இளைய கிறுக்கல்கள்
Monday, March 13, 2017
கற்கவழி செய்குவீர்...
சோறில்லையென்ற நிலைவந்தபோது
ஜகத்தினையழிக்க ஓர் பாரதியில்லை
காரில் வந்திறங்குவோர் கண்களில்
கடுகளவிலும் கருணையில்லை!
பாத்திரமேற்று அலையுமெனக்கு
பிச்சையிடும் அவமானம் வேண்டாமே
ஏக்கத்தோ டலையுமெனக்கு கல்வி
ஏட்டினைத் தாரீரோ....
பெற்ற அன்னையின் பசியாற்றவே
உற்ற சோதரனை ஆற்றிதேற்றவே
கற்ற கல்விதான் காக்குமறிவீர்
கற்கவழி செய்குவீர்...
பெற்ற கடனடைப்பேன் உயர்ந்து
பெருவாழ்க்கைதனைக் காண்பேன் நீவீர்
போற்றஓர் வழியடைவேன் விரைந்து
போடுவீர் புத்தகவரங்களை...!!
Monday, December 19, 2016
மரணத்தின் பின்னரே
உன் திறமைகள்
உன் சேவைகள்
உனக்குண்டான நற்குணங்கள் எல்லாம்
பரிசீலிக்கப்பட்டு பாராட்டப்படும் உன்
மரணத்தின் பின்னரே....!!
உன் சேவைகள்
உனக்குண்டான நற்குணங்கள் எல்லாம்
பரிசீலிக்கப்பட்டு பாராட்டப்படும் உன்
மரணத்தின் பின்னரே....!!
விவசாயி போல
கையால் அடித்தவர்கள்
கைதட்டும் வரை
காத்திருந்தேன்
விதை விதைத்த
விவசாயி போல
விருட்சங்களை தடைசெய்ய
விதிகளுக்கும் முடியாதுதான்!!
கைதட்டும் வரை
காத்திருந்தேன்
விதை விதைத்த
விவசாயி போல
விருட்சங்களை தடைசெய்ய
விதிகளுக்கும் முடியாதுதான்!!
Sunday, December 18, 2016
ஊடல்
ஊடல் ஒரு
ஊடுருவும் ஆயுதம்
அதனால் தான்
உணர்வுகளில் மெது வா யிறங்கி
நெருக்கத்தை
நேசமாக வளர்த்துவிடுகின்றது!!
ஊடுருவும் ஆயுதம்
அதனால் தான்
உணர்வுகளில் மெது வா யிறங்கி
நெருக்கத்தை
நேசமாக வளர்த்துவிடுகின்றது!!
Tuesday, December 13, 2016
எனதான திறமைகளல்ல
அழகை ரசிப்பதும்
இயற்கையில் லயிப்பதும்
இலக்கியம்
நடனம்
சங்கீதம் எல்லாம்
எனதான திறமைகளல்ல
உன்னை மறத்தலுக்கான
முயற்சிகள்!!
இயற்கையில் லயிப்பதும்
இலக்கியம்
நடனம்
சங்கீதம் எல்லாம்
எனதான திறமைகளல்ல
உன்னை மறத்தலுக்கான
முயற்சிகள்!!
Friday, December 9, 2016
51வது படைப்பாளி மத்துகமை செல்வகுமார்
http://kalkudahnation.com/57791
வாரா வாரம் கல்குடாநேசன் இணைய நேர்காணலுடன் பல படைப்பாளிகள், கலைஞர்கள், கவிஞர்களைச் சந்தித்து வருகின்றோம். அவர்களின் திறமை, ஆளுமையினை வெளிக்கொணர்வதோடு, படைப்பாளிகளின் பல்வேறுபட்ட கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.
இந்நேர்காணலில் அறிமுகமாகும் பலர் தமது துறைசார்ந்த வாய்ப்புக்களைப் பெற்றுக்கொண்டதாகவும் கூறி மகிழும் போது, எமது நோக்கத்தை அடைந்து விட்டதாய் நாம் பெருமிதமடைகின்றோம். அந்த வகையில், இவ்வாரமும் ஒரு இளம் படைப்பாளியைச் சந்திப்பதில் பெருமிதமடைகின்றோம்.
கல்குடா நேசனின் 51வது படைப்பாளியாக இணைகிறார் மத்துகமை செல்வகுமார் அவர்கள். “திறமைகளைத் தக்க வைத்துக் கொள்வது என்பது வாசகன் எதை விரும்புகின்றானோ அதை அவனுக்கு கொடுத்தாலே போதும்” என கூறுமிவர், பல இந்திய கவிஞர்களிடம் வாழ்த்துக்களைப்பெற்ற இளைய கவிஞர். தனது திறமைகள் மீது தீராத நம்பிக்கை கொண்டுள்ள இவர், பத்து வருடங்களுக்கும் மேலாக எழுத்துத்துறையில் இயங்கிக்கொண்டே இருக்கின்றார். தனக்கான ஓரிடத்தை தக்கவைத்துக்கொள்ள அதிக சிரத்தை எடுத்துக்கொண்டிருக்கும் இவர் இளையவர்களுக்கெல்லாம் உதாரணமான நல்ல முயற்சியாளன்.
இந்த இளைய கவியை கல்குடா நேசனூடாக அறிமுகப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். பல நல்ல விடயங்களோடு தன் இலக்கிய ஆர்வத்தினையும் எம்மோடு பகிர்ந்து கொண்ட அவரின் முழுமையான விபரங்களோடு நேர்காணலில் இணையுங்கள்.
01. தங்களைப் பற்றிய அறிமுகம்?
களுத்துறை மாவட்டம் மத்துகமை என்ற இதம் தரும் மலைப்பிரதேசத்திற்கும்.., கடலோரக் காற்று கவி பாடும் தர்கா நகரத்திற்கும் மத்தியில் அழகாய் அமர்ந்துள்ள பள்ளேகொடை எனும் கிராமத்தவன் நான்.
கற்றது ஐந்து வரை பள்ளேகொடை தழிழ் வித்தியாலயமும், சாதாரண தரம் வரை தர்கா நகர் ஸாஹிறா கல்லூரியும், உயர்தரம் மத்துகமை சாந்தமரியால் கல்லூரியும் என்னை வளர்த்தெடுத்த பெறாத் தாய்மார் ஆவார்கள்.
அத்தோடு ஷகிவ் மிதேஷ் நாமம் கொண்ட இரண்டு ஆண் பிள்ளைகளின் தந்தை என்ற பெருமையோடும் கந்தசாமி ஷாமலா என்ற என் மனைவிக்கு அன்பான கணவராகவும் இனிமையாய் சந்தோசமாய் கவிதையோடு நாட்களை நகர்த்துகின்றேன்.
02. கவிதை எழுத உங்களை ஊக்கப்படுத்திய விடயங்கள்?
எல்லாக் கவிஞர்களும் சொல்வதைப்போல் என்னைச் சூழவிருந்த மந்தி தாவும் மாமரங்களும்.., சந்தி சந்தியாய் பூத்துக்குலுங்கும் பூமரங்களும்.., அந்தி சாய பறந்து திரியும் கிளிகளும் என்று எனைச் சுற்றி இருந்த சூழலே எனைப் பற்றி இருக்கும் கவிதைக்கு உரம் தந்து ஊக்கப்படுத்தியவர்கள் என்பேன். அது தவிர சிறுவயதிலேயே பாடல்களை ரசிக்கும் பைத்தியம் ஆனேன். அந்த ரசனைகளே இன்று கவிதைகளாக.
