Tuesday, March 12, 2013

kuttikkavithai

01. தோற்றுப்போனது 
நிஜம்தான் 
ஆனாலும்
ஒரு நிம்மதி
தோற்றது
உன்னிடமென்பதால்!!


02.இந்தப் பிரிவுதான்
உணர்த்திச்சென்றது 
நமதுறவில் வேரோடிப்போன‌
ஆழந்தனை...


03.உனக்கும் எனக்குமான‌
இடைவெளி நீள்கின்றது
கானலுக்கும் 
தாகத்துக்குமான தூரமாய்!!


04.உன்னிடமென்றால் 
ஒவ்வொரு முறையும்
தோற்றுப்போவேன்
ஜெயிப்பது நாமென்பதால்

Sunday, March 10, 2013

****தோளாய் நின்ற தோழியும் தோற்றுப்போன அவள் காதலும்****




வலிகள் கண்ட இதயத்துக்கு
வழியாய்ச் சொல்ல என்
வார்த்தைகள் வலிமையற்றுப்போனது

காதல்!

வெறும் வார்த்தையல்ல 
இது எவரையும்
வெற்றிடமாக்கிப்போட்டிடும்
வெறிபிடித்த குணமாய்த்தெரிகின்றது

ஒரே ஒரு விட்டுக்கொடுப்பு
ஒரு நிமிட நிதானம் இந்த‌
கண்ணீர்ப்பாதையை மாற்றியிருக்கும்
யார் என்ற பிடிவாதங்கள்
அமைதியாக்கப்பட்டிருந்தால்
ஆர்ப்பரிக்கும் இவ்விதயக் குமுறல்
அடக்கிவைக்கப்பட்டிருக்கும்

ஆறுதல் சொல்லிட என்னிடம்
ஆழமான வார்த்தைகள் எதுவுமில்லை
அழுகை மட்டும் அவளுக்காய்
அமைதி மட்டும் அவனுக்காய்

நீயா நானா என்ற‌
நீதிமன்ற சட்டங்க ளுங்கள்
நேசத்தில் நிர்மூலமாக்கப்பட்டிருந்தால்
சமாதியாக்கப்பட்ட இக்காதல்
சாதனைச் சாம்ரஜ்யம் நடத்தியிருக்கும்

எத்தனை கனவுகளுக்குள்
எத்தனை ஆசைகளுக்குள்
எத்தனை எதிர்பார்ப்புக்களுக்குள்
எத்தனை எதிர்ப்புக்களுக்குள்
எந்திரமாய் எழுந்துநின்ற காதல்
இத்தனை சடுதியில்
இறந்துபோகுமென்று நான்கூட‌
நினைத்திடவில்லை...

புரிந்துகொள்ளமுடியாத உங்கள்
புரிதல்களில் 
தனித்துவிடப்பட்ட காதல்குழந்தை
அநாதையாய் கதறுகின்றது
அந்நியமாய் நின்றுபார்க்கும் எனக்கு
அழுகைமட்டும் கரம்நீட்டுகின்றது


உங்களிருவரின் 
சுய‌கெளரவங்கள் வென்றதது
உள்ளங்களின்
சுயம்வரங்களை கொன்றது

தீவிரமான கோபங்கள்
தீர்த்ததாய் எதுவுமில்லை உங்கள்
உறவினைத்தவிர‌
அவ‌னை வென்றதாய் அவள்
துறவறம்
அவளை வென்றதாய் அவன்
தனிமரம்


காதல்!

வெறும் வார்த்தையல்ல 
       வெறிபிடித்த குணமாய்த்தெரிகின்றது...











குட்டிக் கவிதைகள்,


01.வந்தாரை வாழவைப்பது
வளம் கொழிக்குந் திருநாடு
நொந்தோரை தேற்றியணைப்பது
குணங் கொண்டிடும் நம்வீடு!!

02.அடுத்தவரின் வேருண்டு வாழ்வாருமுண்டு
அன்பினில் வேருண்டு வாழ்வாருமுண்டு
மற்றாரில் வேருண்டு வாழ்வாருமுண்டு
மறைவினில் வேருண்டு வாழ்வாருமுண்டு...

03.நடையுடை பாவனை மட்டுமல்ல‌
பேசும் வார்த்தையிலும்
நாகரிகம் நளினமடையட்டும்
கேட்கும் செவிகளுக்கு
தேனாக இல்லாவிட்டாலும்
தேவையான தாகவேனு மிருந்திடட்டும்!!

04.உற‌வுக‌ளை
வ‌ர‌வுக்குள் சேருங்க‌ள்
ப‌கைத‌னை
த‌ர‌வினின்று மீறுங்க‌ள்!!

05.மகா ல‌க்ஷ்மிக‌ளே
ம‌ரும‌க‌ளாக‌ வேண்டுமென்றால்
கோயில் குருக்க‌ளின் கைக‌ளே
உண்டிய‌லை துடைக்க‌லாம்!!

06.நல்லெண்ண‌முய‌ர‌ அன்புய‌ரும்
அன்புய‌ர‌ உற‌வுக‌ளுய‌ரும்
உற‌வுய‌ர‌ ச‌ம‌த்துவ‌முய‌ரும்
ச‌ம‌த்துவ‌முய‌ர‌ ச‌மாதான‌முய‌ரும்
ச‌மாதான‌முய‌ர‌ ம‌னித‌முய‌ரும்
ம‌னித‌முய‌ர‌ ம‌ண்ணிலே
ந‌ன்மைக‌ளே யுய‌ரும்
தீமைக‌ளெ லாமுதிரும்!!

07.இருதிவரை என்
இதயமிப்ப டியேயிருந்து
இறந்துவிடும்
இறவாத உன் நினைவுகளுடன்!!

08.காதல் காதல் காதல்
காதலில்லையேல் சாதலல்ல‌
சாதித்தல் சாதித்தலே
பாதித்தலில் பயனுமுண்டென்பதை
பரிசோதித்தலே...

09.என்னுடையதாக இருந்தும்
 என்னைபற்றி இல்லாமல்
உன்னையே நினைக்கு தெனுள்ளம் இது
ந‌ம்பிக்கை துரோக‌மா
காதலி ன‌கோர‌மா...

ஏழ்மையை எங்கேயவன் படைத்தான்




கடவுள்மனி தனைதான் படைத்தான்
மனிதன் மற்றதெலாம் படைத்துக்கொண்டான்
படைத்தலி லென்னபிழை கண்டாய்மா மனிதா
பிழைகளில் பின்னிக்கொண்டவன் நீதானே...


கனிகளை உண்ணக்கற்றுக் கொடுத்தான்
பிணிகளை நீயேன் உருவாக்கிக்கொண்டாய்
மனதை மணக்க மதமாய் ஒளியானான்
மதத்தையே மடமையென உரைத்தாயே...


ஏழேநாளில் உலகை படைத்தான்
ஏழ்மையை எங்கேயவன் படைதான்
தாழ்வே யில்லா ஓர்வாழ்வை
தரவே சித்தம் வாஞ்சித்தான்...


தாழ்மையை த‌வ‌றாய் ப‌ய‌ன்ப‌டுத்தினோம்
ஏழ்மையுரு வாக‌வ‌ழிக‌ளை ய‌மைத்தோம்
வாழ்வை இன்னு முய‌ர்த்திட‌
வ‌றிய‌வ‌ர் வ‌யிற்றிலும் கைவைத்தோம்...


