நன்றி சொல்வேன் நானறியேன்.

நம்பிக்கை துரோகம் என்பதின் வலியை ஆழம்வரை சென்று அநுபவித்த வடு இன்னும் மனதை விட்டு நீங்கமறுக்கின்றது. அதனை மாற்றுவதற்கு காலத்திடம் களிம்பு கிடைக்குமட்டும் காத்திருக்கின்றேன் உங்கள் ஆலோசனைகளையும் எதிர்பார்த்தவண்ணம்....



தெமட்டகொட இல்லத்தில் ஹிதாயா அக்காவுடன் நானும் தம்பியும்.. (13.11.2013)








\



















13.11.2013 கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களுடன் தெமட்டகொடை ரயில் பாதையருகில்...








































13.11.2013 கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களுடன் LADY J ல்



                                                                     








தனியாக‌!!

நாம் சென்ற பாதைகளில்
நான் என்பதுமட்டும் செல்கின்றது
தனியாக‌!!


Thursday, November 14, 2013

உண்மைக்காதல்

உண்மைக்காதல்
பணக்காரனின்
ஆடைபோ லல்ல‌
பைத்தியக்காரனின்
ஆடைபோல
மரணம்வரை
மாற்றப்படுவதேயில்லை!!


Monday, November 11, 2013

நினைவில்லாமல்

எங்கும் எதிலும்
விழிகள் எப்போதும்
உன்னையே தேடுகின்றது -நாம்
விலகிவிட்டது கூட‌
நினைவில்லாமல்!!


Saturday, November 9, 2013

அதிஷடசாலிகள்

என்னை
பெண்பார்க்க வருபவர்களெல்லாம்
அதிஷடசாலிகள்
எல்லாருக்கும்
திருமணம் நடந்துவிடுகின்றது!!
 


ஒளிதான் ஒளிதான்

தோல்வியை தூக்கி
தோளில் போடாதே
துரோகியை நெஞ்சில்
தொங்கப் போடாதே

வலிதான் வலிதான்
வாழ்வெல்லாம் வழிதான்
துக்கத்தை துடைத்து
தூரப்போட்டுவிடு

ஒளிதான் ஒளிதான் -உன்
நிமிடங்களில் ஒளிதான்
ஒழித்தால் பாரத்தை -உன்
நிழல்கூட ஒளிதான்

நேசிப்பும் சிலநேரம்
வியாதியாகும் நிஜம்தான்
யோசித்து நடந்திடால்
விலகியோடும் பனியாய்

கண்ணீரை கருத்தினில்
எடுப்பதை நிறுத்து
பொன்நேரம் உனதாகும்
இந்நாளை உயர்த்து

பின்னிட்டு நடந்திட்டால்
பூச்சிகூட விரட்டும்
புறமுதுகை திருப்பிவிட்டால்
புயல்கூட ஒதுங்கும்

வேங்கையென வெற்றியை
வெறியோடு யாசி
தீங்குவரும் நாளில்கூட‌
தீராது யோசி

நெஞ்சத்து கண்ணீரை
நொடிதனில் மாற்று
அஞ்சாமை வாழ்வதனை
தீராது போற்று

கொஞ்சமாய் முயன்றாலே
கொடிபறக்கும் முன்னாலே
வஞ்சனை கொன்றாலே
வழிபிறக்கும் தன்னாலே

உறவுதரும் காயந்தான்
உள்ளஞ்சிதைக்கும் உண்மைதான்
வரவிலதனை சேர்க்காவிட்டால்
வசந்தம் தந்திடும் நன்மைதான்

தோல்வியை தூக்கி
தோளில் போடாதே!!



Thursday, November 7, 2013

வெறுமை மட்டுமே!!

நீர்த்துப்போன
நெஞ்சத்தில்
நேசமுமில்லை
நினைவுகளுமில்லை
வெறும்
வெறுமை மட்டுமே
வேரூன்றிப்போயுள்ளது!!



Wednesday, November 6, 2013

மாற்றமுடியவில்லை

நான் நானாக இருக்க
நாட்கள் தானாக நகர
 மாற்றங்களால் மட்டும் -எதனையும்
மாற்றமுடியவில்லை


உதிரம்சொட்டும் உபத்திரவம்!!