03. எழுதிய கவிதைகளை யாரிடமாவது காட்டி ஆலோசனை பெறுகின்றீர்களா அல்லது எவ்வாறு தரப்படுத்திக்கொள்கின்றீர்கள்?
நல்லதொரு கேள்வி கேட்டீர்கள். உண்மையில் எனக்கு ஒரு பயம் உண்டு நாம் எழுதும் எழுத்து யார் மனதையும் காயப்படுத்தி விடக்கூடாது என்று. ஆகவே ஆலோசனை பெறும் அளவிற்கு பாரதூரமாக எழுதுவது கிடையாது என்றே சொல்லவேண்டும்.
ஆக நானாகவே என் கவிதைகளை தரப்படுத்தி தீர்மானித்து கொள்கின்றேன்.
04. எழுத்தார்வத்துக்கு உங்கள் குடும்பத்தாரிடம் கிடைக்கும் ஆதரவு பற்றி?
என் எழுத்துக்களை வாசகருக்கு கொண்டு சேர்க்கும் உன்னத பணியை இந்த முகநூல் நாளுக்கு நாள் வெற்றிகரமாய் செய்து வருகின்றது. நேரம் கிடைக்கும் போது அந்த முகநூலில் நான் தேடல் கொள்வது கண்டு "பேஸ்புக் சோறு போடாது" என்ற கோட்பாட்டை உடைக்காதவர்கள் என் குடும்பத்தினர். அதிலிருந்து அறிந்து கொள்வீர்கள் என் எழுத்தார்வத்துக்கு குடும்பத்தாரின் ஆதரவை. தயவுகூர்ந்து இது எங்கள் வறுமைத்தனத்தின் வெளிப்பாடு என்று மட்டும் உணர்ந்து கொள்ளுங்கள். ஆனாலும் எனக்கு வெற்றி என்று வரும் போது அவர்கள் கொள்ளும் ஆனந்தத்திற்கு அளவு சொல்லத் தெரியாது. என் அன்பு மனைவியை இங்கு சொல்லியே ஆக வேண்டும். ஒவ்வொரு ஆணின் வெற்றியின் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பது பழங்காலந் தொட்டு சொல்லப்படும் ஓர் உண்மை. அது நூறு சதவீதம் நிரூபிக்கப்படுகிறது என் வாழ்விலும். என் எழுத்தார்வத்துக்கு என் மனைவி ஷாமலா தரும் ஆதரவு ஈடற்றது.
05. உங்களது எழுத்தாற்றலை அதிகரிக்க என்னென்ன முயற்சிகளை மேற்கொள்கின்றீர்கள்?
தற்போது நான் இருக்கும் சூழ்நிலையை பொருத்த வரை எழுத்தாற்றலை மேம்படுத்த இணையம் பெரும் பங்கு வகிக்கின்றது. தாய்த் தமிழ் மொழி கொண்டு இணையத்தில் தேடி எடுக்கும் அனைத்து தேடல்களிலும் என் எழுத்தாற்றலை செம்மை செய்து கொண்டே வருகின்றேன். முகநூல் என் முழு நேர வாசிகசாலை என்றே கூற வேண்டும்.
06. கவிதை தவிர வேறு ஆர்வங்கள்? திறமைகள்?
கவிதை மட்டுமே எனக்கான அடையாளமாகவும் ஆர்வமாகவும். அது தவிர புகைப்பட வடிவமைப்பு செய்வதில் மிக ஈடுபாடு எடுத்துக்கொள்வேன். சில மேடைகளில் பாடல் பாடி பாராட்டையும் பெற்ற வண்ணம் திறமைகளை வளர்த்துக்கொள்கின்றேன்.
07. போட்டி நிறைந்த உலகில் உங்கள் திறமைகளை தக்கவைத்துக்கொள்ள எப்படியான வழிகளை கையாள்கின்றீர்கள்?
திறமைகளை தக்க வைத்துக் கொள்வது என்பது வாசகன் எதை விரும்புகின்றானோ அதை அவனுக்கு கொடுத்தாலே போதும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன். அதை கொஞ்சம் இனம் கண்டறிந்துள்ளேன் என்பது கூட ஒரு கையாள்கையே.
08. நீங்கள் மனம் நெகிழ்ந்த பாராட்டுக்கள், மனச்சோர்வுக்குள்ளான விமர்சனங்கள் பற்றி எம்மோடு பகிர்ந்துகொள்ள முடியுமா?
நான் பதிவேற்றம் செய்யும் ஒவ்வொரு கவிதைகளுக்கும் கிடைக்கும் வாழ்த்துக்கள் ஊடாக தினம் மனம் நெகிழ்ந்து போகின்றேன். மறக்க முடியாத பாராட்டு எனும் போது பிரபல தென்னிந்திய திரைப்பட இயக்குநர் பேரரசு அவர்கள் முன் கவிதை பாடும் வாய்ப்பு ஒன்று கிடைத்தது நான் வாசித்த கவிதையை அவர்கள் மீண்டும் ஒரு முறை வாசிக்கவும் என்று மறுபடியும் கேட்டு எனை பாராட்டியது மறக்க முடியாத மனம் நெகிழ்ந்த பாராட்டில் ஒன்றாகும்.
மனச்சோர்வுக்குள்ளான விமர்சனங்கள் பற்றி கூறுவதாயின் அதற்கான வாய்ப்பை நான் யாருக்கும் ஏற்படுத்திக் கொடுக்க மாட்டேன் என்றே கூறவேண்டும். விமர்சனங்கள் செய்யக்கூடிய அளவு தாறுமாறாக எதையும் சிந்தியாது ஏனோ தானோவென்று எதையும் எழுதி விடுவதில்லை. நிதானமாக நியாயப்படுத்தக் கூடிய விதமான எழுத்துக்களையே என் பேனை சிந்துவதோடு இதுவரை அப்படி ஒரு கசப்பான சம்பவம் நிகழ்ந்தது இல்லை.
09. உங்கள் படைப்புக்களில் எவ்வெவ் விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்றீர்கள்?
இலக்கியம் காலத்தின் கண்ணாடி என்பது குறிப்பிடத்தக்கது. காலத்திற்கு அல்லது நேரத்திற்கு என்ன தேவை என்பதை தெரிந்து அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் சிந்தனைகளே எனக்குள் முளைவிடுகின்றது எனலாம். எல்லாக் கவிஞர்களையும் போல் காதலை மட்டும் கொஞ்சம் அதிகமாக உளறி இருப்பதும் உண்மை.
10. அவற்றை எவ்வெவ் வழிகளினூடக சமூகத்திடம் கொண்டு சேர்ப்பிக்கின்றீர்கள்?
தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை, சஞ்சிகைகள் என்று தகவல் அறியும் சாதனங்கள் இருந்த போதும் முகநூல் என்ற சமூக வலைத்தளம் நம் படைப்புக்களை உலக அளவில் எல்லா
நாட்டு வாசகர்களுக்கும் ஒரு நொடியில் கொண்டு சேர்த்து விடுகிறது. ஆக முகநூலுக்கு முன்னுரிமை கொடுக்கின்றேன். இருந்தும் தெரிவு செய்யப்பட்டு பத்திரிகையில் அச்சு பதிந்து வரும் ஆக்கங்களுக்கு தனி ஒரு மதிப்பு உண்டு.
11. படைப்பு ரீதியாக முகநூல் இணைய வழிகள் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மைகள்.
ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு முகநூல் என்ற இணைய சம்பந்தம் அவ்வளவு பெரிதாக வளர்ச்சி அடைந்து இருக்கவில்லை. அந்த காலகட்டங்களில் என் ஆக்கங்களை பத்திரிகைகளுக்கே அனுப்பி வைப்பேன். அன்று நான் பத்திரிகைகளில் வியந்து பார்த்த த.எலிசபெத், லுணுகலை ஸ்ரீ, கொக்காகலையூர் கிருஷ்ணசாமி அருள் என்று இன்னும் பல படைப்பாளிகளையும் பெரும் கவிஞர்களையும் முகம் பார்த்து பழகும் வாய்ப்பை இந்த முகநூல்தான் ஏற்படுத்தித்தந்தது. அத்தோடு முகநூல் குழுமங்களுக்கு நேரம் கிடைக்கும் போது கவிதை எழுதி வெற்றிகளையும் பாராட்டுகளையும் பெறுவதோடு இன்னும் பல நன்மைகளையும் நாளுக்கு நாள் பெற்ற வண்ணம் உள்ளேன்.
12. நீங்கள் பொறாமைப்படும் ஒரு படைப்பாளர் எவரேனும்? ஏனென்று கூறமுடியுமா?
இருக்கின்றார்.
அன்று அவர் ஒரு கல்லெறிந்த மரம். அவரது கிளைகளில் இலைகளில் மற்றும் பூக்களில், கனிகளில் முன்னேற்றம் முறிக்கும் முட்களின் கூர்மைகளை சிலர் வீசிக்கொண்டே இருப்பார்கள். ஆனாலும் அந்த கற்களையும் முட்களையும் கால் தூசுக்கும் கணக்கிலெடுக்காது சிரிப்பார்கள். சிலர் அந்த முளைக்கும் மரத்தின் வேர்களை அடியோடு கலட்டி எடுக்க சதி செய்தார்கள். ஆனாலும் அவர்களுக்கு எதிராய் இவர் ஒரு நாளும் கெட்டெண்ண மதி செய்யவில்லை. அந்த மரம் தனக்கு கிடைத்த இடைவெளிகளுக்குள் தன் ஆணி வேரை தடைகளைத் தாண்டி இன்று ஒரு நிலையால் இந்த பூமியில் ஊன்றிக்கொண்டது. இன்று அது ஒரு விருட்சமாக உருவாகி அதன் கிளைகளில் கவிதைகளையும் அதன் இலைகளில் பாடல்களையும் மலர்களில் நல்ல மனிதர்களையும் கனிகளில் வாழ்த்து மழைகளையும் வாங்கிய வண்ணம் அந்த விருட்சம் வானை நோக்கி உயர்ந்து விரிந்து செவ்வனே தன் பயணத்தை நகர்த்தி இன்னும் இன்னும் வளர்கின்றது.
யார் அந்த விருட்சம் என்ற அவா உங்களில் இருக்கும் அது வேறு யாருமில்லை இன்று உலகமே போற்றும் முக்கியமாய் கல்லெறிந்தவர்கள் வியந்து பார்க்கும் கவிஞர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், தென்னிந்திய தமிழ் சினிமாவின் தனக்கென தனி இடம் பிடித்த திரைப்பட பாடலாசிரியர், பல விருதுகளின் சொந்தக்காரர் பொத்துவில் அஸ்மின் அவர்களே நான் இன்று வியந்து பார்த்து அழகாய் செல்லமாய் பொறாமை கொள்ளும் நல்ல மனிதர் படைப்பாளர்.
13. இதுவரை நீங்கள் பங்குபற்றிய போட்டிகள் பரிசுகள் பாராட்டுக்கள் பற்றி?
இலங்கையின் பிரபல தொலைக்காட்சியான சக்தி தொலைக்காட்சி 2008 ஆம் ஆண்டு மிகப் பெரிய அளவில் பிரமாண்டமாக நடத்திய இசை இளவரசர்கள் போட்டியில் பதினாறு பாடலாசிரியர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு தென் இந்திய தமிழ் சினிமா பிரபல பாடலாசிரியர்களை சந்திக்கும் அரிய வாய்ப்பை பெற்றுக்கொண்டேன். அந்த அற்புத பயணத்தின் போது வித்தக கவிஞர் பா.விஜய், அமரர் நா.முத்துகுமார், விவேகா, சினேகன், கவிஞர் கிருதயா, இயக்குநர் பேரரசு, இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் போன்றவர்களிடம் கலந்துரையாடி கவிதை பாடி பாராட்டையும் பெற்றுக்கொண்டேன். இந்த பெரும் வெற்றி எனக்கு பலபேரிடம் இருந்து பாராட்டையும் பரிசில்களையும் பெற்றுத்தந்தது.
அத்தோடு கல்வி பயின்ற காலத்தில் நடைபெற்ற கவிதை, சிறுகதை போட்டிகளிலும் பங்குபற்றி பரிசில்கள் சான்றிதழ்கள் பெற்றுள்ளேன்.
அண்மையில் பிரபல இணையத்தளம் ஒன்று உலகலாவிய ரீதியில் நடத்திய கவிதை போட்டி ஒன்றில் "தமிழாய் வாழ்வோம்" என்ற தலைப்பில் தமிழ் வாழ்த்து பா பாடி முதல் பத்து சிறந்த கவிதைக்குள் தெரிவு செய்து சான்றிதழ் பெற்றுக்கொண்டேன். உங்கள் பார்வைக்கு அந்த கவிதை.
தமிழாய் வாழ்வோம்.
=================
திருக்குறள் ஞாலம் தந்த வள்ளுவத்தமிழே...
இராமாயணம் ஞானம் தந்த கம்பத்தமிழே...
திருக்குறளில் தித்திப்பதும்
இராமாயணத்தில் கர்ஜிப்பதும்
தங்கத்தின் தங்கம் தாய் நீயல்லவா..!
தொல்காப்பியம் படைத்த தொல்காப்பியத்தமிழே...
அகத்தியம் படித்த அகத்தியத்தமிழே...
தொல்காப்பியத்தில் தொன்மையாய்
அகத்தியத்தில் வன்மையாய்
அகத்தினில் மின்னும் தாய் நீயல்லவா..!
பத்துப்புலவர் பத்திரப்படுத்திய பதிற்றுப்பத்துத்தமிழே...
ஐவர் அருளிய அழகு கலித்தொகைத்தமிழே...
பதிற்றுப்பத்தில் பக்குவமாய்
கலித்தொகையில் கச்சிதமாய்
காலம் வென்ற தாய் நீயல்லவா..!
பலப்புலவர் பாடிச்செய்த
அகநானூற்றுத்தமிழே...
பரிசாய் எமக்களித்த
புறநானூற்றுத்தமிழே...