அடுத்த‌வ‌ன் க‌ன‌வையும் இச்சித்தோம்
ஆசைக‌ளி னெல்லைக்கே ஓடினோம்
த‌டுத்திட‌வும் கெடுத்திட‌வும் துணிந்தோம்
த‌ந்த‌வ‌னையே யின்றுப‌ழிக் கின்றோம்...



கல்முனை சிறாஜ்டீன் அவர்களின் குரலில் எனது கவிதை

http://www.youtube.com/watch?v=4Z-vbTB0MSc

கல்முனை சிறாஜ்டீன் அவர்களின் குரலில் எனது கவிதை

http://www.youtube.com/watch?v=4Z-vbTB0MSc



Published on Aug 11, 2012


எனது கவிதை அறிவிப்பாளர் சுஹைல் அவர்களின் குரலில்..

http://www.youtube.com/watch?v=NesMzVeIwXY

Friday, March 8, 2013

துருவ இணைய இதழில் இணைகின்றார் லறீனா அப்துல் ஹக்.


http://www.thuruvam.com/2013/03/php_8.html


நம்நாட்டில் "அனைவருக்கும் பல்கலைக்கழக உயர்கல்வி" என்ற தொனிப்பொருள் குறித்த பரந்துபட்ட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும் என்ற வேண்டுகோளுடன் துருவ நட்சத்திரத்துக்காக இணைகின்றார் பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளரும் சிறந்த பெண் எழுத்தாளருமான லறீனா அப்துல் ஹக். பெயர் சொல்லக்கூடிய அளவில் மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் ஈடுபட்டுவரும் பல்துறை சார்ந்த அவர் காத்திரமான பதில்களோடு துருவம் வாசகர்களுடன் மனந்திறக்கின்றார். 

கேள்வி: பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் எழுத்தாளராகவும் அறியப்பட்ட நீங்கள், உங்களுடைய அறிமுகத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்?


பதில்: எனது முழுப்பெயர் லறீனா அப்துல் ஹக். பிறப்பிடம் மாத்தளை. திருமணமாகிவிட்டது. ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள். கணவர் முஹம்மத் பிர்தௌஸ். தற்போது  ஹந்தெஸ்ஸ எனுமிடத்தில்  வசிக்கின்றேன். உயர்தரம் (கலைப்பிரிவு) வரை மாத்தளை ஆமினா மகளிர் கல்லூரியில் கல்வி கற்றேன். 2002 பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பீ.ஏ. தமிழ் சிறப்புப் பட்டதாரியானதோடு, 2004 வரை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையிலும், 2007 வரை மொழிபெயர்ப்புக் கற்கைநெறித் துறையிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினேன். தற்போது முதுமாணிப்பட்ட (MPhil) ஆய்வுக் கட்டுரையை எழுதி முடித்துள்ளேன்.


கேள்வி: கலைத்துறையில் உங்களது ஆர்வம் குறித்து கூறுங்களேன்?


எல்லோரைப் போலவும் எனக்கும் கலைத்துறையில் மிகுந்த ஈடுபாடு உண்டு. எனது பின்வரும் வெளியீடுகளை அதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

1. எருமை மாடும் துளசிச்செடியும் (சிறுகதைத் தொகுதி) – 2003 
2. வீசுக புயலே (கவிதைத் தொகுதி) – 2003
3. தமிழ்மொழியும் இலக்கியமும்: சில சிந்தனைகள் (ஆய்வுக்கட்டுரைத் தொகுதி) 2003
4. ஒரு தீப்பிழம்பும் சில அரும்புகளும் (நாவல்) 2004
5. செ. கணேசலிங்கனின் அண்மைக்கால நாவல்களில் பெண் பாத்திரங்கள்: ஒரு பெண்ணிலை நோக்கு (ஆய்வுநூல்) – 2004
6. மௌனத்தின் ஓசைகள் - மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதி 2008
7. வார்த்தைகளின் வலி தெரியாமல்... - சமூகவியல் கட்டுரைகள் 2012
8. "பொருள் வெளி" ஆய்வுக் கட்டுரைத் தொகுதி 2012

இவை தவிர, 'நம் அயலவர்கள்' எனும் சிறுகதைத் தொகுதிக்காக 5 சிங்களச் சிறுகதைகளைத் தமிழிலும், 'அசல் வெசி அப்பி' எனும் சிங்களச் சிறுகதைத் தொகுதிக்காக ரஞ்சகுமாரின் 'கோளறு பதிகம்' சிறுகதையை (தம்மிக்க ஜயசிங்ஹ என்பாருடன் இணைந்து) சிங்களமொழியிலும் மொழியாக்கம் செய்துள்ளேன். மேலும், ஆங்கிலத்திலிருந்து தமிழில் உரைகள், கட்டுரைகளை மொழிமாற்றம் செய்துள்ளேன்.

தற்போது 'சிங்கள மொழியில் தமிழ்மொழியின் செல்வாக்கு' எனும் எனது மொழிபெயர்ப்பு நூலை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். 'தென்றலிலே' எனும் பெயரில் என்னுடைய பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு ஒன்று விரைவில் வெளிவரவுள்ளது. அந்த இசைத்தட்டில் இடம்பெறவுள்ள, நான் இயற்றி, மெட்டமைத்து, இசையமைத்துப் பாடிய இரண்டு பாடல்கள் http://nilapenn.com தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

மேலும், http://nilapenn.com எனும் எனது இணையத்தளத்தை நிர்வகிக்கின்றேன். 

கேள்வி: கலைத்துறை சார்ந்த உங்களது ஈடுபாடு பற்றி...? 

* பேராதனைப் பல்கலைக்கழக பட்டப் பின்படிப்பு ஆய்வுக் கருத்தரங்குகளில் மொழிபெயர்ப்புப் பிரச்சினைகள் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளேன்.  

 * 2011இல் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்துள்ளேன். (ஈழத்துப் பெண் கவிஞர்களின் படைப்புக்களில் பால்நிலை வெளிப்பாடு)

* 2012இல் சர்வதேச இலக்கிய மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்துள்ளேன். (கவிதை மொழிபெயர்ப்பும் கோட்பாட்டியல் பிரச்சினைகளும்: சில அனுபவக் குறிப்புக்கள்)

 * 2012 இல் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் ஆய்வுக் கருத்தரங்கில் கட்டுரை சமர்ப்பித்துள்ளேன். (கௌரி கிருபானந்தனின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளில் "பெண்" பற்றிய விம்பம்)

கேள்வி: சமூகத்தின் அறிவுப்பாதைக்கு வித்திடவேண்டிய பல்கலைக்கழகச் சூழல் பல்வேறு அக, புறக்காரணிகளால் அடிக்கடி தளம்பல் நிலையினை சந்திக்கின்றது. இது பல்கலைக்கழக கல்விமுறையின் மீதான நம்பிக்கையின்மையினையும் ஆர்வமின்மையினையும் மக்களிடையே ஏற்படுத்துகின்றது. இதுகுறித்து உங்களது பதில் என்ன?

பதில்: இது உண்மையிலேயே வருத்தமளிக்கக்கூடிய ஒரு நிலைமைதான். ஆனால், நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகள் ஏனைய எல்லாத்துறைகளைப் போலவே கல்வித் துறையிலும் பெரும் பாதிப்பைச் செலுத்திவருவது தவிர்க்க முடியாததாகும். 

இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்பும் நாட்டின் அரசியல் குழப்பநிலையால் பல்கலைக்கழகங்கள் சில வருடங்கள் இயங்காமல் இருந்த காரணத்தால், பிற்காலத்தில் உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு, பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்காக இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை காணப்பட்டது. நாமும் அப்படிக் காத்திருந்து பல்கலைக்கழகம் சென்றவர்கள்தான். 

எனினும், இப்போதெல்லாம், உயர்தரப் பரீட்சை எழுதியபின் அவ்வளவு நீண்டகாலக் காத்திருப்பு இன்றியே மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லக்கூடியதாய் இருப்பதும், பல்கலைக்கழகங்களினதும், துறைசார் கற்கைகளினதும் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் சாதகமான அம்சங்களே.

உண்மையில், பல்கலைக்கழகக் கல்வி என்றதும், நாம் கருத்திற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான விடயம் ஒன்று உள்ளது. இதுகுறித்து நாம் அலட்டிக்கொள்வதில்லை அதாவது, நமது நாட்டில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தி எய்திய மொத்த மாணவர்களில் 10 சதவீதத்துக்கும் குறைவானோருக்கே பல்கலைக்கழக அனுமதி கிடைக்கிறது. இந்நிலைமை மாறவேண்டும். தகுதி வாய்ந்த அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழகக் கல்வி கிடைக்கத்தக்கதாக நமது நாட்டின் கல்வி முறைமை மாற்றப்படவேண்டும்.


இதுதொடர்பில் அரசியல்வாதிகள் மட்டுமின்றி நாட்டின் கல்வியியலாளர்களும் அதிகக் கரிசனை எடுக்க வேண்டும். இவ்விடத்தில், சிலி நாட்டின் இளம் புரட்சி வீராங்கனை கமிலா வொலேஜோவின் பணி நினைவிற்கொள்ளப்பட வேண்டியதாகும். நாட்டில் அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுத்து அந்நாட்டு அரசுக்கே பெரும் சவாலாய்த் திகழ்ந்தவர், அவர். நம்முடைய நாட்டில் "அனைவர்க்கும் பல்கலைக்கழக உயர்கல்வி" என்ற தொனிப்பொருள் குறித்த பரந்துபட்ட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

கேள்வி: மொழிபெயர்ப்பு எழுத்தாக்கம் 'கத்தியின் மீது நடப்பது போன்ற செயல்' என்று கூறப்படுகின்றது. இதைப் பற்றியும், உங்களுடைய மொழிபெயர்ப்பு அனுபவங்கள் பற்றியும் கூறுங்கள்?

பதில்: உண்மைதான். எந்த ஒரு மொழிபெயர்ப்பும் 100% அதன் மூலப்படைப்புக்குச் சமமானதாக இருப்பதில்லை. என்றபோதிலும், அதிகபட்ச ஒத்த தன்மையைக் கொண்டுவர முயற்சிப்பதே ஒரு மொழிபெயர்ப்பாளர் செய்யக்கூடிய பணியாகும். எனினும், இதில் மிகப்பெரும் சவால்களை ஒரு மொழிபெயர்ப்பாளர் எதிர்கொள்ள நேர்கின்றது. இதுதொடர்பில் தமிழிலே விரிவான ஒரு நூல் எழுதும் உத்தேசம் எனக்குண்டு.

கேள்வி: 'மொழிபெயர்ப்பு' என்பது பல மொழி இலக்கியச் சுவைகளை அவரவர் மொழிகளில் பெற்றுக்கொள்ளும் அரிய அவசியமான விடயமாக இருக்கின்றது அந்தச் சிறப்புத் தகைமையை பெற்ற உங்களுக்கு மொழிபெயர்ப்பில் எவ்வாறு  ஈடுபாடு ஏற்பட்டது? எவ்வாறான விடயங்களை மொழிபெயர்த்து தமிழ் இலக்கியத்துக்கு வழங்குகின்றீர்கள்?

பதில்: பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்கும் காலத்தில்தான் நான் இத்துறையில் ஆர்வம் காட்டத் தொடங்கினேன். அங்கு நிலவிய பல்லின- பன்மொழிச் சமூகச் சூழலும் இதற்கு ஒரு காரணம் எனலாம். அவ்வப்போது சிங்கள, ஆங்கிலக் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து, கலாநிதி துரை. மனோகரனின் பார்வைக்கு அனுப்புவதுண்டு. சங்கப் பலகை என்னும் தமிழ்த் துறையின் அறிவித்தல் பலகையில்  அவை உடனுக்குடன் வெளியிடப்படும். அதுவே பின்னர் இடையறாத பயிற்சி மூலம் படிப்படியாக வளர்ச்சியடைந்தது. 

மேலும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை விரிவுரையாளராய்ப் பணியாற்றிய காலகட்டத்தில் தமிழ்-ஆங்கில-சிங்களத் துறைகள் மூன்றும் ஒன்றிணைந்து ஒழுங்குசெய்த ஐந்து வாரகால மொழிபெயர்ப்புப் பயிலரங்கில் பங்குகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தமையை என் வாழ்வில் கிடைக்கப்பெற்ற  மகத்தான வரப்பிரசாதமாய்க் கருதுகின்றேன்.

இதன் பின்னர், அதே பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட மொழிபெயர்ப்புக் கற்கைகளுக்கான டிப்ளோமா, பட்டப்பின் படிப்பு டிப்ளோமா பாடநெறிகளுக்கான விரிவுரையாளராகப் பணியாற்றியமை மூலம் நான் இத்துறையில் நிறைய விடயங்களைக் கற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. அதன்படியே என்னுடைய முதுமாணிப்பட்ட ஆய்வேட்டுக்கான தலைப்பையும் மொழிபெயர்ப்புத் துறை சார்ந்ததாகவே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். 

கேள்வி: பெண்ணியச் சிந்தனையை எவ்வாறு நோக்குகின்றீர்கள்? இச்சிந்தனையில் பலருக்கு உடன்பாடின்மையினை அவதானிக்க முடிகின்றது. இதற்கான காரணம் என்ன?

பதில்: பெண்ணியம், பெண்ணியவாதம் என்பன குறித்து சமூகத்தில் ஒருவகைத் தட்டையான புரிதல் பரவலாகி இருப்பது வருந்தத்தக்கதே! உண்மையில், பெண்ணியவாதம் என்பது சோஷலிசப் பெண்ணிலைவாதம், மார்க்ஸியப் பெண்ணிலைவாதம், தீவிரப் பெண்ணிலைவாதம் முதலான பல்வேறு வகைப்பட்டதாகும். என்னைப் பொறுத்த வரையில், ஆணும் பெண்ணும் இணைந்த சமூக அமைப்பில், இருதரப்பாருக்கும் சிறப்பியல்புகள், தனித்தன்மைகள் உள்ளன. அவை பரஸ்பரம் புரிந்துகொள்ளப்படவும் மதிக்கப்படவும் வேண்டும். வீட்டுப் பணியிலும் சரி, சமூகப் பணியிலும் சரி, ஒருவருக்கொருவர் உதவியாகவும் ஒத்துழைப்போடும் பணியாற்ற முன்வர வேண்டும். இதில் ஈகோ பார்க்க எதுவும் இல்லை என்பதே என்னுடைய நிலைப்பாடாகும். "ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்" என்ற பாரதியின் வரிகள் எனக்கு மிகவும் விருப்பமானவை.