இதயம் முறுக்கி
இமைகள் பிழிந்து
உதிர்த்துவிடும்
இதய ஓலங்கள்

அர்த்தம் சிதைத்த‌
அன்பின் தடயங்கள்
அமிழ்ந்த ழிகின்றது
ஆதாரமின்றி...

எதிர்பார்ப்புக்கள்
உடைபடுவதால் மட்டுமே
எஞ்சிக்கொண்டேபோகின்றது
எளிமைநேசம்

தொடர்ந்திடும்
துரோகங்கள்
வாய்மொழிக்களவுகள்
வார்த்தைவழியே
சிதறிவெடிக்க‌
உதிரம்சொட்டும்
உபத்திரவம்
இதயவறைக்குள் மட்டும்


உண்மைகள் தவறிய‌
உறவுகள்
உள்ளத்தை தொலைத்த‌
அவர்கள்
சிலிர்ப்புக்களோ
சிந்தனைகளோ
எதிர்படாமல்
நீரோட்டமாய் ஓட‌
நீதியைத்தேடும்
எனதுள்ளம் மட்டும்
ஏமாற்றத்தின்
பிரதிநிதியாய்
பின்வாங்கிக்கொண்டிருக்கின்றது!!





Tuesday, November 5, 2013

பிரிவிலே

தீயில் வேகும் தங்கம்
தீபமாய் பிரகாசிப்பதுபோல‌
பிரிவிலே தொடரும் நாட்கள்
உறவின் உறுதியை அதிகரிக்கின்றது!!


நீங்கிவிடுகின்றேன்

என்நினைவுகள் தொலைந்த‌
உன் பொழுதுகளில்
நிம்மதி நிலைக்குதென்றால்
நீங்கிவிடுகின்றேனுன்னை
நிலவைத்தொலைத்த வானமாய்!!


Saturday, November 2, 2013

கண்ணீர்ச்சமூத்திரம்

நீயெனக்கு
தருவதற்கின்னும் என்ன இருக்கின்றது
தாராளமாய் போதுமே இந்த‌
தாளாத கண்ணீர்ச்சமூத்திரம்
ஜென்ம ஜென்மங்களுக்கும்!!


தேடிக்கொண்டிருக்கின்றேன்!!

தேடிக்கொண்டிருக்கின்றேன்
தொலைந்துவிட்ட என்னையும்
என்னிடமிருந்து தொலைந்ததையும்
நான் நினைக்கவில்லை அவை
கிடைக்குமென்று மீண்டும் -நீ
திரும்பியென்னிடம் வராவிட்டால்!!


மயானம்

மரணவாசல்வரை செல்வதும்
மனதுக்குளுன் நினைவுவந்ததும்
மறுபடியும் திரும்பிவருவதுமாய் என்
மயானம் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றது..




என்னுடைய ஒருவனாய்.....




திடீரென்று வரவேண்டும்
தென்றலாய் வரவேண்டும்
ஒவ்வாமையில் தொடங்கி
ஒத்துப்போதலே தொடரவேண்டும்

கண்களால் கவர்ந்து
கதைகள் பலபேசியே
காலங்கடத்தாது
காலத்தை பிரதிபலித்தே
கடமைகளை பிரதியெடுத்தே
காதலை வளர்க்கவேண்டும்

இயல்பாக பேசவேண்டும்
இதயத்தில் உண்மைவேண்டும்
வெளிப்படையாய் இருக்கவேண்டும்
வெறுமைகளை விரட்டவேண்டும்

போலிசாசனங்களை புதைக்கவேண்டும்
வேலித்தடைகளை உடைக்கவேண்டும்
கண்காணா தேசத்தில் கட்டிவைப்பினும்
கற்பகலா இதயமுணரும் காதல்வேண்டும்

கைபிடிப்பதும் கட்டியணைப்பதும்
காதல்வேதத்தின் அத்தியாயமென்ற‌
கறைபடித்த போக்கினை
களைந்திட்ட காளையாயிருந்திட வேண்டும்

எனக்கென்று எதேட்சையாய் வரவேண்டும்
ஏராளமான எதிர் பார்ப்புக்களில்லாது
ஏளனமான எதிர்ப்புக்களில்லாது
என்னுடைய ஒருவனாய் வந்திடவேண்டும்