அகநானூற்றில் அறத்தினையும்
புறநாநூற்றில் நற்றிணையும்
நன்னெறி நவிலும் தாய் நீயல்லவா..!
முல்லைப்பாட்டிசைத்த நப்பூதனார்த்தமிழே...
குறிஞ்சிப்பாட்டிசைத்த கபிலத்தமிழே...
முல்லைப்பாட்டில் முத்தமிழாய்
குறிஞ்சிப்பாட்டில் கொஞ்சித்தமிழாய்
நெஞ்சத்தில் நீங்கா தாய் நீயல்லவா..!
ஆத்திச்சூடி நீதிச்சொல்ல
கொன்றைவேந்தன் முருகேசன் பாட
மூதுரை அறத்தை உரைக்க
நல்வழி "சங்கத்தமிழ் மூன்றும் தா"
என்றழைத்த ஒளவைத்தமிழே...
நீயல்லவா எங்கள் தாய்..!
திருவாசகத்திலே சுவாசந்தந்த
மாணிக்கவாசகத்தமிழே...
பெரியபுராணத்திலே சைவமயமான
சேக்கிழார்த்தமிழே...
திருவாசகம் சிவவாசத்தையும்
பெரியபுராணம் சிவனடியார்களையும்
உலகெலாம் உணர்ந்தென அடியெடுத்த
உன்னத தாய் நீயல்லவா..!
தாயுமானவரின் தாய்த்தமிழாய் வாழ்வோம்
மகாகவியின் மகத்தவத்தமிழாய் வாழ்வோம்
சேக்கிழாரின் செந்தமிழாய் வாழ்வோம்
புகழேந்திப் புலவரின் பூந்தமிழாய்
புகழேந்தி வாழ்வோம்.
ஒட்டக்கூத்தரின் ஒப்பற்ற தமிழாய் அனைத்து மொழியிலும்
ஒப்பற்று ஒட்பில்லாது
உயிரேத் தமிழாய் வாழ்வோம்.
14. எதிர்கால இலட்சியம்?
என் இரத்தத்தின் சிவப்பணுக்களில் சத்தமின்றி ஓர் லட்சியம் வருடங்கள் கடந்து காலத்தின் கைப்பிடிக்குள் சிக்கிக்கிடக்கின்றது. அது என்று பிரவாகம் எடுக்கும் என்பதில் தங்கி உள்ளது என் லட்சியம். ஒரு கவிதை புத்தகம் வெளியிடுவதே அது. நல்ல குணம் மட்டும் இருக்கும் என்னிடம் பணம் இல்லாத குறைதான் லட்சியத்தின் பாதைக்கு வேலி போடுகிறது.
15. ஏனைய படைப்பாளிகள், படைப்புக்கள், நூல் வெளியீடுகள் இலக்கிய நிகழ்வுகள் போன்றவற்றில் உங்களது ஆர்வம் பங்கேற்பு உறவுகள் பற்றி?
என் முகநூல் பக்கம் பார்த்தால் அறியக்கூடியதாக இருக்கும். ஏனைய படைப்பாளிகள் மற்றும் அவர்களின் படைப்புக்கள் சம்பந்தமாக நான் எடுத்துக்கொள்ளும் விருப்பத்தன்மையும் நேர ஒதுக்கீடும்.
இதுவரை குறிப்பிட்ட சில கவிஞர்களின் நூல் வெளியீட்டு விழா, இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களின் இசை தொடக்க விழா மற்றும் பாடல் வெளியீடு, கவிஞர்களின் கவிதைகளை பகிர்ந்துகொள்ளல் போன்ற நல்லெண்ண செயல்களில் நான் அதிகம் அக்கறை எடுத்துக்கொள்வேன். ஆனால் அழைப்புகள் கிடைத்தும் அந்த கலை நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாத தொலை தூர தேசத்தில் இருந்து வருந்துகிறேன்.
16. நீங்கள் முகநூலில் பதிவேற்றம் செய்யும் கவிதைகளை எவ்விதம் பாதுகாத்து வைக்கின்றீர்கள்?
முகநூலில் தன் ஆக்கங்களை பதிவு செய்யும் படைப்பாளிகளுக்கு மிகவும் பயனுள்ள அற்புதமான ஒரு கேள்வி கேட்டீர்கள். இந்த விடயத்தில் கவனயீனமற்று பெரும் தவறு செய்துகொண்டிருப்பதில் நானும் ஒருவன். இலகுவாக இருக்கும் என்பதற்காக கைப்பேசியில் அல்லது கணினியில் தட்டச்சு செய்து முகநூலில் பதிகின்றேன். சுமார் ஒரு எட்டு வருடங்களாக முகநூலில் என் ஆக்கங்களை கவிதைகளை பதிவு செய்து வருகின்றேன். ஆனால் இதுவரை பதிவேற்றிய அனேக ஆக்கங்களுக்குமான எந்த ஒரு ஆவணமும் என்னிடம் இல்லை சிலதுகளைத் தவிர. அது நான் செய்த பெரும் தவறு என்பதோடு இன்னும் பல கவிஞர்களும் இதே தவறை இன்றும் அன்றாடம் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். பின்பு முகநூலில் இருந்து கவிதைகளை ஒவ்வொன்றாக எடுத்து எழுதுவது என்பது லேசான காரியமும் இல்லை. ஆக அன்றாடம் எழுதும் கவிதைகளை ஆக்கங்களை கைப்பேசியில் தட்டச்சு செய்து பதிவிடாமல் தனக்கென ஒரு பெரிய அப்பியாச புத்தகம் ஒன்றை வாங்கி வைத்து அதில் எழுதிய பின் முகநூலில் அல்லது இணையத்தில் பதிவிடுங்கள். இதை இப்போதுதான் நானும் கடைபிடிக்கின்றேன். ஆண்டுகள் பல கடந்த பின்னும் உங்களுக்கும் உங்கள் சந்ததியினருக்கு உங்கள் எழுத்துக்களும் சிந்தனைகள் பெரும் வலமாக இருக்கு என்பதில் ஐயமில்லை.
17. இசைமீதான ஆர்வம் பற்றி கூறினீர்கள் அத்துறையில் சாதிக்கவேண்டுமென்ற எண்ணம் இல்லையா? அப்படியானால் எந்த விதத்தில் முயற்சிக்கின்றீர்கள்?
இசையை ஒழுங்கு முறையாக படித்து அதன் நெறியில் இசை அறிந்த அனுபவம் கிடையாது, எனக்கு இருக்கும் இசை ரசிப்பையும் ஞானத்தையும் வைத்து பாடுகிறேன். எனது ஊரில் விசேட தினங்களில் திரு. மதன் மற்றும் செல்வன் பிரசன்ன அவர்களின் தலைமையில் கரோக்கி இசை நிகழ்ச்சிகள் நடத்துவோம். தற்போது அதற்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த குழுவை செம்மை படுத்தி வெளிமாவட்டங்களிலும் பிரமாண்டமாக நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஒரு ஆசை லட்சியம் உண்டு.
18. உங்கள் வளர்ச்சியில் நன்றிக்குரியவர்களாய் நீங்கள் காண்பவர்கள்?