மேலும், விளம்பரம், கலை, இலக்கியம் (சினிமா/ பாடல் உட்பட) என்பவற்றில், பெண் ஒரு பாலியல் பண்டமாக, வெற்று உடலாகப் பார்க்கப்படும் மனப்பாங்கு மாற்றப்பட வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காக, பெண்ணின் உடல் ஒரு வர்த்தகப் பண்டமாக்கப்படுவதையும், அழகிப்போட்டி, ஃபெஷன் ஷோ என்ற பெயரில் அவளது உடல் ஒரு "பாலியல் பண்டமாக" ஆக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டுமானால், 'தன்னுடைய உடல் அழகால் ஆண்கள் கவரப்படுவதே தனக்குப் பெருமை தருவது' என்று எண்ணி அழகு சாதனங்களின் பின்னால் அலைந்து திரியும் அடிமை மனப்பான்மையைப் பெண்கள் வெற்றிகொள்ள வேண்டும். ஆம்! இது முதலில் தனக்குள் நிகழ்த்தப்பட வேண்டிய போராட்டம். அதன் பிறகே, பெண்ணின் ஒடுக்குமுறைக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டம் முனைப்புப்பெற முடியும் என்று நான் நம்புகின்றேன். 

கேள்வி: ஆண் படைப்பாளிகளும் பெண்ணின் மனவுணர்வை அப்படியே பிரதிபலிக்கும் ஆக்கங்களை படைக்கின்றனர் இது அவர்களின் நேரான சிந்தனையுடன் அதாவது புரிதலுடன் கூடியதாக வெளிப்படுகின்றதா? பெண்ணை பற்றி ஒரு பெண் சொல்வதற்கும் ஆண் சொல்வதற்கும் எவ்வாறான ஒற்றுமை வேற்றுமைகளை உணரமுடிகின்றது?

பதில்: பொதுவாக, ஒரு படைப்பாளி எனும்போது, உணர்வுகளைப் புரியும் ஆற்றல் இயல்பானதே என்பது முக்கியமானது. அவனோ அவளோ இன்னொரு நிலையில் தன்னை வைத்து உணரும் திறன் தான் ஒரு படைப்பாளியின் மிகப் பெரிய பலம். எனவேதான், ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் உணர்தல் சாத்தியமாகின்றது. நம்முடைய மூத்த எழுத்தாளர் செ. கணேசலிங்கனை எடுத்துக் கொண்டால், பெண்களின் பிரச்சினைகளை அவரளவுக்கு யாரும் பேசவில்லை என்ற அளவுக்கு அதில் மிகப் பெரும் பங்காற்றியுள்ளார்.

எனினும், இதில் குறிப்பிடத்தக்க நுண்ணிய வேறுபாடுகளும் இருக்கவே செய்கின்றன. குறிப்பாகப் பெண்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைக்கும் இடங்களில் அவர்களுக்கு ஒரு பெண்ணாகவே இருந்து தீர்வுகளை முன்வைப்பதில் சில இடர்ப்பாடுகள் இருக்கவே செய்கின்றன என்பதையும் நாம் மறுக்க முடியாது.  

அதேவேளை, ஓர் ஆண் தன்னைப் பெண்ணாகப் பாவனை செய்து, தனது உணர்வுநிலையை வெளிப்படுத்துவதையும், ஒரு பெண் நேரடியாக தன் உணர்வை வெளிப்படுத்துவதையும் சமூகம் எதிர்கொள்ளும் விதமும் இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும். மாணிக்க வாசகர்- ஆண்டாள் இருவரதும் கடவுள் மீதான காதல் உணர்வின் வெளிப்பாடுகாளுக்கு வழங்கப்படும் சமூக அங்கீகாரமும், வெளிப்படையாகக் காதல் தாபத்தை வெளிப்படுத்தும் வகையில் எழுதும் ஆண்களையும் பெண்களையும் சமூகம் பார்க்கும் விதத்தில் உள்ள வேறுபாடுகளும் இதற்கு மிகச் சிறந்த சான்றாகும்.

எனவே, இது தொடர்பில், வெளிப்படுத்தப்படும் உணர்வுநிலை, அது கட்டமைக்கப்படும் சூழல்  சார்ந்த புறக்காரணிகள் ஆகியனவும் சேர்ந்தே இந்த ஒற்றுமை வேற்றுமைகளைத் தீர்மானிக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். 

கேள்வி: காத்திரமான கருத்துக்களோடு வெளிப்படும் உங்களுடைய எழுத்துக்களை எவ்வாறு சமூகத்திடம் கொண்டுசேர்க்கின்றீர்கள்? அதில் விஷேடமாக எதனை வலியுறுத்திக்கூற விளைகின்றீர்கள்?

பதில்: பொதுவாக என்னுடைய எழுத்துக்களை சமூக அவலங்களை வெளிக்கொணரவும், குறிப்பாகப் பெண்ணின் துயரங்களை அடையாளப்படுத்தவும், சமூகங்களுக்கு இடையிலான புரிந்துணர்வைக் கட்டியெழுப்பவுமாகப் பல வகையிலும் நான் பயன்படுத்த முனைகின்றேன். எழுத்து என்பது இறைவனின் கொடை. அதனைச் சமூக மேம்பாட்டுக்காக, மானிட நலனுக்காகப் பயன்படுத்துவது அந்தக் கொடைக்கான நன்றிக்கடன் என்றே கருதுகின்றேன்.

எனவே, அதன் பொருட்டு பாரம்பரியமான ஊடகங்களோடு, இணையம் முதலான மின்னூடகங்களையும் பயன்படுத்துவதன் மூலமும், அக்கருத்துக்களை தமிழ்-சிங்களம்- ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் எடுத்துச் சொல்வதன் மூலம் மிகப் பரவலாகக் கொண்டு செல்ல முடியும் என்பது எனது நம்பிக்கை.

கேள்வி: பெண் படைப்பாளிகளின் படைப்புக்கள் எவ்வாறான நிலையில் காணப்படுகின்றது, வளர்ந்துவருகின்ற பெண் படைப்பாளிகளின் போக்கினில் எவ்வாறான தன்மையினை அவதானிக்கின்றீர்கள்?

பதில்: இன்றைய பெண் படைப்பாளிகளின் எழுத்துப் பங்களிப்புக்கள் முன்னர் எப்பொழுதையும் விட மிகவும் காத்திரமாக முனைப்புப் பெற்றுள்ளமை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக, இலங்கைப் பெண் படைப்பாளிகள் பலரும் தமது வெளிவீடுகளை நூல் வடிவில் கொண்டுவந்துள்ளார்கள். பட்டியல் சற்று நீளமானது என்பதால் பெயர்களைச் சுட்டுவதைத் தவிர்த்துக்கொள்கின்றேன். அவற்றுள் பெண்கள் தமக்கான பொருள் வெளியைத் தாமே வரையறுத்துக் கொண்டவர்களாகவும், தமக்கான மொழியை மிகவும் சுதந்திரமாகக் கையாள்பவர்களாகவும் உள்ளமை மிகுந்த மனநிறைவைத் தருகின்றது. இது குறித்து, கொழும்புத் தமிழ் சங்கத்தில் இடம்பெற்ற சர்வதேசத் தமிழ்  எழுத்தாளர் மாநாட்டில் சமர்ப்பித்த கட்டுரையிலும் நான் விரிவாகப் பேசியுள்ளேன். 