முதலில் இலங்கையின் புகழ் பெற்ற கவிஞர், பாடலாசிரியர், பாடகர், ஓவியர், பத்திரிகையாளர், மற்றும் நடிகர் என்று பன்முகம் கொண்ட பெரும் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா அவர்களை சொல்லலாம். அந்த பெரும் வள்ளல்தான் எனக்கு தத்தகாரத்திற்கு பாடல் எழுதும் முறையை கற்பித்து தந்தார். அவரது வழிகாட்டலில்தான் மெட்டுக்கு பாடல் எழுத கற்றுக் கொண்டேன். அவர் என் பாட்டுத்தந்தை. இன்று அவர்கள் நம் மத்தியில் இல்லை.
அத்தோடு சக்தி தொலைக்காட்சி இசை இளவரசர்கள் நிகழ்வில் நான் பாடலாசியராக தேர்வு செய்யப்பட்டபோது நான் கொண்ட ஆதங்கத்தைவிட என்னைச் சூழ இருந்த எனது ஊரைச்சேர்ந்த சொந்தங்கள் முக்கியமாக ஆனந்த விளையாட்டுக் கழக நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள் என அனைத்து நல்லுங்களாலும் நான் ஆசிர்வதித்து ஆசுவாசப்படுத்தி வரவேற்கப்பட்டேன். பலர் எனக்கு பணம் கொடுத்து உதவியதை என்னால் ஒரு நாளும் மறந்து விட முடியாது.
ஆனந்த விளையாட்டு கழக நண்பர்கள் என் பதாதைகளை (Banners) தொங்க விடுவதற்கு ஒருவர் தோள் மீது மூவர் ஏறி நின்று மின்சார கம்பிகளுக்கு சவால்விட்ட நினைவுகளை என் இதயத் துடிப்பின் ரத்த ஓட்டங்களுக்குள் சத்தமில்லாது இன்னும் சுத்தமாக வைத்துள்ளேன். ஊர் ஊராக சென்று சாப்பாடு தண்ணீர் இல்லாது என் சுவரொட்டிகளை மதில்களில் ஒட்டியது இன்னும் என் மனதில் ஒட்டிக்கொண்டுதான் இருக்கின்றது. அத்தோடு நில்லாது ஊர்த் திருவிழா அன்று திரு. ஹரிகிருஷ்ணன் ஆசியர் மற்றும் திருமதி ஹரிகிருஷ்ணன் ஆசிரியை தலைமையில் இன்னும் பல ஆசிரியர்களும் நல்நெஞ்சம் கொண்டவர்களும் இனைந்து எனக்கு பரிசு தந்து கெளரவித்த அந்த நிகழ்வை ஓர்நாளும் மறந்துவிட முடியாது. பள்ளேகொடை தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் திரு.நவீந்திரன் மற்றும் திருமதி.நவீந்திரன் அத்தோடு திரு. சர்வானந்தன் ஆசியர் அவர்களதும் ஊக்குவிப்பும் எனக்கு உரம் தந்து வரம் தந்தது.
அவர்களோடு வளர்ந்து வரும் என் மரத்திற்கு நல்ல நிழலும் இதமான வெயிலும் நீரும் ஊற்றி எனை காய் கனி தரும் விருட்சமாக உருவாக்கும் பெரும் பங்கினை செய்யும் என் முகநூல் சொந்தங்களையுமே நான் நன்றிக்குரியவர்களாய் காண்கின்றேன். அவர்களுக்கு கோடி நன்றிகளோடு என் சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.
19. இன்றைய நவீன உலகில் தொலைபேசியும் முகநூலும் இணைபிரியாதனவான போதும், நீங்கள் கூறியதுபோல அதில் பதிவேற்றம் செய்ய அதிக வசதிவாய்ப்புகள் இருந்தபோதும், சமூகம் சார்ந்த படைப்புக்கள் சமூகத்தின் அடித்தள மக்களையும் சென்று சந்திப்பது ஊடகங்களினூடாகவே" இதுபற்றி?
நிறைய எழுத வேண்டிய ஓர் வினா தொடுத்தீர்கள். இருந்தும் சுருக்குவோம். இன்றைய சமூகத்தை எடுத்து நோக்கினால் அடித்தள மக்களிடமும் கூட அலைபேசி இருப்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது. இனி வரும் சந்ததியினரை கடந்த பிறகு அடித்தள மக்கள் என்ற பேச்சுக்கே அடித்தளமே இல்லாது போய்விடும்.
ஆக முகநூலில் முடிந்தளவு போராடி போட்டி போட்டு ஒரு நிலைக்கு வந்த பிறகே ஊடகங்களை நாட வேண்டி உள்ளது. எல்லா கலைஞர்களுக்கும் ஆசை உள்ளது தன் படைப்பு சகலரையும் சென்றடைய வேண்டும் என்று. அதற்கு இலகுவான ஓர் ஊடகம்தான் தொலைக்காட்சி மற்றும் வானொலி அதை ஒருபாேதும் யாராலும் மறுக்க முடியாது. தொலைக்காட்சியில் கவிதை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை எண்ணிவிடுவதற்கு ஒரு கை விரல்கள் கூட அதிகம் எனலாம் . அத்தோடு வானொலிகள் கவிதைகளுக்கு களம் தந்தாலும் அடித்தள மக்கள் தூங்கிய பின்பே அதுவும் ஒலிபரப்பு செய்யப்படுகிறது என்பது கூட வேதனை.
20. இன்றைய பெண் படைப்பாளர்கள் பற்றி உங்களது பார்வை?
நல்லதொரு முன்னேற்றம் தெரிகிறது அதுவும் முகம் காட்டாமல் முகநூலில் மட்டும் என்பதுதான் யதார்த்தம். முகம் காட்டாமல் என்று சொன்னதில் இருந்து தெரிந்து கொள்ளலாம் பெண்களுக்கு சமூகத்தில் இருக்கும் அந்தஸ்தையும் சுதந்திரத்தையும். ஏராளமான பெண் படைப்பாளிகளை இன்று காணக்கூடியதாக உள்ள போதும் ஆண் என்ற ஓர் வர்க்கத்தினரோடு பழகுவதிலும், நடத்தைகள் வேறுபட்ட வெளிச் சூழலில் தன்னை பாதுகாத்துக்கொள்வதிலும், அவர்களுக்கான களத்தை உருவாக்கிக் கொள்வதிலும், முக்கியமாக தன் குடும்ப சூழ்நிலையை பொருத்தும் அவர்கள் சமூகத்தில் பெரும் பாடு பட வேண்டியுள்ளதனால் பெண் படைப்பாளர்களின் பிரகாசம் குறிப்பிட்ட சில காலத்தோடு மங்கிப்போய் விடுகிறது. அதிலும் சில பெண்கள் தீயில் விழுந்த பறவையாய் தன் சிறகுகளை காப்பாற்றி வானில் உயரப் பறக்கின்றார்கள் உதாரணம் என்னை நேர்காணல் செய்யும் சகோதரி ராஜ் சுகா உங்களைப் போல்.
21. தங்களது வெளிநாட்டு வாழ்க்கைப் பற்றி?
வெளிநாடு சென்று சொல்வதைவிட வெயில் நாடு என்று சொல்வதே சாலச்சிறந்தது. அந்தளவு எங்களை ஒரு ஆறு மாதம் பளீரென்று சுடும் பின்பு இன்னும் ஒரு ஆறு மாதம் குளிர் வந்து நடுக்கம் தரும்.