கேள்வி: இசைமீது ஆர்வம் கொண்ட நீங்கள் எதிர்காலத்தில் பாடல் இயற்றி, இசையில் பாடுகின்ற திட்டங்கள் ஏதும் கொண்டுள்ளீர்களா?

பதில்: ஆம். என்னிடம் 10 பாடல்கள் கைவசம் உள்ளன. நானே எழுதி மெட்டமைத்துள்ளதோடு, அவற்றுக்கான இசை எப்படி அமைய வேண்டும் என்பது பற்றியும் திட்டமிட்டு வைத்துள்ளேன். அவற்றுள் இரண்டை நீங்கள் என்னுடைய இணையத்தளத்தில் கேட்டு மகிழலாம். இன்ஷா அல்லாஹ், வெகு விரைவில் என் பாடல்கள் அடங்கிய அல்பம் ஒன்றை வெளியிட உத்தேசித்துள்ளேன். 

கேள்வி: தமிழிலிருந்து ஏனைய மொழிகளுக்கு கவிதைகளை மொழிபெயர்ப்பு செய்துள்ளீர்களா? அதற்கான திட்டங்கள் ஆர்வம் எப்படி காணப்படுகின்றது?

பதில்: இன்னும் இல்லை. இனி அப்படியான முயற்சிகளில் ஈடுபடும் ஆர்வம் உண்டு. 

கேள்வி: பல்வேறு சிக்கல்களோடும் பிரச்சனைகளோடும் அல்லல்படும் பெண் சமூதாயத்துக்கு இந்த மகளிர் தினம் கொண்டாடும் நாளில் என்ன கூறவிரும்புகின்றீர்கள்?

பதில்: வாழ்க்கை என்பது எப்போதும் ஒரு போராட்டம்தான். வீட்டிலும்சரி வெளியிலும் சரி அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை, சவால்களைக் கண்டு ஒருபோதும் மனம் தளர்ந்துவிடக் கூடாது. நம்மைநாமே வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். அதன் முதற்படியாக நமது கல்வித் தகைமையை வளர்த்துக் கொள்வதோடு, நம்முள் உள்ளார்ந்திருக்கும் ஆற்றல்களை இனங்கண்டு அவற்றை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்.   

மிக முக்கியமான ஓர் அம்சம் என்னவென்றால், பெண்கள் தம்முடைய சுயகௌரவம் குறித்த விழிப்புணர்வு உடையவர்களாய் மாற வேண்டும். தாம் வெறுமனே ஒரு பாலியல் பண்டமாக, அலங்காரப் பதுமையாக, வெற்று உடலாகப் பார்க்கப் படுவதை பெருமைக்குரியதாகக் கருதும் அறியாமையில் இருந்து பெண்கள் மீள வேண்டும். குறிப்பாக, இணைய பாவனை இருந்தும்கூட எப்போது பார்த்தாலும் சமையல் குறிப்பு, அழகுக்குறிப்பு என்பவற்றையே தேடிச் செல்லும் கிணற்றுத் தவளைகளாக இருக்காமல், அந்நிலையை மாற்றி, நாட்டு நடப்பு, உலக நடப்பு என்பன குறித்த அறிவை வளர்த்துக்கொள்ள முன்வர வேண்டும். சமூக அக்கறை, மானிட நலன் என்பனவற்றை நாடும் வகையில் அறிவையும் மனதையும் விசாலப்படுத்திக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

அவ்வாறே, ஒரு பெண்ணின் வெற்றியும் சிறப்பும் அவளின் அறிவிலும் ஆற்றலிலும் ஆளுமையிலுமே தங்கியுள்ளன என்ற தன்னம்பிக்கையும் நிமிர்வும் தன்மானமுள்ள ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய பண்புகளாகும். பாரதி இதனையே, "நேர்கொண்ட பார்வையும், திமிர்ந்த ஞானச் செருக்கும்"  என்று குறிப்பிட்டுள்ளான். அத்தகைய புதுமைப் பெண்களே உருவாகவும் உருவாக்கப்படவும் வேண்டும். 

கேள்வி: உங்களுடைய கலை இலக்கிய திறமைகளுக்கு கிடைத்த வெற்றிகளையும் விருதுகளையும் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்?

பதில்: சிறுகதைக்கான பரிசுகள், விருதுகள்

* வீரகேசரி பவளவிழா சிறுகதைப் போட்டி (2005) 3ஆம் பரிசு
* சிறுகதை: வேரில் வைத்த தீ
* அமரர் வரப்பிரகாஷ் நினைவுதின சிறுகதைப்போட்டி (பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம்) (2000) 2 ஆம் பரிசு
* சிறுகதை: எருமை மாடும் துளசிச் செடியும்
* அவுஸ்திரேலிய கலை இலக்கிய சங்கத்தின் பத்தாவது தமிழ் எழுத்தாளர் மாநாட்டையொட்டி நடாத்தப்பட்ட சர்வதேச சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு (2010)
சிறுகதை: எனக்கான 'வெளி'

கவிதை

* தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பரிசளிப்புப் போட்டிகள்: 1 ஆம் பரிசு (2000)
* அமரர் வரப்பிரகாஷ் நினைவுதின கவிதைப்போட்டி (பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம்) (2000) 2ஆம் பரிசு

பாடல்

* தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பரிசளிப்புப் போட்டிகள் : 1ஆம் பரிசு (2000)
* தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பரிசளிப்புப் போட்டிகள் : 3ஆம் பரிசு (1993,1995)
* தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பரிசளிப்புப் போட்டிகள் : 2 ஆம் பரிசு (1992)

சிறுவர் இலக்கியம்

* தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பரிசளிப்புப் போட்டிகள் : 2ஆம் பரிசு (2003)
* தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பரிசளிப்புப் போட்டிகள் : 2 ஆம் பரிசு (1994)

நாடகம்

* பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்க நாடகப் போட்டி : நினைவில் நின்ற நடிகைக்கான சுழற்கேடய விருது (1998)
* நாடகம்: "இதுவரை இவர்கள்..."

கட்டுரை

* கட்டுரை: "நமக்கென்றொரு நாளிதழ்: பிரச்சினைகளும் சவால்களும்" என்ற தலைப்பில் "பாலைவனத்தூது" 
* வலைதளம் நடத்திய சர்வதேச கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு.

பாடல் இயற்றுதல் (வரிகள், மெட்டு, இசையமைப்பு)

* பேராதனைப் பல்கலைக்கழக சங்கீத நாட்டிய சங்க வருடாந்தப் போட்டிகள்: 3ஆம் பரிசு (1999)

* வவுனியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினால் 2003 ஆம் ஆண்டு ஒழுங்குசெய்யப்பட்ட சர்வதேச மகளிர் தினவிழாவில், 'பல்துறை ஆற்றல் கொண்ட முஸ்லிம் பெண்'ணுக்கான விருது கிடைக்கப்பெற்றது.

இவரது முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற துருவம் சார்பாக நாங்களும் வாழ்த்துகிறோம். 