லட்சியங்களை வெல்ல வேண்டுமாயின் லட்சங்களை அள்ள வேண்டும் என்பதை உணர்ந்த படியால் பல படிகளை ஏறி வெளிநாடு வந்தேன் இந்த வெளிநாட்டு வாழ்க்கை கூட என் கலைப்பயணத்திற்கு பல்வேறு வழிகளில் உதவியாய் அமைந்துள்ளது.
22. இசை இளவரசர்கள் போட்டி, இந்திய பயண அநுபவம் பற்றி எங்களோடு பகிர்ந்துகொள்ள முடியுமா?
அது கோடியில் ஒருவருக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம். தமிழ் நாட்டிற்கு பணம் இருந்தால் சுலபமாக போய் வரலாம். ஆனால் அங்குள்ள தமிழ் சினிமா சம்பந்தப்பட்ட பிரபலங்களை சந்திப்பதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. அந்த அரும்பெரும் பாக்கியத்தை சந்தர்ப்பத்தை சக்தி தொலைக்காட்சி இசை இளவரசர்கள் நிகழ்ச்சியின் மூலம் எமக்கு வழங்கி இருந்தது.
சென்னை வடபழனியில் பத்து நாட்கள் தங்கி இருந்தோம். புதுப்புது மெட்டு போடுவதும் அதற்கு வரிகள் எழுதி தென்னிந்திய திரைப்பட பிரபலங்கள் முன் பாடி காட்டுவதும் என அந்த பத்து நாட்கள் பேரானந்தத்தோடு கழிந்தது.
அநே கமான தமிழ் சினிமா நட்சத்திரங்கள் வாழ்ந்து வரும் சாலிகிராமம் எனும் இடத்திற்கு நானும் அன்பின் நண்பர்களான இன்றைய தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நம் நாட்டு கவிஞர் பாடலாசிரியர் அஸ்மின் மற்றும் புசல்லாவை தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் கவிஞர் புசல்லாவை கணபதி அவர்களோடு மூவருமாக இளைய தளபதி விஜய், விஜயகாந்த், வடிவேலு, செந்தில், வினுச்சக்கரவர்த்தி என பல நட்சத்திரங்களை சந்திக்க அவர்கள் வீடு தேடி சென்ற போது ஏற்பட்ட இனிப்பான மற்றும் கசப்பான அனுபவங்களை எப்படி விவரிப்பது. இந்த பயணம் இயக்குநருக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக போய் வந்தோம் என்பதே வேடிக்கை. எங்களை வழிநடத்தி நிகழ்ச்சி இயக்குநராக பணி செய்த அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு.ஷியா உல் ஹசன் அண்ணாவிற்கு இந்த நேரத்தில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
23. கல்குடா நேசன் இணைய வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள நினைப்பது?
சமூக அக்கறை கொண்ட மிகப்பெரிய ஒருவரினால் எதிர்ப்பார்க்காதவிதத்தில் கிடைத்த மிகப்பெரிய ஓர் விருது வழங்கிய நிகழ்வாகவே இதை நான் பார்க்கின்றேன்.
நமது எண்ணங்கள் என்னென்ன நல்லதாய் எண்ணுகின்றன என பார்த்தால் எள்ளளவும் எதுவுமேயில்லை என்றே தோன்றும். அப்படி பட்ட இந்த சமுதாயத்தில் இப்படிப்பட்ட சிந்தனை கொண்ட கல்குடா நேசன் போன்ற இணையத்தளம்
வளர்ந்து வரும் திறமைகளுக்கு அதை தளர்ந்து வளர்த்து விட நம்பிக்கையை ஊட்டி பாதை காட்டுகின்றது.
எனவே திறமைகளை செம்மை படுத்திக்கொள்ளுங்கள் உங்களை உலகறியச்செய்ய கல்குடா நேசன் இணைய தளத்தில் அடுத்த களம் கிடைக்கும்.
கல்குடா நேசன் இணைய தளத்திற்கும் அதன் நல்லெண்ணம் கொண்ட அன்பு நிர்வாக
50வது படைப்பாளி திரு.நாச்சியாதீவு பர்வீன் அவர்கள்.
http://kalkudahnation.com/55676
வாரா வாரம் கல்குடாநேசன் இணைய நேர்காணலுடன் பல படைப்பாளிகள், கலைஞர்கள், கவிஞர்களைச் சந்தித்து வருகின்றோம். அவர்களின் திறமை, ஆளுமையினை வெளிக்கொணர்வதோடு, படைப்பாளிகளின் பல்வேறுபட்ட கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். இந்நேர்காணலில் அறிமுகமாகும் பலர் தமது துறைசார்ந்த வாய்ப்புக்களைப் பெற்றுக்கொண்டதாகவும் கூறி மகிழும் போது, எமது நோக்கத்தை அடைந்து விட்டதாய் நாம் பெருமிதமடைகின்றோம்.
இதுவரையில் வெற்றிகரமாக 49 நேர்காணல்களினூடாக பல்வேறு துறை சார்ந்த கலைஞர்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களோடு கல்குடா நேசனில் இணைத்துக்கொள்கின்றோம். இவ்வாரம் 50வது நட்சத்திர படைப்பாளியை சந்திக்கும் வாரம். பல தடைகள் சிக்கல்களைத்தாண்டி தன்னம்பிக்கையோடு வெற்றிநடை போடும் இந்நேர்காணலில் எம்மோடு இணைந்து கொள்கின்றார் அநுராதபுரம் நாச்சியாதீவைச்சேர்ந்த கவிஞரும் அரசியல் துறையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவருமான பிரபல படைப்பாளி திரு.நாச்சியாதீவு பர்வீன் அவர்கள்.
இவரது மன உணர்வுகள், கருத்துக்கள் எவ்வாறு எம் கேள்விகளுக்கூடாக வெளிப்படுகின்றது என்பதனை வாசிக்க
01. ஈழத்து இலக்கியவாதிகளின் வரிசையில் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய கவிஞராக தங்களை அறிவோம் எமது வாசகர்களுக்காக தங்களது அறிமுகம்?
சொந்த இடம் அநுராதபுரத்தில் நாச்சியாதீவு, இப்போது வாழ்வது மல்வானையில், மனைவி நஸ்மியா, இரண்டு குழந்தைகள். மூத்தவள் மரியம். இரண்டாமவள் செய்னப்.
02.கவிஞராக பிரகாசித்த முதல் சந்தர்ப்பம்?
ம்....ஞாபகமிருக்கிறது. பாடசாலை காலங்களில் சின்னச்சின்ன கவிதைகளை பாடக்கொப்பிகளின் பின்புறத்தில் எழுதி வைப்பேன். அதனை நண்பர்கள் ஆகா ஓகோ என்று புகழ்வார்கள், என்னை விடவும் எனது பாடசாலை நண்பன் கல்பிந்துனுவெவ சியாத் அப்போதுகளில் நல்ல கவிதை எழுதுவான். நாங்கள் இருவரும் கவிதை பற்றி பேசுவோம். அவ்வப்போது நாங்கள் இருவரும் எழுதும் கவிதைகளை எங்களது விடுதித்தோழன் ஹொரவப்பொத்தானை சிபாவிடம் காட்டுவோம் அவன் இருவருக்கும் புள்ளி போடுவான். அனேகமாக நண்பன் சியாதே அதிக புள்ளிகள் எடுப்பான். ஆனால் பாடசாலையை தாண்டி நண்பன் தொடர்ந்து எழுதவில்லை மாறாக நான் தொடர்ந்து வாசிக்கவும் எழுதவும் தொடங்கினேன். என்னை இனங்கண்டு பட்டை தீட்டி ஒரு எழுத்தாளனாக அடையாளப்படுத்தியது மறை எழுத்தாளர் எம்.எச்.எம்.ஷம்ஸ் அவர்கள். என்போன்ற பல எழுத்தாளர்களை உருவாக்கியது அவரது தன்னலமற்ற இலக்கியச்சேவை என்றே கொள்ள முடியும். ஒரு மண்ணும் தெரியாமல் தம்மை கலைவாதி என்று அழைத்துக்கொண்டு சலசலத்து திறக்கின்ற களை போன்ற சருகுகளுக்கு மத்தியில் எம்.எச்.எம். சம்ஷ் ஒரு ஆலமரம் என்றால் அது மிகையாகாது.
03.நீங்கள் வெளியிட்ட நூல்கள்?
1-சிரட்டையும் மண்ணும் (2005) -கவிதைத்தொகுதி
2- பேனாவால் பேசுகிறேன் (2008)- பத்தி எழுத்து.
3- மனவெளியின் பிரதி. (2011)- கவிதைத்தொகுதி
4- மூன்றாவது இதயம். (2014)- கவிதைத்தொகுதி
இது தவிரவும் தொகுப்பாசிரியராக இருந்து மூன்னு நூல்களை வெளியிட்டுள்ளோம்.
1 புதுப்புனல். ( எம்.எச்.எம்.ஷம்ஸ் நினைவுக்கவிதைகள்) 2002.
தொகுப்பாசிரியர்கள்:- நாச்சியாதீவு பர்வீன், உக்குவளை பஸ்மனா அன்சார்.
2 வேலிகளைத்தாண்டும் வேர்கள் ( அநுராதபுர மாவட்ட கவிதைகள்) 2009.
தொகுப்பாசிரியர்கள்:- நாச்சியாதீவு பர்வீன், எல்.வசீம் அக்ரம்.
3 கவியில் உறவாடி ( அநுராதபுரம்,மன்னார்,யாழ்ப்பாண மாவட்ட கவிஞர்களின் கவிதைகள்) 2012.
தொகுப்பாசிரியர்கள்:- நாச்சியாதீவு பர்வீன், மன்னார் அமுதன், பரணீதரன்.
தற்போது ஒரு நாவல் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
04.தாங்கள் இயங்கும் இலக்கிய செயற்பாடுகள்?
அநுராதபுர கலை இலக்கிய வட்டத்தின் தலைவராக செயற்படுகிறேன். இதன் மூலம் கடந்த காலங்களில் அநுராகம் எனும் சஞ்சிகையை வெளிக்கொணர்ந்தோம். தற்போது நண்பர்கள் கலை இலக்கிய வட்டத்தின் தலைவராக இருக்கிறேன். இதன் முக்கிய பங்காளிகளில் ஒருவரான எல்.வசீம் அக்ரம் படிகள் எனும் காலாண்டு சஞ்சிகையை நடாத்தி வருகிறார். இதுதவரவும் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் பொருளாளராக செயற்படுகிறேன். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10,11,12 ஆம் திகதிகளில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்பிய மாநாடொன்றை நடாத்தும் முகமாக மிக வேகமாக இயங்கிக்கொண்டிருக்கிறோம்.
05.சமகால புதிய எழுத்தாளர்களின் வரவு, அதனூடாக இலக்கிய வளர்ச்சிப்போக்கு பற்றி உங்களது பார்வை?
காலத்திற்கு காலம் புதிய எழுத்தாளர்கள் உருவாக்குவதும் அவர்கள் வந்த மாத்திரத்தில் காணமல் போய்விடுவதும் இயல்பான விடயமே. புதியவர்களினால் இலக்கியம் வளர்ச்சியடையாது. இன்றைய இளையவர்கள் தங்களை தாங்களே ரசிக்கின்ற, அல்லது தங்களது படைப்புக்களில் தாங்களாகவே சுய திருப்தி அடைகின்ற நிலையில் தான் காணப்படுகிறார்கள். முகநூலில் நாலு வரியை எழுதிவிட்டு வானுக்கும், பூமிக்கும் இடையில் குதிக்க அனேகமானவர்களை இப்போது அவதானிக்க முடிகிறது. இருந்தும் சில நல்ல திறமையுள்ள இளயவர்களின் வரவும் இல்லாமலில்லை. ஆக கால மாற்றத்தையொட்டி இலக்கியமும்,அதன் வடிவமும் மாறுகிறது ஆனால் அது இளையவர்களால் என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
06.ஆக இளையவர்களின் எழுத்துக்களில் காத்திரமில்லை என்கின்றீர்களா? இன்னும் இவர்கள் வளர்ச்சியடைய வேண்டிய பக்கங்கள் பற்றி குறிப்பிட முடியுமா?
இல்லை அப்படியில்லை இளையவர்களில் பலர் மிகவும் காத்திரமாக எழுதுகிறார்கள். ஆனால் ஒரு தரப்பினர் சுயதிருத்தியில் அடுத்தவர்களை வாசிக்காமல் தமது படைப்பை உயர்வாக எண்ணிக் கொண்டு காலங்கடத்துகிறார்கள். இந்தப்போக்கு இலக்கிய வளர்ச்சியில் எந்த மாற்றத்தையும் கொண்டுவராத போக்காகும் என்பதே எனது கருத்து.
07.புதுக்கவிதை எவ்வாறு இருக்கவேண்டும் அல்லது எப்படியும் இருக்கமுடியுமா?
புதுக்கவிதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்கின்ற மரபு நானறிந்த வகையில் கிடையாது. அதுமட்டுமின்றி புதுக்கவிதை இலக்கண மரபை உடைந்தெரிந்து சகட்டு மேனிக்கு பயணிக்கும் ஒரு ஊடகம். அது ஒரு காட்டாறு போன்றது அதனை அணை போட்டு தடுக்கவோ அல்லது அடைக்கவோ முடியாது. ஆனால் வாசகனை வளைத்துப் போடும் லாவணயம் அதில் இருக்க வேண்டும். வாசித்த மாத்திரத்தில் மனசு நெக்குறுகி போய் அதன் பின்னால் ஓடவேண்டும். மழைத்துளியின் ஸபரிசம், முதல் கதிரின் இளஞ்சூடு, ஆரத்தழுவும் தென்றல்காற்று இவைகள் உண்டு பண்ணும் சுகத்தை புதுக்கவிதை உண்டு பண்ணும். இந்த உணர்வெளிச்சிகள் தெறிக்காத வெற்றுச் சொற்களை கட்டி கவிதை என்று கொண்டாட முடியாது.
08.அரசியலில் தங்களது ஈடுபாடு?