Thursday, March 7, 2013

ஏழைத்தாயின் இதயவீணை


கூடைச் சுமையழுத்தி கூன்வீழு மிளமையிலே
கூவுஞ் சேவலுக்கு முதலெழுந்து படித்திடு
ஆடைகூட நனைந்திடு மாறாத பனியிலே
ஆசைமகளே இதுவேண்டாம் கற்றிடு...

தேயிலை சாற்றோடு தேகத்தை சூடேற்றி
தேர்போல கொழுந்தை தோளிலே சுமந்து
நோயிலே வீழ்ந்தாலும் நோவினை தாங்கிடும்
நிந்தையது நீங்கிடட்டும் கற்றிடு...

ஏறாத மலையெங்கிலும் ஏறிநான் சென்றது
ஏற்காத கல்வியை ஏழையுனக்கு ஈந்திட
ஆறாய்ப் பெருகிய அத்தனையுந் தாங்கியது
ஆளாக்கியுனை பார்த்திடவே கற்றிடு...

பொங்கிடும் வறுமையும் பொசுக்கிடும் வேதனையும்
பொற்காலந் தந்திட்டு புதுவழி காட்டிடட்டும்
அங்கஞ் சுருக்கியென் அரைவயிறு பொறுத்ததும்
அறிவுலகம் பார்த்திடத்தான் கற்றிடு...

பொன்னோப் பொருளோ பொக்கிஷமில்லை யுனக்கு
பெருவாழ்வு கொண்டிடும் பெறுமைகளு மில்லை
மண்ணிலே உயர்ந்திடும் மகத்துவமே கல்வி
மனதிலே கொண்டுநீ கற்றிடு...

(ஜீவநதி இலக்கிய சஞ்சிகையின் மகளிர்தின சிறப்பு இதழில் பிரசுரமான கவிதை. March 2013)

Tuesday, March 5, 2013

துருவ நட்சத்திரமாக மலேசிய பெண்படைப்பாளி கே.எஸ்.செண்பா அவர்களின் நேர்காணல்


பெண் படைப்பாளிகள் அனுபவங்களை எழுத்தில் வடிக்கிறார்கள்: மலேசியா செண்பகவள்ளி http://www.thuruvam.com/2013/03/php_74.html


பெண்களின் புனைவுகளில் யதார்த்தமும், நேர்மையும் பண்பாட்டுக் கூறுகளும் மொழித் தூய்மையும் சிறப்பாகவே வெளிப்படுகின்றன எனக் கூறுகின்றார் மலேசிய இலக்கிய வரலாற்றில் புதுமையுடனும் புரட்சியுடனும் இலக்கியச் செயல்களையும் பல பொதுப்பணிகளையும் ஆற்றிக்கொண்டிருக்கும் பெண் படைப்பாளியான கே.எஸ். செண்பகவள்ளி.  அவரை துருவ நட்சத்திரம் பகுதிக்காக தொடர்பு கொண்டோம்.

காத்திரமான இல்லக்கியச் செயற்பாடுகளுடன் வலம்வரும் அவரின் முயற்சியே அவரை ஒரு சாதனைக்குரிய பெண்மணியாக நம்மத்தியில் இனம்காட்டியுள்ளது. மலேசியாவில் தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சில் சிறப்பதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருக்கும் அவர் தன்னுடைய நேரச்சிக்கலுக்கும் மத்தியில் நம்முடன் சுவாரஸ்யமான விடயங்கள் பகிர்ந்துகொண்ட விடயங்களை துருவம் வாசகர்களுக்காக தருகின்றோம். 


கேள்வி: மலேசியாவில் வசித்துவரும் நீங்கள், உங்களைப் பற்றிய அறிமுகத்தை இலங்கை மக்களுக்காகவும் துருவம் வாசகர்களுக்காகவும் பகிர்ந்துகொள்ளுங்கள்?

பதில்: வணக்கம். நான் மலேசியாவில் ‘சுங்கை சிப்புட்’ என்னும் இடத்தில் பிறந்து வளர்ந்தேன். என்னுடன் பிறந்தவர் எண்மர். தந்தை மறைந்துவிட்டார். தாயார் என்னோடு வசிக்கின்றார். உடன் பிறந்த அனைவரும் நல்ல துறைகளில் பணியாற்றி வருகின்றோம். தற்சமயம் பணி நிமித்தமாக மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் வசித்து வருகிறேன்.

கேள்வி: இலக்கியத்தில் உங்களுக்கான ஈடுபாடு எவ்வாறு ஏற்பட்டது? அதன் பிரவேசம் பற்றியும் இதுவரை நீங்கள் படைத்த எழுத்தாக்கங்கள் பற்றியும் கூறுங்களேன்?

பதில்: கடந்த 25 வருடங்களாக எழுத்துத்துறையில் ஈடுபட்டு வருகிறேன். சிறிய வயதாக இருக்கும்போதே இலக்கிய ஆர்வம் என்னுள் வேரூன்றியது. காரணம் என் குடும்பத்தில் நிலவிய தமிழ்ச் சூழல். என் தந்தைதான் எனது ஆசான். பள்ளியில் தடம் பதிக்கும் முன்னே திருக்குறள், ஆத்திச்சூடிச் சொல்லித் தந்தவர். என்னுள் தமிழ்த் தாகத்தை ஏற்படுத்தியவர். அதன் வெளிப்பாடுதான் இன்று உங்கள் முன்னிலையில் நான் அறிமுகப்படுத்திக்கொள்ள பாலமாக அமைந்தது. 

எழுத்துத்துறைப் பிரவேசத்திற்குக் காரணம் என் தமக்கை. நான் சிறிய வயதாக இருக்கும்போது மாணவர்களுக்காக சிறுவர் கதை, மர்மக்கதை எழுதி வந்தார். அதைப் படிக்கும்போது ஏற்பட்ட ஆர்வம் என்னையும் எழுதத் தூண்டியது. எனது 13ஆவது வயதில் ‘மரம்’ என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதினேன். எங்கள் நாட்டில் வெளியாகிக் கொண்டிருக்கும் மூத்தப் பத்திரிகையான தமிழ்நேசன் நாளிதழில் அது வெளியானது. எனது முதலாவது சிறுகதை 17ஆவது வயதில் “கல்வியின் நிறம் என்ன?” என்ற தலைப்பில் அதே தமிழ்நேசன் நாளிதழின் 70ஆம் ஆண்டு மலரில் வெளியானது. எனது முதலாவது ஆய்வுக்கட்டுரை 2004ஆம் ஆண்டு ‘அரசியல் பயணத்தில் டத்தோஸ்ரீ சாமிவேலு’ என்ற தலைப்பில் எழுதி பரிசும் பெற்றேன். இம்மூன்று முதல் பதிவுகளும் எனது முத்திரைப் பதிவுகளாகும்.


நாட்டின் தேசத்தலைவர்கள், முக்கியமான நாட்களைக் குறித்து இதுவரை 60 ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். தேசிய நில, நிதி கூட்டுறவுச் சங்கம், கிள்ளான் வாசகர் இலக்கியச் சோலை, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழ்நேசன், மன்னன் மாத இதழ், சூரியன் மாத இதழ், மலேசியத் தேசியப் பழஞ்சுவடிக் காப்பகம், பொது இயக்கங்கள் போன்ற அமைப்புகள் வாயிலாக நடத்திய இலக்கியப் போட்டிகளில் பங்குகொண்டு சிறுகதை, கவிதை, கட்டுரை என அனைத்திலும் பல பரிசுகள் பெற்றுள்ளேன்.

தற்சமயம் நம்நாடு, தினக்குரல், மக்கள் ஓசை, தமிழ்நேசன், மலேசிய நண்பன், அன்பு இதயம், தமிழ் ஓவியம் போன்ற நாளிதழ் மற்றும் வார மாத இதழ்களில் சிறுகதை, கவிதை, கட்டுரைகளைப் எழுதி வருகிறேன். மலேசியத் தமிழ் எழுத்துலகம், தங்கமீன், திண்ணை ஆகிய இணையத்தளங்களிலும் படைப்புகளை எழுதியுள்ளேன்.

இதில் ‘அன்பு இதயம்’ என்னும் மாத இதழில் இரு ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வருகின்றேன். என் பதிவுகளுக்கு நல்ல தளம் அமைத்து பேராதரவு வழங்கி வருகின்றனர். எழுத்துறை வாயிலாக உலகரீதியில் எனது படைப்புகள் கவனிக்கப்படுகின்றன.

2012ஆம் ஆண்டு மலேசியத் தொலைக்காட்சியில் “வசந்தம்” என்னும் நிகழ்ச்சியில் எனது பணி தொடர்பான ஒரு மணி நேர நேர்க்காணல், மலேசிய வானொலியான மின்னல் பண்பலையில் ஒரு மணிநேர நேர்க்காணல், மீண்டும் இவ்வருடம் உலக மகளிர் தினத்தையொட்டி “வசந்தம்” நிகழ்ச்சியில் ஒரு மணிநேர நேர்க்காணல், கடந்த 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லண்டன் தமிழ் வானொலியில் ஒரு மணிநேர நேர்க்காணல், கடந்த பெப்ரவரி 14-15ஆம் திகதிகளில் சென்னையில் நடைபெற்ற உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் தேசியக் கருத்தரங்கில் “அயல்நாட்டு தமிழ் இலக்கியங்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற அமர்வில் முனைவர் பா.த கிங்ஸ்டன் எனது கவிதைகளை ஆய்வுச் செய்து “புலம்பெயர் இலக்கியங்கள் பார்வையில் மலேசியக் கவிஞர் கே.எஸ்.செண்பகவள்ளி” என்ற தலைப்பினில் கட்டுரை சமர்ப்பித்துள்ளேன். இவையனைத்தும் எனக்குக் கிடைத்த சமூக அங்கீகாரமாகவே கருதுகிறேன்.


கேள்வி: உங்களால் தொழிலையும், இலக்கியப் பணியையும் எவ்வாறு செய்ய முடிகிறது?

பதில்: நான் கடந்த 6 வருடங்களாக மலேசியத் தேசியப் பழஞ்சுவடிக் காப்பகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றினேன். தற்சமயம் மலேசிய அரசாங்கத்தின் தகவல், தொடர்பு, பண்பாடு அமைச்சின் துணையமைச்சர் அலுவலகத்தில் சிறப்பதிகாரியாக பணியாற்றுகிறேன். வேலை தவிர்த்து பொதுச்சேவையில் ஈடுபட்டு வருகிறேன்.

தற்சமயம் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைச் செயலாளராகவும், சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கத்தின் துணைச் செயலாளராகவும் செயலாற்றி வருகிறேன். சுங்கை சிப்புட் அமைப்பின் வாயிலாக சேவைகள் பலவற்றைச் செய்து வருகிறோம். நலிந்தோருக்கு உதவுதல், கல்வி, விளையாட்டு, இலக்கியம் தொடர்பாக பல நிகழ்ச்சிகளையும் செய்து வருகிறோம்.

மேலும் சுங்கை சிப்புட் வாசகர் இயக்கத்தின் தலைவியாகவும் பொறுப்பேற்றுள்ளேன். 2007ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டுவரை அரசியலில் பிரசவேசித்திருந்தேன். இன்றும் இது போன்ற அரசியல், சமூகம், இலக்கியம் ஆகிய அமைப்புகளில் பங்காற்றி வருகிறேன்.

கேள்வி: உங்களுக்கு இலங்கையுடன் இலக்கியத் தொடர்புகள் எவ்வாறு காணப்படுகிறது?

பதில்: இலங்கை இன்று உலக மக்களின் பார்வையில் உள்ள நாடு. ஆனால், இலங்கையுடனான என் இலக்கியத் தொடர்பு மிகவும் ஆரோக்கியமானது. இலங்கைவாழ் இலக்கிய ஆர்வலர்களின் தொடர்பு முகநூல் வாயிலாகதான் எனக்குக் கிட்டியது. என் முதல் இலங்கை நண்பர் கவிஞர் அஸ்மின். மிகவும் நல்ல மனிதர். அவர் வாயிலாக சகோதரி ‘கலைமகள்’ ஹிதாயா ரிஸ்வியின் நட்பு கிடைத்தது. இவர்கள் இருவர் மூலமாக பல இலக்கிய ஆர்வலர்கள் எனக்கு அறிமுகமானார்கள். இதனால் நல்ல நட்பு வட்டங்களைப் பெற்றிருக்கிறேன். அண்மையில் “தடாகம்” கலை, இலக்கிய வட்டத்தின் மலேசியா இணைப்பாளர் என்ற அங்கீகாரம் கிடைத்தது, இது மென்மேலும் இலக்கிய உறவுவினை வலுப்படுத்துகிறது என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.


கேள்வி: நீங்கள் கலந்து சிறப்பித்த இலக்கிய மாநாடுகள் தொடர்பாகவும் வெளிநாட்டு அனுபவங்களையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்?

பதில்: மலேசியாவில் பல இலக்கிய மாநாடுகளில் கலந்துள்ளேன். நான் கலந்து கொண்ட முதல் வெளிநாட்டு மாநாடு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்துடன் 2010ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. என் வாழ்க்கையில் மறக்க முடியாத மாநாடு. காரணம் அம்மாநாட்டின் போது உலகளாவிய நிலையில் அறிஞர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் என பலரை நேரடியாக சந்திக்க முடிந்தது.

அடுத்து மலேசியாவில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு. இங்கும் பல நட்புள்ளங்களைச் சந்திக்க முடிந்தது. குறிப்பாக கவிக்கோ அப்துல் ரஹ்மான், ஐயா சாகும் அமீது, கவிஞர் நஜ்முல், கவிஞர் அஸ்மின், சிங்கப்பூர் அறிஞர் ஹிமானா சயிட் இவ்வாறாக பலரை நேரில் கண்டேன்.

தொடர்ந்து மாநாடு என்றில்லாமல் கருத்தரங்கில் பங்குக் கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம். அவ்வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதன்முதலாக கொல்கத்தா தமிழ் மன்றத்தில் “மலேசியத் தேசியப் பழஞ்சுவடிக் காப்பகம் ஒரு வரலாற்றுக் களஞ்சியம்” என்ற தலைப்பில் என் முதல் கட்டுரைப் படைத்தேன். அதனையடுத்து கடந்த நவம்பர் மாதம் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் “மலேசியப் பெண் படைப்பாளர்களின் வளர்ச்சி ஒரு பார்வை” என்ற தலைப்பிலும் கட்டுரைப் படைத்துள்ளேன். இதைத் தவிர பல இலக்கிய கருத்தரங்குகளிலும் பங்குப் பெற்றுள்ளேன்.