ரெம்பவும் சிக்கலான கேள்வி. ஆனால் அரசியலில் அதீத ஈடுபாடு உண்டு, அரசியலும்,இலக்கியமும் மக்களுக்காகவே என்ற கோட்பாட்டினை நான் நம்புகிறவன். ஆனால் அரசியல் வாதியிகளில் முக்கால் வாசிப்பேரும், இலக்கியவாதிகளில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் சுயநலவாதிகளாகவே இருக்கின்றனர். கலைவாதிகளாக தம்மை இனங்காட்டிக் கொண்டவர்கள் வெற்றுக்களைகளாக இருப்பதும், பம்மாத்து அரசியலுக்குள் நாம் சிக்கித்தவித்து மூச்சித்திணரலுடன் வாழ்வதும் நமக்கான சாபக்கேடாகவே கருதுகிறேன். இதில் எனது அரசியல் ஈடுபாடு புறக்கணிக்கத்தக்கது.
09.பல இலக்கியவாதிகள் ஊடகத்துறையை சார்ந்தவர்கள் அரசியல்வாதியாக பரிணமித்தபோது அவர்களிடம் ஆரம்பத்திலிருந்த புரட்சிகரமான சிந்தனை சமூகப்போக்கு என்பன பின்னர் வலிவிழந்துபோகின்றதே இதுபற்றி?
சிந்தனையை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும். அலைபோல பணம் வந்தால் அனேகமானோர் விலை போய்விடுகிறார்கள்.துரத்தியடிக்கும் வாழ்க்கைப்போராட்டத்தில் வளைந்து கொடுக்காவிட்டால் வலுவிழந்து போய்விடும் வாழ்க்கை. இது தான்உண்மை நிலை இது எனது தனிப்பட்ட நிலைப்பாடு மட்டுமே. மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் நேர்மையான சிந்தனையுடன்,நெறிபிறழாது செயற்படும் ஊடகவியலாளர்களும் இருக்கிறார்கள்.
10. வளரும் படைப்பாளிகள் மூத்த படைப்பாளிகளுக்கிடையிலான உறவுமுறை பற்றி?
பல இளம் படைப்பாளிகள் மூத்தவர்களை வாசிப்பதுமில்லை, அனுகுவதுமில்லை அவ்வாறே இதற்கு சமாந்திரமாக சில மூத்த படைப்பாளிகள் இளையவர்களை கண்டு கொள்வதே இல்லை இந்த முரண் நகர்வு முடிவின்றி தொடர்கிறது.
11. இலக்கிய வளர்ச்சியில் இளையவர்களுக்கான வழிகாட்டியாக எவ்வெவ் வழிகளை கூறலாம்?
நிறைய வாசிக்க வேண்டும். கொஞ்சமாக எழுதவேண்டும். நல்ல நூல்களை தேடிப்படிக்க வேண்டும். தொடரான வாசிப்பே ஒரு நல்ல இலயக்கியப்படைப்பை உருவாக்க ஆதர்ஷனமாக அமையும்.
12. கஸ்டமாக சவாலாக நீங்கள் நினைக்கும் விடயம்?
அடுத்தவர்களை திருப்தி படுத்துவது.
13.ஒரு படைப்பாளி எவ்வாறு தன்னை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்?
ஒரு படைப்பாளி தன்னை அடையாளம் காட்ட காத்திரமான ஒரு படைப்பை தந்தாலே போதுமானது. அவன் தக்க வைத்துக்கொள்ள தொடர்ச்சியாக எழுத வேண்டும். தான் கண்ட,கேட்ட,அனுபவித்த விடயங்களை எழுத்துருவாக்க வேண்டும் இதன் ஒரு படைப்பாளி பேசப்பட வாய்ப்பு உண்டு. அத்தோடு அவன் தன்னை தக்கவைத்துக்கொள்ளவும் முடியும்.
14. வளரும் படைப்பாளிகள் எவ்வகையான விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?
எல்லா வகையான விமர்சனங்களுக்கும் முகம் கொடுப்பவனே எழுத்தாளன். விமர்சனங்களுக்கு பயந்தவன் எழுத்தாளனாக முடியாது. இது எல்லா வகையான எழுத்தாளர்களுக்கும் பொருந்தும்.
15. சுலபமான வலைத்தளங்கள், ஊடகங்களினால் வாய்ப்புக்களுக்கு பஞ்சமில்லை இதில் தரமான படைப்புக்களெனப்படுவது?
இலக்கியப்படைப்புக்களின் தரம் அறிய தராசு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. தரமும்,தரமின்மையும் வாசகனின் பட்டறிவும்,அனுபவத்தை வைத்தே அளவிட முடியும்.
16.சமூக வலைத்தளங்களில் நடைபெறும் போட்டி,பரிசு, விருது பாராட்டுக்கள் பற்றி?
வரவேற்போம் , நல்ல விடயம்
17.உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நடைபெறவுள்ளது இதுபற்றியும் இதில் தங்களது பங்களிப்பு பற்றியும் கூறமுடியுமா?
உலக இஸ்லாமிய இலக்கிய பொன்-2016 டிசம்பர் மாதம், 10,11,12 ஆம் திகதிகளில் கொழும்பில் நடாத்த இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் தீர்மானித்துள்ளது.இதற்கான உதவிகளை கெளரவ அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் கெளரவ பிரதியமைச்சர் அமீர் அலி செய்து தருவதாக கூறியுள்ளார்கள். இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவர் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷெரீப்தீன், ஆய்வகத்தின் செயலாளர் அஸ்ரப் சிஹாப்தீன் மற்றும் ஏனைய அங்கத்தவர்களுடன் இணைந்து நானும் பணியாற்றுகிறேன். அவ்வளவு தான். பொன்விழா பற்றிய எண்ணக்கருவை விதைத்தவர் ஆய்வகத்தின் இணைப்பாளர் டாக்டர் தாசிம் அஹமது என்பதும் குறிப்பிடத்தக்கது.
18. அண்மையில் மேற்கொண்ட மலேசிய பயணம் பற்றி?
இஸ்லாமிய இலக்கிய பொன் விழாவுக்கு அறிஞர்களையும்,இலக்கியப்பெருந்தகைகளையும் அழைப்பதற்காக நாங்கள் சென்றோம். மலேசியா,சிங்கப்பூர்,போன்ற நாடுகளில் எமது இது தொடர்பான கூட்டத்தொடர் இடம்பெற்றது.
19. இலக்கிய நட்புறவு பற்றி?
போலியும் - நிஜமும் கலந்த தவிர்க்க முடியாத உறவு அது. இன்னும் சொல்லப்போனால் கலப்படமற்ற இலக்கிய உறவுகள் காலத்தின் கட்டாயம்.
20.கல்குடா நேசன் பற்றிய உங்கள் கருத்தென்ன?
ஒரு செய்தித்தளமாக அதன் சேவையை பாராட்டுகிறேன். உண்மைச்செய்திகளை பாரபட்சமில்லாது வெளியிடும் அதன் பணி அளப்பெரியது. அதன் இலக்கியச் செயற்பாடுகள் இன்னும் மாற்றங்கள் தேவை. ஆனால் எதிர்காலத்தில் அனைத்து துறைகளிலும் மிளிகின்ற ஒரு காத்திரமான தளமாக இது இயங்கும் என்கின்ற அதிகபட்சமான நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
Subscribe to:
Posts (Atom)