இந்தியாவின் பல முக்கிய இடங்களுக்கு 2004ஆம் ஆண்டு தொடங்கி 2012ஆம் ஆண்டு வரை பயணம் மேற்கொண்டு வருகிறேன். நான் சென்ற ஒவ்வொரு இடமும் எனக்கு புதிய அனுபவமும், செய்திகளும், பாடங்களும் கிடைத்துள்ளன. 

கேள்வி: மலேசியாவில் இலக்கியத்துறையில் பெண்களின் பங்களிப்பும், ஆர்வமும் எவ்வாறு காணப்படுகின்றது? அவர்களை ஊக்கப்படுத்தும் களமாக விளங்கிக்கொண்டிருப்பது?

பதில்: இக்காலக்கட்டத்தில் மலேசியப் பெண் படைப்பாளர்கள் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகின்றனர். காரணம் இன்று பெண்களுக்கு உயர்கல்வி பெறும் வாய்ப்பும் வளமும் பெருமளவில் வழங்கப்பட்டு வருகின்றன. ஆய்வுகளுக்காக எழுதத் தொடங்கியவர்கள், அத்துடன் நிறுத்தாமல் தொடர்ந்து பல படைப்புகளைப் படைப்பதில் முனைந்து ஆர்வம்காட்டி வருகின்றனர்.

‘இலக்கியம்’ என்பது தனி மனித அகவெழுச்சியாகும். அவ்வகையில் பெண் படைப்பாளர்கள் பெரும்பாலும் தங்கள் அனுபவங்களைத்தானே கற்பனையுடன் கலந்து கலைநயத்துடன் வெளிப்படுத்துகின்றனர். தங்களின் அனுபவங்களை எழுத்துக்களின் வழி படைப்புகளாகக் கொண்டு வருகின்றனர். பெண்களின் புனைவுகளில் யதார்த்தமும், நேர்மையும் பண்பாட்டுக் கூறுகளும் மொழித் தூய்மையும் சிறப்பாகவே வெளிப்படுகின்றன. தங்களின் மன உணர்வுகளை எழுத்தில் வடிக்கின்றனர்.

மலேசியப் பெண் படைப்பாளர்கள் சிறந்த முறையில் இலக்கியத்துறைக்கு வித்தாக அமைந்து வருகின்றனர் என்பதற்கு ஆதாரமாக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கம், இன்னும் பிற சமூக அமைப்புக்களும், மன்றங்களும் பெண் படைப்பாளர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுத்து, பொற்பதக்கம், கேடயம் ஆகியவைகளை வழங்கி சிறப்பித்து வருகின்றன.

கேள்வி: உங்களுடைய குடும்பமும் கலைத்துறை சார்ந்ததாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். அதுபற்றி கூறமுடியுமா?

பதில்: நான் சிறிய வயதிலிருந்தே என் தந்தையின் கப்பீரமான குரல், தோற்றம் கண்டு பிரமித்து வளர்ந்தேன். அவர் முத்தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கியவர். நாடகத்துறையின் வாயிலாக கலைத்துறை வளர்ச்சிக்குக் உறுதுணையாக இருந்தவர். “முத்துக்குமரன் நாடகம் மன்றம்” அமைத்து சரித்திரம், இலக்கியம், சமூக நாடகங்களைப் பல மேடைகளில் அரங்கேற்றியவர் அவர்.

உடன் பிறந்த நாங்கள் எண்மரும் நாடகத்துறையில் பணியாற்றியுள்ளோம். நான் எனது 12ஆவது வயதில் பெருந்தலைச் சாத்தனாராக நடித்தேன். பிறகு செண்பக பாண்டியனாகவும் நடித்துள்ளேன். எனது சகோதர்களும் பல மேடை நாடகங்களில் நடித்துள்ளனர். அனைவருமே தமிழ் ஆர்வலர்கள். தந்தை மறைந்த காலத்தின் சுழற்சியின் காரணமாகவும், பணி நிமித்தமாகவும் எல்லோரும் ஒவ்வொரு திசையில் இருக்கிறோம். தந்தைவழி இலக்கியப் பணியை நான் மட்டும்தான் தொடர்ந்து வருகிறேன்.

கேள்வி: இலங்கையுடன் மலேசிய தமிழ்ச்சங்கம் தொடர்பினை கொண்டுள்ளதா? இங்கு நடைபெறும் மாநாடுகள், கருத்தரங்குகள் போன்வற்றில் அதன் பங்கு இருக்கின்றதா?

பதில்: மலேசியத் தமிழ்ச்சங்கங்கள், அரச சார்பற்ற பொது இயக்கங்கள் தனிப்பட்ட முறையில் இலங்கை தமிழ் அமைப்புடன் தொடர்பு கொண்டிருக்கின்றார்கள். ஆனால், அங்கு நடைபெறும் மாநாடுகளிலோ, கருத்தரங்குகளிலோ கலந்து கொள்வதில் விருப்பம் காட்டுவதில்லை. காரணம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகள். இதனால், இலங்கையுடனான தொடர்பினை தள்ளியே நிற்கின்றோம்.

கேள்வி: உங்களது செயற்பாடுகளுக்கு கிடைத்த விருதுகள் மற்றும் பட்டங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

பதில்: இலக்கியப் படைப்புகள் வாயிலாக பல பரிசுகள் பெற்றுள்ளேன். அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க விருதுகளாக
2005ஆம் ஆண்டு பெற்ற வாசகர் நற்பணி விருது, 2007ஆம் ஆண்டு பெற்ற சிறந்த சேவையாளர் விருது, 2012ஆம் ஆண்டின் இளையத் தலைமுறை சிறந்த கட்டுரையாளருக்கான ‘டான்ஸ்ரீ ஆதி நாகப்பன் விருது’ என்பவற்றைக் குறிப்பிடலாம்.

கேள்வி: சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் உங்களது செயற்பாடுகளின் இரகசியம் என்ன? இப்பெண்களுக்கு நீங்கள் வழங்கும் ஆலோசனைகள் என்ன?

பதில்: எனது வெற்றியின் இரகசியம் எனது தன்னம்பிக்கைதான். என் மனதுக்கு சரி என்று பட்டதைச் செய்வேன், சொல்வேன். என் குடும்பம், நெருங்கிய நண்பர்கள் ஆதரவு தவிர்த்து நான் நம்புவது என் தன்னம்பிக்கையைதான்.
உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்
ஓது பற்பல நூல்வகை கற்கவும்
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே..!
என பாரதிக் கண்ட புதுமைப்பெண்களாய் என்றும் தன்னம்பிக்கையோடு செயல்பட்டால்
பெண்கள் தங்களுக்கான ஓர் அடையாளத்தை வளர்த்துக் கொள்ளலாம். 

இவ்வேளையில் “துருவம்” இணையத்தில் இந்த வாய்ப்பை வழங்கிய ஆசிரியருக்கும், ‘துருவம்’ குடும்பத்தினருக்கும் சகோதரி ராஜ் சுகாவுக்கும் மற்றும் இலங்கைவாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்களையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

(நேர்காணல்: ராஜ் சுகா)
 0 64 0 66